தந்தை - மகள் பாசத்துக்கு ஒரு கிரிக்கெட் ஸ்கோர்கார்டின் மரியாதை! #MustRead

கிரிக்கெட் போட்டிகளில், விளையாடிக்கொண்டிருக்கும்போது ஒரு பேட்ஸ்மேனுக்கு காயம் ஏற்பட்டாலோ, உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ, அவர் ஓய்வு பெறுவது வழக்கம். அதை,மேட்ச்சின் ஸ்கோர் கார்டில் Retired Hurt என்று குறிப்பிடுவார்கள். காயம் சரியான உடனேயோ,அல்லது நிலைமை சீரான பிறகோ, அந்த ஆட்டக்காரர்  மறுபடியும் வந்து ஆடலாம். அப்படி ஆடவில்லையென்றால், மேட்ச்சின் அதிகாரப்பூர்வ ஸ்கோர் கார்டில், அது Retired Hurt என்றே இருக்கும்.

1877ஆம் ஆண்டுமுதல் டெஸ்ட் மேட்ச் போட்டிகள் நடந்து வருகின்றன. பல விந்தையான,வியக்கத்தக்க சம்பவங்கள் இந்த 140 ஆண்டுகளில் நடந்துள்ளன. ஆனால், சில பல ஆச்சரியத்தக்க விஷயங்கள் நம்மை வியக்க வைக்கத் தவறுவதே இல்லை. அப்படி ஒரு சம்பவம் ஏப்ரல் 30ம் தேதி நடந்தது.   இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன என்றால், 140 ஆண்டுகளில், 2260டெஸ்ட் மேட்ச் போட்டிகளில், இதுவரையில் ஒரே ஒரு முறை மட்டுமே  நடந்துள்ள   ஒரு  விஷயம், சரியாக 34 ஆண்டுகளுக்கு முன்பாக, நேற்றைய தேதியில்  நடந்தது.

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் – 5ஆவது டெஸ்ட் மேட்ச்:

கிரிக்கெட் ஸ்கோர்கார்டு

1983ஆம் ஆண்டு 28 ஏப்ரல் முதல், மே மூன்றாம் தேதி வரையில் நடந்த ஒரு டெஸ்ட் மேட்ச்சின் ஸ்கோர் கார்ட் இது. ‘நாட்களை கணக்கு பார்த்தால், 6 நாட்கள் வருகிறதே?’ என்று கேள்வி கேட்க வேண்டாம். ஏனென்றால், அப்போதெல்லாம் டெஸ்ட் மேட்ச் போட்டிகளில் ஒரு நாள் ரெஸ்ட் டே என்று ஓய்வு நாள் இருக்கும். அப்படி, இந்தப் போட்டியில், மே 2ஆம் தேதி ரெஸ்ட் டே ஆகும்.இந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையே நடந்த 5ஆவது டெஸ்ட் மேட்ச் போட்டி இது. ஏற்கெனவே நடந்த 4 போட்டிகளில், இரண்டை டிரா செய்து, மீதமிருந்த இரண்டில் இந்தியா தோற்றிருந்தது.

இதில் மேற்கிந்தியத் தீவின் பேட்டிங் ஸ்கோர் கார்டைப் பார்த்தால், அதில் Gordon Greenidge (Retired, Not Out) 154 என்று இருக்கும். டெஸ்ட் மேட்ச் வரலாற்றில், இது 956ஆவது போட்டி. அதுவரையில் நடந்த 955 போட்டிகளில் இப்படி ஒரு சிறப்பு குறியீடு கொண்ட ஸ்கோர் கார்ட் இருந்ததே இல்லை. என்ன, இது, மிகவும் ஆச்சரியமான ஸ்கோர் கார்டாக இருக்கிறதே என்று பார்த்தால், அதன் பின்னர் ஒரு சோகமான விஷயம் இருக்கிறது.

