வெளியிடப்பட்ட நேரம்: 18:11 (17/04/2017)

கடைசி தொடர்பு:15:49 (19/04/2017)

ராஜ்யசபாவில் அரை சதம் கூட அடிக்காத சச்சின் டெண்டுல்கர்!

ராஜ்யசபாவில் 12 நியமன உறுப்பினர்கள் உண்டு. இவர்களை குடியரசுத் தலைவர்  நியமிப்பார். அரசு பரிந்துரை செய்யும் நபர்களையே குடியரசுத் தலைவர் நியமன உறுப்பினராக அறிவிப்பார். கடந்த 2012 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர்  மற்றும் நடிகை ரேகா ஆகியோர் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். 2014-ல் ஒருவரும், 2016-ல் மீதி 9 பேரும் நியமன உறுப்பினர்கள் ஆனார்கள். நியமன உறுப்பினர்கள் என்பவர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள் தான். அவர்களுக்கு உரிய அதிகாரங்கள் இவர்களுக்கும் உண்டு. சலுகைகளும் அப்படித்தான்.

 

 

 

நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள் முதல் ஆறு மாதங்களுக்கு விரும்பிய கட்சியில் சேர்ந்து, இணைந்து பணியாற்றலாம். அதன்படி 12 நியமன உறுப்பினர்களில் நான்கு பேர் இதுவரை பாஜகவில் சேர்ந்து விட்டனர். சச்சின் டெண்டுல்கர் காங்கிரஸ் கட்சியில் சேரப்போகிறார் என ஐந்தாண்டுகளுக்கு முன்பே விமர்சனம் வந்த நிலையில், அவர் எந்தக் கட்சியிலும் சேர வில்லை. 

சச்சின் மற்றும் ரேகா

சமீபத்தில் நியமன உறுப்பினர்கள் எந்த அளவுக்கு மாநிலங்களைவையில் செயல்படுகிறார்கள், அவர்கள் வருகைப் பதிவு எவ்வளவு சதவிகிதம் இருக்கிறது, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சரியாகத்தான் பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து சர்ச்சை எழுந்தது. இந்த வருடத்தோடு சச்சின் மற்றும் ரேகாவின் பதவி காலம் முடிவடையவுள்ள நிலையில், வருகை பதிவேட்டில்  இருவரது வருகை சதவீதம் மிகவும் குறைவாகவே உள்ளது என்பது தெரியவந்திருக்கிறது. கடந்த 2012-ல் இருந்து 348 நாள்களில்  23 நாள்கள் மட்டுமே சச்சின் மாநிலங்களவைக்கு வந்துள்ளார்.

ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கு மாதம் 50,000 ரூபாய் சம்பளம். அது போக, இதர சலுகைகள் மூலம் 45,000 ரூபாய் கிடைக்கும். போக்குவரத்து செலவு கணக்கு ஆகியவை தனி. ராஜ்யசபாவில் ஒவ்வொரு நாள் பங்கேற்பதற்கும் தனி படியும் வழங்கப்படும். ஆக ஒரு உறுப்பினர் எவ்வளவு நாட்கள், மாநிலங்களைவையில் பங்கேற்கிறாரோ அதைப்பொறுத்து வருமானம் அதிகமாக வரும். அப்படி கணக்குப் பார்த்தால் சச்சின் டெண்டுல்கருக்கு இதுவரை  58.8 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறது அரசு. சச்சின்  23 நாட்கள் மட்டுமே வந்திருக்கிறார் என்பதால், ஒரு நாள் ராஜ்யசபாவில் பங்கேற்றதற்கு சராசரியாக 2.5 லட்சம் செலவாகியிருக்கிறது. 

