வெளியிடப்பட்ட நேரம்: 10:07 (05/05/2017)

கடைசி தொடர்பு:02:38 (06/05/2017)

விஸ்வரூபமெடுத்த ரிஷப் பன்ட்.. இதுவரை கடந்து வந்த பாதை! #RishabhPant

டிராவிட்

குஜராத் லயன்ஸ் Vs டெல்லி டேர் டெவில்ஸ்... நேற்றைக்கு நடந்த அந்தப் போட்டியானது, ஐ.பி.எல்-10வது சீசனின் 42வது போட்டி ஆகும். முதலில் பேட் செய்த குஜராத் லயன்ஸ் அணி, 208 ரன்களை எடுத்திருந்தது. எனவே போட்டியில் ஜெயிக்க, ஓவருக்கு 10 ரன் வேண்டும் என்ற நிலையில், சேஸ் செய்ய களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு, மூன்றாவது ஒவரிலேயே இடி... கருண் நாயர் அவுட்! அப்போது ஸ்கோர் 24/1. 3வது ஓவரின் கடைசி பந்தில் களம் இறங்குகிறார் ரிஷப் பன்ட். லெக் பையில் ஒரு ரன் எடுத்துவிட்டு, அடுத்த ஓவரை எதிர்கொள்கிறார்.

நான்காவது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்குத் தெறிக்க விடுகிறார்.  ஐந்தாவது ஓவரின் முதல் மூன்று பந்துகள் 6,6,4. அதன்பிறகு அடித்த ஒவ்வொரு அடியும் அதிரடியாகப் பார்த்துக் கொண்டார்கள் ரிஷப் பன்ட்டும், ஓபனிங் இறங்கிய சஞ்சு சாம்சனும். அதுவும் ரிஷப்பின் ஆட்டம், ருத்ரதாண்டவம்! 43 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து இவர் அவுட் ஆனபோது, சச்சின் ஒரு ட்வீட் போடுகிறார்.

 

 

சச்சின்

‘10 ஐ.பி.எல் சீசன்களிலும், நான் பார்த்த மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் இது ஒன்று’ என்று! யார் இந்த ரிஷப் பன்ட்? அவர் கடந்து வந்த பாதை என்ன? 

 

2016 ஜூனியர் (U19) உலகக்கோப்பை

எப்படிப்பட்ட பந்துகளாக இருந்தாலும், அதனை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் விரட்டிவிடக்கூடிய ஓர்  அதிரடியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்தான் ரிஷப் பன்ட்! கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பையில், தொடக்க பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய இவர்தான், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்! ஆறு போட்டிகளில் ஒரு சதம், 2 அரைசதம் (ஸ்டிரைக் ரேட் - 104) என அசத்தலான ஆட்டத்தையே தொடர் முழுதும் வெளிப்படுத்தினார். அதிலும் குறிப்பாக, இரண்டு போட்டிகளில் செம மாஸ் காட்டினார் ரிஷப் பன்ட்!

 

ரிஷப் பன்ட்

 

நேபாள அணிக்கு எதிரான போட்டியில், தொடக்கம் முதலே அந்த அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். அந்தப் போட்டிக்கு முன்புவரை, 19 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச போட்டிகளில், வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ட்ராவான் கிரிஃப்பித் எனும் வீரர், 19 பந்துகளில் அரைசதம் அடித்ததுதான் உலக சாதனையாக இருந்தது. ஆனால் அதிரடியாக விளையாடிய ரிஷப் பன்ட், 18 பந்துகளிலேயே அரை சதம் அடித்து, புதிய உலக சாதனையைப் படைத்தார்! அடுத்த 6 பந்துகளில், கூடுதலாக 28 ரன்களையும் குவித்தார். ஆக நேபாளத்துக்கு எதிரான  அந்த போட்டியில், தான் சந்தித்த 24 பந்துகளில், அவர் மொத்தம் 78 ரன்களை அடித்தார்! (ஸ்டிரைக் ரேட் -  325). இதில் 9 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். நமிபியா அணிக்கு எதிரான போட்டியில், இவர் அடித்த 111 ரன்கள், இந்திய அணிக்கு வெற்றியையும், அவருக்கு ஆட்ட நாயகன் விருதையும் ஒருசேரப் பெற்றுத் தந்தது!

