வெளியிடப்பட்ட நேரம்: 17:53 (16/05/2017)

கடைசி தொடர்பு:17:53 (16/05/2017)

ஸ்டோக்ஸ் இல்லை, தாஹீர் இல்லை... மும்பையை வெல்லுமா ஸ்மித் அணி? #MIvsRPSG #MatchPreview

ஐபிஎல் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்னும் நான்கே போட்டிகளில், ஆறே தினங்களில் கோப்பையை முத்தமிடப்போகும் அணி எது என்பது தெரிந்து விடும். சுமார் ஒன்றரை மாத டி20 கிரிக்கெட் திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவடைய இருக்கிறது. புனே, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத் என நான்கு அணிகள் பிளே ஆஃபுக்கு தகுதிப் பெற்றுள்ளன. 

இன்று இரவு எட்டு மணிக்கு நடக்கும் போட்டி குவாலிபயர் 1. இந்த போட்டியில் வெல்லும் அணி நேரடியாக ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும். தோற்கும் அணிக்கு மீண்டும்  இறுதிப்போட்டி செல்ல மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்கும் நடக்கும் இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறப்போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். லீக் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை இரண்டு முறையும் புரட்டி எடுத்தது புனே அணி. இந்த சீசனில் மும்பை அணி 14 போட்டிகளில் நான்கில் மட்டும்தான் தோற்றது. அந்த நான்கில் இரண்டு போட்டிகள் புனே அணிக்கு எதிராக என்பது கவனிக்கத்தக்கது. 

மும்பை Vs புனே

கடந்த வருடம் நடந்த இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை ஜெயித்தன. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 3-1 என வலுவான சாதனையைச் செய்திருக்கிறது புனே. அத்தனை அணிகளையும் கலங்கடிக்கும் மும்பை இந்தியன்ஸ் புனே அணிக்கு எதிராக மட்டும் திணறுவதற்கு காரணங்கள் உண்டு.

ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணிக்கு மிகச் சவாலான அணி சென்னை சூப்பர் கிங்ஸ். மும்பை Vs தோனி என்பது ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆரோக்கியமான போட்டி. மும்பையின் வியூகங்களை முறியடிப்பதில் தோனி வல்லவர். அதே சமயம் இன்னொரு பக்கமும் கவனிக்க வேண்டும். மற்ற அணிகளுடன் எல்லாம் கெத்தாக ஜெயித்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகத்தான் அதிக முறை தோல்வி அடைந்திருக்கிறது. அப்படிப்பார்த்தால் தோனிக்கு வலுவான சவால் அளிக்கக் கூடிய அணி மும்பை என்பது தெளிவு. 

இந்த சீசனில் புனே அணிக்குத் தோனி கேப்டன் கிடையாது. ஸ்டீவன் ஸ்மித் தான் கேப்டன். அவர் தலைமையில்தான் புனே அணி இரண்டு முறையும் மும்பை அணியை வென்றது. புனேயின் அணித்தலைவராக அவர் எடுத்த முடிவுகள் அணிக்குச் சாதகமாக அமைந்தன. எனினும் தோனியின் பங்களிப்பை இதில் மறந்து விடக்கூடாது. இந்த சீசனில் மும்பை வான்கடேவில் நடந்த மும்பை - புனே இடையேயான போட்டியில், மூன்று ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது புனே. அந்த மேட்சில் கடைசி கட்ட ஓவர்களில் தோனியின் வியூகங்களும், அனுபவமும் கேப்டன் ஸ்மித்துக்கு கைகொடுத்தன.

தான் கேப்டனாக இருந்த சமயத்தில் எட்டு முறை பிளேஆஃப் தகுதி பெற்றபோது, ஆறு முறை அணியை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றவர் தோனி. ஆகவே அவரின் அனுபவம் இந்த போட்டியில் மிகமுக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஸ்டீவன் ஸ்மித்தும் இந்த சீசனில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். ஐபிஎல் கோப்பையை வெல்வது என்பது, அவருக்கு சாம்பியன்ஸ் டிராஃபியில் ஆஸ்திரேலியாவை வழிநடத்தும் போது, மனதளவில் பெரும் நம்பிக்கையைத்தரும்.தோனி - ஸ்மித் இணையை இப்போது மும்பை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதே பெரிய கேள்வி. 

மும்பை வான்கடே மைதானத்தைப் பொறுத்தவரையில் அது பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி. இரவு நேரங்களில் லேசான பனிப்பொழிவு இருக்கும் என்பதால், சேஸிங் செய்யும் அணிக்குச் சாதகமான அனுகூலங்கள் உண்டு. எனவே, இந்த போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த சீசனில் மும்பையை முதலில் பேட்டிங் செய்த போதும் சரி, இரண்டாவதாக பேட்டிங் செய்த போதும் சரி புனே அபாரமாக ஆடி தோற்கடித்தது. ஆகவே, மனதளவில் தன்னம்பிக்கையுடன் இப்போட்டியை எதிர்கொள்ளும் புனே.

