வெளியிடப்பட்ட நேரம்: 23:56 (24/04/2017)

கடைசி தொடர்பு:08:20 (25/04/2017)

ரோஹித் அரை சதம். மூன்று ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது புனே!

ஐபிஎல் தொடரில் 28-வது ஆட்டத்தில் இன்று, மும்பை அணியும் புனே அணியும் மோதின. டாஸ் வென்ற புனே அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 160 ரன்களைக் குவித்தது.  அதிகபட்சமாக ராகுல் திரிபாதி 31  பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். இதற்கு அடுத்தபடியாக அஜிங்கியா ரஹானே, 32 பந்தில் 38 ரன்கள் குவித்தார். மும்பை தரப்பில் கார்ன் ஷர்மா, பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

புனே வெற்றி

161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு  களமிறங்கியது, மும்பை. தொடக்க ஆட்டக்காரர்கள் பார்திவ் படேல் 33 ரன்களும், ஜாஸ் பட்லர் 17 ரன்களும் எடுத்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ் ராணா, மூன்று ரன்னில் நடையைக்கட்டினார். இந்தத் தொடரில், இதுவரை சொதப்பி வந்த ரோஹித் ஷர்மா, இன்று ஃபார்முக்குத் திரும்பினார். ஒரு முனையில்  விக்கெட்டுகள் வரிசையாக விழுந்தாலும், ரோஹித் மறுமுனையில் அதிரடி காட்டினார். அவர், 39 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உதவியுடன் 58 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், மூன்று விக்கெட்டுகள் விழுந்தன. ஹர்பஜன் சிங் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசினாலும் வெற்றிக்குத் தேவையான ரன்களை எடுக்க முடியவில்லை. மூன்று ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வென்றது புனே. இந்த சீசனில் மோதிய இரண்டு முறையும், மும்பையைப் புனே அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.