மும்பைதான் சாம்பியன்... அட... முன்பே கணித்த விகடன் வாசகர்கள்! #VikatanSurveyResult

பத்தாவது ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும்போது விகடன் இணையதளத்தில் 2017 ஐ.பி.எல் சாம்பியன் யார் என ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதில் விகடன் வாசகர்கள் பல விஷயங்களைச் சரியாக கணித்துள்ளனர். 

சர்வேயின் முடிவுகள் வெளியிடப்பட்ட லிங்க் இங்கே.

ஐபிஎல் 2017 சீசனில் எந்த அணி சாம்பியன் ஆகும் என்பது தான் முதல் கேள்வி. அந்தக் கேள்விக்கு ரசிகர்களின் ஏகோபித்த ஓட்டு விழுந்தது மும்பை அணிக்குத்தான். பொதுவாக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி என்றால் கசக்கும். ஏனெனில் அந்த அணியை அதிக முறை தோற்கடித்த பெருமை மும்பைக்கு உண்டு. இப்படியொரு சூழ்நிலையில் மும்பைக்கு அதிக வாக்குகள் தமிழக கிரிக்கெட்  ரசிகர்களிடமிருந்து வந்தது ஆச்சர்யமாகவே இருந்தது. ஆனால் விகடன் வாசகர்களின் கணிப்பு மிகச்சரியானது என்பதை நேற்றைய முடிவுகள் உலகுக்குச் சொல்லின. கடந்த சீசனில் பிளே ஆஃபுக்கு கூடத் தகுதி பெறாத மும்பை அணியை இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் முன்னரே, இவர்கள்தான் சாம்பியன் என வாசகர்கள் கணித்தது அபாரம். 

ஐபிஎல் சாம்பியன் யார்? சர்வே

எந்தெந்த அணி பிளே ஆஃபுக்கு தகுதி பெறும் என மற்றொரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்விக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிகப்படியான வாக்குகளும், அடுத்தபடியாக பெங்களூரு அணிக்கு அதிக வாக்குகளும் குவிந்தன. இரண்டு அணிகளுக்கும் 18% வாக்குகள் கிடைத்திருந்தாலும், பெங்களூரை விட மும்பைக்கு இரண்டு வாக்குகள் கூடுதலாகக் கிடைத்திருந்தன. இந்த இரண்டு அணிகளுக்கு அடுத்தபடியாக கொல்கத்தா அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் அதிக வாக்குகள் கிடைத்தன. வாசகர்கள் கணித்ததில் மூன்று அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. விகடன் சர்வே

யார் ஆரஞ்ச் கேப் வாங்குவார்கள், யார் பர்ப்பிள் கேப் வாங்குவார்கள் என்பது குறித்த கேள்விக்கு சர்வேயில் ஆப்ஷன் தரவில்லை. யார் என எழுதுமாறு சொல்லியிருந்தோம். அதில் ரெய்னாவுக்கு அடுத்தடுபடியாக வாசகர்கள் குறிப்பிட்டிருந்த பெயர் டேவிட் வார்னர். ஆம், அவர்தான் இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்.

பவுலர்களில் யார் அதிக விக்கெட் வீழ்த்துவார் என்ற கேள்விக்கு நான்கு பேரை அநேகம் பேர் குறிப்பிட்டிருந்தனர். டுவைன் பிராவோ, ஆஷிஷ் நெஹ்ரா, ஆடம் ஜாம்பா, புவனேஷ்வர் குமார். இதில் பிராவோ தொடரில் ஆடவில்லை. நெஹ்ரா காயம் காரணமாக பாதிக்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆடம் ஜாம்பாவுக்கு பெரும்பாலான போட்டிகளில் இம்ரான் தாஹீரை காரணம் காட்டி அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. புவனேஷ்வர் குமார்தான் ஐதராபாத் அணிக்கு எல்லா போட்டிகளிலும் ஆடினார். அவர்தான் இந்த சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவர். 2016 சீசனிலும் புவனேஷ்வர் குமார் தான் பர்ப்பிள் கேப் ஜெயித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல கேள்விகளில் விகடன் வாசகர்களின் கணிப்பு நிஜமானது. அதே சமயம் இரண்டு கேள்விகளுக்கு விகடன் வாசகர்களின் கணிப்பு பொய்த்துப்போனது. 

பெங்களூரு நிச்சயம் கடைசி இடம்பிடிக்காது என உறுதியாக நம்பினார்கள். ஆனால் அந்த அணிதான் கடைசி இடம்பிடித்தது. எல்லா கேள்விகளிலும் குஜராத் அணி மீது கணிசமான ஆதரவுகள் இருந்தன. ஆனால் அந்த அணி சோபிக்க வில்லை. 

சர்வேயில் பங்கெடுத்த வாசகர்களுக்கு நன்றி. சரியாக கணித்துச் சொன்ன வாசகர்களுக்கு வாழ்த்துகள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!