சாம்பியன்ஸ் டிராஃபி வர்ணனையாளர்கள் பட்டியல்... வெளியிட்டது ஐ.சி.சி.! | These 15 members are the commentators of champions trophy 2017

வெளியிடப்பட்ட நேரம்: 13:28 (26/04/2017)

கடைசி தொடர்பு:13:26 (26/04/2017)

சாம்பியன்ஸ் டிராஃபி வர்ணனையாளர்கள் பட்டியல்... வெளியிட்டது ஐ.சி.சி.!

கிரிக்கெட் விளையாட்டு, இன்று உலகம் முழுவதுமான ரசிகர்களைத் தன்வசம் வைத்திருக்கிறது. இந்த விளையாட்டின் உச்சம், உலகக்கோப்பைதான். அதை நழுவவிட்ட அணிகளின் அடுத்த டார்கெட், சாம்பியன்ஸ் டிராஃபிதான். இதற்கு, `மினி  உலகக்கோப்பை' என்ற பெயரும் உண்டு. 1998-ம் ஆண்டு தொடங்கிய இந்த சாம்பியன்ஸ் டிராஃபி, 2000, 2002, 2004, 2006, 2009, 2013 ஆகிய வருடங்களில் நடந்தது. அதன் பிறகு, மூன்று வருடங்களாக நடைபெறாமல், இந்த வருடம் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

இரண்டு குழுக்களாகப் பிரிந்து விளையாடும் இந்தத் தொடரின் `A' பிரிவில், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து  அணிகள் உள்ளன. `B' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் உள்ளன. 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதப் பட்டியலின்படி உள்ள முதல் எட்டு அணிகள் மட்டுமே சாம்பியன்ஸ் டிராஃபியில் பங்குபெற முடியும். அதன் அடிப்படையில் மேற்கிந்திய அணியின் இடத்தை வங்கதேசம் பிடித்து, சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிக்குள் நுழைந்துள்ளது.

2013-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்று நடப்பு சாம்பியனான இந்திய அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கவில்லை. ஒரு கிரிக்கெட் போட்டியில் வர்ணனையாளர்கள்தான் போட்டியின் சுவாரஸ்யத்தைக் கூட்டி, ரசிகர்களை உற்சாகப்படுத்துவர். இந்தியா விளையாடும் போட்டிகளில் ஹர்ஷா போக்லேவும் ரவிசாஸ்திரியும்தான் ஹைலைட். ரவிசாஸ்திரியின் குரலை ரசிக்க ஒரு பட்டாளமே இருக்கும். அவர் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் தனி உணர்வு வெளிப்படும். இந்த சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்காக ஒவ்வொரு நாட்டிலிருந்தும் சில வர்ணனையாளர்களைத் தேர்ந்தெடுத்து, `இவர்கள்தான் அந்தத் தொடர் முழுவதும் வர்ணனை செய்வார்கள்' என்று அறிக்கை வெளியிட்டுள்ளது ஐசிசி.

இந்தியாவிலிருந்து சவுரவ் கங்குலி மற்றும் சஞ்சய் மஞ்சுரேக்கர்; ஆஸ்திரேலியாவிலிருந்து ரிக்கிபான்டிங், ஷேன்வார்ன், மைக்கேல் ஸ்லேட்டர்; நியூசிலாந்திலிருந்து பிரெண்டன் மெக்கல்லம், சைமன் டவுல்; தென் ஆப்பிரிக்காவிலிருந்து ஷான்போலக், க்ரீம்ஸ்மித். இங்கிலாந்திலிருந்து நாசிர் ஹுசேன், மைக்கேல் அதர்டன், இலங்கையிலிருந்து குமார் சங்ககரா, பாகிஸ்தானிலிருந்து ரமீஸ் ராஜா. மேற்கிந்திய அணியிலிருந்து இயான் பிஷப். வங்கதேசத்திலிருந்து அத்தர் அலி கான். இந்த 15 பேர்கொண்ட குழுதான் 17 நாள்கள் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான தொடரில் வர்ணனை செய்ய இருக்கிறது.

வர்ணனையாளர்கள் கங்குலி மற்றும் பாண்டிங்

இந்த 15 பேரில் பான்டிங், சங்ககரா, மெக்கல்லம் ஆகிய மூவரும் முதன்முறையாக வர்ணனை செய்பவர்கள்.  பேட்டி கொடுக்க மட்டுமே வாயைத் திறந்த இவர்கள், இனி வாயை மூடாமல் பேசிக்கொண்டே இருக்கப்போகிறார்கள். வீசும் ஒவ்வொரு பந்துக்கும், போகும் ஒவ்வொரு ரன்னுக்கும் இவர்களின்  வர்ணனை மேலும் மெருகேற்றும் அளவுக்கு அமைய வேண்டும். கங்குலி, வார்ன், போலக்  போன்ற வீரர்கள் ஏற்கெனவே வர்ணனையாளர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் ஆதர்ச வீரர்களைத் தங்கள் அணியின் ஜெர்ஸியுடன் மைதானத்தில் பார்த்த ரசிகர்கள், இனி கோட் சூட் போட்டு ஃபுல் ஃபார்மில் பார்க்க இருக்கிறார்கள். இதுவரை பெளண்டரி, சிக்ஸர், விக்கெட் ஆகியவற்றைப் பெற்று களத்தில் நின்றுக்கொண்டிருந்த இவர்களின் `மைதான காலம்' முடிந்து, இளம் வீரர்களின் சிக்ஸர்களையும் விக்கெட்களையும் வர்ணிக்கும் `மைக் காலம்' தொடங்கிவிட்டது. களத்தில் இறங்காமலேயே தங்கள் பேச்சின் மூலம் கிரிக்கெட் விளையாடும் இவர்களின் பணி, நிச்சயம் பாராட்டக்கூடியது.

ஆல் தி பெஸ்ட் கைஸ்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்