ஸ்மித், கோலி இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்? யார் சிறந்த கேப்டன்? நம்பர்கள் சொல்லும் ரகசியம் #DepthReport #3MinRead | Who are the Best Batsman and best captain between Virat and Smith?

வெளியிடப்பட்ட நேரம்: 10:42 (19/04/2017)

கடைசி தொடர்பு:19:03 (22/04/2017)

ஸ்மித், கோலி இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்? யார் சிறந்த கேப்டன்? நம்பர்கள் சொல்லும் ரகசியம் #DepthReport #3MinRead

இரு ஜாம்பவான்கள். இரண்டு கோபக்கார இளைஞர்கள், இரண்டு நம்பர்1 பேட்ஸ்மேன்கள், இரண்டு கேப்டன்கள் - இனி கிரிக்கெட் உலகை ஆளப்போகும் அந்த இருவர் விராட் கோலி மற்றும் ஸ்டீவன் ஸ்மித். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. இதுவரையிலான எந்தவொரு ஜாம்பவான்களின் சாயலும் இல்லாமல் தனித்துத் தெரியும் ஜென் Z  கிரிக்கெட்  ஜாம்பவான்கள் இவர்கள். சச்சின் மாதிரி பேட்டிங் செய்யவும் தெரியும், கங்குலி போல கேப்டன்சியும் தெரியும். பிராட்மேன் போல வெளுக்கவும் முடியும், ஸ்டீவ்வாக் பாணியில் அணியை வழிநடத்தவும் முடியும். இப்படி காக்டெயிலாக வளர்ந்து நிற்கும் மகத்தான கிரிக்கெட் வீரர்கள் கோலி, ஸ்மித்.

இனி குழந்தைங்கள் இவர்களை பார்த்துத்தான் கிரிக்கெட் மீது மோகம் கொள்வார்கள், இவர்கள் தான் ரோல் மாடலாக பலருக்கும் விளங்கப்போகிறார்கள். இந்த இருவர் எடுக்கும் முடிவுகளை வைத்துத்தான் அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு  கிரிக்கெட் வெவ்வேறு பரிமாணம் எடுக்கும். இவர்கள் தான் இனி தலைப்புச் செய்தி; இவர்கள் தான் இனி அட்டை படங்களை அலங்கரிக்கப் போகிறவர்கள்.  இருவரும் வெற்றியாளர்களாக நிற்கிறார்கள், ஆனால் அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த பாதை வெவ்வேறானவை. இருந்தும் இருவர் வாழ்விலும் சில சுவாரஸ்யமான ஒற்றுமைகளும் உண்டு. அவை என்ன? எதில் தனித்து தெரிகிறார்கள்? ஏன் இவர்கள் ஜாம்பவான்கள்?

கோலிக்கு  இப்போது வயது இருபத்தி எட்டு. அவரை விட 209 நாட்கள் இளையவர் ஸ்டீவன் ஸ்மித். இந்தியாவுக்கு மூன்று ஃபார்மெட்டிலும் கோலி கேப்டன். ஆஸிக்கு ஸ்மித். டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர்1 பேட்ஸ்மேன் ஸ்மித், டி20 தரவரிசையில் நம்பர்1 பேட்ஸ்மேன் கோலி. இவர்கள் இருவரும் களத்தில் நிற்கும் போது எதிரணி பவுலர்களுக்கு வயிறு கலங்கும்.இருவரும் ஆக்ரோஷமான கிரிக்கெட்டர்கள். இப்படி பல ஒற்றுமைகள் இருவருக்கும் உண்டு. 

விராட் கோலி :-

விராட் கோலி  எட்டு வயதிலேயே பேட் பிடிக்கத் தொடங்கியவர். கோலி தலைமையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையை ஜெயித்தது இந்தியா. அந்த கோப்பை, இந்திய அணிக்குள்  நுழைய பாதைபோட்டுத் தர, கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய அணிக்குள் நுழைந்தார். சேஸிங்கில் தள்ளாடிக்கொண்டிருந்த இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் இறங்கி  தோள்கொடுத்தார். ஆரம்ப காலகட்டங்களில் கம்பீரோடு கூட்டணி போட்டு சேஸிங்கில் அசத்தியதில், வெகுவிரைவிலேயே இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக உருமாறினார். சாதாரண பேட்ஸ்மேனில் இருந்து சூப்பர் பேட்ஸ்மேனாக மாறியது 2012ல். அந்த ஆண்டு 17 ஒருநாள் போட்டிகளில் ஐந்து சதம் விளாசி அசரடித்தார். அதே ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அட்டகாசமான ஒரு சதம் விளாசினார், அடுத்த இரண்டு ஆண்டுகளில் முன்னணி பேட்ஸ்மேனாக மாறினார். 2014 இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அது கோலியின் வாழ்க்கையை திருப்பிப் போட்டது. அதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அவர் லாயக்கில்லாதவர் என்றே விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன.

