வெளியிடப்பட்ட நேரம்: 13:47 (18/04/2017)

கடைசி தொடர்பு:13:47 (18/04/2017)

கம்பீர் 'டாப்', விராட் கோலி 'பரிதாபம்' - பிளே ஆஃப் தகுதி பெறப்போவது யார்?

எந்த அணி ஜெயிக்கும், எந்த அணி தோற்கும் என அறுதியிட்டு சொல்ல முடியாத அளவுக்கு பரபரப்பாக நடந்து வருகிறது ஐபிஎல் பத்தாவது சீசன். ஒவ்வொரு அணியும் வெற்றிக்காக போராடுகின்றன. இரண்டு போட்டிகளில் ஜெயித்தால், அடுத்த இரண்டு போட்டியில் தோற்கின்றன. உள்ளூரில் வென்றால் வெளியூரில் தடுமாறுகின்றனர். இதனால் எந்த அணி பிளே ஆஃப் செல்லும் என்பதையே கணிக்க முடியவில்லை. தினம் தினம் ரசிகர்களுக்கு தீனி போடும் ஐபிஎல்லில் ஒவ்வொரு அணிகளும்  எப்படி விளையாடி வருகின்றன என்பதை பற்றி விரிவாக பார்ப்போமா? 

குஜராத் மற்றும் டெல்லியைத் தவிர அனைத்து அணிகளும் தலா 5 போட்டிகள் ஆடி முடித்து விட்டன. புள்ளிப்பட்டியலில் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி கெத்தாக முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தில் மும்பை உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்றுள்ளன. இந்த இரண்டு அணிகளும் இன்னும் 9 போட்டிகளில் ஆட வேண்டியதிருக்கிறது. ஏற்கனவே நான்கு வெற்றிகளை பெற்றுவிட்டதால், இன்னும் ஐந்து போட்டியில் வென்றாலே ஃபிளே ஆஃப்க்கு தகுதி பெற்று விட முடியும் என்ற நிலையில் உள்ளன . 

கம்பீர் மற்றும் கோலி

மூன்றாவது இடத்தில் ஹைதராபாத் இருக்கிறது. இந்த அணி இதுவரை நடந்த ஐந்து போட்டிகளில் மூன்றில் வென்று ஆறு புள்ளிகளை பெற்றுள்ளது. உள்ளூரில் மட்டுமே இதுவரை ஹைதராபாத் ஜெயித்திருக்கிறது. மும்பை, கொல்கத்தா ஆகிய அணிகளுடன் விளையாடுவதற்கு அந்தந்த அணிகளின் சொந்த ஊருக்குச் சென்று தோல்வியுடனேயே திரும்பி வந்திருக்கிறது. நேற்றைய தினம்  நடந்த பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் மனன் வோஹ்ராவின் மரண விளாசலில் தோல்வியை நோக்கி பயணித்தபோது, புவனேஸ்வர் குமார் புண்ணியத்தால் தப்பியது. ஹைதராபாத் அணிக்கு இன்னமும் நான்கு போட்டிகள் மட்டுமே சொந்த ஊரில். மீதி 5 போட்டிகள் அயல்மண்ணில் ஆட வேண்டும். நடுவரிசை பலமாக இல்லாததால் தடுமாறுகிறது சன் ரைஸர்ஸ். ஹென்றிக்ஸ், யுவராஜ், தீபக் ஹூடா போன்றோர் இன்னமும் நன்றாக விளையாட வேண்டியது அவசியம். இல்லையேல் பிளே ஆஃப் நூலிழையில் மிஸ் ஆகலாம். 

டெல்லி அணி, கணிக்கவே முடியாத வகையில் விளையாடி வருகிறது. இதுவரை ஆடிய நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றி, இரண்டில் தோல்வி அடைந்திருக்கிறது. டெல்லி அணியில் ஒரே ஒரு ஆறுதல் என்னவெனில் பல வீரர்கள் ஃபார்மில் இருக்கிறார்கள். பில்லிங்ஸ், சஞ்சு சாம்சன், ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பன்ட், கிறிஸ் மோரிஸ், கோரே ஆண்டர்சன், ஜாகீர் கான் ஆகியோர் பக்கா பார்மில் இருக்கிறார்கள். கருண் நாயர் மட்டுமே கவலையளிக்கும் விதமாக ஆடி வருகிறார். அணிச் சேர்க்கையில் தான் டெல்லி தடுமாறி வருகிறது. இன்னும் கொஞ்சம் கவனமும் ஆடினால் டெல்லி அணி பிளே ஆஃப்க்கு தகுதி பெற முடியும். 

கிங்ஸ் லெவன் பஞ்சாப், முதலிரண்டு போட்டிகளில் அதிரடியாக வென்றது. ஆனால் அதன் பின்னர் ஹாட்ரிக் தோல்வி. பஞ்சாப் அணி முழுக்க முழுக்க இந்திய பவுலர்களையே நம்பி இருக்கிறது. ஓரளவு நம்பிக்கையளிக்கும் வகையில் அவர்களும் பந்து வீசுகிறார்கள். நான்கு அயல்நாட்டு பிளேயர்களை தேர்ந்தெடுப்பதில் தான் சொதப்புகிறது பஞ்சாப். மில்லர் நீண்ட காலமாக ஐபிஎல்லில் சொதப்பல் ஆட்டம் ஆடி வருகிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட், சராசரி எல்லாமே கடந்த ஆண்டில் இருந்து மிகவும் சுமார் தான். ஆம்லா நல்ல டச்சில் இருக்கிறார். மேக்ஸ்வெல் ஓரளவு நல்ல ஃபார்மில் இருக்கிறார். மோர்கன், மில்லர், குப்தில், ஸ்டோனிஸ், மேட் ஹென்றி, ஷான் மார்ஷ் ஆகியோரில் எந்த இருவரை தேர்வு செய்வது என்பதில் பஞ்சாபி  அணி இன்னமும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அவசரம். 

