ஆஸ்திரேலியாவின் ப்ளஸ், மைனஸ் என்ன? - சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? மினி தொடர் | Will Australia Win the champions trophy?

வெளியிடப்பட்ட நேரம்: 14:31 (18/05/2017)

கடைசி தொடர்பு:16:12 (18/05/2017)

ஆஸ்திரேலியாவின் ப்ளஸ், மைனஸ் என்ன? - சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? மினி தொடர்

சாம்பியன்ஸ் டிராபி

ஐபிஎல் பரபரப்புகளே இன்னும் ஓயவில்லை, அதற்குள் சாம்பியன்ஸ் டிராஃபி ஜுரம்  பற்றவைக்கப்பட்டிருக்கிறது. விராட் கோலி  முதல் டிவில்லியர்ஸ் வரை `இந்த முறை  நாங்கதான் சாம்பியன்' எனத் தீர்க்கமாக  நம்புகிறார்கள். எட்டு அணிகளுக்கும்  இந்த ஆசை இருந்தாலும், கோப்பை  ஓர் அணிக்குத்தானே சாத்தியம். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் சாம்பியன்ஸ் டிராஃபியை முத்தமிட, அத்தனை வீரர்களும் துடிக்கிறார்கள். வரும் ஜூன் 18-ம் தேதி கோப்பையை  வெல்லப்போகும் அணி எது, ஒவ்வோர் அணியின் ப்ளஸ் மைனஸ் என்ன, வெற்றி - தோல்வி வாய்ப்பில் இதுவரையிலான வரலாறு  போன்றவற்றை அலசும் மினி தொடர்  இது.

ஆஸ்திரேலியாவின் ப்ளஸ் - மைனஸ்

ஆஸ்திரேலியா

சாம்பியன்ஸ்  டிராஃபி வரலாற்றிலேயே இரண்டு முறை கோப்பையைத் தக்கவைத்த ஒரே அணி, ஆஸ்திரேலியாதான். (2002-ம் ஆண்டில் இலங்கையுடன்  கோப்பையைப் பகிர்ந்துகொண்டதால் இந்தியா சேர்க்கப்படவில்லை)  ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியாதான் மினி உலகக்கோப்பையை இரண்டு முறை வென்றது. 

வருடங்கள்  ஓடிவிட்டன, அப்போதிருந்த ஆஸ்திரேலிய அணியில் ஒரு வீரர்கூட தற்போதுள்ள அணியில் இல்லை. பலருக்கு வயதாகிவிட்டது; சிலர், ஃபார்ம்  அவுட் காரணமாக  ஒதுக்கப்பட்டுவிட்டார்கள். சரி,  இப்போதைய ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா சாம்பியன் ஆகுமா?

அணியின் ப்ளஸ், மைனஸ் குறித்துப் பார்ப்பதற்கு முன்னதாக 1998-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவின் பெர்ஃபாமன்ஸ், சாம்பியன்ஸ் டிராஃபி-யில் எப்படியிருந்தது என்பதைப் பார்ப்போம்.

1998-ம் ஆண்டு  - நாக்அவுட் டிராஃபி:

ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபிக்கு முதலில் இருந்த பெயர், `நாக் அவுட் டிராஃபி'. உலகக்கோப்பையின் முக்கியத்துவத்தைக் குறைக்காதவண்ணம், வருமானத்தைக்  கூட்டுவதற்காக ஐசிசி ஆரம்பித்ததுதான் `நாக் அவுட் டிராஃபி'. அப்போது `வில்ஸ் இன்டர்நேஷனல் கோப்பை' என்று இதற்குப் பெயர். லீக் போட்டிகள் கிடையாது. எல்லாமே நாக் அவுட் போட்டிகள்தான். எட்டு அணிகளில் வெல்லும் நான்கு அணிகள் அரை இறுதிக்குச் செல்லும். வெறும் எட்டு நாள்களில் நடந்த குறுகியத் தொடர் இது. 

1998-ம் ஆண்டு நாக் அவுட் டிராஃபியை நடத்தும் வாய்ப்பைப் பெற்றது வங்கதேசம். நாக் அவுட் சுற்றில் இந்தியாவுடன் மோதியது ஆஸ்திரேலியா. டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. எட்டு ரன்களுக்குள் இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றியது ஆஸி. அதன் பிறகு சச்சின் -  ஜடேஜா அதிரடியில் இந்தியா 307 ரன்கள்  குவித்தது. ஆஸ்திரேலியா மிக அருமையாக இன்னிங்ஸைத் தொடங்கியது. மார்க் வாக் அரை சதம் அடித்தார்.
25 ஓவர்களில் 145/2 என இருந்த ஆஸி., டெண்டுல்கரின் சுழலைச் சமாளிக்க முடியாமல் 48.1 ஓவரின் முடிவில் வெறும் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெல்ல, மறுநாளே மெல்பர்னுக்கு விமானம் ஏறியது.

