வெளியிடப்பட்ட நேரம்: 01:12 (22/05/2017)

கடைசி தொடர்பு:05:18 (23/05/2017)

ஐ.பி.எல் ஃபைனல்... பரபரப்பான கடைசி ஓவர்... என்னதான் நடந்தது? 

ஐ.பி.எல் டி20 சீசன் 10 இறுதிப்போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணியை, மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 

ஐபிஎல்


ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், பேட்டிங்குக்கு சாதமாக ஹைதராபாத் பிட்ச் இருக்கும் என கணிக்கப்பட்டதால் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் புனே அணியின் சிறப்பான பந்துவீச்சினால் மும்பை அணியை 129 ரன்களுக்குள் சுருட்டியது. 

இந்த நிலையில் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கினை நோக்கி ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் திரிபாதி களமிறங்கினர். திரிபாதி 6 ரன்களில் ஆட்டமிழந்த போதிலும் ரஹானே அதிரடியாக ஆடி 44 ரன்களை குவித்தார். தோனி 10 ரன்களிலும், மனோஜ் திவாரி 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். எனினும் புனே அணியின் கேப்டன் ஸ்மித் நிதானமாக ஆடி வந்தார். இருப்பினும் இக்கட்டான கடைசி ஓவரில் புனே 128 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. 

கடைசி ஓவர்! 

6 பந்துகளுக்கு 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் மனோஜ் திவாரி மற்றும் ஸ்மித் இருந்தனர். டி20 தொடரில் இது எளிதாகத் தோன்றினாலும், மும்பையின் பந்துவீச்சு பெரும் சவாலாகவே இருந்தது. மும்பை இந்தியன்ஸ் சார்பில் 20-வது ஓவரை மிட்சல் ஜான்சன் வீசினார். அபாரமாக விளையாடிய திவாரி முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால், 2-வது பந்தில் திவாரி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். எதிர் முனையில் களத்தில் இருந்த ஸ்மித், கேட்ச் பிடிக்கும் முன் திவாரியை கடந்து விட்டதால், ஸ்மித் அடுத்த பந்தை எதிர்கொண்டார். ஆனால், 3-வது பந்தில் 51 ரன்கள் எடுத்து இருந்த ஸ்மித் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3 பந்துகளில் 7 ரன்கள் என்ற இக்கட்டான நிலையில் இடது கை ஆட்டக்காரரான வாஷிங்க்டன் சுந்தர் களமிறங்கினார். அவர் எதிர்கொண்ட 4-வது பந்து பேட்டில் படவில்லை. எனினும் ரன் எடுக்க எதிர்முனையில் நின்று கொண்டிருந்த க்றிஸ்டியன் ஆட வந்தார். 

5-வது பந்தை அடித்து ஆடிய க்றிஸ்டியனின் கடினமான கேட்ச் ஒன்றை ஹர்திக் பாண்டிய தவறவிட்டார். இந்தப் பந்தில் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மீண்டும் களத்தில் க்றிஸ்டியனும், எதிர் முனையில் சுந்தரும் இருந்தனர். கடைசி பந்தை ஜான்சன் வீச, அந்தப் பந்தை க்றிஸ்டியன் ஸ்கொயர் லெக் பகுதிக்கு விரட்டி 2 ரன்கள் ஓடிய க்றிஸ்டியன், 3 வது ரன் எடுக்கும்போது சுசித் வீசிய த்ரோவில் ரன் அவுட் ஆனார். இறுதியில் 128 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த புனே அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.