வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (09/05/2017)

கடைசி தொடர்பு:16:50 (09/05/2017)

தோனியின் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரும் லலித் மோடியின் கேள்வியும்!

பல கோடிகள் வருமானம் ஈட்டும் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி எதற்காக இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் ஊழியராக நியமிக்கப்பட்டார் என லலித் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

தோனி

ஐபிஎல் தொடரில் பிசிசிஐ முன்னாள் தலைவர் ஶ்ரீநிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார் தோனி. ஶ்ரீநிவாசனுக்குச் சொந்தமான இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம்தான் சென்னை அணியின் ஸ்பான்சராக செயல்பட்டு வந்தது. இதனிடையே சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை அணி ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகள் விலக்கிவைக்கப்பட்டது. இதையடுத்து, புனே அணிக்காக விளையாடி வருகிறார் தோனி. இந்நிலையில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் தோனி ஊழியராக நியமிக்கப்பட்ட விவரங்களை வெளியிட்டுள்ளார் ஐபிஎல் முன்னாள் தலைவர்  லலித் மோடி.

தோனி

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தோனி இந்தியா சிமென்ட்ஸில் நியமிக்கப்பட்டதுக்கான ஆர்டரையும் அவர் வெளியிட்டுள்ளார். இதில், தோனிக்கு அடிப்படை சம்பளமாக 43000 ரூபாயும், பொழுதுப்போக்கு செலவுகளுக்காக 4500 ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கோடிகளில் சம்பாதிக்கும் தோனி எதற்கு இந்தியா சிமென்ட்ஸ் ஊழியராக நியமிக்கப்பட வேண்டும். இதுபோன்ற பல ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்க கூடும் என அவர் கூறியுள்ளார். அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி மீண்டும் களமிறங்கும் என கூறப்பட்டு வரும் வேளையில் லலித் மோடியின் கருத்து பரபரப்பை கிளப்பியுள்ளது.