ஒலிம்பிக் பதக்கம் - வெல்வதற்கு வழி சொல்லும் பி.டி.உஷா

PT Usha

'ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்றால், வீரர்களை இளம் வயது முதலே பயிற்சியில் ஈடுபடவைக்க வேண்டும். அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல் இருக்க வேண்டும். வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் அடிக்கடி பங்கேற்கும் வாய்ப்பை வழங்க வேண்டும். வெறும் பயிற்சி மட்டுமே இருந்தால், பதக்கம் வெல்ல முடியாது. உங்களை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தவர்கள் மட்டுமே சரியான வகையில் பங்கேற்று பதக்கத்தை வெல்வார்கள்' என்று பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனையும் இந்தியாவின் தங்க மங்கையுமான பி.டி.உஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பி.டி.உஷா, தன் காலத்தைவிட இப்போது அதிக வசதிகள் இருப்பதாகக் குறிப்பிட்டு, அதை இளம் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், 'நான் மிகவும் ஈடுபாட்டுடன் பயிற்சியில் ஈடுபட்டேன். முதல்முறை வெற்றி கிடைக்காவிட்டாலும் ஒவ்வொரு முறையும் மனம் தளராமல் முயன்றுகொண்டே இருந்தால், நிச்சயமாக லட்சியத்தை அடையலாம். பல்வேறு துறைகளில் உலகளவில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கிறது. ஆனால், விளையாட்டில் மிகவும் பின் தங்கியுள்ளது. தடகள விளையாட்டு வீரர்களுக்கு முதலில் உறுதியான எண்ணம் வேண்டும். எங்கள் காலத்தில் மிகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டோம்.இப்போது, இருப்பது போல வசதிகள் எதுவும் அப்போது கிடையாது. இப்போதுள்ள வீரர்களைவிட மிகுந்த அர்ப்பணிப்புடனே அன்றைய வீரர்கள் இருந்தனர். ஆனால், அவர்களுக்கு வசதிகளே இல்லை. இன்றைக்கு இருக்கும் நவீன வசதிகளைப் பயன்படுத்தி, இளம் வீரர்கள் நம் நாட்டுக்கு அதிக பதக்கங்களை ஒலிம்பிக்கில் வென்று வர வேண்டும்' என்று அவர் கேட்டுக்கொண்டார்.  

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!