 

 

 

2000-ம் ஆண்டு - முதல் போட்டியிலேயே அவுட்! 

கென்யா தலைநகர் நைரோபியில் இரண்டாவது நாக் அவுட் டிராஃபி நடந்தது. மொத்தம் 11 அணிகள் கலந்துகொண்ட இந்தத் தொடரில், முதல் ஐந்து இடங்களில் இருந்த அணிகள் நேரடியாக கால் இறுதிக்குத் தகுதிபெற்றன. கால் இறுதிக்கு முந்தைய நாக் அவுட் சுற்றில் மீதி இருந்த ஆறு அணிகள் மோதின. தர வரிசையில் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருந்ததால், நேரடியாகவே கால் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றிருந்தது. 

இந்தியா, கென்யாவை வீழ்த்தி கால் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. ஆஸ்திரேலிய அணி, இந்த முறையும் இந்தியாவை கால் இறுதியில் சந்தித்தது. யுவராஜ் சிங் அதிரடியில் இந்தியா இந்த மேட்சை 20 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது. இரண்டாவது முறையாக கால் இறுதியோடு நடையைக்கட்டியது ஆஸ்திரேலியா. 

 

 

2002-ம் ஆண்டு - நாக் அவுட்டில் காலி:

லீக் சுற்றுகள் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மினி உலகக்கோப்பைத் தொடர் இது. இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த இந்தத் தொடர், இலங்கைக்கு மாற்றப்பட்டது. லீக் சுற்றில் நான்கு பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவிலும் மூன்று அணிகள் இடம்பெற்றிருந்தன. முதல் இடத்தைப் பிடிக்கும் அணி, நேரடியாக அரை இறுதிக்குத் தகுதிபெறும் என்பது விதி. 

குரூப் 1-ல் ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றன. 164 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய ஆஸி., ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தைப் பந்தாடியது. அரை இறுதியில்  இந்த முறை இலங்கையைச் சந்தித்தது. முரளிதரனும் அரவிந்த டி சில்வாவும் ஆஸ்திரேலியாவைப் பாடாய்ப்படுத்தினர். ரன்கள் குவிக்கவே சிரமப்பட்ட ஆஸி., 48.4 ஓவர்களில் வெறும் 162 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. நாற்பதே ஓவர்களில் சேஸிங்கை முடித்து டாட்டா காட்டியது இலங்கை. தொடர்ந்து மூன்றாவது முறையாக நாக் அவுட் சுற்றில் மண்ணைக் கவ்விய சோகத்தோடு சொந்த ஊருக்குத் திரும்பியது ஆஸ்திரேலியா. 

2004-ம் ஆண்டு - அரை இறுதியோடு கரைந்த கனவு:

முந்தைய தொடரைப்போலவே அதே முறையில் போட்டிகள் நடந்தன. இந்தத் தொடர் இங்கிலாந்தில் நடந்தது. ஆஸ்திரேலியா இடம்பெற்றிருந்த பிரிவில் நியூசிலாந்து, அமெரிக்க அணிகள் இருந்தன. நியூசிலாந்தை ஏழு விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸி., அமெரிக்காவுடனான போட்டியை ஒட்டுமொத்தமாகவே வெறும் 31.5 ஓவர்களில் முடித்து, டின்னருக்குச் சென்றது. அரை இறுதியில் இங்கிலாந்திடம் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. தொடர்ந்து நான்காவது முறையாக நாக் அவுட் சுற்றில் வெளியேறியது ஆஸி. 

ஆஸ்திரேலியா

2006-ம் ஆண்டு - தொடரை நடத்திய இந்தியா:

முதன்முதலாக சாம்பியன்ஸ் டிராஃபி இந்திய மண்ணில் நடந்தது. இந்த முறை லீக் சுற்றில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. நான்கு பிரிவுகளுக்குப் பதிலாக இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டன. எட்டு அணிகளுக்கு மட்டுமே அனுமதி. 

ஆஸ்திரேலியாவின் குரூப்பில் இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் இருந்தன. லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றாலும், இந்தியாவையும் இங்கிலாந்தையும் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அடுத்தடுத்து வீழ்த்தி அரை இறுதிக்குத் தகுதிபெற்றது ஆஸி. மொஹாலியில் நடந்த அரை இறுதியில் 240 ரன்களைத் துரத்திய நியூசிலாந்து அணி, 206 ரன்களை மட்டுமே எடுத்தது. முதன்முதலாக மினி உலகக்கோப்பையில் நாக் அவுட் சுற்றில் வென்ற மகிழ்ச்சியில் திளைத்த ஆஸி., இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்டது. 

