வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (11/05/2017)

கடைசி தொடர்பு:19:07 (11/05/2017)

ஏஜென்ட்டுக்கு ரூ.340 கோடியா? கால்பந்து உலகை கிறுகிறுக்க வைத்த மினோ ரயோலா டீலிங்!

ஃபிரான்ஸ் கால்பந்து வீரர் பால் போக்பா. பின்களம், தாக்குதல் என எந்த இடத்திலும் கலக்கும் மிட்ஃபீல்டர். மான்செஸ்டர் யுனைடெட் பாசறையில் பால பாடம் பயின்றவர். சிறகு முளைத்ததும் பறக்க விரும்பியது இந்தப் பறவை. போய் வா என அனுப்பி வைத்தது மான்செஸ்டர் யுனைடெட் க்ளப். 2012 முதல் 2016 வரை இத்தாலியில் யுவென்டஸ் க்ளப்பில் ஆதிக்கம். உலகில் உள்ள அத்தனை பயிற்சியாளர்களின் கண்களும், துடிதுடிப்பான இந்த 24 வயது இளைஞனின் கால்கள் மீது மொய்த்தன. மான்செஸ்டர் யுனைடெட் பயிற்சியாளர் ஜோஸே மொரினியோவும் அதில் ஒருவர். போக்பாவுக்கு அழைப்பு விடுத்தார். மறுப்பேதுமின்றி தாய் க்ளப்புக்கு திரும்பினார் போக்பா. அதற்கு மான்செஸ்டர் யுனைடெட் கொடுத்த விலை பெரிது. ஆம். ரூ.744 கோடி.கால்பந்து வீரர் போக்பா

‘அடேங்கப்பா...’ என ஆச்சர்யப்பட்டது கால்பந்து உலகம். மிரட்டல் மிட்ஃபீல்டராகவே இருக்கட்டும். ‘அதற்காக இந்த சின்னப் பையனுக்கு இவ்வளவு விலையா?’ புருவம் உயர்த்தினர் கால்பந்து நிபுணர்கள். ஆனால் மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களுக்கு ஒரு திருப்தி. போக்பா ஃபிரான்ஸ் வீரராகவே இருக்கட்டும். அவர் வளர்ந்தது இங்கே, பாடம் பயின்றது இங்கே, அவரால்தான் பால் ஸ்கோல்ஷ், ரியான் ஜிக்ஸ் போன்றவர்களின் இடத்தை நிரப்ப முடியும் என நிம்மதி அடைந்தனர் ரசிகர்கள். ஒரு தேர்ந்த வீரனுக்கு அதிக விலை கொடுக்கத் தயங்கினார் பயிற்சியாளர்களில் ஜாம்பவானான சர் அலெக்ஸ் பெர்குசன். வழக்கம்போல இதன் பின்னணியை ஆராய்ந்தனர் பத்திரிகையாளர்கள்.

Football Leaks:  The Dirty Business of Football என்ற பெயரில் ஜெர்மனியைச் சேர்ந்த டெர் ஸ்பீகில் மற்றும் பத்திரிகையாளர்கள் ரஃபேல் புஸ்மன், மைக்கேல் உல்ஸிங்கர் ஒரு ஆபரேஷன் நடத்தினர். முடிவில் போக்பாவுக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து ஏராளமான தகவல்கள் கிடைத்தன. ஒரு வாரத்துக்கு ரூ.1.38 கோடி, அடிப்படை விலை ரூ. 71 கோடி, அடுத்த ஆண்டில் இருந்து போனஸ் ரூ.2.82 கோடி என போக்பா - மான்செஸ்டர் யுனைடெட் இடையிலான 41 பக்க ஒப்பந்தத்தை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து வைத்து விட்டது Football Leaks. இதையெல்லாம் விட அதில் இருக்கும் அதிர்ச்சித் தகவல், போக்பாவின் ஏஜென்ட் மினோ ரயோலாவுக்கு கொடுக்கப்பட்ட விலை... ரூ. 340 கோடி!

மான்செஸ்ட்ர் யுனைடெட், யுவென்டஸ், போக்பா என மூன்று தரப்பினரிடம் இருந்தும் இந்தத் தொகையைப் பெற்றிருக்கிறார் மினோ ரயோலா. மான்செஸ்டர் யுனைடெட் க்ளப்பிடம் இருந்து ரூ.190 கோடி, யுவென்டஸ் தரப்பில் ரூ.136 கோடி வாங்கியது மட்டுமல்லாது, போக்பாவிடம் இருந்து மொனாக்கோவில் உள்ள தனக்குச் சொந்தமான UUNIQQ SARL என்ற ஏஜென்ஸிக்கு ரூ.14 கோடி என மொத்தம் ரூ.340 கோடியை ஒரே மூச்சில் சம்பாதித்து விட்டார் மினோ ரயோலா.

