வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (22/05/2017)

கடைசி தொடர்பு:11:34 (22/05/2017)

4 நாடுகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன்!

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய மகளிர் அணி கோப்பையைக் கைப்பற்றியது.

பெண்கள் கிரிக்கெட்

இந்தியா, தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்தப் போட்டித் தொடரின் பைனலில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றியது. மே 4-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில், தொடக்கத்திலிருந்தே இந்திய அணி ஆதிக்கம் செலுத்திவந்தது.

நான்கு நாடுகளுடன் இணைந்து லீக் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி, 24 புள்ளிகள் பெற்று ஃபைனலுக்கு முன்னேறியது. இந்த இறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடக் களமிறங்கிய இந்திய அணி, முதலில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங்செய்த தென்னாப்பிரிக்கா, 40.2 ஓவரில் 156 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 

அடுத்ததாகக் களமிறங்கிய இந்திய அணி, 33 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து, கோப்பையைத் தட்டிச்சென்றது. இறுதியில், தொடரின் சிறந்த வீராங்கனையாக தீப்தி ஷர்மா தேர்வுபெற்றார். ஆட்ட நாயகியாக பூனம் ராவத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தத் தென்னாப்பிரிக்கத் தொடரில், நேற்று நடந்த போட்டியில் களமிறங்கிய இந்தியக் கேப்டன் மிதாலி ராஜ், தனது 100-வது ஒரு நாள் போட்டியில் விளையாடி, புதிய சாதனை படைத்தார். சர்வதேச அளவில் இந்தச் சாதனையைப் புரியும் மூன்றாவது வீராங்கனையாவார், மிதாலி ராஜ்.