மும்பையில் நடந்த அந்த மேட்ச் ருசிக்காமலேயே முடிந்தது. வெறும் 138 ரன்களுக்கு  வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட் ஆக, ஆஸ்திரேலியா `எளிதாக வென்றுவிடலாம்' என நினைத்துக் களம்கண்டது. ஆனால், 13/2 என லேசாகத் தடுமாறியது. அதன் பிறகு வாட்சன் - மார்ட்டின் இணை பொறுப்புடன் ஆடி, குழுவைக் கரை சேர்த்தனர். ஆஸி.  சாம்பியன் ஆனது. வாட்சன் `மேன் ஆஃப் தி மேட்ச்'  விருதை வென்றார். மூன்று உலகக்கோப்பைகளை வென்றிருந்தாலும், சாம்பியன்ஸ் டிராஃபியில் சாம்பியன் ஆகவில்லையே என்ற கவலை ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இருந்தது. இந்தத் தொடரில் அவர்கள் வென்ற பிறகு, ஆஸி-யைக் கண்டு அத்தனை அணிகளும் நடுங்க ஆரம்பித்தன. 

ஆஸ்திரேலியா

2009-ம் ஆண்டு - மீண்டும் சாம்பியன்:

2008-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் நடந்திருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. காரணம் பாகிஸ்தான். முதலில் பாகிஸ்தானில்தான் தொடர் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால், அந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இலங்கை வீரர்கள் பாதிக்கப்பட, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் `பாகிஸ்தானில் தொடர் நடந்தால், தொடரைப் புறக்கணிப்போம்' என அறிவித்தன. இதையடுத்து தொடர் ரத்துசெய்யப்பட்டு, 2009-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்தது. 

இரண்டு பிரிவுகளில் இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆகிய அணிகள் இடம்பெற்ற குரூப் 1-ல் ஆஸ்திரேலியாவும் இருந்தது. வெஸ்ட் இண்டீஸை 50 ரன்கள் வித்தியாசத்தில் ஊதித்தள்ளிய ஆஸி., பாகிஸ்தானையும் இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியாவுடனான போட்டி மழையால் ரிசல்ட் கிடைக்கவில்லை. 

அரையிறுதியில் இங்கிலாந்து 258 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்க, ஷேன் வாட்சன் , பாண்டிங் இருவரும் சதம் அடித்து ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸி-யின் வெற்றிக்கு வித்திட்டனர். இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதியது. 201 ரன்கள் எடுத்தால் மீண்டும் சாம்பியன் என்ற இலக்கோடு களமிறங்கிய ஆஸி., வாட்சனின் மீண்டும் ஓர் அட்டகாசமான சதத்தால் 45 ஓவர்களிலேயே மேட்சை முடித்தது. முதல் நான்கு சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இறுதிப்போட்டி வரை உடன் வராத ஆஸி., அடுத்தடுத்து இரண்டு கோப்பைகளை வென்று வரலாறு படைத்தது. இரண்டு உலகக்கோப்பைகள்,  இரண்டு சாம்பியன்ஸ் டிராஃபியுடன் கேப்டன் பாண்டிங் போஸ் கொடுக்க, ஆஸி-யே ஆனந்தக்கூத்தாடியது. 

 

 

2013-ம் ஆண்டு -  சொதப்பல் ஆட்டம்:

இங்கிலாந்தில் நடந்த ஏழாவது சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் ஒரு பிரிவில் இருந்தன. நியூசிலாந்துடனான போட்டி மழையால் கைவிடப்பட, இங்கிலாந்து மற்றும் இலங்கையுடனான போட்டிகளில் மண்ணைக் கவ்வியது ஆஸ்திரேலியா. மூன்று போட்டிகளில் ஒரு வெற்றிகூட கிடைக்காமல் லீக் சுற்றோடு வெளியேறியது ஆஸ்திரேலியா. 

2017-ம் ஆண்டில் என்ன நடக்கும்? 

சாம்பியன்ஸ் டிராஃபியில் சுவாரஸ்யமான ஒரு விஷயம் உண்டு. தர வரிசையில் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 ஆகிய இடங்களில் இருக்கும் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இதுவரை சாம்பியன்ஸ் டிராஃபியில் மோதியதே கிடையாது. இந்த முறையும் ஆஸ்திரேலியாவும் தென் ஆப்பிரிக்காவும் வெவ்வேறு பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன. 