கோலியுடன் கம்பீர்

முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக தோனி விலக, கேப்டன் பதவி தேடி வந்தது கோலியிடம். அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்து மிரள வைத்தார். அந்த போட்டியில் கடைசி நாளில் இந்தியா 364 ரன்கள் அடித்தால் வெற்றி  என இலக்கு வைத்தது ஆஸ்திரேலியா. எப்படியும் இந்தியா டிராவுக்காகத் தான் ஆடும் என எதிர்பாத்த நிலையில், கோலி தலைமையில் ஆக்ரோஷமாக ஆடியது இந்தியா. முரளி விஜய்யும், கோலியும் பார்ட்னர்ஷிப் போட்டு அடித்து ஆடினார்கள்.  இன்னும் 17 பந்துகள் விக்கெட் விழாமல் இருந்தால் மேட்ச் டிரா ஆகும் எனும் சூழ்நிலையில் 315 ரன்களுக்கு இன்னிங்ஸை இழந்தது இந்தியா. ஒரு கட்டத்தில் இந்தியா ஜெயித்து விடும் என்ற சூழ்நிலையே நிலவியது. கோலியின் பாசிட்டிவ்வான அக்ரஸிவ் கேப்டன்சி அப்போதே பேசப்பட்டது. டிராவுக்காக ஆடாமல், வெற்றிக்காக ஆடி தோற்றார் கோலி. அதே தொடரில் தோனி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெற, கடைசி டெஸ்ட் போட்டியை வழிநடத்தி மேட்ச்சை டிரா செய்தார் கோலி. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான அந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் கோலி அடித்த சதங்கள் நான்கு. ஆஸ்திரேலிய மண்ணில் எந்தவொரு  அயல்நாட்டு   வீரரரும் இப்படியொரு மகத்தான சாதனையைச் இதுவரைச் செய்ததில்லை. 

 கோலி மற்றும்  கம்பீர்

அதன் பின்னர், கோலி தொட்டதெல்லாம் சிக்ஸர்கள் தான். அந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பதவியை ஏற்றார். கோலி கேப்டனாக பொறுப்பேற்ற போது இந்தியா தரவரிசையில் ஏழாவது இடத்தில் இருந்தது. கோலி கேப்டன்சியில் இலங்கை மண்ணில் 2-1 என தொடரை ஜெயித்தது இந்தியா. 9 ஆண்டுகளாக அயல்மண்ணில் தொடரை இழந்ததில்லை என வளைய வந்த  தென் ஆப்ரிக்க அணியை 3-0 என வென்று விரட்டியது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2-0 என வென்று சரித்திரம் படைத்தது. நியூசிலாந்தை 3- 0 என வாஷ்அவுட் செய்தது, இங்கிலாந்தை 4- 0 என வீழ்த்தி  டெஸ்ட் அரங்கில் அசைக்க முடியாத இடத்தில் அமர்ந்தது. இதோ ஆஸ்திரேலியாவையும் 2-1 என வீழ்த்தி, நாங்க தான் டெஸ்டில் கில்லி என உலகுக்கு அறிவித்திருக்கிறது. இப்போது ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவின் இடம் நம்பர் 1 . 