அதே சமயம், மும்பை அணி புனே அணியை ஜெயித்தே ஆக வேண்டிய லேசான நெருக்கடியில் இருக்கிறது. ஆகவே, அணியில் சில மாற்றங்களை மும்பை அணி மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம். குறிப்பாக நிதிஷ் ராணா, கார்ன் ஷர்மா ஆகியோர் நீக்கப்பட்டு அம்பட்டி ராயுடு, க்ரூனால் பாண்டியா ஆகியோர் களமிறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது. விக்கெட் கீப்பர் பணியைப் பார்த்தீவ் படேல் மேற்கொள்ளக்கூடும். ரோஹித் ஷர்மா இன்றைய தினம் ஒன் டவுன் இடத்தில் களமிறங்கக்கூடும். மெக்லாகன், பும்ரா, மலிங்கா இணை வேகப்பந்து தாக்குதல்களால் புனேவை திணறடிக்கும் என நம்பலாம். பொல்லார்டு மற்றும் ஹர்டிக் பாண்டியா செமத்தியான ஃபார்மில் இருக்கிறார்கள். பஞ்சாப் அணிக்கு எதிராக பொல்லார்டு மிக அபாயகரமான வீரராக ஆடினார். ஹர்டிக் பாண்டியா சமீபத்திய போட்டிகளில் கவலைப்படாமல் சிக்ஸர் விளாசுகிறார்.

மும்பை Vs புனே

புனே அணியில் ஸ்டோக்ஸ், தாஹீர் ஆகியோர் இல்லை என்பதால் பந்துவீச்சு துறை சற்றே வலிமை குறைந்திருக்கிறது. குறிப்பாக தாஹீர் இல்லை என்பது வலது ஆட்டக்காரர்கள் நிறைந்த மும்பை அணிக்குச் சாதகமான அம்சம். ஆகவே, சேஸிங்கில் பேட்ஸ்மேன்களின் திடீர் சொதப்பல்கள் எதுவும் நடக்கவில்லையெனில் மும்பையின் வெற்றியைத் தடுப்பது புனேவுக்குச் சாதாரணமான விஷயம் அல்ல.  

ஸ்டோக்ஸ்க்கு பதிலாக ஃபெர்குசான்  அல்லது உஸ்மான் கவாஜா ஆகியோரில் ஒருவர் இடம்பெறக்கூடும். கவாஜா இந்த சீசனில் இன்னும் ஒரு போட்டி கூட ஆடவில்லை. ஃபெர்குசான் இரண்டு போட்டிகளில் புனே அணிக்காக ஆடினார். பெங்களூருவுக்கு எதிரான ஒரு போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி வெறும் ஏழு ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பவுன்சர் வீசுவதில் வல்லவரான ஃபெர்குசானைத்தான் ஸ்டீவன் ஸ்மித் இந்தப் போட்டிக்கு டிக் அடிப்பார்  எனத் தோன்றுகிறது. ஒருவேளை புனே சேஸிங் செய்ய வேண்டியிருக்கும் பட்சத்தில் கவாஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். டிண்டாவை வைத்துக்கொண்டு ஆரம்பபோட்டிகளில் பவுலிங்கில் சொதப்பிய புனே அணி, அதன் பின்னர் உனத்கட், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் வரவால் பவுலிங்கிலும் கிடுக்கிப்பிடி போடுகிறது. பஞ்சாபை சுருட்டி எறிந்த தன்னம்பிக்கையோடு இந்தப் போட்டியில் புனே பவுலர்கள் களமிறங்குவார்கள். 

இரண்டு அணிகளுமே வலுவானவை என்பதால், இன்று ரசிகர்களுக்கு ஒரு தரமான போட்டி காத்திருக்கிறது. ரோஹித் ஷர்மா ஏற்கெனவே இரண்டு ஐபிஎல் கோப்பைகளைத் தூக்கியவர். இப்போது மூன்றாவது முறையாக கோப்பையை தூக்க ஆவலுடன் இருக்கிறார். மும்பை அவரது மண். சிங்கத்தை அதன் குகையில் ஸ்மித் வீழ்த்துவாரா என்பதை அறிய இன்னும் சில மணி நேரங்கள் காத்திருப்போம்.

ஆடும் லெவன் - கணிப்பு 

புனே  :-

அஜிங்கியா ரஹானே, ராகுல் திரிபாதி, ஸ்டீவன் ஸ்மித், மகேந்திர சிங் தோனி, டேனியல் கிறிஸ்டியன், மனோஜ் திவாரி, ஃபெர்குசான், வாஷிங்டன் சுந்தர், ஆடம் ஜாம்பா, ஜெயதேவ் உனத்கட், ஷர்துல் தாகூர் 

மும்பை இந்தியன்ஸ் : -

லெண்டில் சிம்மன்ஸ், பார்த்தீவ் படேல், ரோஹித் ஷர்மா, அம்பட்டி ராயுடு, பொல்லார்டு, க்ரூனால் பாண்டியா, ஹர்டிக் பாண்டியா, ஹர்பஜன் சிங், மிச்சேல் மெக்லாகன், லசித் மலிங்கா, ஜஸ்ப்ரிட் பும்ரா.

 


டிரெண்டிங் @ விகடன்