வெளியிடப்பட்ட நேரம்: 20:48 (25/04/2017)

கடைசி தொடர்பு:20:47 (25/04/2017)

சச்சின், கெயில், அஃப்ரிடி இவங்களோட இன்னொரு முகம் தெரியுமா? #Funfacts

பல வருசமா கிரிக்கெட் பார்க்கும் உங்களுக்கு கிரிக்கெட்டின் இந்தச் சுவாரஸ்யமான நிகழ்வுகள் எல்லாம் ஞாபகம் இருக்கா மக்கழே..? #CricketFunFacts

வல்லவனுக்கு வல்லவன் ஈ லோகத்தில் உண்டு!

அஃப்ரிடி

1996-ல் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தில் அஃப்ரிடிக்குத் தன் ஆட்டத்தை வெளிப்படுத்த சரியான பேட் இல்லை. அதையறிந்த வக்கார் யூனிஸ் சச்சின் பயன்படுத்திய பேட்டைக் கொடுத்தார். கிரிக்கெட் வெறி ஏறிப் போன அந்த பேட்டைப் பயன்படுத்தி 11 சிக்ஸர்களையும், 6 பவுண்டரிகளையும் அடித்து விளாசினார் அஃப்ரிடி.. ஆட்டத்தின் முடிவில் 37 பந்துகளில் சதம் அடித்துக் கலக்கினார். வேகமாக சதம் அடித்தவர்கள் லிஸ்டில் முதல் ஆளாக வந்தார் அஃப்ரிடி. அதற்குப் பின் ஆடிய கோரி ஆண்டர்ஸன் 36 பந்துகளிலும், டிவில்லியர்ஸ் 31 பந்துகளில் சதம் அடித்து அஃப்ரிடி ரெக்கார்டை முறியடித்தனர். 

கெயில் கெயில்தான்ய்யா!

கிறிஸ் கெயில்

பொதுவாக டெஸ்ட் மேட்ச் என்றாலே 'ஸ்லோ அண்ட் ஸ்டடி வின்ஸ் தி ரேஸ்' கதைதான். எவ்வளவு பெரிய அக்ரெஸிவ் பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவர் சந்திக்கும் முதல் பந்தை கட்டை வைத்துதான் ஆரம்பிப்பார். ஆனால் கிட்டத்தட்ட 140 வருட கிரிக்கெட் வரலாற்றில் 2012-ல் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் தான் சந்தித்த முதல் பந்தினை சிக்ஸருக்கு விரட்டிய ஒரே ப்ளேயர் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த க்றிஸ் கெயில் மட்டும்தான். என்னதான் ஒரு நாள் போட்டி, டி-20 போட்டிகளில் அடித்து நொறுக்கினாலும் டெஸ்ட் மேட்சில் முதல் பந்தில் சிக்ஸர் அடிக்கும் திறமையையும், தைரியமும் அண்ணன் ஒருவருக்குத்தான் உண்டு. 

என்னா சலம்பல்!

1960-ல் இந்தியாவைச் சேர்ந்த அப்பாஸ் அலி பெய்க் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தனது அரை சதத்தைப் பதிவு செய்தார். அந்த நேரத்தில் சற்றும் எதிர்பாராமல்  ஆடியன்ஸ் கேலரியில் இருந்த ஒரு இளம்பெண் மைதானத்திற்குள் ஓடி வந்து வாழ்த்தும் வகையில் அப்பாஸ் அலியின் கன்னத்தில் முத்தமிட்டார். கிரிக்கெட் வரலாற்றில் இந்த நிகழ்வு அதிர்ச்சி ரகம். #யய்யாடீ

நம்ம ஊர் காமன் பேட்ஸ்மேன்!

இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான இஃப்திகார் அலி கான் ஆறு டெஸ்ட் மேட்ச்களில் விளையாடியுள்ளார். அதில் மூன்று மேட்சில் இங்கிலாந்தின் கேப்டனாகவும், மூன்று மேட்ச் இந்தியாவின் கேப்டனாகவும் விளையாடியுள்ளார். இரண்டு டீம்களில் விளையாடிய குறிப்பிட்ட வீரர்களுள் இவரும் ஒருவர். அதுமட்டுமின்றி பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் சயிஃப் அலி கான் மற்றும் சோஹா அலி கானின் தாத்தாவும் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முடியுமா நடக்குமா..?

கிரிக்கெட் விதிமுறையின் கீழ் இரண்டு டீம்களுக்கும் சரி சமமாக ஓவர் நிர்ணயித்தனர். அதில் முன்னதாக 60 ஓவர்கள் வரை மேட்ச் நடந்ததும் உண்டு. சில நேரங்களில் 40, 45, 50, 55 என்ற ஓவர்கள் அளவில் கூட மேட்ச்கள் நடைபெற்றிருக்கின்றன. 1983-ல் இந்தியா உலகக் கோப்பையினை வென்றது. அது மட்டுமில்லாமல் 60 ஓவர், 50 ஓவர், 20 ஓவர் ஆகிய அனைத்து ஓவர்களிலும் உலகக் கோப்பைகளை வென்ற ஒரே அணி இந்தியாதான் என்ற பெருமையும் நமக்குள்ளது. 

என்னய்யா சொல்றீங்க?

சச்சின் - கிரிக்கெட்

சச்சின் இந்தியாவுக்கு முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு விளையாடியுள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுதா பாஸ்? ஆமாம்... இந்தச் சம்பவம் 1987-ல் இந்தியா - பாகிஸ்தான் காட்சி ஆட்டத்தில் நிகழ்ந்தது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஜேவத் மற்றும் அப்துல் காதர் மதிய உணவிற்காக சாப்பிடச் சென்றுவிட்டனர். அந்த நேரத்தில் சச்சின் பாகிஸ்தான் அணிக்காக சப்ஸ்டிட்யூட் ப்ளேயராக விளையாடியுள்ளார். 

தொடவே முடியாதாம்!

இந்தியாவைச் சேர்ந்த சுழல் பந்துவீச்சாளர் பபு நட்கார்னி. இவர் சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார்.

கடவுளே தஞ்சம்!

ரஞ்சிக் கோப்பை வரலாற்றிலேயே சச்சின் ஒரே ஒரு முறைதான் டக் அவுட்டில் வெளியேறியுள்ளார். அந்த விக்கெட்டை பெற்றவரும் இந்திய அணியினைச் சேர்ந்த புவனேஷ்வர்தான். இவர் பெருமையா சொல்லிக்கவேண்டிய சாதனை லிஸ்ட்டில் இதுவும் வரும்.  


டிரெண்டிங் @ விகடன்