இந்த முறை இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ள பிரிவில் ஆஸ்திரேலியாவும் உள்ளது. இந்த நான்கு அணிகளுமே ஒருநாள் போட்டிகளில் வலுவான அணிகள்தான். குறிப்பாக, வங்கதேசம் சமீபகாலங்களில் மிகப்பெரிய எழுச்சி பெற்றுள்ளது. வங்கதேச அணியுடன் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் மோதப்போகிறது ஆஸ்திரேலியா. தற்போதைய வலுவான வங்கதேசத்தை அவ்வளவு எளிதாக ஆஸ்திரேலிய அணியால் வீழ்த்திவிட முடியாது. வங்கதேச அணி, கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவைத் தவிர அத்தனை அணிகளையும் கடந்த மூன்று ஆண்டுகளில் வீழ்த்தியிருக்கிறது. இந்த முறை ஆஸ்திரேலியாவைத் தோற்கடிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது. எனவே, வங்கதேசம் - ஆஸ்திரேலியா இடையேயான போட்டி, பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

ஆஸ்திரேலியா

2015-ம் ஆண்டு உலகக்கோப்பைத் தோல்விக்குப் பிறகு  மீண்டு வந்து சரமாரியான வெற்றிகளைக் குவித்துவருகிறது  இங்கிலாந்து. நியூசிலாந்து அணி, கணிக்க முடியாத வகையில் ஆடிவருகிறது. ஆகவே, ஆஸ்திரேலியாவுக்கு இந்த முறை பயங்கரமான சவால், லீக் சுற்றிலேயே காத்திருக்கிறது. 2015-ம் ஆண்டில் சொந்த மண்ணில் எளிதாக உலகக்கோப்பையை வென்றதைப்போல இந்த முறையும் கோப்பையைக் கைப்பற்றிவிட முடியாது என்பதே நிதர்சனம்.

சரி, ஆஸ்திரேலிய அணி எப்படி இருக்கிறது? 

பேட்டிங்கைப் பொறுத்தவரை வார்னர், ஃபின்ச், ஸ்டீவன் ஸ்மித் இருக்கிறார்கள். டிராவிஸ் ஹெட் மற்றும் கிறிஸ் லின் ஆகியோர் இப்போது அணியில் இணைந்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர மேக்ஸ்வெல், ஹென்றிக்ஸ் ஆகிய ஆல்ரவுண்டர்களும் பேட்டிங்கில் கலக்குவார்கள். போதாக்குறைக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மாத்யூ வேடு வேறு இருக்கிறார். 

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பலமான பேட்டிங் வரிசைபோலத் தெரிந்தாலும், அனுபவமற்றப் படை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. குறிப்பாக, ஸ்டீவன் ஸ்மித் தவிர எல்லோருமே அதிரடி பேட்ஸ்மேன்கள்தான். சிலர் பின்ச் ஹிட்டர்கள். இங்கிலாந்து மண்ணில், பெளலிங் நன்றாகவே எடுபடும். பெரும்பாலான போட்டிகள் பகல் போட்டிகளாகவே உள்ளன. ஆகவே, முதலில் பேட்டிங் செய்யும் அணி, முதல் பத்து ஓவர்களில் கவனமாக ஆடவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் கலக்கிய லின், மேக்ஸ்வெல், ஹெட் போன்றோர் ஆட்டத்தை எப்படி வெளிப்படுத்தப்போகிறார்கள் என்பதை, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தத் தொடரில் அனுபவம் வாய்ந்த, பொறுப்புடன் ஆடக்கூடிய ஜார்ஜ் பெய்லியை நிச்சயம் மிஸ்செய்யும் ஆஸி. 

ஆஸ்திரேலியா

பேட்டிங்கில் சற்று நிலையற்றத்தன்மை இருந்தாலும், பெளலிங்கில் சற்று  தெம்பாகவே இருக்கிறது. எனினும் ஜாம்பாவைத் தவிர நல்ல சுழற்பந்து வீச்சாளர் அணியில் இல்லை. மிதவேகப்பந்துக்கு மிச்செல் மார்ஷ், ஜேம்ஸ் ஃபால்க்னர் இல்லை. `அவர்களின் இடத்தை யார் சரியாக நிரப்புவார்கள்?' என்ற கேள்வி எழுகிறது.சாம்பியன்ஸ் டிராஃபியில் ஆடப்போகும் ஆஸி. அணி முற்றிலும் புதிது. இந்தப் பதினைந்து பேரிலிருந்து அணிக்குத் தேவையான பதினொரு பேரை எடுப்பது பெரும்சவால். அதே நேரத்தில் இவர்களுக்கு எப்படி வியூகம் வகுப்பது என்பதில் எதிர் அணி திணறும். இது ஆஸி-க்கு சற்றே சாதகமான அம்சம். 

ஆஸ்திரேலியா

ஒருநாள் போட்டிகளில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த வேண்டுமெனில், ஆஸ்திரேலியா கடக்கவேண்டிய தூரம் நிறையவே இருக்கிறது. அதற்கான முதல் அடி, சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பையை மீண்டும் கையில் ஏந்துவதாக இருக்க வேண்டும். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல என்பதே நிதர்சனம். ஏனெனில், அரை இறுதிக்குத் தகுதிபெறுவது என்பதே பெரும் சவால்!

 


டிரெண்டிங் @ விகடன்