வெளியிடப்பட்ட நேரம்: 15:17 (25/04/2017)

கடைசி தொடர்பு:15:17 (25/04/2017)

பாலிவுட் நடிகையுடன் ஜாகிர்கானுக்கு நிச்சயதார்த்தம்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனுமான ஜாகிர் கானுக்கு, பாலிவுட் நடிகையுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

ஜாகிர் கான்

நேற்று மாலை, ஜாகிர்கான் தனக்கு சகாரிக்கா காட்கேவுடன் நிச்சயமாகியுள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பைப் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார் ஜாகிர் கான். அதில், ‘என்றும் உங்கள் மனைவியின் தேர்வுகளைப் பார்த்து சிரிக்காதீர்கள். நீங்களும் அவருடைய தேர்வுதான். வாழ்க்கைக்கான துணை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை சகாரிக்கா காட்கேவும், தன்னுடைய பக்கத்தில் இந்த அறிவிப்பைப் பகிர்ந்துள்ளார். இவர், ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘சக்தே இந்தியா’ திரைப்படத்தில் புகழ்பெற்ற பாத்திரம், ‘ப்ரீத்தி சபர்வால்’ ஆக நடித்துப் புகழ்பெற்றவர். 

இவர்கள் இருவரது காதலும், பாலிவுட்டுக்கும் கிரிக்கெட் உலகுக்கும் புதிதல்ல. இதற்கு முன்னர், யுவராஜ் சிங் திருமணத்தில் இருவரும் ஜோடியாகக் கலந்துகொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது. இரு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன. இவ்வாறு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் வெளியிடப்பட்ட பதிவுகளில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ட்விட்டர் பக்கம், சேவாக் மற்றும் பலரும், நடிகை சகாரிக்கா காட்கே-வுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்குப் பதிலாக, இந்தியாவின் முக்கியப் பத்திரிகையாளர் சகாரிக்கா கோஷ் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துவந்தனர். இந்தத் தவறை அந்தப் பத்திரிகையாளரே குறிப்பிட்டுக் காட்டியபின், பலரும் தங்கள் வாழ்த்துகளைத் திருத்தி வெளியிட்டனர்.