புதிய செயல்திட்டம்... இனி எப்படி இருக்கும் இந்திய கால்பந்தின் எதிர்காலம்? | What will be the future of Indian football?

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (16/05/2017)

கடைசி தொடர்பு:13:41 (17/05/2017)

புதிய செயல்திட்டம்... இனி எப்படி இருக்கும் இந்திய கால்பந்தின் எதிர்காலம்?

நான்காவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) சீசனில் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளன இந்திய கால்பந்து சங்கம் மற்றும் ஐ.எம்.ஜி ரிலையன்ஸ். பத்து வாரங்கள் நடக்கும் ஐ.எஸ்.எல் தொடரின் காலத்தையும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, முன்னாள் ஐ-லீக் சாம்பியன் பெங்களூரு எஃப்.சி அணி ஐ.எஸ்.எல் தொடரில் இணைய சம்மதித்துள்ளது. ஈஸ்ட் பெங்கால் அணியும் விரைவில் ஐ.எஸ்.எல் வளையத்துக்குள் வரும். ஏனெனில் மே 22-ம் தேதி இந்திய கால்பந்து சங்கத்துடன் அந்த கிளப் ஒரு சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. மோகன் பகான் கிளப் உடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனால், இந்திய கால்பந்தின் பிரதான லீக் என்ற சொல்லப்படும் ஐ- லீக்கிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஐ- லீக் தொடரில் பங்கேற்கும் அணிகள் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிக்கின்றன. 

இந்தியாவில் கால்பந்தை மேம்படுத்துவதற்கான இந்த டிரான்ஸ்ஃபர்மேஷனில் உள்ள குறை நிறைகள் என்னவென்பதைப் பற்றி ஓர் அலசல்...

கால்பந்து - ஐ.எஸ்.எல் ஃபைனல்

புதிய திட்டம் என்ன? அடுத்த சீசனில் இந்திய கால்பந்து எந்த நிலையில் இருக்கும்? 
அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஐ.எஸ்.எல், ஐ- லீக் ஆகிய இரண்டு தொடர்களும் ஒரே நேரத்தில் தொடங்கி, ஐந்து முதல் ஏழு மாதங்கள் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐ - லீக் சாம்பியனாகும் அணி, ஆசிய கால்பந்து கழகம் நடத்தும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பிளே ஆஃப் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறும். அதே நேரத்தில் ஆசிய கால்பந்து சங்கம் நடத்தும் ஏ.எஃப்.சி கோப்பை தொடரில் ஐ.எஸ்.எல் சாம்பியன் அணியைச் சேர்ப்பதற்கான முயற்சிகளும் நடக்கிறது. அத்துடன் ஐ- லீக், ஐ.எஸ்.எல் என இரண்டு தொடர்களிலும் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே பங்கேற்கும் வகையில்,  ‘சூப்பர்  கப்’ என்ற டோர்னமென்ட்டும் நடத்தப்படும். இது தற்போதுள்ள ஃபெடரேஷன் கோப்பைக்கு மாற்றாக இருக்கும். 

கால்பந்து

ஒரே நாட்டில் ஒரே நேரத்தில் இரண்டு லீக் நடப்பது சாத்தியமா? இதன் சாதக, பாதகம்?
இது வழக்கத்துக்கு மாறான ஒன்றுதான். பிரதான லீக் மற்றும் பிரதான டோர்னமென்ட் என இரண்டு தொடர்கள் மட்டுமே நடத்தப்படும். உலகெங்கிலும் இதுதான் முறை. ஆனால், இந்தியாவில் மட்டும் விதிவிலக்கு. 2014-ல் இந்தியா வந்த சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஜெரோம் வால்கே ‘‘ஐ.எஸ்.எல் தொடரை ஒரு லீக் என்றே நாங்கள் கருதவில்லை. எங்களைப் பொருத்தவரை, இந்தியாவில் ஐ-லீக் என்ற ஒரு லீக் மட்டுமே உள்ளது. ஐ.எஸ்.எல் என்பது இந்தியாவில் கால்பந்தை வளர்ப்பதற்காக உருவான ஒரு டோர்னமென்ட் அவ்வளவே. ஐ.எஸ்.எல் இந்தியா மட்டுமல்ல, இந்தியாவுக்கு வெளியிலும் கவனம் ஈர்க்கிறது. மீண்டும் தெளிவாகச் சொல்கிறேன். ஒரு நாட்டில் இரண்டு லீக் என்பது சாத்தியமல்ல. அது வேலைக்கும் ஆகாது. கால்பந்து சங்கத்தின் கீழ் நடப்பது மட்டுமே லீக். அதாவது ஐ - லீக் மட்டுமே லீக்’’ என்றார். இதை இந்திய கால்பந்து சங்கத்தின் தலைவர் பிரஃபுல் படேலும் ஆமோதித்தார்.  எப்படிப் பார்த்தாலும் ஒரு நாட்டில் இரண்டு லீக் என்பது சிக்கல்தான். 

இந்த மாற்றத்தை ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் ஃபிபா அனுமதிக்கப்போகிறதா?
அப்படித்தான் தெரிகிறது. முன்னாள் ஐ.பி.எல் முதன்மைச் செயல் அதிகாரியும் (CEO) ரிலையன்ஸ் ஸ்போர்ட்ஸ் அமைப்பின் தலைவருமான சுந்தர் ராமன் கடந்த வாரம், பஹ்ரைனில் நடந்த ஃபிபா கூட்டத்தின்போது, ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டேட்டோ விண்ட்சரை சந்தித்தார். இந்த கூட்டத்தில் இந்திய கால்பந்து சங்க செயலாளர் குஷல் தாஸ் பங்கேற்றார். அநேகமாக, இந்தக் கூட்டத்தில் ஐ.எஸ்.எல் தொடரில் கொண்டுவரும் மாற்றத்துக்கு ஆசிய கால்பந்து கூட்டமைப்பு AFC அனுமதி அளித்ததாகவே தெரிகிறது. விரைவில் விண்ட்சர் டெல்லி வந்து, முறையாக அறிவிப்பார் என நம்பப்படுகிறது. 

ஏன் இந்த திடீர் மாற்றம்? 
ஆசிய கால்பந்து சங்கத்துக்கு ஐ.எஸ்.எல் - தொடரை ஒரு லீக் என்று ஏற்க மனமிருக்காது என்றாலும், இந்திய கால்பந்து சங்கத்துக்கு ஆதரவாக இருக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு. இந்திய கால்பந்து சங்கத்துக்கு ஐ.எம்.ஜி - ரிலையன்ஸ் சார்பில் ஆண்டுதோறும் ரூ. 50 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. காரணம் ஐ.எஸ்.எல். சுளையாகக் கிடைக்கும் இவ்வளவு தொகையை இழக்க யாருக்குத்தான் மனம் வரும்? இதுதான் மாற்றத்துக்கு முக்கிய காரணம். படிப்படியாக ஐ - லீக் இனி மதிப்பிழக்கும். 

இந்தக் கட்டமைப்பு, டிரான்ஸ்ஃபர்மேஷன் அவசியமா?
கண்டிப்பாக. தற்போதைய சூழலில் இந்திய கால்பந்து அட்டவணை ஒரு குப்பைமேடாக இருக்கிறது. ஐ- லீக் தொடர் ஜனவரியில் தொடங்கி ஏப்ரல்/மே மாதம் முடிகிறது. அடுத்து விளையாடவே முடியாத வெயில் காலத்தில் தொடங்குகிறது ஃபெடரேஷன் கோப்பை. இது முடிந்ததும் ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் ஐ.எஸ்.எல் சீசன் தொடங்கும். இடைப்பட்ட நேரத்தில் சர்வதேச போட்டிகள் மற்றும் முகாம்கள் நடக்கும். ஐ.எஸ்.எல் நடக்கும் நேரத்தில் சர்வதேச அணிகளுடன் நட்பு ரீதியிலான போட்டிக்கு ஏற்பாடு செய்யக் கூடாது என இந்திய கால்பந்து சங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கப்படும். ஆக, வீரர்கள் ஓய்வில்லாமல் விளையாடிக் கொண்டே இருப்பர். தற்போது இந்தக் கட்டமைப்பை மாற்றுவதன் மூலம், போட்டி அட்டவணையிலும் மாற்றம் ஏற்படும்.

