Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நான்கு பந்துகளில் 92 ரன்கள்! பரிசு - 10 ஆண்டுகள் தடை!

ங்கதேசத்தில் நான்கு பந்துகளில் 92 ரன்கள் விட்டுக்கொடுத்த வங்கதேச கிரிக்கெட் வீரருக்கு, 10 ஆண்டுகள் தடை. 

4 பந்துகளில் 92 ரன்கள் விட்டுக்கொடுத்தவருக்குத் தடை

கிரிக்கெட்டில் நான்கு பந்துகளில் 92 ரன்கள் விட்டுக்கொடுக்க முடியுமா? இப்படி ஒரு விசித்திரமான சம்பவம், வங்கதேசத்தில் அரங்கேறியுள்ளது. கடந்த மாதம், டாக்கா 2-வது டிவிஷன் லீக் கிரிக்கெட் போட்டி நடந்தது. இது 50 ஓவர்கள்கொண்ட போட்டித் தொடர்.  ஓர் ஆட்டத்தில் ஆக்சியம், லால்மேட்டியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதிலிருந்தே சர்ச்சை எழுந்தவண்ணம் இருந்தது. டாஸ் போட்டபோது, `நாணயம் விழுந்த பக்கத்தைப் பார்க்க, லால்மேட்டியா அணி கேப்டனை நடுவர்கள் விடவில்லை' என்ற புகார் முதலில் சொல்லப்பட்டது.

எதிர் அணியான ஆக்ஸியம், முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. பேட்டிங்கைத் தொடங்கிய லால்மேட்டியா அணி 14 ஓவர்களுக்கு 88 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்.  நடுவரின் மோசமான தீர்ப்புகளால் தங்கள் அணி 88 ரன்களில் சுருண்டதாக லால்மேட்டியா அணி குற்றம்சாட்டியது. பிறகு, ஆக்சியம் அணி பேட் செய்யக் களமிறங்கியது. முதல் ஓவரை லால்மேட்டியா அணியின் சூஜன் மஹ்மூத் வீசினார்.  

முதல் ஓவரிலேயே தொடர்ச்சியாக 13 வைடுகளை வீசினார். வைடாக வீசப்பட்ட பந்துகள் அனைத்தும் பெளண்டரியானது.  13 வைடு பந்துகளுக்கு ஐந்து ரன்கள் வீதம் 65 ரன்கள் ஆக்சியம் அணிக்குக் கிடைத்தன. அடுத்து மூன்று நோபால்களை வீசினார் இதுவும் பெளண்டரிக்குச் செல்ல, அதன்மூலம் 15 ரன்கள் கிடைத்தன. மொத்தம் 20 பந்துகள் வீசினார். அதில், நான்கு பந்துகளைத்தான் ஒழுங்காக வீசினார் சூஜன்.  அதிலும் தொடக்க வீரர் ரஹ்மான் மூன்று பெளண்டரிகளை விளாசினார்.  ஆக, நான்கு பந்துகளில் 92 ரன்கள் எடுத்து ஆக்சியம் வெற்றிபெற்றது. 0.4 ஓவர்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 
 
கிரிக்கெட் உலகில் இப்படி ஒரு விசித்திரம் நடந்ததே இல்லை. நடுவர்களின் ஒருதலைபட்ச தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், சூஜன் மஹ்மூத் வைடுகளும் நோபால்களும் வீசியதாகச் சொல்லப்பட்டது. ஆக்சியம் அணியின் வெற்றியைக் கேலிக்கூத்தாகும் வகையிலும் சூஜன் மஹ்மூத்  செயல்பட்டதாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்யப்பட்டது. இந்த விஷயத்தை வங்கதேச கிரிக்கெட் போர்டு எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அறிக்கை அளிக்குமாறு கேட்டிருந்தது. 

இந்த நிலையில்,  லால்மாட்டியா அணி பந்துவீச்சாளர்  சூஜன் மஹ்மூத்துக்கு 10 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. லால்மேட்டியா அணி  அடுத்த அறிவிப்பு வரும் வரை டாக்கா 2-வது டிவிஷன் போட்டியில் பங்கேற்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. லால்மேட்டியா அணியின் பயிற்சியாளர், கேப்டன், மேலாளர் ஆகியோரும் தலா ஐந்து ஆண்டுகள் தடையைச் சந்தித்துள்ளனர். போட்டி நடுவர்களுக்கும் ஆறு மாதகாலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று செயல்பட்ட Fear Fighters அணியின் பந்துவீச்சாளர் தஷ்னீம் ஹசனுக்கும் 10 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் ஷேக் ஷோகயில் கூறுகையில், ''கிரிக்கெட் விளையாட்டின் நற்பெயருக்கு  சூஜன் மஹ்மூத் களங்கம் விளைவித்துவிட்டார் '' என்றார். லால்மேட்டியா அணியின் செயலாளர் ஆத்னன் ரஹ்மான் தவற்றை ஒப்புக்கொண்டுள்ளார். ''நடுவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்கள் அணியின் வீரர் இவ்வாறு நடந்துகொண்டார்'' என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement