ஆர்.சி.பி-யின் படுதோல்விக்கு இந்த 5 விஷயங்கள்தான் காரணம்! | Five reasons For RCB's flop show in IPL 2017

வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (09/05/2017)

கடைசி தொடர்பு:17:33 (09/05/2017)

ஆர்.சி.பி-யின் படுதோல்விக்கு இந்த 5 விஷயங்கள்தான் காரணம்!

வரலாறு காணாத படுதோல்வியைச் சந்தித்து வருகிறது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி. அதிரடி மன்னன் கிறிஸ் கெயில், சேஸிங் புயல் விராட் கோலி, மிஸ்டர் 360 டிகிரி ஏபி  டிவில்லியர்ஸ், உலகின் மோஸ்ட் வாண்ட்டட் டி20 பவுலர்  தைமல் மில்ஸ், ஆஸ்திரேலியாவின் வெற்றிகரமான ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் என வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மிகச்சிறந்த வீரர்கள் இருக்கும் அணி ஆர்.சி.பி. 

டி20 போட்டியில் ஒரே ஒரு மேட்ச் வின்னர் இருந்தால் கூட மேட்சை ஜெயிக்கலாம். ஆனால் அணியில் பல்வேறு மேட்ச் வின்னர்களை வைத்திருந்தும் மண்ணைக் கவ்வியிருக்கிறது ஆர்.சி.பி. கடந்த சீசனில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளை வென்று பிளே ஆஃப்க்கு  தகுதி பெற்று  சாதனை படைத்த அணி, இம்முறை தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோல்வியைத் தழுவி மோசமான சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. கடந்த ஆண்டு ஃபைனலில் ஆடிய பெங்களூரு இன்று இருப்பதோ புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில்! 

200க்கு மேற்பட்ட இலக்கை துரத்தி, வெறும் 8  ரன்களில் கோப்பையை நழுவவிட்ட ஆர்.சி.பி, தற்போது 140 ரன்களைக் கூட சேஸிங் செய்ய முடியாமல் தள்ளாடுகிறது. பவர்பிளேயில் எப்போதும் வெளுத்துக்கட்டுவதில் ஆர்.சி.பி தான் முன்னணியில் இருக்கும். ஆனால், இங்கே பவர்பிளேவுக்குள் நிச்சயம் இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது. என்ன நடந்தது ? எப்படித் தோற்றது? ஏன் தோற்றது பெங்களூரு என்பதை ஆராய்வதே இக்கட்டுரை.
 

கோலி - ஆர்.சி.பி

1. காயங்கள் : -

ஆர்.சி.பி அணியின் முக்கிய துருப்புச்சீட்டு கே.எல்.ராகுல். அவர் இந்த சீசனில் காயத்தால் ஆடவில்லை. கடந்த சீசனில் பெங்களூரு அணி பல போட்டிகளில் ஜெயிப்பதற்கு முக்கிய காரணம் ராகுல். கோலி, டிவில்லியர்ஸ் போல பெரிய ஸ்கோர்களை விளாசவில்லை. எனினும், விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தி பலம் சேர்த்தார். விராட் கோலி  களத்தில் நின்றபோது  அவர் மீது எதிரணி கவனம் செலுத்துகையில், ராகுல் எளிதாக ரன்களை குவித்துக்கொண்டிருந்தார். அவர் இல்லாததால் இம்முறை அணியின்  பேட்டிங்கில் தொடக்கமும் சரியில்லை, நடுவரிசையும் சரியில்லை. 

பெங்களூர் அணியின் நம்பிக்கை வீரர் சர்ஃபராஸ் கான். குட்டி ஏபிடி என பெங்களூரு ரசிகர்கள் இவரைச் செல்லமாக அழைக்குமளவுக்கு பேட்டிங் டைனமேட்.  ஆள் கொஞ்சம் குண்டாக இருப்பதால் ஃபீல்டிங்கில் 10 -15 ரன்கள் அணிக்கு பின்னடைவாக போய்விடுகிறது. "போய் ஃபிட் ஆகி விட்டு வா"  எனச் சொல்லி அனுப்பினார் கேப்டன் கோலி. ஆனால் இந்த சீசனில் சர்ஃபராஸ் கான் தலையை காட்டவே இல்லை. காரணம் - காயம்! 

இது பத்தாதென, கோலி சில போட்டிகள் காயத்தால் ஆட வில்லை, டிவில்லியர்ஸ் முதுகு வலியால் ஆரம்ப போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. தைமல் மில்ஸ் காயத்தால் சில போட்டிகளில் வெளியே உட்காரவைக்கப்பட்டார். வழக்கமாக மழை தான் ஆர்சிபிக்கு ஆப்பு வைக்கும். இந்த முறை அந்தப் பணியைச் செய்தது காயங்கள். 

2. 'பேலன்ஸ்' இல்லாத அணி. 

இந்த முறை அதிகத் தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் பென் ஸ்டோக்ஸ். அவருக்கு ஏன் அவ்வளவு தொகை? காரணம் ஆல்ரவுண்டர் என்பதே. மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், புனே என பிளே ஆஃப் ரேஸில் இருக்கும் அணிகளின் முக்கிய பலமே ஆல்ரவுண்டர்கள் தான்.  ஓரிரு நல்ல ஆல் ரவுண்டர்கள் இருந்தால், அணியில் பேட்டிங், பவுலிங் இரண்டையும்  தரம் உயர்த்த முயற்சி செய்ய முடியும். இங்கே பெங்களூருக்கு அப்படியான ஆல்ரவுண்டர்கள் இல்லை. வாட்சன்,  பின்னி இருவருமே சோபிக்கத் தவறினர். இதனால் முதல் நான்கு பேட்ஸ்மேன்களுக்கும், நான்கு பவுலர்களுக்கும் கூடுதல் வேலைப்பளு. அதைச் சமாளிக்க முடியாமல் தடுமாறும்போது தோல்விகள் தோளில் கைபோட்டு அழைத்துச் சென்றன. 

வெஸ்ட் இண்டீஸ் அணி  தான் இதுவரை இரன்டு டி20 உலகக்கோப்பைகளை வென்ற அணி. அதற்கு காரணம் ஆல்ரவுண்டர்கள். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் முத்திரை  பதிக்கும் வீரர்கள் அங்கே இருந்தார்கள். ஆக டி20யில் ஆல்ரவுண்டர்களுக்கே மவுசு அதிகம். இதைக் கவனத்தில் கொள்ளாமல் விட்டதால் வந்த வினையைத் தான் அனுபவிக்கிறது ஆர்.சி.பி. அடுத்த சீசனிலாவது குறைந்தபட்சம் 2-3 நல்ல ஆல்ரவுண்டர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.
 

ஆர்.சி.பி கேப்டன் கோலி

3. மிக சுமாரான கேப்டன்சி : -

டி20 போட்டிகளில் இதுவரை விராட் கோலி விவேகமான கேப்டனிசியை வெளிப்படுத்தியது இல்லை என்பதே நிதர்சனம். ஐபிஎல்லில் அதிக சீசனுக்கு கேப்டனாக ஆடியும், கோப்பையைப் பெறாத ஒரே நபர் கோலி மட்டுமே. ஒவ்வொரு சீசனில் அடிபடும்போதும் அதில் இருந்து அவர் பாடங்களைக் கற்றுக்கொள்வதே இல்லை. விராட் கோலி  இப்படித்தான் முடிவெடுப்பார், இவருக்குத் தான் இந்த சமயத்தில் பவுலிங் வாய்ப்பைத் தருவார் என்பதை எதிரணி கேப்டன் அல்ல, டிவியில் மேட்ச் பார்ப்பவர்கள் கூட எளிதில் சொல்லிவிட முடிகிறது. 

