Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மல்லகம்பா...வல்லம்களி...சுஜூ... இதெல்லாம் என்ன தெரியுமா

இன்றைய ஜென் இசட் தலைமுறை, நேற்றைய ஹைடெக் தலைமுறை, அதற்கு முந்தைய ‘நாங்கெல்லாம் அந்தக்காலத்தில’ தலைமுறை என்று மூன்று தலைமுறை மக்களுக்கும் இப்போதைய பொழுதுபோக்கு செல்போன், கம்யூட்டர் ஸ்க்ரீனுக்குள் ஒளிந்து கிடக்கும் விர்ச்சுவல் கேமிங் விளையாட்டுகள்தான். டோரிமான் தொடங்கி போக்கிமான் வரை கற்பனை கதாபாத்திரங்களுடன் கேரம் விளையாடிக்கொண்டிருக்கின்றனர் குட்டீஸ்கள். 

விளையாட்டு

கிரிக்கெட், ஃபுட் பால் போன்றவற்றையே ஏலியன் கிரகங்களிலில் இருந்து வந்தவைகளாய் பார்க்கும் அதிநவீன உலகில் நாம் இடம்பிடித்திருக்கிறோம். எல்லாவிதமான கேட்ஜட் ஆக்கிரமிப்புகளையும் தாண்டிப் போய்,  பழங்கதைகளில் இடம்பிடித்திருக்கும் உடல்வலிமையையும், மனவலிமையையும் ஒருசேர கற்றுக் கொடுத்த சில விளையாட்டுகளையும் சற்று ரீவைண்ட் செய்து பார்ப்போமா?

மத்திய பிரதேசத்தின் மாநில விளையாட்டாக 2013ம் ஆண்டிலிருந்து இடம்பிடித்த கலைதான் ‘மல்லகம்பா’. தமிழில் மல்லர் கம்பம். ஜிம்னாஸ்டிக் கலையின் தொடக்கம் இக்கலைதான் என்றுகூட சொல்லலாம். மல்யுத்த வீரர்கள் இணைந்து, கம்பம் போன்ற விதவிதமான தோற்றங்களை உருவாக்குவதுதான் மல்லகம்பா. பழங்கால மத்தியபிரதேசம் மற்றும் ஹைதராபாத்தில் அதிகளவில் பயிற்றுவிக்கப்பட்ட கலை. 25லிருந்து 30வரை இதில் வகைகள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு வகைதான் வீரர்களால் இன்றும் விளையாடப்பட்டு வருகிறது. எத்தனை பேருக்கு இந்த விளையாட்டைப் பற்றி தெரியும்?

மல்லகம்பாவை விடுங்கள். ‘வல்லம்களி’ தெரியுமா? கேப்பைக்களி மாதிரி சாப்பிடும் விஷயமா என்று ஆச்சரியமாக கேட்காதீர்கள். கிரி படத்தில் வடிவேலுவும், அப்புறம் அர்ஜூனும் மாற்றி மாற்றி தலைமை தாங்குவார்களே அதே அதே படகுப் போட்டி விளையாட்டின் மலையாளப் பெயர்தான் வல்லம் களி. வல்லம் என்றால் படகு. களி என்றால் விளையாட்டு. மலையாளக் கரையோரம் இன்றும் மண்வாசம் வீசும் விளையாட்டுப் போட்டி இது. குழுக்களாகப் பிரிந்து, படகில் துடுப்பு போட்டு ஆற்றுக்கரையை யார் முதலில் அடைகிறார்களோ அவர்களுக்கே வெற்றி. இன்றும் கேரளாவின் நம்பர் ஒன் கேம் இது. நீளமான படகைப் போலவே இதன் வரலாறும் நீண்ட ஒன்று. 14ம் நூற்றாண்டில் நடைபெற்ற போர் ஒன்றிற்காக முதன்முதலில் பலர் அமர்ந்து துடுப்பு போடக்கூடிய படகு வடிவமைக்கப்பட்டது. அதன் பெயர் ”சண்டன் வல்லம்”. பாம்பு போன்று வளைந்து, நெளிந்து நீரை விலக்கிச் செல்லக்கூடிய இந்த படகுகளின் டெக்னிக்கல் சப்போர்ட் சிஸ்டம் 650 வருட பாரம்பரியம் மிக்கது. 

கி நாங் ஹுவான்

அந்தமான் நிக்கோபார் தீவுப்பகுதியில் வசித்துவருகின்ற பழங்குடியின மக்களின் பாரம்பரிய விளையாட்டு இது. ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை வகையில் வருகின்ற இவ்விளையாட்டு, சற்றே வித்தியாசமானது. இவர்கள் சேவல், காளைக்குப் பதில் சண்டையிட பயன்படுத்துவது வெள்ளைப் பன்றிகளை. மூங்கிலால் ஆன கூண்டுக்குள் தனித்தனியாக இரண்டு வெள்ளைப் பன்றிகள் அடைக்கப்பட்டிருக்கும். கோடாரியால் கூண்டை உடைத்தவுடன், அடைத்து வைக்கப்பட்டிருந்த கோபத்தில் ஆக்ரோஷமாக வெளிவரும் பன்றிகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்வதுதான் போட்டி. மிதமான வெயில் காலங்களில் மட்டுமே இந்தப் போட்டியினை நடத்தி மகிழ்வார்கள் நிகோபார் மக்கள்.

”சுஜு”,இன்றைய கால்பந்திற்கு எள்ளு, கொள்ளுத் தாத்தா, சீனாவின் இந்த விளையாட்டாகத்தான் இருக்கமுடியும். கிமு, கிபி காலத்திய இந்த விளையாட்டு மெயினாக அரண்மனை வாரிசுகளால் விளையாடப்பட்டு வந்திருக்கிறது. இரண்டு டீம்களில், மொத்தமாக 12 முதல் 16 விளையாட்டு வீரர்கள் இடம்பிடித்திருப்பார்கள். முதலில் விலங்குகளின் தோலால் ஆன பந்துகளில் பறவைகளின் மெல்லிய இறகுகள் அடைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. காலப்போக்கில் அதுவே காற்றடைத்த பந்துகளாக இம்ப்ரூவ் ஆனது தனிக்கதை.

மணிப்பூரின் பாரம்பரிய விளையாட்டான காங் சனாபா, திரிபுராவின் கெல்லா சட், புஷ்கரின் ஒட்டக பந்தயம், தஞ்சை மணம் வீசும் தஞ்சாவூர் கட்டம் இதெல்லாமும் குழந்தைகளும், பெரியவர்களும் ஓய்வில் ஆடிமகிழ்ந்த, கூடி மகிழ்ந்த விளையாட்டுகள்தான். காளையை அடக்க வேண்டாம். அட்லீஸ்ட் கால்களுக்கு பயிற்சி கொடுக்கும் வகையில் கிரிக்கெட், வாலிபால், ஃபுட் பால் போன்றவற்றையாவது இன்றைய ஐபோன் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுங்களேன் ப்ளீஸ்!

-பா.விஜயலட்சுமி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement