இந்தியாவில் மெஸ்சி, ரொனால்டோக்களை இப்படித்தான் கண்டுபிடிக்க வேண்டும்! | Chennaiyin FC conducts finals selection for Young Champs

வெளியிடப்பட்ட நேரம்: 20:29 (15/04/2017)

கடைசி தொடர்பு:20:29 (15/04/2017)

இந்தியாவில் மெஸ்சி, ரொனால்டோக்களை இப்படித்தான் கண்டுபிடிக்க வேண்டும்!

‘‘இந்தியாவில் கால்பந்து எனும் மிருகம் உறங்கிக்கொண்டிருக்கிறது’’ என்றார் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) முன்னாள் தலைவர் செப் பிளேட்டர். அந்த மிருகம் இப்போது மெல்ல கண் விழித்துள்ளது. ‘நாளைக்கு காலைல 9 மணிக்கு ஃபைனல் செலக்ஷன். மறக்கமா வந்துருங்க...’ என்ற அழைப்பை ஏற்று சென்னை நேரு மைதானத்துக்குள் நுழைந்தால், களம் முழுவதும் கால்பந்துடன் சிறகடித்துக் கொண்டிருந்தன பட்டாம்பூச்சிகள்.

மெஸ்சி, ரொனால்டோ தேடல்

‘இந்தியாவில் கால்பந்தை வளர்க்க வேண்டுமெனில் கிராஸ் ரூட் லெவலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்’ என, பிரிமியர் லீக்கில் பங்கேற்ற இந்திய வம்சாவளி வீரர் மைக்கேல் சோப்ரா சொன்னதை பாலபாடமாக ஏற்று, Reliance Foundation Young Champs (RFYC) அமைப்பை உருவாக்கி பணிகளைத் துரிதப்படுத்தியது ரிலையன்ஸ். அதன் ஒருபகுதிதான் அந்த வாண்டுகளின் சிறகடிப்பு.

நாடு முழுவதும் உள்ள 11 முதல் 14  வயதுக்குட்பட்ட இளம் கால்பந்து வீரர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு மும்பையில் சகல வசதிகளுடன் ஃபுட்பால் கற்றுத் தருவதே, இந்த திட்டத்தின் நோக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 41 இளம் வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் இரண்டு தமிழ்நாட்டு வீரர்களும் அடக்கம்.  இந்தியன் சூப்பர் லீக் (ISL)தொடங்கிய காலத்தில் இருந்தே இந்தத் திட்டம் செயல்படுகிறது என்றாலும், தமிழ்நாட்டில் இந்த முறை தேடுதல் தீவிரமாக இருந்தது. 

மெஸ்சி, ரொனால்டோ தேடல்

மாநிலம் முழுவதும் கால்பந்தில் ஓரளவு ஆர்வமுள்ள 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதில் பெரும்பாலும் பள்ளி அணிகளில் இருப்பவர்கள், கிளப்களில் பயிற்சிபெறுபவர்கள். அவர்களில் திறமையானர்களை படிப்படியாக வடிகட்டினார் சென்னையின் எஃப்.சி துணை பயிற்சியாளரும் முன்னாள் இந்திய வீரருமான சையத் சபீர் பாஷா. அடுத்தடுத்த நடைமுறைக்குப் பின் கடந்த வாரம் சென்னை நேரு பார்க்கில் 150 பேர் வரவழைக்கப்பட்டனர். மூன்று நாள் பயிற்சி முடிவில் கடைசியாக தேறியது 64 பேர் மட்டுமே. சபீர் உள்ளூர் ஆள் என்பதால், இந்த தேடல் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த 64 பேரைத் தேர்ந்தெடுத்ததுடன் அவர் பணி முடிந்து விட்டது. 

கடைசியாக யாரை மும்பைக்கு அனுப்புவது என்பதைத் தேர்ந்தெடுப்பது டெக்னிக்கல் டைரக்டர் பீட் ஹியூபர்ஸ் பொறுப்பு. 15 பேர் வரை தேர்ந்தெடுக்கலாம் அல்லது ஒருவர் கூட செலக்ட் ஆகாமல் போகலாம். முடிவு அவர் கையில்தான் இருக்கிறது. செலக்ஷனில் மனிதர் கில்லி. பந்து காற்றில் பறப்பதை விரும்பவே இல்லை. பந்தை உருட்டி விட்டு இன், அவுட் பாஸ் மூலமே பலரைக் கழித்து விட்டார். பெற்றோர்களின் கண்முன் இந்த தேர்வு நடந்ததால், தகுதியானவர் மட்டுமே தேர்வாகும் சூழல். சிபாரிசுக்கு வாய்ப்பே இல்லை.

மெஸ்சி, ரொனால்டோ

இறுதிகட்ட பரிசீலனையில் இருந்த 64 பேரையும் பல குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவையும், குறிப்பிட்ட நிமிடங்கள் மற்றொரு குழுவினருடன் மோதவிட்டார். காலை 6 மணிக்குத் தொடங்கிய இந்த  தேடல் வெயில் சுள்ளென அடிக்கத் தொடங்கிய 9.30 வரை நீண்டது. கடைசியாக ஒட்டுமொத்த குழுவையும் கூப்பிட்டு குரூப் போட்டோ எடுத்து, பெற்றோரிடம் சில வார்த்தைகளைப் பேசி அனுப்பி வைத்து விட்டனர். எத்தன பேர் தேர்வாகினர் என்ற விவரம் தெரியவில்லை. 

சபீர் பாஷா சபீர் பாஷாவிடம் கேட்டபோது ‘‘எங்கள் பணி முடிந்து விட்டது. இந்த 64 பேரில் யார் மும்பை செல்வது என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்’’ என்றார். சரி, தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு என்ன கிடைக்கும் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்…

‘‘என்ன  கிடைக்காதுனு கேளுங்க!  அம்பானி பசங்க படிக்கிற ஸ்கூல்ல படிப்பான். 12-ம் வகுப்பு வரைக்கும் படிப்பு, சாப்பாடு, ஸ்காலர்ஷிப், ஃபுட்பால் கோச்சிங் எல்லாமே அவங்க பொறுப்பு. பையன் நல்லா விளையாடுனா ஐரோப்பிய கிளப்ல பிராக்டீஸ் பண்ணவும் சான்ஸ் உண்டு’’ என அடுக்கினார். கடந்த இரண்டு சீசன்களில் தேர்வான 48 பேருக்கு நவி மும்பையில் உள்ள அகாடமியில் சர்வதேச தரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

 “அது சரி, ஆனா எல்லாம் வசதியான வீட்டுப் பசங்க மாதிரி தெரியுது. அவங்களுக்கு இந்த கோச்சிங் அவசியம்தானா, அவங்க நினைச்சா சொந்த காசுலயே பண்ணலாமே…” நம் மனதில் இருந்ததைக் கேட்டேவிட்டோம்! அதற்கு  சபீர் சொன்ன பதில் சுவாரஸ்யம்.

‘‘நீங்க நினைக்கிறது தப்பு. பெரம்பூர், புளியந்தோப்பு, வியாசர்பாடின்னு சென்னைல கவர்ன்மென்ட் ஸ்கூல்ல படிக்கிற பசங்க ரொம்பப் பேர் இங்க இருக்காங்க (பல வீரர்களைக் கூப்பிட்டு வைத்து அடையாளம் காட்டினார்) எங்களுக்குத் தெரியாதா எங்க ஃபுட்பால் கல்சர் இருக்கும்னு? இப்படி எல்லாம் கேள்வி வரும்னு தெரிஞ்சுதான், தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு இடமா போயி தேடித் தேடி செலக்ட் பண்ணோம். அதுமட்டுமில்லாம இங்க இருக்கிற பெரும்பாலான கிளப் எங்க ஃப்ரெண்ட்ஸ் நடத்துறதுதான். அதுல யார் நல்லா விளையாடுறாங்கன்னு பாத்து அவங்களை செலக்ட் பண்ணி இருக்கோம். என்ன இருந்தாலும் எத்தனை பேர், யார் எவர்னு முடிவு பண்ணப் போறது அவங்கதான். அப்புறம் இன்னொரு விஷயம். வசதியானவங்க நல்லா படிக்க வைக்கலாம். ஆனால் இந்த மாதிரி வேர்ல்ட் கிளாஸ் கோச்சிங் அவங்களால சொந்தமா கொடுக்க முடியுமா? அதுக்கு இந்த மாதிரி இடத்துக்கு வந்துதான் ஆகணும்’’ என்றார் ஒரு காலத்தில் சென்னையின் மோஸ்ட் வான்டட் பிளேயராக இருந்த சபீர்.

இந்தியாவில் கால்பந்து மிருகம் கண் விழித்து விட்டது!

- தா.ரமேஷ்

படங்கள்: நிவேதன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்