"டாப் 10க்குள் வரணும்!"  ரைடி ஹிமாலியா ஸ்டார் சாரா காஷ்யப் | 'I want to be in top 10 ranking!" says Raid de Himalaya star Sarah Kashyap

வெளியிடப்பட்ட நேரம்: 18:13 (22/05/2017)

கடைசி தொடர்பு:18:12 (22/05/2017)

"டாப் 10க்குள் வரணும்!"  ரைடி ஹிமாலியா ஸ்டார் சாரா காஷ்யப்

 சாரா காஷ்யப்

“மறுபடியும் இமாலய ரேஸிங்குக்குத் தயாராகிட்டிருக்கேன். அடுத்து, நேஷனல் சாம்பியன்ஷிப், டெசர்ட் ஸ்டார்ம் ரேஸிங் (Desert Storm Racing) என என்னோட பைக்கின் பாதங்கள் தொட இருக்கும் இடங்கள் நிறைய இருக்கு'' - தான் பங்குபெற இருக்கும் ரேஸிங் போட்டிகளை மின்னல் வேகத்தில் பட்டியலிடுகிறார், சாரா காஷ்யப். இந்தியாவின் மிகவும் கடினமான பைக் போட்டிகளான ரைடி ஹிமாலியா, டெசர்ட் ஸ்டார்ம் ரேஸிங் ஆகியவற்றில் கலந்துகொண்டு, வெற்றிகரமாகச் சாதித்த முதல் பெண் பைக் ரேஸர். 

5 அடி 1 இன்ச் உயரம் உடைய சாரா காஷ்யப் ஓட்டும் பைக்கைவிட பாதி எடைதான் இருப்பார். இரண்டு வருடங்களுக்கு முன்பு, இமாலய மலையடிவாரத்தின் கரடுமுரடான பாதையில், இடைவிடாமல் தொடர்ந்து ஆறு நாள்கள், பைக் ஓட்டி சாதனை நிகழ்த்தி இருக்கிறார். ”நீயெல்லாம் பைக் ஓட்டி என்ன சாதிக்கப்போகிறாய்” எனக் கேட்டவர்களுக்குத் தனது வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார். தான் கடந்துவந்த பைக் பாதையைப் பற்றி விவரிக்கிறார். 

சாரா காஷ்யப்“எனக்குச் சொந்த ஊர் சண்டிகர். அப்பாகிட்டே சைக்கிள் ஓட்ட பழகின எனக்கு, அண்ணன் பைக் ஓட்ட கத்துக்கொடுத்தார். 19 வயசுலேயே எனக்குனு ஒரு பைக் வாங்கும் ஆசை மனசு முழுக்க இருந்துச்சு. என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் மேக்-அப், டிரஸ், புக்ஸ்னு செலவு பண்ணிட்டு இருந்தப்போ, நான் பைக் வாங்கறதுக்காகக் கொஞ்சம் கொஞ்சமா பணம் சேர்த்தேன். அப்படிச் சேர்த்த பணத்தில் நான் வாங்கின முதல் வண்டி, ஸ்ப்ளண்டர்'' என்கிறார் உற்சாகமாக. 

உலகிலேயே மிகவும் கடினமான பைக் ரேஸிங் பந்தயங்களில் முதன்மையானது, தென் அமெரிக்காவில் பதினாறு நாள்கள் நடைபெறும் 'டக்கர்' என்கிற பைக் ரேஸிங். அதற்கு அடுத்தது, 'ரைடு டி இமாலயா’ (Raid de Himalaya). மிகவும் சவாலான அந்தப் போட்டியில் பங்குபெற்ற அனுபவத்தைச் சொல்கிறார் சாரா. 

”இதுல கலந்துக்க உடலின் மேல் பகுதிக்கு நிறைய பலம் தேவை. நாள் முழுக்க ஓட்டிக்கிட்டே இருக்கணும். தொடர்ந்து ஆறு நாள்கள், ஆண்களை முந்திக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தேன். ஆனால், ஆறாவது நாள் முடிவில், கண்ட்ரோல் இல்லாமல் கீழே விழுந்துட்டேன். கையில் எலும்பு முறிவு. ஆனாலும் ஒரு மணி நேரம் அந்த எலும்பு முறிவுடனே வண்டி ஓட்டினேன்” என்று த்ரில் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் இந்தப் புயல் பெண்மணி. 

பைக் ரேஸிங்கில் மற்றொரு சவால் போட்டி, ’டெசர்ட் ஸ்டார்ம்’ என்கிற பாலைவனத்தில் பயணம் செய்யும் போட்டி. கொஞ்சம் அசந்தாலும் குப்புற கவிழ்த்துவிடும். “ரொம்ப ரொம்ப சவாலான இந்தப் பந்தயத்தில் கலந்துக்கிறதுக்கு முன்னாடி, ராணுவப் படை வீரர்களிடம் ஒரு பாலைவனத்தின் வானிலை எப்படி இருக்கும்? அதை எப்படிச் சமாளிக்கிறதுனு கேட்டுத் தெரிஞ்கிட்டேன். நெருப்பை அள்ளிக் கொட்டின மாதிரியான வெயிலைத் தாக்குப்பிடிச்சு மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டினேன். இந்த ஸ்பீட் ரேட்டை இன்னும் உயர்த்த முயற்சி பண்ணிட்டு இருக்கேன்'' என்கிறார் கூலாக. 

இதுபோன்ற போட்டிகளில் கலந்துகொள்ள பெண்களுக்கு ’ஸ்பான்ஸர்’ எளிதில் கிடைப்பதில்லை. ''ஒரு போட்டியில் கலந்துக்க, இரண்டு முதல் மூன்று லட்சம் செலவாகும். பல தடவை என் சொந்தச் செலவுலதான் போட்டியில் கலந்துகிட்டேன். இப்போதைக்கு ராயல் என்ஃபீல்டு எனக்கு ஸ்பான்சரா இருக்கு. சென்னையில் இரண்டு வருஷம் அந்த நிறுவனத்தின் மேனேஜரா இருந்தேன். அப்போ, திருவான்மியூரிலிருந்து திருவொற்றியூருக்குப் பைக்ல போவேன். ஆனால், வேகம் நாற்பது தாண்டாது” என்று சிரிக்கிறார் சாரா. 

”என் அம்மாவுக்குச் சைக்கிள்கூட ஓட்டத் தெரியாது. நான் முதன்முதல்ல, பைக் ரேஸ் போறதாச் சொன்னதும் ரொம்ப பயந்தாங்க. அவங்களுக்குப் பிடிக்கவே இல்லை. நல்லா ரேஸிங் பண்றேன்னு பேர் வாங்கினதுக்கு அப்புறம்தான் சப்போர்ட் பண்ணினாங்க. எனக்கு இரண்டே இரண்டு ஆசைதான். ரேஸ்ஸிங் தரவரிசையில் டாப் டென்னில் வரணும். பெண்களுக்காக பிரத்யேகமான பைக் ரேஸிங் அகாடமி ஒன்றை அமைக்கணும்'' என்று அவர் சண்டிகரில் கிளப்பும் பைக்கின் 'விர்ரூரூம்' சத்தம், சென்னை வரை கேட்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்