மேட்ச் விவரம்: முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி. முதல் நாள், டீ டைமுக்கு முன்பே வெளிச்சக் குறைவு காரணமாக ஆட்டம் முடிவடைந்தது. இரண்டாம் நாளும் தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 457 ரன்கள் குவித்து, ஆல அவுட் ஆனது. கவாஸ்கர், அமர்நாத் ஆகியோர் அரை சதம் அடிக்க, ரவி சாஸ்திரி 102 ரன்கள் குவித்தார். கேப்டன் கபில் தேவ் 98 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் மேற்கிந்திய அணி ஆட ஆரம்பித்தது.

கார்டன் கிரீனிட்ஜ்இந்தப் போட்டிக்கு முன்பாக, மேற்கிந்தியத் தீவின் துவக்க ஆட்டக்காரர்களான கோர்டன் கிரீனிட்ஜும், டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ்சும் சதமடித்தே ஆகவேண்டுமென்ற அழுத்தத்தில் இருந்தார்கள். ஏனென்றால், கிரீனிட்ஜ் கடைசியாக டெஸ்ட் மேட்ச் போட்டிகளில் சதமடித்தது, 1977ல். ஹெய்ன்ஸ்சும் சதமடித்து 4 ஆண்டுகள் ஆகி இருந்தது. இந்தியாவின் 457 ரன்கள் அவர்களின் முன்னே ஒரு மலையாகக் காட்சி அளித்திருக்கலாம். ஆனால், டெஸ்ட் போட்டிகளின் மிகச்சிறந்த துவக்க ஆட்டக்காரர்கள் என்று பெயர் எடுத்திருந்த இந்த இணை, தங்களது வழக்கமான பாணியில் ஆடத்துவங்கினார்கள்.

இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளரான கேப்டன் கபில்தேவ், மூன்றாவது நாள் ஆட்டம் முழுவதிலுமே கழுத்துப் பிடிப்பு காரணமாக, 4 ஓவர்கள் மட்டுமே பந்து வீசியிருந்தார். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், அந்த அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 301 ரன்கள் எடுத்திருந்தது. இதில்,முதல் விக்கெட்டிற்கு, ஹெய்ன்ஸ்சும் கிரீனிட்ஜும் 296 ரன்களைக் குவித்திருந்தனர். கிரீனிட்ஜ் 154ரன்களுடன் ஆடிக்கொண்டு இருந்தார். ஆறு ஆண்டுகளில், அவர் அடித்த முதல் சதம் இதுதான்.

ரெஸ்ட் டேஆனால், கிரீனிட்ஜின் 2 வயது மகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சீரியஸான நிலையில் இருக்கிறார் என்ற தகவலும் அன்றுதான் வந்து சேர்ந்தது. இந்தப் போட்டி நடந்த ஆன்ட்டீகாவில் இருந்து உடனடியாகக் கிளம்பி, ஜமைக்கா சென்று   சேர்ந்தார், கிரீனிட்ஜ். மருத்துவமனையிலேயே அவரது மகளுடன் இருந்து, அவரது சிகிச்சையை அருகில் இருந்து கவனித்துக்கொண்டார். ஆனால், இரண்டு நாட்கள் கழித்து, அவரது 2 வயது மகள், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மே 2ஆம் தேதி, அதுதான் அந்த ஐந்தாவது டெஸ்ட் மேட்சின் ரெஸ்ட் டே. அன்றுதான் கிரீனிட்ஜின் மகளும் நிரந்தரமாக ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்.

அந்தப் போட்டி, ஐந்தாவது நாளின் முடிவில், இருதரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. அந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக கிரீனிட்ஜ்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிரீனிட்ஜின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அதுவரையில் (ஏன்.. இதுவரையிலும்) நடக்காத ஒரு விஷயத்தைச் செய்தார்கள். அந்த டெஸ்ட் மேட்ச்சின் அதிகாரபூர்வ ஸ்கோர்கார்டில் Retired Hurtஎன்று குறிப்பிடாமல், Retired Not Out என்று வெளியிட்டார்கள். ஒவ்வொரு ஏப்ரல் 30ஆம் தேதியும் ஒரு தந்தையின் பாசத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது இந்த ஸ்கோர் கார்ட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!