Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தோனிக்கு என்னதான் ஆச்சு... ஹெலிகாப்டர் ஷாட்லாம் எங்க போச்சு?#MSD

இரண்டு உலகக்கோப்பைகள், ஒரு சாம்பியன்ஸ் டிராஃபி, ஆசிய கோப்பை, அயல் நாட்டில் பல வெற்றிகள். பாகிஸ்தானுக்கு எதிராக 148, இலங்கைக்கு எதிராக 183*, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 224. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக தோனிக்கு இந்தியாவில் மாபெரும் ரசிகர் பட்டாளம் குவிந்ததற்கு முக்கிய காரணம் ஐபிஎல். 

சர்வதேச போட்டிகளில் அவர், அணியின் சூழ்நிலைக்கு ஏற்ப கியரை மாற்றிக்கொண்டிருப்பார். ஆனால் அதிரடி... சரவெடி எல்லாம் ஐபிஎல்லில் தான். எப்பேர்ப்பட்ட பவுலர்களையும் கலங்கடிக்கும் பேட்ஸ்மேன் தோனி . அது மட்டுமல்ல, மிகச்சிறந்த கேப்டனும் கூட. அவர் தலைமையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் எட்டு முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது. மஞ்சள் ஜெர்சிக்கும், தோனிக்கும், சென்னைக்கும் இந்தியாவே ஒரு காலத்தில் 'ஓ’  போட்டது. மும்பையோ, பெங்களூருவோ, கொல்கத்தாவோ எந்த அணிக்கு எதிராக விளையாடினாலும், எதிரணியின் சொந்த ஊரைத்தவிர இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் மஞ்சளைப் பரவிவிட்டனர் சிஎஸ்கே ரசிகர்கள். ஆனால் இதெல்லாம் ஒரு காலத்தில்! 

தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் சூதாட்ட புகாரில் சிக்க... சென்னை அணி ஐபிஎல்லில் இருந்தே நீக்கப்பட... தோனி புனே அணிக்குச் செல்ல.... சர்வதேச போட்டிகளிலும்  சரி, ஐபிஎல்லில்லும் சரி தோனியிடம் இப்போது கேப்டன் பதவி இல்லை. இது கடந்த ஒன்றரை ஆண்டு வரலாறு. எப்படி சில ஆண்டுகளில் விறுவிறுவென முன்னேறியதோ, இப்போது அதே வேகத்தில் தோனி சாம்ராஜ்யம் சரிந்து வருகிறது. உலகின் டி20 லீக்களில் ஆடும் அணிகளில் அதிக வெற்றி சதவீதம் வைத்திருக்கும் அணி, தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணி என்ற சிறப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மட்டுமே உண்டு. அதே போல லீக் தொடரில்  தலைசிறந்த கேப்டனும் தோனி தான். ஆனால் இப்போது அவருக்கு போதாத காலம். 

புனே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தோனியிடம் ஆலோசித்தே, ஸ்மித்தை கேப்டன் ஆக்கினோம் எனச் சொன்னார் புனே அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா. இதோ இந்த சீசனில், தனது முதல் போட்டியிலேயே மும்பை அணியை எதிர்கொண்டு வெற்றியுடன் ஆரம்பித்தது புனே அணி. அந்த போட்டியில் புனேவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது.  பொல்லார்டு பந்து வீசினார். தோனி ஒவ்வொரு ரன்னாக எடுக்க, ஸ்மித் கடைசி ரெண்டு பந்துகளில் தோனி அவதாரம் எடுத்தார். நிஜ தோனி எதிரில் இருந்தாலும் தோனியின் நிழல் ஷாட் விளாசியது ஸ்டீவன் ஸ்மித். தகுந்த பினிஷர், தகுந்த தலைவன் என ஸ்மித்துக்கு புகழாரம் சூடினார்கள் ரசிகர்கள். 

ஹர்ஷ் கோயிங்கா

அந்த சமயத்தில், சஞ்சீவ் கோயங்காவின் சகோதரர் ஹர்ஷ் கோயங்கா  ஒரு ட்வீட் போட்டார். " Smith Proves who's the King of the jungle, Overshadows Dhoni totally. Captain Innings. Great Move to appoint him as captain". "காட்டுக்கு யார் ராஜா என்பதை ஸ்மித் நிரூபித்து விட்டார்" என ஹர்ஷ் போட்ட ட்வீட் காட்டுத் தீயாய் பரவியது. ட்விட்டரில் ஹர்ஷ் மீது காட்டுத்தனமான விமர்சனங்களை வைத்தார்கள் தோனியின் ரசிகர்கள். கடும் கண்டனங்கள் எழ ட்வீட்டை   டெலிட்  செய்தார்.

ஹர்ஷ் கோயிங்கா

அடுத்த மேட்ச் பஞ்சாப்புடன் நடந்தது. இதில் 11 பந்துகளை சந்தித்தது வெறும் 5 ரன்கள் எடுத்தார் தோனி. மீண்டும் சீறினார் ஹர்ஷ் கோயங்கா. ஸ்டீவன் ஸ்மித், ரஹானே, தோனி, பென் ஸ்டோக்ஸ், மனோஜ் திவாரி, டேனியல் கிறிஸ்டியன் என ஆறு பேரின் இந்த சீசன் ஐபிஎல் ஸ்ட்ரைக் ரேட்டை குறிப்பிட்டு, இதில் ரஹானே, திவாரி, கிறிஸ்டியன் ஆகியோர் நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார்கள் என மீண்டும் மறைமுகமான சீண்டல் ட்வீட் போட்டார். மீண்டும் கண்டனம் தெரிவித்தார்கள் ரசிகர்கள். 

ஹர்ஷ் கோயிங்கா

எந்தவொரு வீரருக்கும் ஃபார்ம் அவுட் என்பதோ, நேரம் கை கூடி வராமல் போவதோ சகஜம் தான். மிகச்சிறந்த அதிரடி வீரர் ஒருவரை வெறும் மூன்று போட்டிகளில் நன்றாக விளையாடாத காரணத்தால் அவர் லாயக்கற்றவர் என்ற ரீதியில் விமர்சனம் செய்வது கடும் கண்டனத்துக்குரியதே. எனினும், தோனியை கடந்த மூன்று போட்டிகளில் மிகவும் திணறுவது வெளிப்படையாகத் தெரிந்தது. குறிப்பாக இளம் சுழற்பந்து வீச்சாளர்களிடம் திணறுகிறார். அவரது ஷாட் தேர்வுகள் மிகச்சரியானதாக இல்லை. 

புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய பிறகுதான், ஜார்கண்ட் அணிக்கு கேப்டன் பதவியேற்று விஜய் ஹசாரே கோப்பையில் அரையிறுதி வரை அணியை அழைத்து வந்தார் தோனி. அந்தத் தொடரில் அவர் பேட்டிங் சிறப்பாக இருந்தது. இப்போது புனே அணி நிர்வாகத்துக்கும் தோனிக்கும் மனக்கசப்பு ஏற்பட்டிருப்பது நிஜம். தன்னால் முன்பு போல பினிஷிங் ரோல் செய்ய முடியவில்லை என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் தோனியே சொல்லியிருக்கிறார். அதிக நேரம் களத்தில் நின்று பந்துகளை சந்தித்து பழகிவிட்டார் அதிரடி காட்டத் தயார் என்பதை இங்கிலாந்து தொடரில் நிரூபித்தார். புனே அணியில் மூன்றாவது அல்லது நான்காவது ஆட்டக்காரராக களம் இறங்கி வெளுத்துக்காட்டுவார் என எதிர்பார்த்த நிலையில், ஐந்து அல்லது ஆறாவது நிலை ஆட்டக்காரராக  தோனியை களம் இறக்கி வருகிறது புனே நிர்வாகம். 

தோனி

தொடர்ச்சியாக சோதனைகளை சந்தித்து வரும் தோனிக்கு இது மற்றுமொரு சோதனை. அதன் காரணமாக முழு கவனத்துடன் கிரிக்கெட் ஆட முடியாமல் போயிருக்கலாம். ஆனால் ரசிகர்கள் வேண்டுவது எல்லாம் தோனியின் அந்த பழைய அதிரடி தான். அடுத்தடுத்த போட்டிகளிலாவது அவர்  தனது டிரேட்மார்க் ஷாட்கள் ஆட வேண்டும். அதிரடியாக ஆடி அணிக்கு ரன்களைச் சேர்க்க வேண்டும். வின்னிங் ஷாட் ஆடி மேட்ச் ஜெயிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஒரே ஒரு மேட்ச், ஒரே ஒரு ஓவர் கூட ஐபிஎல்லில் ஒருவனை ஹீரோ ஆக்கிவிடும். இப்போது தோனியின் மீது வைக்கப்படும் அத்தனை விமர்சனங்களும் நொறுங்க, அவருக்கு தேவைப்படுவது ஒரே ஒரு போட்டி தான். ஒரே ஒரு ஓவர் தான். அது அவருக்கு வெகு சீக்கிரத்திலேயே அமையட்டும். 

சாக்ஷி தோனி

நேற்று தோனியின் மனைவி சாக்ஷி இன்ஸ்டா கிராமில் ஒரு போட்டோ கார்டை பதிந்திருந்தார். அதில்  ஊழ்வினைபற்றிய ஒரு குறிப்பு இருந்தது. "ஒரு  பறவை உயிரோடு இருக்கும் போது அது எறும்புகளைத் தின்னும். அதே பறவை இறந்து விட்டால் எறும்புகள் பறவையை தின்னும். நேரமும், சுற்றுப்புறச் சூழ்நிலைகளும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். உங்கள் வாழ்க்கையில் எவர் ஒருவரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள், காயப்படுத்தாதீர்கள். இன்றைக்கு நீங்கள் வலுவானவர்களாக இருக்கலாம். ஆனால் மறந்துவிடாதீர்கள் காலம் உங்களை விட பலமானது. ஒரு மரம், பல மரக்குச்சிகளைத் தரும். ஆனால் ஒரே ஒரு மரக்குச்சி மில்லியன் கணக்கிலான மரங்களை அழிக்க வல்லது. ஆகவே நல்லவராக இருங்கள், நல்லதையே செய்யுங்கள்" 

இது ஹர்ஷ் கோயங்காவுக்கான பதிலடி என தோனி ரசிகர்கள் சொல்கிறார்கள். அது ஹர்ஷ் கோயங்காவுக்கு மட்டும்தானா?

- பு.விவேக் ஆனந்த் 

படங்கள் - BCCI

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement