வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (17/04/2017)

கடைசி தொடர்பு:08:31 (17/04/2017)

#IPL10- வெற்றிப் பாதைக்குத் திரும்பிய புனே... கடைசி இடத்தில் பெங்களூர்!

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், பெங்களூரு அணிக்கும் புனே அணிக்கும் ஐபிஎல் 10-வது சீசினின் 17-வது போட்டி நடைபெற்றது.

இரண்டு அணிகளும் , தலா நான்கு போட்டிகளில் விளையாடி, ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. எனவே, 'இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால்தான் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் நீடிக்க முடியும்' என்ற முனைப்போடு இரு அணிகளும் களம் இறங்கின.

பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, டாஸ் வென்று பௌலிங் செய்யத் தீர்மானித்தார். முதலில் பேட் செய்த புனே அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 8 விக்கெட்டுகளை  இழந்து, 161 ரன்கள் எடுத்தது. புனே அணியின் தோனி, அதிகபட்சமாக 25 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். 

பின்னர், 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கியது பெங்களூரு அணி. ஃபார்மில் இல்லாத கிறிஸ் கெய்லுக்குப் பதிலாக மந்தீப் சிங், கேப்டன் விராட் கோலியுடன்  சேஸிங்கைத் தொடங்கினார். இருந்தும், தான் சந்தித்த மூன்றாவது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார் மந்தீப் சிங். இதையடுத்து, ஒன்-டவுனில் டிவில்லியர்ஸ் இறங்கினார். சர்வதேச அளவில் அனுபவம்பெற்ற கோலியும் டிவில்லியர்ஸும் இணைந்து, நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆயினும் இருவரும் வெகு நேரம் நிலைத்து ஆடாமல், கோலி 28 ரன்களுக்கும் டிவில்லியர்ஸ் 29 ரன்களுக்கும்  அவுட் ஆகவே, பெங்களூரு அணி ரன்கள் எடுக்கத் திணறியது. இதையடுத்து, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில், ஒன்பது விக்கெட்டுகளை இழந்து, 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், புனே அணி பெங்களூர் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. புனே அணி சார்பில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஷார்துல் தாக்குர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தப் போட்டியின் முடிவையடுத்து, பெங்களூரு அணி, ஐபிஎல் 10-வது சீசனுக்கான தர வரிசைப் பட்டியலில் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டு உள்ளது. புனே அணி, மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. 
 

நன்றி: IPL