மிகவும் சுமாராகவே ஆடி வருகிறது புனே அணி. பந்து வீச்சு படு மோசம். கடைசி போட்டியைத் தவிர தோனி பெரிய அளவில் சோபிக்க வில்லை. ஸ்மித் அதிரடி ஆட்டம் ஆட திணறுகிறார். ரஹானே இயல்பான ஆட்டத்தில் இருந்து அதிரடி ஆட்டம் ஆட முயற்சிப்பதால் அவரது சீரான பெர்ஃபார்மென்ஸ் பாதிக்கப்பட்டிருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் அரிதாகவே நல்ல பந்துகளை வீசுகிறார், சிறந்த சிக்ஸர்களை விளாசுகிறார். இம்ரான் தாஹீர் மட்டுமே பவுலிங்கில் தனியாக கம்பு சுத்திக்கொண்டிருக்கிறார். மற்ற பவுலர்கள் ஊஹூம்!   இந்த நிலை தொடர்ந்தால் பிளே ஆஃப் பற்றியெல்லாம் எண்ணிப் பார்க்க முடியாது, வேண்டுமானால் கடைசி இடத்துக்கு வருவதை  தவிர்க்க போராடிப் பார்க்கலாம். உத்திகளை மாற்றி, அணிச் சேர்க்கையை உறுதிப்படுத்தி, மிரட்டல் ஆட்டம் ஆடினால் மட்டுமே புனேவுக்கு  பிளே ஆஃப் சாத்தியம்.

குஜராத் அணி சமீபத்தில் பார்முக்கு திரும்ப ஆரம்பித்திருக்கிறது. ஆண்ட்ரூ டை மற்றும் ஜடேஜா வரவுக்கு பின்னர் நிமிர்ந்திருக்கிறது. பேட்டிங்கில் எந்த குறையும் இல்லாமல் ஆடுகிறார்கள், பவுலிங் தான் சற்றே கவலைக்கிடமாக உள்ளது. இந்திய இளம் வீரர்கள் கூடுதல் உழைப்பைத் தந்து ஆடினால் மட்டுமே குஜராத் பிளே ஆஃப் செல்ல முடியும். 

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இப்படி மோசமாக ஆடும் என கனவிலும் யாரும் நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள். கடந்த சீசன்களை போல அல்லாமல், இந்த முறை பெங்களூரு பிட்ச் மாறியிருக்கிறது. பிட்ச் ஸ்லோ என்பதால் ரன்கள் எடுக்க பேட்ஸ்மேன்கள் திணறுகின்றனர். இதனால் பெங்களூரு பேட்ஸ்மேன்களால் அதிக ரன்கள் குவிக்க முடிவதில்லை. பெங்களூரு அணியின் பவுலிங் முன்பை விட இப்போது பரவாயில்லை என்றாலும் கூட, பவுலிங்குக்கு சாதகமான பிட்சில் ஆடி வருவதால் நன்றாக வீசுகிறார்கள் எனச் சொல்ல முடியாது. கோலி, டிவில்லியர்ஸ் தவிர எல்லாரும் சொதப்புகிறார்கள். கெயில் தடவல் ஆட்டம் ஆடுகிறார். அவர் அதிரடிக்கு திரும்ப வேண்டும். வாட்சன் அணிக்கு பாரமாக அமைந்து வருகிறார். டிராவிஸ் ஹெட்டும் சுமாராகவே ஆடுகிறார். அயல் நாட்டு பேட்ஸ்மேன்கள் உடனடியாக பார்முக்கு திரும்ப வேண்டும். அதே சமயம் உள்ளூர் இளம் வீரர்கள் அணிக்கு பக்கபலமாக ஆட வேண்டும். மன்தீப் சிங்,  கேதர் ஜாதவ் ஆகியோர் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த வேண்டியது கட்டாயம். கடந்த சீசனிலும் இதே போல மோசமான சூழ்நிலையில் தான் இருந்தது பெங்களூரு. முதல் ஏழு போட்டிகளில் ஐந்தில் தோல்வி. இந்த சீசனில் முதல் ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வி. இனி வரும் போட்டிகள் ஒவ்வொன்றையும் நாக்- அவுட் போட்டியாக கருதி ஆடி ஜெயிக்க வேண்டும். பெங்களூரு அதைச் செய்யக் கூடிய அணி தான். எனவே மீண்டுவருமா என பொறுத்திருந்து பார்ப்போம். 

 

17.04.17 வரை நடந்த போட்டிகளின் அடிப்படையில், பிளே ஆஃப் செல்ல ஒவ்வொரு அணிக்கும் எவ்வளவு வாய்ப்புகள் இருக்கின்றன?

பிளே ஆஃப் வாய்ப்பு

                                                                                                                                                                                               - பு.விவேக் ஆனந்த் 


டிரெண்டிங் @ விகடன்