வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (13/05/2017)

கடைசி தொடர்பு:13:31 (13/05/2017)

2017 ஐ.பி.எல்-ன் 11 கெத்து பசங்க இவங்கதான்!

ஐ.பி.எல் பொழுபோக்குக்கான தொடர் மட்டுமல்ல; இளம் வீரர்களைக் கண்டெடுத்து அவர்களை உலகறியச் செய்யும் தொடரும்கூட. பல வருட உழைப்புக்கு, ஒரே ஒரு ஓவரில்கூட இங்கே அங்கீகாரம் கிடைத்துவிடும். அந்த வகையில் இந்த ஐபிஎல்-லில் அசத்தலாக ஆடி  ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் சிங்கங்களிலிருந்து பதினொரு பேரைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். எப்பேர்ப்பட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள்கொண்ட அணியாக இருந்தாலும், இந்த இளம் அணி அவர்களுக்கு நிச்சயம் சவால்விடும் என்பதில் சந்தேகமில்லை. 

 ராகுல் திரிபாதி

1. ராகுல் திரிபாதி: 

தோனி மாநிலமான ஜார்கண்டிலிருந்து வந்தவர். 26 வயதாகும் ராகுல் திரிபாதி, இந்த சீஸனில் புனே அணிக்காக விளையாடிவருகிறார். ஆரம்பப் போட்டிகளில் அணியில் இடம் கிடைக்கவில்லை. ரஹானேவுடன் களமிறங்கி வந்த மயங்க் அகர்வால் சொதப்பல் ஆட்டம் ஆடவே, இவருக்கு சான்ஸ் கிடைத்தது. முதல் போட்டியிலேயே முத்திரை பதித்தார். பயமின்றி இவர் அடித்த ஷாட்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. புனே அணியின் பயிற்சியாளர் ஃபிளெமிங் இவரைப் பட்டைத்தீட்ட, அடுத்தடுத்த போட்டிகளில் திரிபாதியைச் சமாளிப்பதற்குள் படாதபாடுபட்டனர் எதிர் அணி பெளலர்கள். 

இதுவரை பத்து போட்டிகளில் ஆடியிருக்கிறார். அதில் இரண்டு போட்டிகளைத் தவிர மற்ற ஆட்டங்களில் அதிரடி சரவெடிதான். `ராகுல் திரிபாதியை அனுப்பினால் முப்பது ரன்கள் நிச்சயம்' என ரிலாக்ஸாக அமர்ந்தார் ஸ்டீவன் ஸ்மித். இந்த சீஸனில் எட்டு போட்டிகளில் முப்பது ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார் ராகுல். இரண்டு போட்டிகளில் அரை சதம் அடித்திருக்கிறார். கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியொன்றில் இவர் ஆடிய ஆட்டம் 'தி பெஸ்ட் இன்னிங்ஸ்'. 

158 ரன்களைத் துரத்திய புனே அணி, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவைக் காலிசெய்தது. மற்ற வீரர்கள் எல்லாம் ஒற்றை ரன்களில் நடையைகட்ட, பென் ஸ்டோக்ஸ் மட்டும் 15 ரன்கள் எடுத்தார். இதுதான் புனே அணி பேட்ஸ்மேன்களின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். 

ராகுல் அடித்த ரன்கள் எவ்வளவு தெரியுமா? 93. ராகுல் சந்தித்த 52 பந்துகளில் ஒன்பது பந்துகள் ஃபீல்டர்களுக்குத் தண்ணி காண்பித்து எல்லைக்கோட்டைத் தொட்டன. ஏழு பந்துகளை மைதானத்துக்கு வந்த பார்வையாளர்கள் கேட்ச் பிடித்து மைதானத்துக்குள் தூக்கி எறிந்தார்கள். இப்போது சொல்லுங்கள்... இவரைவிட இந்த இளம் படைக்கு யார் சிறந்த ஓப்பனர்? 

சஞ்சு சாம்சன்

2. சஞ்சு சாம்சன்:

'அட... எதுக்குப்பா பயந்து பயந்து பெளண்டரி அடிச்சுக்கிட்டு, நேரடியா சிக்ஸர் அடிச்சிரலாம்ல!' இதுதான் சாம்சனின் பாலிசி. சார் பெளலர்களை டீல் செய்வதெல்லாம் சிக்ஸர்களில்தான்.

'டெல்லி பேட்டிங்கை குலைக்கணும்னா மொதல்ல சாம்சன் விக்கெட்டை எடுக்கணும்' - எதிர் அணிகளின் பெளலர்களுக்கு  ஐபிஎல் அணியின் கேப்டன் சொல்லும் டிப்ஸ் இதுதான். 

அபாயகரமான தொடக்க வீரராக ஆடிவருகிறார் சாம்சன். சேட்டன்தான் இந்த வருடம் டெல்லி அணியின் டாப் ஸ்கோரர். இப்போதைக்கு தொடரில் ஆறாவது டாப் ஸ்கோரரும் இவர்தான். 12 போட்டிகளில் 384 ரன்கள் குவித்திருக்கிறார். இந்த சீஸனில் முதல் சதத்தை விளாசியதும் சாம்சன்தான். இவரைத் தவிர இதுவரை சதம் அடித்தவர்கள் மூன்றே பேர்தான். ஒருவர் ஆம்லா, இன்னொருவர் வார்னர், மற்றொருவர் பென் ஸ்டோக்ஸ். திரிபாதியுடன் இணைந்து இவர் தொடக்கம் கொடுத்தால் பவர்பிளேவில் காத்திருக்கிறது ரன் விருந்து. 

நிதிஷ் ராணா

3. நிதிஷ் ராணா:

செம ஸ்டைலிஷ் ஆட்டம் ராணாவுடையது. வேகப்பந்து வீச்சாளர்களைப்  போட்டுப் பொளப்பது நிதிஷுக்கு  ஜாலி வேலை. ராணா, பந்துகளை அலேக்காக சிக்ஸருக்குத் தூக்கும் வீடியோக்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.  டெல்லியைச் சேர்ந்த ராணாவுக்கு வயது 23-தான். மும்பையைச் சேர்ந்த அதிரடி வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் டெல்லி டெர்டெவில்ஸுக்கு ஆட, இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆடிக்கொண்டிருக்கிறார். 

ராணா  களத்தில் இருந்தால், தனி ஒருவனாகவே மேட்சை மாற்றிவிடுவார். அணியின் சூழ்நிலைக்கு  ஏற்ப பொறுப்பாகவும் ஆடுகிறார்; அதிரடியாகவும் ஆடுகிறார். சேஸிங் என்றால், ராணா குஷியாகிவிடுகிறார். இடதுகை வீரரான ராணா, விரைவில் இந்திய அணியில் யுவராஜின் இடத்தைப் பிடிக்கப் போட்டிபோடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இளம் அணியில், மூன்றாவது நிலையில் களமிறங்க தரமான வீரர் மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த நிதிஷ். 

ஷ்ரேயாஸ் அய்யர்:

4. ஷ்ரேயாஸ் ஐயர்:

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் செம ஃபார்மில் இருந்தார் ஷ்ரேயாஸ். ஆனால், அதன் பிறகு காயங்கள், ஃபார்ம் அவுட் எனத் தொடர்ச்சியாக சோகக் காலம். இப்போது மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியிருக்கிறார். ஷ்ரேயாஸின் பல ஷாட்கள் துல்லியமாக இருக்கும். அவரது சில டிரைவ்கள் விராட் கோலியை நினைவுபடுத்தும். அபாயகரமான பந்துகளைக்கூட லாகவமாகத் தள்ளிவிட்டு,  ஃபீல்டிங்கில் நிற்கும் வீரர்களுக்கு இடையேயான இடைவெளியில் 'நச்' பெளண்டரி விளாசுவது ஷ்ரேயாஸின் வழக்கம். 

இந்த சீஸனில் ஷ்ரேயாஸ் அதிகமான பந்துகளைச் சந்திக்கும் வாய்ப்புகள் சரிவர அமையவில்லை. ஒருசில வாய்ப்புகளைக் கோட்டைவிட்டாலும், சீராக பேட்டிங் செய்து நல்ல சராசரி வைத்திருக்கிறார். இதுவரை ஆடிய 10 போட்டிகளில் 37.88 சராசரியுடன் 303 ரன்களைக் குவித்திருக்கிறார். விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதிலும் கவனம் செலுத்தக்கூடியவர் ஷ்ரேயாஸ். நான்காவது நிலையில் களமிறங்க பொருத்தமானவர். 

ரிஷப் பன்ட்

5.  ரிஷப் பன்ட்:

இந்த இளம் அணிக்கு மிக எளிதான தேர்வு ரிஷப் பன்ட். வயது 19-தான். ஆனால், டைனமைட் பேட்ஸ்மேன்.  துடிப்பான விக்கெட் கீப்பர். இந்த ஐபிஎல்-லில்  பெளண்டரி சிக்ஸர் விகிதம் கிட்டத்தட்ட சமமாக இருப்பது ரிஷப்புக்குத்தான். இதுவரை 21 பெளண்டரிகள் அடித்திருக்கிறார். 20 சிக்ஸர்கள் விளாசியிருக்கிறார். வீரேந்திர சேவாக் போலவே, சந்திக்கும் முதல் பந்திலிருந்தே போட்டுப் பொளப்பவர். இவர் எவ்வளவு நேரம் களத்தில் நிற்கிறாரோ, அந்த அளவுக்கு எதிரணியின் வெற்றி வாய்ப்புத் தாறுமாறாகக் குறையும். மற்றவர்கள் எல்லாம் செட்டிலாகிவிட்டு சிக்ஸர் அடித்தால், இவர் சிக்ஸர் அடித்துவிட்டுத்தான் கிரீஸில் செட்டிலாவார். சில முறை இந்த உத்தி பலன் அளிக்கவில்லை என்றாலும்கூட, அதை மாற்றிக்கொள்ளவில்லை ரிஷப். 