கால்பந்து

ஐ- லீக் கிளப்களின் மனநிலை என்ன?
பெரும்பாலான கிளப்கள் எதிர்காலம் குறித்து அச்சத்தில் உள்ளன. காரணம், நிதி. என்னதான் ஐ- லீக் ப்ரஃபெஷனல் ரீதியிலான தொடராக இருந்தாலும், அதிக வருமானம் கிடைக்கும் ஐ.எஸ்.எல் போட்டிகளுக்குத்தான் வீரர்கள் முக்கியத்துவம் கொடுப்பர். அதேபோல, ஐ.எஸ்.எல் போட்டிகளின் ஒளிபரப்பும் பக்கா. ஐ.பி.எல் போல எல்லா போட்டிகளும் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகின்றன. இதனால் ஸ்பான்ஷர்களைப் பிடிப்பதும் எளிதாகிறது. ஆனால், ஐ - லீக் தொடர் முறையாக விளம்பரப்படுத்தப்படுவதில்லை. அடுத்த சீசனுக்கு ஐ-லீக் போட்டிக்கு யாரும் ஒளிபரப்பு உரிமம் கோரவில்லை. நடப்பதையெல்லாம் ஐ- லீக் கிளப்கள் உன்னிப்பாக கவனித்து வருவதால், கிலியுடன் உள்ளன. இதனால் ஐ-லீக் - ஐ.எஸ்.எல் இணைவதை அவர்கள் எதிர்க்கவும் வாய்ப்பு உள்ளது.

இந்த ஐ.எஸ்.எல் சீசனில் ஐ-லீக் கிளப்கள் விளையாட வாய்ப்பு உள்ளதா?
இந்த சீசனில் பங்கேற்பதற்கு பெங்களூரு எஃப்.சி விண்ணப்பித்துள்ளது. மேற்கு வங்கத்தின் துர்காபூர் மற்றும் சிலிகுரியை மையமாகக் கொண்டு செயல்படும் மோகன் பகான் மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகளும் ஐ.எஸ்.எல் தொடரில் பங்கேற்க முனைப்பு காட்டியுள்ளன. ஈஸ்ட் பெங்கால் அணி, ஐ.எஸ்.எல்-லில் இணைவதன் மூலம் எங்களுக்கு என்ன லாபம் எனக் கேட்டு கால்பந்து சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. 
இந்த இணைவின் மூலம் ஈஸ்ட் பெங்கால் அணிக்குப் பெரும் லாபம். அதேநேரம் கொஞ்சம் இழப்பு. லாபம் என்னவெனில் ஐ-லீக்கை விட ஐ.எஸ்.எல் நன்கு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நீண்ட காலம் இந்தத் தொடர் நடக்கும் எனில் தொடர் இன்னும் மெருகேறும். வெளிநாட்டு வீரர்களின் வருகையும் ஐ.எஸ்.எல் தொடருக்குப் பலம் சேர்த்துள்ளது. ஐ - லீக்கிலும் வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள் என்றாலும், அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை.

இரண்டு லீக் நடத்தும் அளவுக்கு வீரர்கள், மைதானங்கள், ரெஃப்ரிகள் இருக்கிறார்களா? 
ஐ.எஸ்.எல், ஐ- லீக் இரண்டையும் ஒரே கட்டத்தில் நடத்துவதில் உள்ள சிக்கல்களில் முதன்மையானது உரிய நேரத்தில் மைதானம் மற்றும் ரெஃப்ரிகள் கிடைப்பதே. இது கால்பந்து சங்கம் மற்றும் ஐ.எம்.ஜி - ரிலையன்ஸுக்குத் தெரிந்ததே. அதிக வருமானம் கிடைப்பதால் வீரர்கள் அனைவரும் ஐ.எஸ்.எல் தொடரில் பங்கேற்கவே விரும்புவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்