கோலியின் ஆக்ரோஷ கேப்டன்சி

கடந்த ஜனவரியில்  லிமிட்டட் ஓவர்ஸ் கிரிக்கெட்டிலும் தோனி விலக, கோலி கேப்டன்சியில் ஒருநாள், டி20 தொடர்களை ஜெயித்திருக்கிறது இந்திய அணி. கடந்த 2 ஆண்டுகளில் கோலி தலைமையில் எந்தவொரு பார்மெட்டிலும் தொடரை இழக்காமல் புது சரித்திரம் படைத்திருக்கிறது இந்தியா. கேப்டனாக சாதித்த அதே சமயம், பேட்டிங்கிலும் வெறித்தனமாக செயல்பட்டு வருகிறார். தனது கேரியரில் உச்சபட்ச பார்மில் இந்த ஒன்றரை ஆண்டுகாலத்தில் தான் இருந்தார். கடந்த ஆண்டு மட்டும் 37 சர்வதேச போட்டிகளில்  ஏழு சதம், மூன்று இரட்டைச் சதம் உட்பட 2595 ரன்கள் குவித்து வாயடைக்க வைத்திருக்கிறார் கோலி. கடந்த ஐபிஎல் சீசனில் மட்டும் நான்கு சதங்கள் விளாசி, 973 ரன்கள் குவித்தார். ஆண்டு முழுவதும், பந்துகளையும், பந்துவீச்சாளர்களையும் விரட்டியதில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே ஒன்று சேர்ந்து கோலி தான் பெஸ்ட் பிளேயர் எனச் சொல்லியிருக்கிறது. 2016 ஆம் ஆண்டில் கோலி ஆடிய ஆட்டத்தை முறியடிக்கும் வகையில், ஆடுவதற்கு இன்னொரு வீரர் பிறந்துதான் வர வேண்டும். 1998 சீஸனில் சச்சின் எப்படி மாணிக்கத்தில் இருந்து பாட்ஷாவாக மாறினாரோ, அதையொத்த நிகழ்வு தான் கோலிக்கும் கடந்த ஆண்டில் நடந்தது. 

ஸ்டீவன் ஸ்மித் : -

அப்பா ஆஸ்திரேலியா, அம்மா இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். வேதியியலில் பட்டம் பெற்ற பீட்டருக்கு, கிரிக்கெட் மீது கொள்ளை ஆர்வம். மகன் ஸ்மித் நான்கைந்து வயதிலேயே பேட் பிடிக்கத் தொடங்க, கிரிக்கெட் அகாடமியில் சேர்த்து விட்டார். 1989இல் பிறந்த ஸ்மித் 1994/95 சீசனில் எட்டு வயதுக்குட்பட்டோருக்கான கிளப் போட்டிகளில் ஆட ஆரம்பித்து விட்டார். ஓரளவு பேட்டிங், அபாரமான சுழற்பந்து இப்படித்தான் பதின் வயதுகளில் கிளப்களில் கலக்கினார். 

ஏழாவது, எட்டாவது இடங்களில் இறங்கி பேட்டிங்கில் ஓரளவு ரன்களை அடிக்கக்கூடியவர், விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்ற அடையாளங்கள் பிக்பாஷ் லீக் போட்டிகளில் பங்கேற்க உதவியது. அங்கே தன்னை நிரூபித்தார்  ஸ்மித். 2010 டி20 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்தது. இதில் சாம்பியன் இங்கிலாந்து. ரன்னர் அப் - ஆஸ்திரேலியா. இந்த தொடரில் ஏழு போட்டிகளில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றினார்  ஸ்மித். தொடரில் அதிக விக்கெட் எடுத்த இரண்டாவது பவுலர் ஸ்மித் தான்.

ஸ்டீ வன் ஸ்மித்

இப்படி பவுலராக மிளிர்ந்த ஸ்மித், நல்ல பேட்ஸ்மேனாக மாறத் தொடங்கியது இந்தியாவுக்கு எதிராகத் தான். 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. லெக் ஸ்பின் வீசக்கூடியவர் என்பதால், பேக்கப்புக்கு ஆல்ரவுண்டர் கேட்டகிரியில் இவரை அணியில் சேர்த்தது ஆஸ்திரேலியா. ஆனால் ஆடும் லெவனில் ஆரம்பத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த தொடரில் முக்கியமான ஆஸ்திரேலிய வீரர்கள் பலர் சொதப்ப, நான்கு வீரர்களை கழட்டிவிட்டு அணியை மாற்றியமைத்தார் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர். மொஹாலி டெஸ்டில் ஸ்மித் அணியில் இடம்பெற்றார். இது அவருக்கு ஆறாவது டெஸ்ட் போட்டி.  முதல் இன்னிங்ஸில் 251/7 என தத்தளித்த போது, ஸ்டீவன் ஸ்மித்தும், மிச்செல் ஸ்டார்க்கும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இந்திய பவுலர்களை புரட்டி எடுத்தனர். 185 பந்தில் 92 ரன் எடுத்து தோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு அவுட் ஆனார் ஸ்மித். ஸ்டார்க் 99 ரன்னில் இஷாந்த் ஷர்மா பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.  அந்த தொடர் ஸ்மித்தை ஒரு நல்ல பேட்ஸ்மேனாக அடையாளம் காட்ட, அடுத்தடுத்த தொடர்களில் கியரை மாற்றி முன்னேறினார்.