`ஏனப்பா?' எனக் கேட்டால், `என் ஸ்டைல் இதுதான் சார்' என்கிறார். குஜராத்துக்கு எதிராக இவர் ஆடிய ஓர் ஆட்டம், பார்வையாளர்களை மலைக்கவைத்தது. சச்சின் டெண்டுல்கர், `ஐபிஎல் வரலாற்றிலேயே நான் பார்த்த மிகச்சிறந்த இன்னிங்ஸ் இது' எனப் புகழ்ந்தார். `நான் பேட்டிங் பிடிக்க நின்றுகொண்டிருக்கும்போது, பெளலர் பந்து வீசினால் அது சிக்ஸர் விளாசத் தகுதியான பந்து என்றால், கவலையேபடாமல் சிக்ஸர் அடிப்பேன். அவர் வீசும் அடுத்த பந்தும் அப்படியே என்றால் மீண்டும் சிக்ஸர்தான்' இப்படி ஓப்பனாகவே பேசியிருக்கிறார் ரிஷப். பயமறியாத இந்த இளங்கன்று, நிச்சயம் இந்திய அணியில் விக்கெட் கீப்பராகப் புகும். இந்த இளம் அணிக்கும் இவர்தான் தகுதியான தரம்வாய்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். 

 க்ரூனால் பாண்டியா

6. க்ரூனால் பாண்டியா:

டி வில்லியர்ஸ்க்கு  இதுவரை நான்கு போட்டிகளில் பந்து வீசியிருக்கிறார் க்ரூனால் பாண்டியா. இதில் நான்கு முறையும் அவரை வீழ்த்தியிருக்கிறார். புத்திசாலித்தனமான பந்து வீச்சும், பவர் ஹீட்டிங் பேட்டிங்கும் க்ரூனால் பாண்டியாவின் அடையாளங்கள். மும்பை இந்தியன்ஸ் அணி இவரை வெகுவாக நம்பியிருந்தது. தம்பி ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து இந்த சீஸன் முழுவதும் கலக்கல் ஆட்டம் ஆடினார். கடைசி இரண்டு போட்டிகளில் மும்பை அணி தோல்வி அடைந்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணங்களுள் க்ரூனால் பாண்டியாவும் ஒருவர். ஏனெனில், அவர் இந்த இரண்டு போட்டிகளிலும் காயம் காரணமாக விலகியிருந்தார். சுழற்பந்துக்கும் கைகொடுப்பார்... பேட்டிங்கிலும் முத்திரை பதிப்பார் என்பதால், இவரே இளம் அணிக்கு ஃபினீஷர் ரோலையும் பொறுப்பேற்கிறார். 

பவன் நெகி

7.  பவன் நெகி:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவில் இந்த சீஸனில் உருப்படியாக ஆடிய ஒரே  வீரர் நெகி  மட்டும்தான். கடந்த சீஸனில்  டெல்லி அணிக்காக ஆடியபோது சொதப்பிய நெகி, இந்த முறை பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் கலக்குகிறார். 

இந்த சீஸனில்  ஒன்பது சிக்ஸர்களை விளாசியிருக்கிறார். 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 11 போட்டிகளில் ஆடியுள்ள பவன் நெகி, மிகவும் சிக்கனமாக ரன்களை விட்டுத்தந்திருக்கிறார். சிக்கன பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இப்போதைக்கு நான்காவது இடம் நெகிக்குத்தான். இவருக்கு மேலே இருக்கும் மூவரும் தலா இரண்டு போட்டிகள் மட்டுமே ஆடியிருக்கிறார்கள். அந்த வகையில் நெகிதான் சூப்பர் பெளலர். லோயர் ஆர்டரில் அதிரடியாக ஆடக்கூடியவர் என்பதால், ஏழாவது இடத்தில் இறங்குவதற்கு தகுதியான நபர். 

