வெளியிடப்பட்ட நேரம்: 16:53 (15/04/2017)

கடைசி தொடர்பு:19:16 (15/04/2017)

ஆண்கள் தொட்டுப் பார்க்கத்தான் பெண்கள் உடலா?! - சென்னையில் கொதித்த சானியா மிர்ஸா #VikatanExclusive

" இது 'மிர்ஸா குடும்ப விழா'... " . அந்த நிகழ்வை சிரித்துக் கொண்டே அப்படித் தான் குறிப்பிடுகிறார் இந்தியாவின் ஆகச் சிறந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா.  சென்னையின் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில், சானியா மிர்ஸாவின் தங்கை அனம் மிர்ஸாவும், அவர் கணவர் அக்பர் ரஷீதும் இணைந்து " தி லேபிள் பஜார்" என்ற பெயரில் டிசைனர் ஆடைகளுக்கான கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதன் பிராண்ட் அம்பாசிடரான சானியா மிர்ஸா அந்த நிகழ்வுக்காக சென்னை வந்திருந்தார்...

சென்னைப் பிடிக்குமா?

" நான் சென்னைக்கு மிகக் குறைந்த அளவிலேயே வந்துள்ளேன். சென்னையைப் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும்கூட, தமிழ்நாடு எனக்கு ரொம்ப பிடிக்கும். தெலுங்கானாவுக்குப் பக்கம் தானே... நாம் நண்பர்கள் தானே!!!" என்று சொல்லி சிரிக்கிறார். 
பச்சைப் பூ போட்டது, சிகப்பு நட்சத்திரம் வரைந்தது, மஞ்சள் பொம்மைப் போட்டது என பல மாடல்கள் அசரடிக்கும் உடைகளில் இருந்தாலும், கறுப்பு நிற கவுனில் வந்த சானியா மிர்ஸா அங்கிருந்த அத்தனை பேரையும் அசரடித்தார். கொஞ்சம் சுருள் செய்யப்பட்ட ப்ரி ஹேரில் " விண்ணைத் தாண்டி வருவாயா" ஜெஸ்ஸியை தோற்கடித்து , சானியா தனித்து தெரிந்தார். 

சென்னையில் சானியா மிர்ஸா

உங்களோட ஃபேஷன் ஸ்டேட்மெண்ட் என்ன?

" என்னைப் பொறுத்தவரைக்கும், நம்முடைய உடை நமக்கு செளகரியமானதாக இருக்க வேண்டும். அது தான் அழகு. அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக நமக்குப் பிடிக்காத, அசெளகரியமான உடைகளை அணிவது மிக மோசமான விஷயம். ஆனால், ஒரு பிரபலமாக இருப்பதால் சமயங்களில் நான் அப்படி செய்ய வேண்டி இருப்பதை தவிர்க்க முடியவில்லை. மற்றபடி, உடைக்கும், பணத்துக்கும் பெரிய சம்பந்தமில்லை. இருப்பதை அழகாக உடுத்த வேண்டும் அவ்வளவு தான்..."

பேசிக்கொண்டே நகரலாம் என்றவர், கண்காட்சியின் அரங்குகளை சுற்றிப்பார்க்கத் தொடங்கினார். இந்தியாவின் பிரபல டிசைனர் பிராண்ட்களான குக்கூன், மசாலா சாய், ஆர்த்தி விஜய் குப்தா, ஷ்ரத்தா நிகம் ஆகிய அரங்குகளில் தனக்குப் பிடித்த ஆடைகளைத் தேர்ந்தெடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். 

சென்னையில் டிசைனர் ஆடைக் கண்காட்சியில் சானியா மிர்ஸா

உலகம் முழுக்கத் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கிறீர்கள். பெண்களுக்கான பாதுகாப்பான சமூகமாக இது இருக்கிறதா?

" இது போன்ற கேள்விகளே கேட்கப்படாத ஒரு உலகில் நான் வாழ வேண்டுமென ஆசைப்படுகிறேன். காந்தி சொன்னது மாதிரி... எத்தனை மணியானாலும் ஒரு பெண் சுதந்திரமாக, பாதுகாப்பாக எங்கும் சென்று வர முடியும் என்ற நிலைக்கு இந்த சமூகத்தை மாற்ற வேண்டும். ஒரு பிரபலமாக இருப்பது, குறிப்பாக ஒரு பெண் பிரபலமாக இருப்பது ரொம்பவே கஷ்டம் தான். எங்குப் போனாலும் பெருங்கூட்டம், அதில் சில வக்கிர மனம் படைத்தவர்கள் உடலை எப்படியாவது தொட்டுப் பார்த்திட வேண்டும் என்ற எண்ணத்தில் பல முயற்சிகளைச் செய்வார்கள். அதிர்ஷ்டவசமாக எனக்கு இதுவரை மிக மோசமான அனுபவங்கள் ஏதும் நடக்கவில்லை என்றாலும்கூட, செய்திகளைப் பார்க்கும்போது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கப்படுவதை அறியும்போதெல்லாம், அப்படி ஒரு ஆவேசம் எனக்குள் ஏற்படுகிறது..." என்று சொல்லவும், சானியாவின் தங்கை அனம் அவரை சமாதானப்படுத்துகிறார். 

" பாருங்க... ஒரு ஃபேஷன் ஷோவுக்கு வந்துவிட்டு, எவ்வளவு சீரியசான விஷயத்தைப் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால், அது அவசியம் பேச வேண்டிய விஷயம் தான். என் தங்கையை சின்ன வயதில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவள் எவ்வளவு வளர்ந்தாலும், எனக்கு இன்னும் சின்னக் குழந்தையாகத் தான் தெரிகிறாள். அவளும், அவர் கணவரும் சேர்ந்து இந்தியாவின் மிகச் சிறந்த ஆடை வடிவமைப்பாளர்களின் ஆடைகளை , நாடெங்கும், ஒவ்வொரு நகரத்துக்கும் கொண்டு செல்லும் முயற்சியில் இந்த " லேபிள் பஜார்" கண்காட்சியை நடத்தி வருகிறார்கள். தொழில் ரீதியாக இருப்பதைக் காட்டிலும், ஒரு குடும்பமாக நாங்கள் இதை செய்வதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, நிகழ்ச்சியின் மற்றுமொரு சிறப்பு விருந்தினரான நடிகை வரலட்சுமி சரத்குமார் வந்து சேர்ந்தார். 

தன் தங்கை மற்றும் வரலட்சுமியோடு சானியா மிர்ஸா

மேடை ஏறிய இருவரும், இன்றைய சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்புக் குறித்த கருத்துகளைப் பகிர்ந்துக் கொண்டார்கள். 
" பெண்கள் பயமின்மைக் கொண்டவர்களாக வளர வேண்டும். ஆண்கள் ஒன்றும் கடவுள் இல்லை. எப்போதும் அவர்களையே பாதுகாப்புக்கு நம்பிக் கொண்டிருப்பதை விடுத்து, தங்களுக்கான பாதுகாப்பு அரணாகப் தாங்களே உருவெடுக்க வேண்டும்" என்று சற்றே காட்டமாகச் சொன்னார் வரலட்சுமி. 

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கும் அவர்கள் உடுத்தும் உடைகளுக்கும் ஒரு சம்பந்தம் இருப்பதாக சொல்லப்படுவதைப் ப....?

கேள்வியை கேட்டு முடிப்பதற்குள்ளாகவே காட்டமாக பதில் சொல்ல ஆரம்பித்தார் சானியா மிர்ஸா,

" இது மிகவும் ஆழமான கேள்வி. அதே சமயம் மிகவும் முட்டாள்தனமான பார்வையும் கூட. இதை நான் ஒருபோதும் ஆமோதிக்க மாட்டேன்... உடையைத் தாண்டி, ஒரு பெண்ணாக, இவ்வளவு உயரங்களை அடைந்த பின்னரும் கூட, இன்றளவும் பல இடங்களில் நான் புறக்கணிப்புகளை சந்திக்கிறேன். நிச்சயம் பெண்களுக்கு எதிரான இந்த மனநிலையில் மாற்றம் வேண்டும்" என்று சொல்லி முடித்து மேடையிலிருந்து கீழே இறங்கினார். அங்கிருந்த பல பெண்களும் சானியாவின் இந்தக் கருத்துக்கு பாராட்டுத் தெரிவித்தனர் .

சானியா மிர்ஸா

 சமீபத்தில் ட்விட்டரில், 'போட்டோவில் மட்டும் சில பெண்கள் அழகாக இருக்கிறார்கள் எனச் சொல்வது மிகவும் அபத்தமான விஷயம்' என்று நீங்கள் சொன்னது சர்ச்சையைக் கிளப்பியதே?

" ஹா ஹா ஹா... அது மிகவும் விளையாட்டுத்தனமாக, கிண்டலோடு நான் சொன்னதை சிலர் தவறாகப் புரிந்துகொண்டு சர்ச்சையாக்கிவிட்டார்கள். ஒரு சிலர் என்னிடமே,  ' உங்களை நேரில் பார்ப்பதைவிட போட்டோவில் அழகாக இருக்கிறீர்கள்' என்று சொல்வார்கள். அதை எப்படி பாராட்டாக எடுத்துக் கொள்வதா? இல்லை நேரில் நீ அழகாயில்லை என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளவதா? என்ற பாணியில் காமெடியாகத் தான் அந்த ட்வீட்டை நான் போட்டிருந்தேன்..." என்று சொல்லி மீண்டும் சிரிக்கிறார். 

சானியா மிர்ஸா

கிளம்பும் நேரம், எல்லா அரங்குகளையும் சுற்றிப்பார்த்துவிட்டு " பரவாயில்லை பெரும்பாலான துணிகள் எல்லாமே காட்டனாக இருக்கின்றன. வெயிலுக்கு உகந்தவை. எனக்கு எப்போதுமே காட்டன் உடைகள் தான் ரொம்ப பிடிக்கும்..." என்று சொன்னவர் , அங்கிருந்த ஜன்னல் வழி சாலையில் சிக்னல்களில் நின்று கொண்டிருந்த வண்டிகளைப் பார்த்து " சென்னையில் கொஞ்சம் வெயில் அதிகம் தான் இல்ல?" என்று சொன்னபடியே நமக்கு விடைகொடுத்தார். 

- இரா. கலைச் செல்வன்.

படங்கள் : ஆர். குமரேசன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்