ஒரு ஏஜென்ட்டுக்கு இவ்வளவு விலையா? போக்பாவை மான்செஸ்டர் யுனைடெட் வரவழைக்க லஞ்சம் ரூ.340 கோடியா? இது உள்ளூர் க்ளப்புக்கு ஆண்டு முழுவதும் செலவு செய்யும் விலையை விட 20 மடங்கு அதிகம். இதைக் கண்டு பொங்கிவிட்டார்  அக்ரிங்டன் ஸ்டேன்லி க்ளப் சேர்மன் ஆண்டி ஹோல்ட். ‘‘நீங்கள் கால்பந்தை அவமதித்து விட்டீர்கள். பிரிமியர் லீக்கை அவமதித்து விட்டீர்கள். பிரிட்டனில் நான்காவது டிவிஷனில் பங்கேற்கும் எங்கள் க்ளப்புக்கு ஆண்டுதோறும் நாங்கள் செலவு செய்வது 18 கோடி ரூபாய். ஆனால், நீங்கள் ஒரு ஏஜென்ட்டுக்கு இவ்வளவு பணத்தைத் தூக்கிக் கொடுத்துள்ளீர்கள். அதிக ரசிகர்களைக் கால்பந்து பார்க்கச் செய்வதற்காக இந்தத் தொகை செலவிடப்படவில்லை. தேவையில்லாத விஷயத்துக்கு பெரிய தொகை செலவிடப்பட்டுள்ளது. க்ளப் உரிமையாளர்களின் பணத்தை மட்டுமல்ல, கால்பந்து என்ற ஆட்டத்தின் மதிப்பையும் கெடுத்துவிட்டீர்கள். இது கால்பந்தை அவமதிக்கும் செயல். வெட்கித் தலைகுனியுங்கள்’ என வரிசையாக ட்வீட் செய்து கொந்தளித்து விட்டார் ஆண்டி ஹோல்ட். 

தகவல் அறிந்ததும் விசாரணையை முடுக்கி விட்டது சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA). இதென்ன அறியாமல் செய்த தவறா? மான்செஸ்டர் யுனைடெட் க்ளப்புக்கு எல்லாம் தெரியும். ‛பொதுவாக, நாங்கள் ஒப்பந்தம் தொடர்பான விஷயங்களில் கருத்துத் தெரிவிப்பதில்லை’ என எளிதாகக் கடந்து விட்டார் மான்செஸ்டர் யுனைடெட் தகவல் தொடர்பாளர். யுவென்டஸ் தரப்பில் விளக்கம் தரப்படவில்லை. ஏற்கெனவே ஊழல் விவகாரத்தால் விழி பிதுங்கி நிற்கிறது ஃபிபா. தற்போது மேலும் ஒரு களங்கம்.

யார் அந்த மினோ ரயோலா?

Milo

இத்தாலியின் தெற்கே அமல்ஃபி கடற்கரையில் உள்ள சலர்னோ பகுதியில் 1967-ல் பிறந்தவர் மினோ ரயோலா. பால்யத்தில் அவர் குடும்பம் நெதர்லாந்துக்கு குடிபெயர்ந்தது. தந்தை தொடங்கிய உணவகம் ஒன்றில் வேலை செய்தார். அதோடு பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தார். சட்டமும் பயின்றவர். இத்தாலி, ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிஷ், ஃபிரெஞ்ச், போர்ச்சுசீஸ், டச்சு ஆகிய ஏழு மொழிகள் தெரியும்.

நெதர்லாந்தைச் சேர்ந்த ஹார்லீம் க்ளப்பில் விளையாடினார். ஆனால், 18 வயதிலேயே விளையாடுவதை நிறுத்தி விட்டார். காரணம், இளைஞர் அணியின் தலைமை நிர்வாகத்தை ஏற்கும் பொறுப்பு. பின், ஒரு   நிறுவனத்தில் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்தும் பணியில் சேர்ந்தார். அப்போதுதான் வீரர்களை ஒரு க்ளப்பில் இருந்து  மற்றொரு க்ளப்பில் சேர்ப்பதற்கான பேரம் பேசும் ‘ஏஜென்ட்’ பணி கைகூடியது. முதலில் அடையாளம் தெரியாத வீரர்களுக்கு ஏஜென்டாக இருந்த ரயோலோ, 1996-ல் இருந்து சர்வதேச கால்பந்து உலகின் கவனம் ஈர்த்தார். 