நொடிக்கு நொடி ஷேர் மார்க்கெட் போல வெற்றி வாய்ப்புகள் மாறிக்கொண்டிருக்கும் டி20 ஃபார்மெட்டில், ஒரு முழுமையான கேப்டனாக இன்னமும் தன்னை தயார்படுத்தவில்லை விராட் கோலி. அவரது ஃபீல்டிங் வியூகங்கள் வெகு சுமார். பவுலரைப் பொறுத்தும், பந்துவீச்சின் வகையைப் பொறுத்தும், எந்த பேட்ஸ்மேன் களத்தில் நிற்கிறாரோ, அவரின் பிளஸ் மைனஸ் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் ஃபீல்டிங் வியூகங்களை வகுக்க வேண்டியது அவசியம்.  அதைச் செய்ய தவறுகிறார் கோலி. இந்த சீசனில் மட்டுமல்ல, ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக ரோஹித் ஷர்மா மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் ஃபீல்டிங் வியூகங்களை வகுப்பதில் கில்லிகள். அவர்களுடன் இந்திய அணியில் இணைந்து விளையாடும் வாய்ப்பைப் பெற்ற கோஹ்லி, ஃபீல்டிங் வியூகம் அமைக்கும் கலையை இன்னமும் முழுமையாக கற்றுக்கொள்ள வில்லை. 

டெஸ்ட் ஃபார்மெட்களில் பல சமயங்களில் தோனியின் கேப்டன்சியை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு, அக்ரஸிவ் ஃபீல்டிங் நிறுத்தியிருக்கிறார் கோலி. ஆனால் டி20 ஃபார்மெட்டில் கேப்டன்சியில் கோலி  இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும்.

 

4. அயல்நாட்டு வீரர்களே பலம்/பலவீனம் :- 

அயல்நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர்களுக்கு தரும் முக்கியத்துவத்தை இளம் வீரர்களுக்குத் தருவதில்லை பெங்களூரு அணி. இந்த சீசனில் பெரிய அளவில் இளம் வீரர்களை அணியில் சேர்த்து வாய்ப்பளிக்கவில்லை. வாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளம் வீரர்கள் ஒருபக்கம் இருக்க, தொடர்ந்து சொதப்பினாலும் அயல்நாட்டு வீரர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தது அணி நிர்வாகம். 

திரிபாதி, ராணா, ரிஷப் பன்ட், வோஹ்ரா என மற்ற அணிகளில் இளம் வீரர்கள் மேட்ச் வின்னர்களாக உருவாகினார்கள். ஆனால் பெங்களூருவில் இந்த சீசனில் அப்படியான வீரர்கள் உருவாகவில்லை. பெங்களூரு என்றாலே கெயில், டிவில்லியர்ஸ், கோலி தான் இன்னமும் நியாபகத்துக்கு வருகிறார்கள்.  இக்பால் அப்துல்லா, ஆவேஷ் கான், பிரவீன் தூபே, ஹர்ஷல் படேல், ஹார்ப்ரீத் சிங் உள்ளிட்டோருக்கு வாய்ப்புத் தரப்படவில்லை. ஏலத்திலும் இளம் இந்திய வீரர்களை புறக்கணித்தது ஆர்சிபி. 

கிரிக்கெட் என்பது 11 பேர் சேர்ந்து ஆடும் ஆட்டம். டீம் கேம் என்பதை மறந்து ஒன்மேன் ஷோவுக்கு முக்கியத்துவம் கொடுத்தது ஆர்சிபி. ரசிகர்களுக்கு தரமான பொழுதுபோக்குத் தர வேண்டும் என்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டிருந்தால் மேட்ச்சில் ஜெயிக்க முடியாது என்பது பெங்களூரு மற்ற அணிகளுக்கு கற்றுத்தந்திருக்கும் பாடம்.

