வெளியிடப்பட்ட நேரம்: 02:49 (22/05/2017)

கடைசி தொடர்பு:11:36 (22/05/2017)

ஐபிஎல் 2017: யார் யாருக்கு என்னென்ன விருது? 

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி திரில் வெற்றி அடைந்து, மூன்றாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது.

ஐபிஎல்


ரைசிங் புனே சூப்பர்ஜெயின்ட்ஸ் உடனான இறுதிப் போட்டியில் 38 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்ட்ரி உடன் 47 ரன்கள் விளாசிய மும்பை அணியின் க்ருனல் பாண்டியாவுக்கு ஆட்ட நாயகன் விருதும், 12 போட்டிகளில் 12 வீக்கெட்டை வீழ்த்திய புனே அணியின் பென் ஸ்டோக்ஸ்-க்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது. 

ஐபிஎல் 10-வது தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், இரண்டாவது இடம் பிடித்த ரைசிங் புனே சூப்பர்ஜெயின்ட்ஸ் அணிக்கு 10 கோடி ரூபாய்களுக்கான காசோலை வழங்கப்பட்டது. இந்த தொடரில் 7-வது இடம் பிடித்தாலும், மிகவும் கண்ணியத்தோடு விளையாடிய அணிக்கு வழங்கப்படும் ஃபேர் பிளே விருது இந்த ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு வழங்கப்பட்டது. 

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியில் 641 ரன்கள் விளாசிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னருக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்பட்டது. இதேபோல, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தும் பந்து வீச்சாளருக்கு ஊதா நிற தொப்பி வழங்கி அலங்கரிப்பது வழக்கம்.

ஊதா நிற தொப்பியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த வேகப் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு வழங்கப்பட்டது. இவர் இந்த தொடரில் மட்டும் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சென்ற ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் 9-வது தொடரிலும் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 23 விக்கெட்களுடன் ஊதா நிற தொப்பியை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த சீசனில், சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மிக விரைவாக 15 பந்துகளில் 50 ரன்களை எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த சுனில் நரேனுக்கு, மிக விரைவாக 50 ரன்களை குவித்ததற்கான விருது வழங்கப்பட்டது. ஐபிஎல் 10-வது தொடரில் அதிக சிக்சர் அடித்ததற்காக, அதிக சிக்சர் விருது, பஞ்சாப் அணியின் க்ளென் மாக்ஸ்வெலுக்கு வழங்கப்பட்டது. மிகவும் மதிப்புமிக்க வீரர் விருது ரைசிங் புனே அணியின் பென் ஸ்டோக்ஸ்-க்கும், குஜராத் லயன்ஸ் அணியைச் சேர்ந்த பசில் தம்பிக்கு வளர்ந்து வரும் வீரருக்கான விருதும் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.


டிரெண்டிங் @ விகடன்