ஸ்டீ வன் ஸ்மித்

பவுலர் ஸ்மித் டூ நம்பர் 1 பேட்ஸ்மேன் :- 

 2014 ஆம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தியா சார்பாக எப்படி கோலி அந்த தொடரில் வேற லெவல் பேட்ஸ்மேனாக உருவெடுத்தாரோ, அப்படி ஆஸ்திரரேலிய அணிக்கு வெளிச்சம் பாய்ச்சியவர் ஸ்மித். அடிலெய்டு டெஸ்டில் கோலி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து பிரம்மிக்க வைக்க, அதே டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 162 எடுத்து நாட்அவுட் டாகவும், இரண்டாவது இன்னிங்ஸில் 52 நாட் அவுட்டாகவும் விளங்கினார்.

 கோலி ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் அந்த அடிலெய்டு போட்டியில் நிரூபித்ததால், அதே தொடரில் தோனி ஓய்வுக்கு பிறகு கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றார்.  அடிலெய்டு டெஸ்டில் இந்திய பவுலர்களை வெளுத்தது வாங்கிய ஸ்மித்துக்கு அடுத்த டெஸ்ட் போட்டியிலேயே, கிளார்க்கின் காயத்தால் கேப்டன் பதவி தேடி வந்தது. அந்த தொடரில், பிரிஸ்பேனில் 133, மெல்போர்னில் 192, சிட்னியில் 112 ரன்கள் அடித்து மிரளவைத்தார். நான்கு டெஸ்ட் போட்டியிலும் தலா ஒரு சதம். கோலி, ஸ்மித் இருவருமே அந்த தொடரில் நான்கு சதம் அடித்தது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. 

ஸ்டீ வன் ஸ்மித்

பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கு பிறகு நடந்த ஆஷஸ் தொடரில், ஆஸ்திரேலியா தொடரை இழக்க, நான்காவது டெஸ்ட் போட்டியோடு திடீரென ஓய்வு பெற்றார் கேப்டன் கிளார்க். கோலியை போலவே அயல் மண்ணில், நடந்த டெஸ்ட் தொடரில் பிரதான கேப்டன் ஓய்வு பெற, கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து பிரத்யேக கேப்டனாக நியமிக்கப்பட்டார் ஸ்மித். அதன் பின்னர் பேட்டிங்கில் ஏறுமுகம் தான். கடந்த ஆண்டு  ஐசிசி  டெஸ்ட் பேட்ஸ்மென் தரவரிசையில் முதலிடத்தில்  இருந்த டிவில்லியர்ஸை முந்தி முதல் இடம் பிடித்தார். ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலிய அணி இலங்கை மண்ணில் படுதோல்வியை சந்தித்தது, சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவிடம் தொடரை இழந்தது. எனினும், தற்போது இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் எழுச்சி பெற்று அற்புதமாக ஆடியது ஆஸி.  குறிப்பாக ஸ்டீவன் ஸ்மித் மெச்சத்தக்க பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் ஸ்மித், ஆஸ்திரேலியாவின் நவீன பிராட்மேன். இலங்கை, இந்தியா போன்ற சூழல் ஆடுகளங்களோ, இங்கிலாந்து போன்ற ஸ்விங் ஆடுகளங்களையோ, தென் ஆப்ரிக்கா போன்ற பவுன்ஸ் களங்களோ, வெஸ்ட் இண்டீஸ் போன்ற ஸ்லோ பிட்ச்களோ, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற வேகப்பந்து ஆடுகளங்களோ எதுவாக இருந்தாலும் பின்னிப்பெடல் எடுக்கிறார் ஸ்மித். சம காலத்தில் அவரை மிஞ்சும் ஒரு பேட்ஸ்மேன் இல்லை என்பதே நிதர்சனம். ஆகவே, ஸ்மித்தும் கோலியும் அற்புதமான பேட்ஸ்மேன்கள் என்பது தெளிவு.  இந்த இருவரிடமும் இருக்கும் ஒரே மைனஸ், ஆடுகளத்தில் டென்ஷன் ஆவதும், தங்களது அணி ஜெயிக்க எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கும் போர்குணம் தான். 