ராஜ்யசபாவில் சச்சின்

சச்சின் டெண்டுல்கராவது 23 நாள்கள் பங்கேற்றார். நடிகை ரேகா கடந்த ஐந்து வருடத்தில் 18 நாள்கள் மட்டுமே பங்கேற்றிருக்கிறார். ராஜ்யசபாவில் கேள்வி நேரங்களில் கலந்து கொண்டு இதுவரை 22 கேள்விகளை கேட்டிருக்கிறார் சச்சின். ரேகா இன்னமும் ஒரு கேள்வி கூட கேட்டதில்லை. கலந்துரையாடல் நிகழ்வுகளில் சச்சின், ரேகா இருவரும் ஆப்சென்ட் தான். ஆனால் சுரேஷ் கோபி, குத்துச் சண்டை வீராங்கனை  மேரிகோம் உள்ளிட்ட நியமன உறுப்பினர்கள் இதுவரை முறையே மூன்று மற்றும் இரண்டு முறை கலந்துரையாடல் நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு தான் மாநிலங்களைவைக்கு நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஊரகப் பகுதி  வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஓர் ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் செலவிடலாம். ஐந்து வருடத்துக்கு 25 கோடி ரூபாய் கிடைக்கும். இதில், ஒவ்வொரு வருடமும் முதலில் 2.5 கோடி தரப்படும். அதன் பின்னர் பணிகளை ஆய்வு செய்து மீதி பணம் தரப்படும்.  

சச்சின் டெண்டுல்கர் ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புட்டம்ராஜோ கண்டரிகா எனும் கிராமத்தை தேர்ந்தெடுக்கிறார். இதுவரை 25 கோடி ரூபாயில் 21.9 கோடி ரூபாயை செலவிட்டிருக்கிறார் சச்சின். இந்தக் கிராமத்தில் மூலை முடுக்கெல்லாம் செல்ல சிமெண்ட் காங்கிரீட் சாலைகள், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் வசதி, மின்சார வசதிகள் ஆகியன வந்துவிட்டன. திறந்த வெளி கழிப்பிடங்கள் முற்றிலுமாக இல்லை. அது மட்டுமல்லாமல், இந்தக் கிராமத்தில் மதுவிற்கு அடிமையானவர்கள் இல்லை என்ற நிலைமையும் இருக்கிறது.

கிராமத்தில் சிமெண்ட் சாலைகள்

அத்துடன் கணினி மையம், மைக்ரோ ஏடிஎம், சமூக கூடத்தில் 300 பேர் அமரும் வகையில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள கணினி மையங்களில் இலவச வைஃபை வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆக்சிஜன் நிறுவனம் ஸ்பான்சர் செய்துள்ளது. இங்குள்ள ஏடிஎம் களில் ஸ்வைப்பிங் முறைக்குப் பதிலாக பயோமெட்ரிக் விரல்பதிவு முறையில் கிராம மக்கள் பண பரிவர்த்தனை செய்யமுடிகிறது.  மகாராஷ்டிரா மாநிலத்தில் டோன்ஜா என்னும் கிராமத்தை சமீபத்தில் தத்தெடுத்திருக்கிறார் மாஸ்டர் ப்ளாஸ்டர்.

தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியைத் துடிப்புள்ள ஒரு எம்.பி. எப்படி எல்லாம் பயன்படுத்தெல்லாம் என்பதற்கு சச்சின் ஒரு உதாரணம். இவரை போலவே, ஒவ்வொரு எம்.பி.யும் தங்களுக்கு ஒதுக்கப்படும் 5 கோடியைச் சிறந்த முறையில் பயன்படுத்தினால், 10 வருடங்களில் கிராமப்புற இந்தியா மேம்படுவது உறுதி.  நிதியை சரியாக திட்டங்களுக்கு செயல்படுத்தும் சச்சின் டெண்டுல்கர்,  ராஜ்ய சபாவில் மீதம் உள்ள காலங்களில் தன் வருகையை அதிகப்படுத்திக் கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு இவர் மேல் உள்ள அந்தக்  குறையை நீக்குவார் என நம்பலாம். எனவே, வருகைப்பதிவில் கவனம் செலுத்தி, ஆரோக்கியமான கேள்விகளை எழுப்புங்கள் லிட்டில் மாஸ்டரே! 

- பு.விவேக் ஆனந்த், உ. சுதர்சன் காந்தி 


டிரெண்டிங் @ விகடன்