வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (20/04/2017)

கடைசி தொடர்பு:17:15 (20/04/2017)

‘அவங்கள கண்டுபிடிச்சு கொண்டு வாங்க!' - யாரைக் குறிப்பிடுகிறார் 'தங்கமகன்' மாரியப்பன்?

தமிழக பாராலிம்பிக் சங்கம் தங்கமகன் மாரியப்பனுக்கு நேற்று பாராட்டு விழா நடத்தியிருக்கிறது. சென்னையில் உள்ள சவேரா நட்சத்திர ஓட்டலில் இந்த விழா நடந்தது. கடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில்  தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமைச் சேர்த்தவர் சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன். 

தந்தை குடும்பத்தை கைவிட, மூன்று வேலை சோற்றுக்கே குடும்பம் அல்லாட, அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவரின் கவனக்குறைவால் விபத்தில் கால் எலும்புகள் முறிய, சிறு வயதில் பெருஞ்சோதனைகளை அனுபவித்தவர் மாரியப்பன்.  ஒலிம்பிக் வெற்றி மூலம் அவருக்கு பெரும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்திய அரசு பத்ம ஸ்ரீ  விருது அறிவித்தது. கடந்த  13 ஆம் தேதி பத்ம ஸ்ரீ விருது மாரியப்பனுக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். 

மாரியப்பன்

பெங்களூருவில் பயிற்சி பெறும் மாரியப்பனுக்கு, பத்மஸ்ரீ விருதை வென்றதாக தமிழக பாராலிம்பிக் சங்கம் தனியாக பாராட்டு  விழா அறிவித்தது. இதில் சங்கத்தின்  சேர்மேன் நாகராஜன், தமிழ்நாடு தடகள சங்கத்தின் தலைவர்  வால்டர் தேவாரம், தேசிய  பாராலிம்பிக் பயிற்சியாளர் மற்றும் மாரியப்பனின் பயிற்சியாளர் சத்யநாராயணா ஆகியோர் கலந்து கொண்டனர். 

தமிழ்நாடு தடகள சங்கத்தின் தலைவர்  வால்டர் தேவாரம் மாரியப்பனை வெகுவாக புகழ்ந்தார். "தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விளையாட்டுத் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர். விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க வேண்டும் என  தொடர்ந்து கோரிக்கை வைத்தேன். ஒருநாள் எவ்வளவு பரிசுத்தொகை கொடுக்க வேண்டும் என்கிறீர்கள் என என்னிடமே கருத்து கேட்டார். நான், ‘உலக சாம்பியன், ஒலிம்பிக் போன்றவற்றில் தங்கம் வென்றால் ஒரு கோடியும், ஆசிய சாம்பியன் போன்றவற்றில் தங்கம் வென்றால் 50 லட்சமும் பரிசுத்தொகை வேண்டும்’ என கேட்டேன்.  அவரிடம் ஒரு பழக்கம் உண்டு. அவருக்கு சரி என தோன்றி விட்டால் நாம் கேட்பதை விட இருமடங்காக செய்வார், சில நேரங்களில் மூன்று மடங்கு, நான்கு மடங்கு ... ஏன் பத்து மடங்கு கூட அதிகமாகச் செய்வார். 

மாரியப்பன்

மாரியப்பன் தங்கம் வென்று விட்டார் என  தெரிந்ததும் இரண்டு கோடியை உடனடியாக அறிவித்தார் ஜெயலலிதா. எனக்குத் தெரிந்து இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலோ அல்லது உலகின் எந்தவொரு பகுதியிலோ, மாநில அரசாங்கம் இவ்வளவு பெரிய பரிசுத்தொகையை அறிவித்தது கிடையாது.  மற்ற நாடுகளில் எல்லாம் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கு எல்லாம் பெரிய வித்தியாசம் கிடையாது. எல்லாவற்றுக்கும் சமமாக ரசிகர்கள் வருவார்கள், ஆதரவு தருவார்கள். ஆனால் மாரியப்பன் ஜெயித்த பிறகு தான் இங்கே பலருக்கு பாராலிம்பிக் என ஒன்று இருப்பதே தெரிகிறது. மாரியப்பன் ஜெயித்தது அவருக்காக, நாட்டுக்காக மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள அத்தனை மாற்றுத் திறனாளிகளுக்கு தான். அவரால் பாராலிம்பிக் சங்கத்துக்கு பெருமை சேர்ந்திருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் வால்டர் தேவாரம். 

அதைத் தொடர்ந்து பேசிய மாரியப்பன் தனது உரையை வெகு சுருக்கமாக முடித்துக் கொண்டார். "என்னைய மாதிரி இருக்கும் எல்லோருக்கும், நான்  ஓர் எடுத்துக்காட்டா இருக்கணும், அவங்களும் நம்மள மாதிரி சாதிக்கணும்னு நினைச்சதுண்டு. இந்த சாதனை எனக்கு  சந்தோஷமா இருக்கு.   திறமையா இருக்கறவங்க நிறைய பேர் இருக்காங்க அவங்கள கண்டுபிடிச்சு, வெளிய கொண்டு வரணும்னு எல்லோர்கிட்டயும் கேட்டுக்கிறேன். தமிழக பாராலிம்பிக் சங்கத்துக்கு என் நன்றிகள்" என்றார் மாரியப்பன். 

டெய்ல் பீஸ்: 2016 ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகளில்,  டாப் டென் மனிதராகவும், டாப் டென் நம்பிக்கையாகவும் விருது பெற்றவர் மாரியப்பன். கடந்த மார்ச் 30 அன்று சென்னையில் நடைபெற்ற அவ்விழாவில் மாரியப்பன் அன்னை பேசியது.. நெகிழ்ச்சித் தருணம். வரும் ஞாயிறு (23.04.2017) மாலை 2.30 மணிக்கு சன்.டி.வி-யில் நிகழ்ச்சி முழு நிகழ்வும் ஒளிபரப்பாக உள்ளது. தவறாமல் பாருங்கள்!


டிரெண்டிங் @ விகடன்