வெளியிடப்பட்ட நேரம்: 03:36 (18/05/2017)

கடைசி தொடர்பு:03:50 (18/05/2017)

மழையால் தாமதமான ஆட்டம் - ஹைதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா! #SRHvsKKR

ஐ.பி.எல் பத்தாவது சீஸன் போட்டிகளின் ப்ளே ஆஃப் சுற்றில்  இரண்டாவது ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் 4-வது இடம் பிடித்த கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், புள்ளிப் பட்டியலில் 3-வது இடம் பிடித்த டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு எட்டு மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இந்தப் போட்டியில் தோற்கும் அணி போட்டியை விட்டு வெளியேறும். முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாக்-அவுட் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா  அணியின் கேப்டன் கௌதம் கம்பீர்  முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய சன் ரைசர்ஸ் அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. கேப்டன் வார்னர் 37 ரன்களும், அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களிலும் ஆட்டமிழக்க இருபது ஓவர்கள் முடிவில் அந்த அணி ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் நாதன் கொல்ட்டர் நைல் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

அடுத்து கொல்கத்தா அணி பேட்டிங் தொடங்குவதற்குள் மழை குறுக்கிட, ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மழை தொடர்ந்துகொண்டே இருந்ததால் ஆட்டம் ரத்து செய்யப்படும் சூழல் நிலவியது. ஒருவேளை ஆட்டம் ரத்தானால் புள்ளிப் பட்டியலில் இரு அணிகளில் முதலில் இருக்கும் ஹைதராபாத் அணி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும். மூன்று மணிநேரம் தொடர்ந்த மழை முடிவடைந்ததும் ஆட்டம் ஆறு ஓவர்களாகக் குறைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. டக்வொர்த் -லீவிஸ் விதிமுறைகளின்படி கொல்கத்தா அணிக்கு 48 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

கொல்கத்தா அணி சார்பில் களமிறங்கிய உத்தப்பா ஒரு ரன்னிலும், க்றிஸ் லின் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். யூசுப் பதான் ரன் ஏதுமின்றி ரன்-அவுட் ஆனார். அந்த அணியின் கேப்டன் கம்பீர் இரண்டு சிக்ஸர்கள் உட்பட 32 ரன்கள் அடித்துக் கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் நின்று அணியின் வெற்றிக்கு வித்திட்டார். முடிவில், கொல்கத்தா அணி 5.2 ஓவர்களில் 48 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ஹைதராபாத் சன் ரைசர்ஸ் தரப்பில் புவனேஷ்வர் குமார், க்றிஸ் ஜோர்டன் இருவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். சிறப்பாகப் பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய கொல்கத்தா அணியின் நாதன் கொலட்டர் நைல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.  

இந்த வெற்றியின் மூலம் மே 19 அன்று மும்பை அணியுடன் குவாலிஃபயர்-2 ஆட்டத்தில் மோத இருக்கிறது கொல்கத்தா. அந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் புனே அணியோடு பலப்பரீட்சை நடத்தும்.  இந்தத் தோல்வியின் மூலம் நடப்பு சாம்பியனான ஹைதராபாத் அணி ப்ளே-ஆஃப் சுற்றில் இருந்து முதல் அணியாக வெளியேறி இருக்கிறது. அடுத்த நாக்-அவுட் மோதலுக்குத் தயாராகும் மும்பை இண்டியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  என இரண்டுமே இதுவரை தலா இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்திடாத பலம் வாய்ந்த அணிகள் அடுத்த ஆட்டத்தில் மோதவிருக்கின்றன. ஆக, அந்தப் போட்டியில் விறுவிறுப்புக்குக் கொஞ்சமும் குறைவிருக்காது. அந்த ஆட்டமும் இதே சின்னசாமி ஸ்டேடியத்தில்தான் நடக்கவிருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்