 வாஷிங்டன் சுந்தர்

8. வாஷிங்டன் சுந்தர்:

தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தருக்கு வயது 17-தான். புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்காக ஆடிவரும் சுந்தர், இதுவரை ஏழு போட்டிகளில் நான்கு விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். `அட.. இவ்வளவுதானா!' என அலட்சியப்படுத்திவிடாதீர்கள். கடைசிக்கு முந்தைய இடத்துக்கு போட்டிபோடும் நிலைமையில் இருந்த புனே அணி, வாஷிங்டன் சுந்தர் வரவால்தான் இன்று டாப் இரண்டு இடங்களுக்குப் போட்டிபோடும் அணியாக மாறியிருக்கிறது. ஓவருக்கு வெறும் ஏழு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த சிக்கனமான பெளலர் . இம்ரான் தாகீர் உடன் இணைந்து கலக்கல் ஆட்டம் ஆடும் இவர், ஆல்ரவுண்டரும்கூட. புனே அணியில் பேட்டிங் செய்வதற்கு  இவருக்குச் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இளம் அணிக்கு பெளலிங், பேட்டிங் இரண்டிலும் வலிமை சேர்ப்பார் சுந்தர். 

சித்தார்த் கவுல்

9. சித்தார்த் கவுல்:

ஹைதராபாத் அணிக்கு இந்த முறை ஆஷிஷ் நெஹ்ரா கைகொடுக்கவில்லை. காயம் காரணமாக பல போட்டிகளில் வெளியிலேயே உட்கார்ந்திருந்தார் நெஹ்ரா . அந்தச் சமயத்தில் அணியில் அவரின் இடத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் கவுல். 

சன் ரைஸர்ஸ் அணிக்கு  புவனேஷ்வர் குமாருக்குப் பக்கபலமாக பந்து வீசிவருகிறார் சித்தார்த். புனே அணிக்கு எதிராக இவர் நான்கு ஓவரில் 29 ரன் விட்டுக்கொடுத்தது, நான்கு  அள்ளியது இவரின் இந்த சீஸனின் சிறந்த பந்துவீச்சு. இதுவரை எட்டு போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் கவுல். 

ஜெயதேவ் உனத்கட்

10. ஜெயதேவ் உனத்கட்:

சீரற்ற பெர்ஃபாமன்ஸ் காரணமாக பல வருடங்களாக அவதிப்பட்ட ஜெயதேவ், இந்த சீஸனில் புனே அணியின் நட்சத்திர பெளலராக உருவெடுத்திருக்கிறார். இந்த சீஸனில்  எட்டு போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஹைதராபாத் அணிக்காக ஒரே போட்டியில்  இவர்  ஐந்து விக்கெட்களை அள்ளிய நிகழ்வை மறந்துவிட முடியாது. 

வாசிம் அக்ரம் இவரது பந்துவீச்சை வானளாவப் புகழ்ந்திருக்கிறார். ''இரண்டுவிதமாக ஸ்விங் செய்யும் திறன்பெற்ற ஜெயதேவ், விரைவில் கிரிக்கெட் உலகில் புகழ்பெறுவார்" எனப் பாராட்டியிருக்கிறார். ஜெயதேவ் பெளலிங்கில் மட்டுமல்ல, படிப்பிலும் கெட்டிக்காரர். பத்தாவது வகுப்பிலும் சரி, பன்னிரெண்டாவது வகுப்பிலும் சரி இவர்தான் நம்பர் 1 மாணவர். கடைசி ஓவரில் மெய்டன் ஹாட்ரிக் எடுத்த உனத்கட் யங் அணியில் கெத்து பெளலர்.

ஐபிஎல்லில்  சந்தீப் ஷர்மா

11. சந்தீப் ஷர்மா:

செம ஃபார்மில் இருக்கிறார் சந்தீப் ஷர்மா. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கிட்டத்தட்ட பிரதான வேகப்பந்து வீச்சாளர், இன்னும் இந்திய அணிக்குள் பெரிய அளவில் தலைகாட்டாத சந்தீப்தான். கெயில், கோலி, டி வில்லியர்ஸ் மூன்று பேரையும் ஒரே மேட்சில் வீழ்த்திக்காட்டிய கெட்டிக்காரர். 

வலுவான டெல்லி அணியை, தனது துல்லியமான பந்துகளால் துளைத்தெடுத்தார். இவரது  பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் நசுங்கியது டெல்லி  டேர்டெவில்ஸ். இந்த சீஸனில் இதுவரை 12 போட்டிகளில் ஆடி, 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

12-வது வீரர்:

பல இளைஞர்கள் தொடர்ந்து சாதித்துவருகிறார்கள். பேசில் தம்ப்பி, இஷான் கிஷன் இருவரும் முக்கியமானவர்கள். இந்த அணியில் 12-வது வீரராக பேட்ஸ்மேனான இஷான் கிஷன் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.


டிரெண்டிங் @ விகடன்