2017 பார்டர் கவாஸ்கர் கோப்பை  தொடரின் முன்பு வரை கோலியும், ஸ்மித்தும் நண்பர்களாவே இருந்தனர். ஆனால் இந்த தொடரில் இருவருக்கும் கடும் மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறது. இருவருமே தனது அணியை வெற்றிபெற வைக்கவேண்டும் என்பதால் சில மோசமான செய்கைகளை செய்தனர். தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக அறியப்படும் இவர்கள், கேப்டனாக ஆடும் போது ஜென்டில்மென் கிரிக்கெட்டை குழி தோண்டி புதைத்துவிட்டார்கள். இனி அப்படிச் செய்யாதீர்கள் அணித் தலைவர்களே! 

இனி இருவரின் பெர்பார்மென்ஸை அலசுவோம். 

ஆண்டுவாரியாக இருவரின் பெர்பார்மென்ஸ் ஒப்பீடு :-

கடந்த 9 ஆண்டுகளில் ஐந்து ஆண்டுகள், சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் 50க்கும் மேல் சராசரி வைத்திருக்கிறார் விராட் கோலி. 2009 ஆம் ஆண்டு கவனம் ஈர்த்த கோலி, அடுத்தடுத்த ஆண்டுகளில் சீராக ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை கிராஃப் பார்த்தாலே புரியும்.  அறிமுகமான முதல்  வருடத்தை தவிர மற்ற வருடங்களில் 38க்கு கீழ் சராசரி குறையவே இல்லை. 2015ல் சற்றே சுணக்கம் ஏற்பட்டாலும், மீண்டும் கடுமையாக பயிற்சி செய்து, உத்திகளை மாற்றி ஃபார்முக்கு வந்தார் கோலி. 2016ல் அவர் தொட்ட உயரம் இமாலய லெவல். 

ஸ்மித் ஆரம்ப கட்டங்களில் பேட்டிங்கில் எவ்வளவு மோசமாக இருந்தார் என்பதை கிராஃப் அப்பட்டமாக காட்டிக்கொடுத்து விடுகிறது. 2010ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானவர், முதல் மூன்று வருடங்களில் பெரிதாக சாதிக்கவில்லை. அதுவும் 2012 ல் படு மோசம். அப்போது சிறிது காலம் அணியில் இருந்து நீக்கப்பட்டபோது, பவுலரில் இருந்து பேட்ஸ்மேனாக மாறிய ஆக்ஷன் பிளாக் நடந்து முடிந்தது. மீண்டும் அணிக்குள் நுழைந்தபோது ஒரே வருடத்தில் சராசரியை இரு மடங்காக உயர்த்தினார். அதற்கடுத்த வருடமே விர்ரென உச்சத்தில் போய் அமர்ந்தார். அதற்கடுத்த வருடங்களில் ஃபார்மை மெயின்டெயின் செய்தார். கிராஃபில் 2016ல் ஒரு சிறிய சரிவு தென்பட்டாலும், 53 ரன்கள் சராசரி என்பதே அட்டகாசம் தான். இதோ இந்த வருடம் மீண்டும் 60ஐ தாண்டுகிறார் ஸ்மித். கோலியை விட எந்தெந்த வருடங்களில் ஸ்மித் மிக சிறப்பான ஃபெர்பார்மென்ஸை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை மேலே உள்ள  INTERACTIVE INFOGRAPHICல் மவுசை வைத்து நகர்த்திப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

எந்த இன்னிங்ஸில் யார் பெஸ்ட் ? 

டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் ஸ்மித் அணி முதலில் பேட்டிங் செய்யும் போது அபாரமாக விளையாடுகிறார். நான்காவது இன்னிங்ஸில் சேசிங் செய்யும் போது சுமார் தான். இதற்கு அப்படியே நேரெதிராக இருக்கிறார் விராட் கோலி. எதிரணியின் ஸ்கோர் போர்டை பார்த்த பிறகு தான் சூடேறும். இரண்டாவது மற்றும் நான்காவது இன்னிங்ஸ்களில் சூரப்புலி விராட் . 

