வெளியிடப்பட்ட நேரம்: 13:59 (15/05/2017)

கடைசி தொடர்பு:13:59 (15/05/2017)

“மிஸ் யூ யூனிஸ் !” - பாகிஸ்தானின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஓய்வு

பாகிஸ்தானின் ஆச்சர்யகரமான பேட்ஸ்மேன், அட்டகாசமான பிளேயர் யூனிஸ் கான். நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற்றார்

கடந்த ஏப்ரல் 7-ம் தேதி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடக்கும்  டெஸ்ட் தொடரோடு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அப்போது ஒரு செய்தியாளர் ஒரு கேள்வி கேட்டார்.  "இன்னும் 23 ரன்கள் எடுத்தால் போதுமே, பத்தாயிரம் ரன்களைக் கடந்து முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆக வேண்டிய ஆள் என்ற பெருமை கிடைக்குமே?"

நிதானமாய் யூனிஸ்கான்  சொன்ன பதில் இதுதான்,

 "உலகம் இப்படித்தான் கேட்டுக் கொண்டே இருக்கும். 10,000, 12,000 என்று  இலக்குகள் வைத்து விளையாட விருப்பமில்லை. சரியான நேரத்தில் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்".

யூனிஸ்கானின் 17 வருட கிரிக்கெட் பயணத்தில் சில மைல்கற்களைப் பார்ப்போம்.

யூனிஸ் கான்

2000  ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய யூனிஸ்கான் ஆடிய ஆட்டங்கள் பாகிஸ்தான் இதுவரை கண்டிராதது. டெஸ்ட் போட்டிகளின் மன்னன் என்று சொல்லும் அளவுக்கு இவர் செய்தவை ஏராளம். 2005-ல் தந்தையின் மரணத்தில் தொடங்கி அடுத்தடுத்து தன் சகோதரர்களையும் விபத்துகளில் இழந்த யூனிஸ்கானின் மனதில் ஆறாவடுவாய் மனதில் வலி பதிந்தது. அதுவே தன்  சாதனைகளுக்கு காரணமாயிருந்தது என்று கூறியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 கேட்ச்களைப் பிடித்த ஒரே பாகிஸ்தான் வீரர், 5 சதங்களை நான்காவது இன்னிங்ஸில் மட்டும் அடித்து விளாசிய ஒரே கிரிக்கெட் வீரர் என சாதனைகளைக் குவித்த யூனிஸ்கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பை 2006 ல் ஏற்றார்.

2009-ல் தன்னால் அணி வீரர்களை ஒருங்கிணைக்க முடியவில்லை என்று தெரிவித்து கேப்டன் பதவியிலிருந்து விலகினார். பின்னர் அதுகுறித்து வருத்தப்படவும் செய்தார்.

"நான் பாகிஸ்தான் நாட்டின் சிறந்த பேட்ஸ்மேன் என நினைக்கவில்லை.ஏராளமான சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள்" என்று சொல்லும் யூனிஸ்கான் இந்தியாவுடனான போட்டிகள் மிகவும் பிடிக்குமென கூறியுள்ளார்.

பெரும்பாலும் இறங்கி அடிப்பதற்காக ஏராளமான எல்பிடபில்யூ (LBW) களை பெற்றிருக்கிறார். இருப்பினும் நீண்ட நேரங்களாக களத்தில் நின்று விளையாடும் உடல்திறன் யூனிஸ்கானுக்கு அதிகம் உள்ளது. வலதுகை ஆட்டக்காரரான இவர், தொடக்க வீரராக இறங்காமல் மிடில் ஆர்டரில் விளையாடுவார்.

118 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 10,099 ரன்களைக் கடந்த முதல் மற்றும் ஒரே பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான யூனிஸ் இதுவரை 33 சதங்களையும், 34 அரை சதங்களையும் குவித்துள்ளார். அதிலும் 35 வயதைக் கடந்த பின் அதிக சதங்களை அடித்த கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ராகுல் டிராவிட்டை முறியடித்து பெற்றார். 14 சதங்களை 35 வயதிற்கு மேல் அடித்த யூனிஸ்கானின் தற்போதைய வயது 39.

யூனிஸ் கான்

யூனிஸ்கானின் டாப் 5 மேட்ச்கள் :-

*2000 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான  டெஸ்ட் தொடரில் 107 ரன்களை குவித்தார். ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இரண்டு விக்கெட்டுகளில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் வென்றாலும், இது ஏன் இவருக்கு முக்கியமான போட்டி என்றால் இதுதான் இருபத்தி இரண்டு வயதில்  யூனிஸ்கான் களமிறங்கிய முதல் அறிமுகப் போட்டி!

*2005-ல் பெங்களூரில் நடந்த இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 267 ரன்களைக் குவித்த இவர், 504 பந்துகளை களத்தில் சந்தித்து பாகிஸ்தானின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்தியாவுக்கு எதிரான போட்டிகள் அனைத்திலும் மிகச்சிறப்பான பங்களிப்பை எப்போதுமே வழங்குவதில் யூனிஸ்கான் வல்லவர்.

*2006ல் இங்கிலாந்து உடனான ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 173 ரன்களுடன் களத்தில் இருந்த யூனிஸ்கான் சஜித் முகமது என்ற ப்ளேயரால் ரன் அவுட் ஆனார். பாகிஸ்தான் தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம் இந்த ரன் அவுட் தான். அடுத்தடுத்த இன்னிங்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் சரிவர பங்களிக்காத யூனிஸ் எல்லாவற்றுக்கும் சேர்த்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் நடந்த இங்கிலாந்து உடனான போட்டியில் 127 ரன்களை குவித்து திருப்திப்படுத்திக் கொண்டார்.

*2009-ல் கராச்சியில் நடைபெற்ற  இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 313 ரன்களை குவித்தார் யூனிஸ். இலங்கைக்கும், அவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது. 27 பவுண்டரிகளையும், நான்கு சிக்ஸுகளையும் விளாசிய யூனிஸ்கான் இதுவரை இலங்கைக்கு எதிராக மட்டுமே எட்டு சதங்களை அடித்துள்ளார்.

*அதே இலங்கைக்கு எதிராக 2015 ல் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 171* ரன்கள் எடுத்து தனக்கும் இலங்கைக்கும் உடனான கெமிஸ்ட்ரியை மீண்டும் உறுதிப்படுத்தினார். இது யூனிஸ் கரியரில் முக்கியமான மேட்ச்.

தன் ஓய்வறிவிப்பு உரையில் "இதுவரை நான் தவறு செய்திருப்பதாக நினைத்தால் மன்னித்துவிடுங்கள்" என்று கூறியுள்ள யூனிஸ்கானிடம் நாம் சொல்ல ஒன்று இருக்கிறது

"மிஸ் யூ யூனிஸ் !"

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்