வெளியிடப்பட்ட நேரம்: 16:53 (19/05/2017)

கடைசி தொடர்பு:15:03 (24/05/2017)

வங்கதேசத்துக்குக் கோப்பை வெல்லும் திறமை இருக்கிறதா? - சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? மினி தொடர் - 2

சாம்பியன்ஸ் லீக்

இந்தத் தொடரின் முந்தைய பாகங்களைக் காண,
இங்கே க்ளிக் செய்யவும். 

ஆஸ்திரேலியா

வங்கதேசம், நிச்சயம் கவனிக்கப்படவேண்டிய அணி. சமீபகாலங்களில் இதன் எழுச்சி அபாரமானது; ஆச்சர்யமானதும்கூட. சரி, இந்த முறை சாம்பியன்ஸ் டிராஃபியை வங்கதேசம் வென்றுவிடுமா... அதற்கான நேரம் வந்துவிட்டதா? 

வங்கதேசம்

1998-ம் ஆண்டு, முதல் சாம்பியன்ஸ் டிராஃபி நடந்ததே வங்கதேசத்தில்தான். ஆனால், அந்தத் தொடரில் வங்கதேசம் இல்லை. 'இரண்டாவது சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் ஆடலாம். ஆனால், ஒரு சவால். நாக் அவுட் சுற்றுக்குத் தகுதிபெற வேண்டுமெனில், நாக் அவுட் சுற்றுக்கு முந்தைய தகுதிச் சுற்றில் இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும்' என்றது ஐசிசி. அந்தப் போட்டியில் இங்கிலாந்துடன் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது வங்கதேசம். இப்படித்தான் சாம்பியன்ஸ் டிராஃபியில் வங்கதேசத்தின் பயணம் தொடங்கியது. 

2002-ம் ஆண்டு இலங்கையில் நடந்த சாம்பியன்ஸ் டிராஃபிக்கு வங்கதேசம் டெஸ்ட் அந்தஸ்து பெற்றதால் சேர்த்துக்கொள்ளப்பட்டது. நான்கு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகியவை ஒரு குரூப்பில் இருந்தன. ஆஸ்திரேலியாவிடம் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த வங்கதேசம், நியூசிலாந்திடம் வெறும் 77  ரன்களில் சுருண்டு, 167 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது.

2004-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராஃபியில் தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுடன் 'பி' பிரிவில் இடம்பெற்றது வங்கதேசம். தென் ஆப்பிரிக்காவுடனான முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம், வெறும் 93  ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதில் 14 ரன்கள் உதிரிகள் என்பது சுவாரஸ்யமான விஷயம். நான்கு பேர் டக் அவுட் ஆக, ஒன்பது பேர் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனார்கள்.

நஃபீஸ் இக்பால் மட்டுமே 40 ரன்கள் எடுத்தார். நிக்கி போஜே, லாங்வெல்ட், நிதினி  ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள். 17.4 ஓவரில் சேஸிங்கில் மேட்சை முடித்தது தென் ஆப்பிரிக்கா.  வெஸ்ட் இண்டீஸ் உடனான போட்டியும் சோககீதம்தான். 270 ரன்களைத் துரத்தி வெறும் 131 ரன்களில் திருப்திப்பட்டுக்கொண்டு தொடரிலிருந்து வெளியேறியது வங்கதேசம்

2006-ம் ஆண்டு, அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள் இடம்பெற்ற பிரிவில் வங்கதேசத்துக்கு இடம் கிடைத்தது. இலங்கையுடனான முதல் போட்டியில் 303 ரன்களைத் துரத்தியது. வழக்கம்போல விக்கெட்டுகள் வேகமாகச் சரிந்தன. 78/4  என ஸ்கோர் இருந்தபோது `மேட்ச் 130-140 ரன்களில் முடிந்துவிடும்' என நினைத்தது முரளிதரன், மலிங்கா, வாஸ் கூட்டணி. ஆனால், ஷகிப் அல் ஹசன் நங்கூரமாக நின்றார். அவருக்குக் கீழ்வரிசை பேட்ஸ்மேன்கள் பலம் சேர்க்க ஸ்கோர் சீராக உயர ஆரம்பித்தது. எனினும், 50 ஓவர் முடிவில் 265 ரன்களையே வங்கதேசத்தால் எடுக்க முடிந்தது.
ஷகிப் அல் ஹசன் 67 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் நின்றார். சாம்பியன்ஸ் டிராஃபி வரலாற்றிலேயே வங்கதேசத்தின் கெளரமான தோல்வி இதுதான்.

வெஸ்ட் இண்டீஸுடனான இரண்டாவது போட்டியில் பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியது. மூன்றாவது போட்டியில் ஜெய்ப்பூர் மண்ணில் ஜிம்பாப்வேயை எதிர்கொண்டது. ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் தொடக்க வீரர் சஹாரியார்  நஃபீஸ் பொறுப்புடன் சதம் அடிக்க, 50 ஓவர்கள் முடிவில் 231 ரன்கள் குவித்தது. 

ஷகிப் அல் ஹசன், மோர்தாஸா, அப்தூர் ரசாக் அருமையாக பந்து வீச, ஜிம்பாப்வேவை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்கதேசம். ஷகிப் பத்து ஓவர்கள் வீசி வெறும் 18 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து, மூன்று விக்கெட்டுகளை அள்ளினார். சாம்பியன்ஸ் டிராஃபி வரலாற்றில் முதல் வெற்றியும் இந்தத் தொடரில்தான் வங்கதேசத்துக்குக் கிடைத்தது.

2009 , 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்களில் எட்டு அணிகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால், வங்கதேசம் தகுதி பெறவில்லை. இதோ கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் ஆடப்போகிறது வங்கதேசம். வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த முறை சீஸனிலேயே இல்லை. இந்தப் பத்து வருடங்களில் வங்கதேசம்  நல்ல அணியாக உருவெடுத்துள்ளது. இந்த முறை அரை இறுதி வரை செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அந்தக் கனவு நனவாகுமா..? 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் இடம்பெற்றுள்ள 'பி' பிரிவில் உள்ளது வங்கதேசம். ஜூன் 1-ம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியைச் சந்திக்கிறது வங்கதேசம். 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இங்கிலாந்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் தந்தது வங்கதேசம். அந்தப் போட்டியில் மஹமதுல்லா சதம் அடித்தார். அந்தக் காயத்தின் வடு ஆறுவதற்குள், கடந்த ஆண்டு இங்கிலாந்தை மீண்டும் ஒரு போட்டியில் வென்றது. ஆகவே, இங்கிலாந்தை நிச்சயம் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையுடன் ஆடும். இங்கிலாந்துக்கு இருக்கும் சாதகமான  ஒரே அம்சம், சொந்த மண் என்பதுதான். 

2013 - 2014-ம் ஆண்டு சீஸனில் வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் வந்த நியூசிலாந்தை 3-0 என வாஷ்அவுட் செய்திருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் தனது சொந்த மண்ணிலேயே தட்டுத்தடுமாறித்தான் வென்றது நியூசிலாந்து. ஆகவே, இந்த அணியையும் வென்றுவிட முடியும் எனத் திடமான நம்பிக்கை வங்கதேசத்துக்கு உண்டு. 

ஆஸ்திரேலியாவுடன் ஆறு ஆண்டுகளாக மேட்ச் ஆடவில்லை. கடைசியாக, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் நடந்த நாட்வெஸ்ட் கோப்பை முத்தரப்புத் தொடரில்தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது வங்கதேசம். அதன்பிறகு, இன்னமும் அந்த அணியை வீழ்த்தவில்லை. 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இரண்டு அணிகள் மோதவிருந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது.  ஆகவே, ஆஸ்திரேலியாவை வீழ்த்த ஆவலுடன் காத்திருக்கின்றனர் வங்கதேச வீரர்கள். 

பங்களாதேஷ்

வங்கதேச அணி எப்படியிருக்கிறது? 

சாம்பியன்ஸ் டிராஃபிக்குத் தேர்வுசெய்யப்பட்ட 15 வீரர்களில், ஐந்து பேட்ஸ்மேன்கள், நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், மூன்று ஆல்ரவுண்டர்கள், ஒரு விக்கெட் கீப்பர் எனப் பக்காவாக டீமைத் தேர்தெடுத்திருக்கிறது.  தமீம், கயஸ், சவுமியா சர்க்கார், மஹமதுல்லா, சபீர் ரஹ்மான் ஆகிய பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். மோர்தாசா, ஷகிப், மொசாதக் ஹொசைன் என நல்ல ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முஷிபிகுர் ரஹீமும் அணிக்கு பலம் சேர்ப்பார். சுன்ஜாமுல் இஸ்லாம், மெஹந்தி ஹாசன் சுழற்பந்து துறையைப் பார்த்துக்கொள்வார்கள். ஷபிபுல் இஸ்லாம், டஸ்கின் அகமது, ரூபெல் ஹுசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான் என வலுவான வேகப்பந்து துறையும் இருக்கிறது. 

எதிர்பார்க்கப்படும் பிளெயிங் லெவன்:

தமீம் இக்பால், சவுமியா சர்க்கார், இம்ரூல் கயஸ், மஹமதுல்லா, முஷ்பிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், மெஹந்தி ஹசன், முஷ்ரபே மோர்தாசா, தஸ்கின் அகமது, ரூபெல் ஹுசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான். 

 

வங்கதேசம்

வங்கதேசத்தின் ஒரே பிரச்னை நிலையற்ற ஆட்டம்தான். வெற்றிபெறவேண்டிய கடைசி நேரத்தில் ஆர்வக்கோளாறின் காரணமாக, அபத்தமான சில தவறுகளைச் செய்வார்கள். வெற்றிக்கு அருகில் வந்து கோட்டைவிட்டுவிடும் அணி என்ற அவப்பெயரைத் தவிர்க்க, இந்தத் தொடர் ஓர் அரிய வாய்ப்பு. சற்று பொறுப்பாக ஆடினால், வங்கதேசம் அரை இறுதி வரைகூட வர முடியும். `பி' பிரிவில் நிச்சயம் எந்த இரண்டு அணிகள் அரை இறுதிக்குச் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் வங்கதேசத்துக்கு இந்த முறை அதிக பங்கு இருக்கும். கிரிக்கெட் உலகில் கோப்பைகளை வெல்ல, ஓடவேண்டிய தருணம் வந்துவிட்டது. ஆமை வேகமா, புலிப்பாய்ச்சலா என்பதை முடிவுசெய்யவேண்டியது வங்கதேச வீரர்கள்தான்.