செக் குடியரசைச் சேர்ந்த பாவெல் நெட்வெட் அப்போது துடிப்பான மிட்ஃபீல்டர். 1996 யூரோ கோப்பையில் செக் குடியரசு ஃபைனல் செல்லக் காரணமாக இருந்தவர். அவரை ஸ்பார்ட்டா பராகுவே அணியில் இருந்து லேசியோ க்ளப்பில் சேர்த்து விடுவதில் முக்கிய பங்காற்றினார் ரயோலோ. நெட்வெட்டை இரண்டு ஆண்டுகளில் இரண்டு க்ளப்களில் விளையாட வைத்ததில் இருக்கிறது ரயோலாவின் வெற்றி. ஸ்பார்ட்டா பராகுவேயில் இருந்து 12 மில்லியன் பவுண்டுக்கு லேசியோ க்ளப்புக்கும், அடுத்த ஆண்டு லேசியோவில் இருந்து யுவென்டஸ் க்ளப்புக்கு 25 மில்லியன் பவுண்டுக்கும் நெட்வெட்டை ஒப்பந்தம் செய்யவைத்தார் ஏஜென்ட் ரயோலா. இந்த டிரான்ஸ்ஃபரைப் பார்த்து கால்பந்து உலகம் வியந்தது. அன்று முதல் ரயோலாவின் வியாபாரம் கொடி கட்டிப் பறந்தது.

மினோ ரயோலாரயோலா தலையிட்டின் மூலம் 20 வீரர்கள் ஐரோப்பிய லீக் போட்டிகளில் விளையாடியுள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை அவர் கைவசம் 51 வீரர்கள் இருந்தனர். இது ஐரோப்பிய கால்பந்து உலகில் பெரிய விஷயமில்லை. ஆனால், ஸ்வீடனைச் சேர்ந்த ஜாம்பவான் இப்ராஹிமோவிச், எவெர்டன் க்ளப் வீரர் ரோமெலு லுகாகு, இத்தாலி ஸ்ட்ரைக்கர் மரியோ பேலடெலி, ஹென்ரிக் கிடார்யன் போன்ற பிரதான வீரர்களை வைத்து தன் பாக்கெட்டை நிரப்பியதில் கில்லாடி.

கடந்த சீசனில் பால் போக்பாவை யுவென்டஸ் க்ளப்பில் இருந்து மான்செஸ்டர் யுனைடெட் க்ளப்புக்கு வரவைத்ததில் ரயோலாவின் பங்கு அளப்பரியது. அதற்கு வாங்கிய தொகைதான் அந்த 340 கோடி ரூபாய். இன்று கால்பந்து உலகின் பேசுபொருள். ஒரு க்ளப்பில் இருந்து மற்றொரு க்ளப்புக்கு வீரர்களை மாற்றி விடும் டிரான்ஸ்ஃபர் விஷயத்தில் ஏற்கெனவே, இரண்டுமுறை விதிமுறைகளை மீறியதாக இத்தாலிய கால்பந்து சங்கம் ரயோலாவை எச்சரித்துள்ளது. 

மான்செஸ்டர் யுனைடெட் க்ளப்பை செதுக்கியவர் சர் அலெக்ஸ் பெர்குசன். ஒரு காலத்தில் பெர்குசனை அணுகக் காரணமாக இருந்த பவர் சென்டர்களில் ரயோலாவும் முக்கியமானவர். ஆனால், பெர்குசன் வெறுத்த ஏஜென்ட்களில் முதன்மையானவர் ரயோலா. ‛‛எனக்கு ஒன்றிரண்டு ஃபுட்பால் ஏஜென்ட்களைப் பிடிக்காது. மினோ ரயோலா அதில் ஒருவர். முதல் சந்திப்பிலேயே நான் அவரை நம்பவில்லை’’ என்றார் பெர்குசன். 

‘‘இப்ராஹிமோவிச் ஏஜாக்ஸ் அணியில் விளையாடிக்கொண்டிருந்தபோது ரயோலா அவரின்  ஏஜென்ட் ஆனார். உடனடியாக அங்கிருந்து 18 வயதே நிரம்பிய போக்பாவின் ஏஜென்ட்டாக மாறினார். அந்த சமயம், போக்பாவுடன் மூன்று வருட ஒப்பந்தம் செய்திருந்தோம். மேலும் ஒரு வருடம் ஒப்பந்தத்தை நீட்டிக்க நினைத்திருந்தோம். அந்த நேரத்தில் ரயோலா ஆட்டத்தில் புகுந்து எல்லாவற்றையும் மாற்றி விட்டார். எங்கள் முதல் சந்திப்பே கபளீகரமானது. நாங்கள் இருவரும் எண்ணெயும் தண்ணீரையும் போன்றவர்கள்’’ என ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார் பெர்குசன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்