டி வில்லியர்ஸ் - ஆர்.சி.பி

5.  அலட்சியம் : -
விட்டேத்தி மனப்பான்மையுடன் ஆடும் தன்மையை இன்னமும் கைவிடவில்லை ஆர்சிபி. கடந்த ஆண்டு  இறுதிப் போட்டியில் எந்த இலக்காக இருந்தாலும் நாங்க சேஸ் செய்வோம் என்று கெத்தாக நின்று ஃபீல்டிங்கில் சொதப்பியது. அபாயகரமான பேட்ஸ்மேன்கள் எங்களிடம் இருக்கிறார்கள் அதனால் கவலையில்லை என்ற தோரணையில் தான் இன்னமும் ஆடுகிறது. 

ஏற்கெனவே போட்ட திட்டங்கள் சொதப்பல் என்றாலும் கூட, ஸ்ட்ராட்டஜியை மாற்ற சோம்பேறித்தனம் காட்டுகிறது. சோதனை முயற்சி என்பது மருந்தளவுக்கு கூட ஆர்சிபியில் இல்லை. பவன் நெகி இந்த சீசனில் நல்ல டச்சில் இருந்தார். அவருக்கு முன்கூட்டி களமிறங்க வாய்ப்புகள் தரவில்லை. கோலி முதல் மூன்று இடங்களுக்குள் மட்டுமே களமிறங்க விரும்புகிறார். டிவில்லியர்ஸ் மூன்று, நான்கு இடங்களில் மட்டுமே ஆடுகிறார். இருவரும் சொதப்பல் ஆட்டம் ஆடினாலும் இந்த விஷயத்தில் மாறவே இல்லை.  

விராட்  கோலி சமீபகாலமாக அதிகம் உணர்ச்சி வசப்படுகிறார். இந்த சீசனில் ஸ்விங் பந்துகளில் தடுமாறுகிறார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அவுட் ஸ்விங் வீசினால், ஹார்மோன்கள் தலைக்கேற, நரம்புகள் முறுக்கேறி ஷாட் ஆட முயன்று கேட்ச் கொடுத்து அவுட் ஆவது கோலியின் வழக்கம். அதை அவர் மாற்றிக்கொள்ளவே இல்லை. அதேப் போல தொடர்ச்சியாக பவுண்டரிகள், சிக்ஸர்கள் விளாச வேண்டும் என ஆசைப்பட்டு தேவையில்லாமல் விக்கெட்டுகளை விட்டார் டி வில்லியர்ஸ். 

தொடர் தோல்விகளை சந்தித்தபோதும் இந்த சீசனில் ரிஸ்க் எடுக்கவில்லை. அனைத்து வீரர்களையும் ஸ்டார் பிளேயராக்க முயற்சிக்கும் கேப்டன் மட்டும் தான் வரலாற்றில் நிற்பார். வெற்றிக்காக, எல்லா வேலையையும் தானே செய்ய வேண்டும் என விரும்புவதை தவிர்த்து எந்த வேலையை யாரிடம், எந்த சமயத்தில் கொடுத்தால் சிறப்பாகச் செய்வார் என அறிந்து வேலையை பகிர்ந்தளிப்பதில் தேர்ச்சி பெறுபவரே  நல்ல கேப்டன். விராட் கோலிக்கு இது படிப்பினை காலம். எல்லோருக்கும் மோசமான காலம் வரும். அதை உணர்ந்து, அதில் இருந்து படங்களை கற்றுக்கொண்டு  மீள் உருவாக்கம் செய்து மீண்டும் மூர்க்கத்தனமாக  போராடுவது தான் வீரனுக்கு அழகு. விராட் கோலி மிகச்சிறந்த  பேட்ஸ்மேன்.  பேட்டிங்கில் தனது தவறுகளை திருத்திக் கொண்டு நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக மிளிர்கிறார். இந்த விஷயத்தை அவர் கேப்டன்சியிலும் செய்ய வேண்டியது அவசியம்... இப்போது மிக அவசரம். ஏனெனில்.....சாம்பியன்ஸ் டிராஃபி!


டிரெண்டிங் @ விகடன்