 

2016 ரஞ்சி டிராஃபி மற்றும் 2016 ஐபிஎல் சீஸன்

 

ரஞ்சி

 

2016 ரஞ்சி சீசனில், டெல்லி அணிக்காக விளையாடிய ரிஷப் பன்ட், அதிரடியான முச்சதம் - 48 பந்துகளில் அதிவேகமான சதம்- சூப்பரான இரட்டைச் சதம் என வெரைட்டியாக அடித்தார். இதனைத் தொடர்ந்து 2016 ஐபிஎல் சீஸனில், தனது அடிப்படை விலையான 10 லட்சத்தைவிட 19 மடங்கு அதிக விலைக்கு, (அதாவது 1.9 கோடி ரூபாய்க்கு) டெல்லி டேர்டெவில்ஸ் அணி இவரை வாங்கியது. அதிலும் கவனிக்கத்தக்க வகையில் (10 போட்டிகளில் 200 ரன்கள் - ஸ்டிரைக் ரேட் - 130) விளையாடினார், நடப்பு சீஸனிலும், தான் களமிறங்கிய 10 போட்டிகளில் 281 ரன்களை அடித்துள்ளார் (ஸ்டிரைக் ரேட் - 176) நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், 43 பந்துகளில் 97 ரன்களை அதிரடியாக அடித்தார்! இப்படி எந்த பாரபட்சமுமின்றி விட்டு விளாசும், 19 வயது இளைஞனான ரிஷப் பன்ட், ஒரு இடது கை பேட்ஸ்மேன்; ஏனோ இந்திய அணித்தேர்வின்போது, தேர்வுக் குழுவினர் இதனை கவனத்தில் கொள்ளாமல் மறந்து விடுகின்றனர். ஆஸ்திரேலியா அணியைப் போல, நீண்டகால செயல் திட்டத்தின் அடிப்படையில், இந்திய அணியும் தொடர்ந்து இளம் வீரர்களை உருவாக்கவும், அவர்களுக்கான தக்க வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டும்! 

 

இந்திய அணியில் உள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள்

 

ஐபிஎல்

 

இப்போது இந்தியாவில் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்களாக இருக்கும் தினேஷ் கார்த்திக் (31), ரிதிமான் சாகா (32), நமன் ஓஜா (31), பார்த்திவ் படேல் (31) ஆகிய நால்வருமே 30 வயதைக் கடந்துவிட்டார்கள். இவர்களைத் தவிர, மற்ற ஆப்ஷன்களாகத் தெரியும் ராபின் உத்தப்பா மற்றும் கேதர் ஜாதவ் ஆகிய இருவரும், 31 வயதை எட்டியிருக்கிறார்கள். எனவே எப்படிப் பார்த்தாலும், அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் டெஸ்ட் / ஒருதினப் போட்டிகளில் விளையாடுவார்களா என்பது கேள்விக்குறிதான்! எனவே ரிஷப் பன்ட் போன்ற இளம் வீரர்களுக்கு, இப்போதிலிருந்தே வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டும். ஏனெனில் ஜூன் மாதம் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராஃபி தவிர்த்து, இப்போதைக்கு உடனடியாக இந்தியாவுக்கு வெளிநாட்டில் டெஸ்ட் தொடர்கள் இல்லாததால், சொந்த மண்ணில் நடக்கும் போட்டிகளில் இவரை அணியில் சேர்த்தால், தன்னை மேலும் மெருகேற்ற அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்! 

 

ரிஷப் பன்ட்

 

ஆக ஒரு நட்சத்திர ஆட்டக்காரரான அனைத்து தகுதிகளையும் கொண்டிருக்கும் ரிஷப் பன்ட்டைத்தான், இந்திய அணிக்கு தயாராகும் அடுத்த விராட் கோலி / தோனி என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். வருங்கால இந்திய அணிக்கு மற்றுமொரு நல்ல தயாரிப்பாக இருக்கும் இவரைச் சரியாகப் பயன்படுத்தினால், 2019 சீனியர் உலகக் கோப்பையின் வின்னிங் ஷாட்டை, ரிஷப் பன்ட் அடிப்பதைப் பார்க்கலாம். காலம் அவருக்கு சாதகமாக இருக்கும் என நாம் வாழ்த்தலாம் நண்பர்களே!

 

இவரின் புள்ளிவிபரங்கள்:= 

ஐபிஎல் சீஸன் சம்பளம் - 1.9 கோடி ரூபாய் (டெல்லி டேர்டெவில்ஸ்)

பிசிசிஐ ஆண்டு சம்பளம் -  50 லட்ச ரூபாய் (பிரிவு சி)

முதல் சர்வதேச போட்டி -  இந்தியா-இங்கிலாந்து இடையான 3-வது டி-20 போட்டி (பெங்களூரு - பிப்ரவரி 2017) ஆனால் களமிறங்கவில்லை.

முதல்தர கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்தியர்: 48 பந்துகள் (2016 - 17 சீஸன்)

முதல்தர கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர் அடித்தவர்: 21 சிக்ஸர்கள் (2016 - 17 சீஸன்)

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்