விராட் முதல் இன்னிங்ஸ் பேட்ஸ்மேன் கிடையாது. ஆனால் ஸ்மித் அணி எப்போதெல்லாம் முதலில் பேட் பிடிக்கிறதோ அப்போதெல்லாம் முன்னின்று பந்துகளை வேட்டையாடுவார். முதல் இன்னிங்ஸில் அவரது சராசரி 94. சமகாலத்தில் எந்தவொரு பேட்ஸ்மேனும் இப்படிச் சிறப்பாகச் செயல்பட்டதில்லை. ஸ்மித் சேஸிங்கில் சுமார் தான். கோலி சேஸிங்கில் தான்  டாப்.

எந்த இடத்தில் இறங்கினால் கோலி கில்லி? 

கோலி ஸ்மித்

ஸ்மித்தும் சரி, விராட்டும் சரி மூன்றாவது மற்றும் நான்காவது நிலைகளில் இறங்கும் போது நன்றாகவே ஆடியிருக்கிறார்கள். ஸ்மித் இதில் கோலியை விட முன்னிலையில் இருக்கிறார். ஐந்தாவது இடத்தில் கோலியும், ஸ்மித்தும் கிட்டத்தட்ட சம அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார்கள். இதில் ஸ்மித் எளிதாக கோலியை தோற்கடித்து விடுகிறார். ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஸ்மித் 3,4,5 என எந்த இடத்தில் எந்த ஃபார்மெட்டில் இறங்கினாலும் 50 க்கு மேல் சராசரி வைத்திருக்கிறார். இந்தப் புள்ளியில் இருவரையும் ஒப்பீடு செய்தால், கோலியை முந்துகிறார் ஸ்மித். 

கேப்டனாக இருவரின் பேட்டிங் எப்படி? 

விராட் கோலி , ஸ்மித் இருவருமே 2015ம் ஆண்டில் இருந்து தான் முழு நேர கேப்டன் ஆனார்கள். கோலி இந்த ஆண்டு துவக்கத்தில் தான் மூன்று ஃபார்மெட்டுக்கும் கேப்டனாகியிருக்கிறார். ஸ்மித் இதில் கோலிக்கு முன்னோடி. கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு இருவரின் ஆட்டமும் எப்படி இருக்கிறது என்ற தகவல்களை படத்தில் பாரத்தால் தெரியும். 

கோலி Vs  ஸ்மித்

இங்கிலாந்து தொடருக்கு முன்பாகவே கோலி சில ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக பணிபுரிந்திருக்கிறார். கேப்டனாக ஆடிய 17 இன்னிங்ஸில் 5 சதமும், 4 அரைசதமும் விளாசி பிரமிக்க வைத்திருக்கிறார் கோலி. இதுவரையிலான ஃபெர்பார்மென்ஸ் அடிப்படையில் ஸ்மித், கோலி இருவரும் கேப்டனாக இருந்தாலும் பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவு. எனினும் இந்த புள்ளிவிவரங்கள் வருங்காலத்தில் எப்படி மாறும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

 

கோலி Vs  ஸ்மித்

அயல் மண்ணில் இருவரின் ஆட்டமும் எப்படி இருக்கிறது? 

கோலிக்கு கங்காருக்கள் என்றால் இஷ்டம். அதுபோலவே ஸ்மித்துக்கும் புலிகள் என்றால் செம குஷி.  ஏன் என்பதை கீழேயுள்ள படத்தை பார்த்தால் புரியும்.

அயல் மண்ணில் இருவரின் ஆட்டமும் எப்படி இருக்கிறது? 

கோலி மிகக்குறைவான சராசரியை இங்கிலாந்து மண்ணில் வைத்திருக்கிறார். ஸ்மித் இலங்கையில் சுமாருக்கு கீழ். தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து  உள்ளிட்ட நாடுகளில் ஸ்மித்தை விட சிறப்பான சராசரி வைத்திருப்பது கோலியே. அந்த வகையில் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக விளையாடக் கூடிய ஆட்களில் ஸ்மித்தை விட பல படிகள் முன்னிலையிலேயே இருக்கிறார்  இந்தியாவின் ஆங்கிரி பேர்டு.

அணி வெற்றியடைந்த மற்றும் தோல்வியடைந்த போட்டிகளில் இருவரின் ஆட்டமும் எப்படி? 

இதிலும் இருவருக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. இவர்கள் இடம்பிடித்த போட்டிகளில் சம்பந்தப்பட்ட அணி 60% வெற்றிகளை பெற்றுள்ளது.

 கோலி Vs ஸ்மித்

வெற்றியடைந்த போட்டிகளில் கோலியின் ஆதிக்கம் அபாரமாக உள்ளது. இதுவரை அவரின்  35 சதங்கள் வெற்றியில் முடிந்துள்ளன. தோல்வியடைந்த போட்டிகளிலும் நிறைய அரைசதம் விளாசியிருக்கிறார் கோலி. ஸ்மித்தும் வெற்றியடைந்த  போட்டிகளில் நன்றாகவே விளையாடியுள்ளார். எனினும் அணி தோல்வியடைந்த போட்டிகளில் சுமாராகவே ஆடியிருக்கிறார். இப்படியொரு கோணத்தில் அணுகும் போது விராட் கோலி செமத்தியான டீம் பிளேயர் என்பது நிரூபணம் ஆகிறது. விராட் இந்த ஒப்பீட்டில் வின்னர். 

எதிர் அணிகளுக்கு எதிராக இருவரின் பெர்பார்மென்ஸ் : -

ஸ்மித் இந்திய மண்ணில் செம பேட்ஸ்மேன். கோலி ஆஸ்திரேலிய மண்ணில் தனி ஆவர்த்தனம் நடத்தும் பேட்ஸ்மேன்.ஏழு முக்கியமான எதிராணிகளில், ஐந்து அணிகளுக்கு எதிராக 50க்கும் மேல் சராசரி வைத்து அசரவைக்கிறார் கோலி. தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக 40 களில் சராசரி வைத்திருக்கிறார். 

 கோலி Vs ஸ்மித்

ஸ்மித் இந்திய அணியுடன் விளையாடுவது என்றாலே குஷி மோடுக்கு வந்துவிடுகிறார் என்பது புள்ளி விவரத்தை பார்த்தாலே தெரிகிறது. இந்திய அணியின் பந்துவீச்சை நார்நாராய் கிழித்திருக்கிறார் ஸ்மித். சராசரி 73 என்பதும், சதங்கள் 9 என்பதும் மிரட்சியடைய வைக்கின்றன. இந்தியாவைப் போலவே வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களும் ஸ்மித்திடம் சின்னாபின்னமாகியிருக்கின்றனர். கோலியை போலவே இவரும் தென் ஆப்ரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக 40 ரன்கள் என்ற அளவிலேயே சராசரி வைத்திருக்கிறார். இலங்கையுடன் மிக சுமாராகவே ஆடியிருக்கிறார் என்பது தெரிகிறது. இலங்கையுடனான ஸ்மித்தின் ஃபெர்பார்மென்ஸை தவிர்த்து விட்டுப் பார்த்தால், இருவரும் எதிராணிகளுடன் சிறப்பாகவே ஆடியிருக்கிறார்கள் என்பது தெளிவு. 

சொந்த மண்ணில் யார் கில்லி ? 

 கோலி Vs ஸ்மித்

இதிலும் இருவரும் கில்லி தான். எனினும் மேட்ச் வின்னிங்ஸ் ஆடியது, அதிக தொடர் நாயகன் விருது வாங்கியது உள்ளிட்ட விஷயங்களை வைத்துப் பார்க்கும் கோலி முன்னிலையில் இருக்கிறார். அதே சமயம் கோலியை விட அதிக சராசரி வைத்திருக்கிறார் ஸ்மித். 

டெஸ்ட், ஒருநாள், டி20 மூன்று பார்மெட்களில் யார் சிறந்தவர்? 

ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பேட்டிங் ஜாம்பவான். ஆனால் ஒருநாள் போட்டிகள், டி 20 போட்டிகளில் நல்ல பேட்ஸ்மேன். இவருக்கு அப்படியே நேர் எதிரானவர் கோலி. அவர் ஒருநாள்  போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் மாஸ்டர் பிளேயர். டெஸ்ட் கிரிக்கெட்டில்  நல்ல பேட்ஸ்மேன். 

கோலி, ஸ்மித் ஆகியோரின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி குறித்து உங்களின் மேலான கருத்துக்களையும் இங்கே பதிவிடலாமே...

-இன்போகிராபிக்ஸ் - ஆரிஃப் முகமது

 

 


டிரெண்டிங் @ விகடன்