வெளியிடப்பட்ட நேரம்: 13:19 (13/04/2017)

கடைசி தொடர்பு:13:19 (13/04/2017)

கிரிக்கெட் கேம் வெறியர்களுக்கு... WCC2 அப்ளிகேஷன் அப்டேட்ஸ் தெரியுமா?

ரிஜினல் போட்டிகளுக்கு மட்டுமல்ல, மொபைல் கேம்களிலும் கிரிக்கெட்டிற்கு என தனி வரவேற்பு உண்டு. ஸ்ட்ரீட் கிரிக்கெட், உலககோப்பை கிரிக்கெட், பீச் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட்... என கிரிக்கெட் விளையாடுவதற்கான மொபைல் கேம்கள் அதிகம். குறிப்பாக, 'வேர்ல்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2' என்ற கேம் அப்ளிகேஷனுக்கு அவ்ளோ டிமாண்ட். 'அதுக்கு என்ன இப்போ?' என்கிறீர்களா... 'அதிக டவுன்லோடுகளைப் பெற்ற மொபைல் கேம்', 'அதிகம் விளையாடப்படும் மொபைல் கேம்' என மொபைல் அப்ளிகேஷன் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட, சிறந்த கிரிக்கெட் கேம் அப்ளிகேஷனுக்கான பல விருதுகளைப் பெற்ற இந்த 'WCC 2' பல கிரிக்கெட் கேம் வெறியர்களின் தொடர் கோரிக்கைகளுக்குப் பிறகு அதிரடி அப்டேட்டுகளுடன் களமிறங்கியிருக்கிறது. 

ஏற்கெனவே 'வேர்ல்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்' என்ற பெயரில் இருந்த கிரிக்கெட் அப்ளிகேஷனின் இரண்டாம் பாகம் இது. சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டபோதே 3டி, துல்லியமான கிராஃபிக்ஸ், அனைத்து வகையான போட்டிகளும் அடங்கிய பேக்கேஜ், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் 'கொசுறு' அணிகளும் இடம்பெற்றது... என கிளாஸிக் வரிசையில் இருந்தது. இந்த மொபைல் கேம் விளையாடும் பல லட்சம் ரசிகர்களின் கோரிக்கைகளுக்குப் பிறகு, சில நாட்களுக்கு முன்பு அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது இந்த, 'வேர்ல்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2' அப்ளிகேஷன்.

wcc2 கிரிக்கெட் கேம்

கிரிக்கெட் அணிகளுக்கான கலக்கல் ‘ஜெர்ஸி’ தேர்வில் இருந்து தொடங்குகிறது மாற்றம். ஏற்கெனவே இருந்த ஜெர்ஸிகளோடு, எட்டு புதிய மாடல் ஜெர்ஸிகள் இடம்பெற்றுள்ளது. ஆறு புதிய மைதானங்கள் இடம்பிடித்திருக்கிறது. பழைய வெர்ஷனில் வெயில், மேகமூட்டம் போன்ற சூழல்களில் விளையாடும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வசதி இருந்தது. புதிய அப்டேட்டில், இரவுப் போட்டியாக விளையாடும் வாய்ப்பும் சேர்ந்திருக்கிறது. இரவுப் போட்டியின் வித்தியாசத்தைக் காட்ட, ஸ்டெம்புகள் தெறிக்கும்போது, எல்.இ.டி பல்ப் எரிகிறது. 

wcc2 கிரிக்கெட் கேம்

ஸ்கூப், ஹெலிகாப்டர் ஷாட், அப்பர்கட் ஆகிய அதிரடி ஷாட்களுக்கு தேமேவென விளையாடிக்கொண்டிருந்த பேட்ஸ்மென்கள், புதுவெர்ஷனில் எகிறி, இறங்கி அடிக்கிறார்கள். ஆங்கில கமெண்டரியோடு, ஹிந்தியும் இப்போது இணைந்திருக்கிறது. ஒரிஜினல் கிரிக்கெட் போட்டிகளில் 'ஹைலைட்ஸ்' பார்ப்பதில் சுவாரஸ்யம் அதிகம். அதே சுவாரஸ்யத்தை இந்த அப்ளிகேஷனுக்கும் கடத்த, விளையாடும் போட்டிகளின் ஹைலைட்ஸ்களைப் பதிவேற்றி வைத்துக்கொள்ளும் வசதியும், நண்பர்களுக்குப் பகிர்ந்துகொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்திருக்கிறார்கள்.

wcc2 கிரிக்கெட் கேம்

ஒவ்வொரு அணிக்கும் 11 பேர் கொண்ட வீரர்கள் மட்டுமே இருந்தார்கள். மொபைல் கேம்தான் என்றாலும், நமக்குப் பிடிக்காத வீரர்களோடு விளையாட வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்டேட் வெர்ஷனில், ஒவ்வொரு அணிக்கும் 15 பேர் கொண்ட குழுவில் இருந்து நமக்குப் பிடித்த 11 பேரைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஆக மொத்தம், புது அப்டேட்களையும் சேர்த்து 150 வகையான அனிமேஷன்கள், 26 வகையான ஷாட்கள், டீம் செலிபிரேஷன், ஃபீல்டிங் ஆப்ஷனில் புதுமை, அம்பயரின் மேனரிஸங்களில் மாற்றம், ரன் அவுட்டில் 'டைரக்ட் ஹிட்' ஆச்சரியங்கள், ஓவர் த்ரோ சுவாரஸ்யம், 'கடின' நிலையில் இருந்து 'மிகக் கடின' நிலையில் விளையாடிக்கொள்ளும் வசதி... என ஒரிஜினல் கிரிக்கெட் போட்டி தரும் அத்தனை ஆச்சர்யங்களையும் தருகிறது 'வேர்ல்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2' அப்ளிகேஷன். 

இன்னும் எதிர்பார்க்கிறோம் பாஸ்!

- கே.ஜி.மணிகண்டன் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்