வெளியிடப்பட்ட நேரம்: 20:47 (22/05/2017)

கடைசி தொடர்பு:07:07 (23/05/2017)

மும்பை இந்தியன்ஸ் வெற்றியை அடுத்து சச்சின் புகழ்ந்தது யாரைத் தெரியுமா?

கிரிக்கெட் உலகின் ஜாம்பவனாக திகழ்ந்த லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் முதல் ஐபிஎல் போட்டியின்போது மும்பை அணியின் கேப்டனாக இருந்தார். பின்னர் கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றதால், கடந்த சில சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பை ரோகித் ஷர்மா ஏற்றார். இருப்பினும் தொடர்ச்சியாக மும்பை இந்தியன்ஸ் அணியை மெருகேற்றுவதில் துணையாக இருந்தார் சச்சின். இந்நிலையில், ஐபிஎல் 10-வது சீசனின் இறுதிப் போட்டியில் புனே அணியை வீழ்த்தி, மூன்றாவது முறையாக சாம்பியனானது மும்பை. இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற பிறகு, மும்பை அணியின் முக்கிய புள்ளிகளிடம் பேட்டி எடுக்கப்பட்டது. சச்சின் புகழ்ந்து தள்ளிய நபர்தான் அனைவருக்கும் செம்ம சர்ப்ரைஸ்.

நேற்றிரவு கோப்பையை மும்பை அணி கைப்பற்றியபிறகு சச்சின், 'இந்த வெற்றி மிகவும் திருப்தி அளிக்கிறது. ஆட்டத்தின் முதல் பகுதி எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. ஆனால், போட்டியின் இடைவெளியின்போது நாங்கள் அனைவரும் வீரர்களுடன் ஒன்று கூடி பேசினோம். அப்போது மஹிளா ஜெயவர்த்தனே மிகவும் அருமையான ஒரு உரையை வீரர்கள் முன்னிலையில் நிகழ்த்தினார். அவர் பேசிய பிறகு ஆட்டத்தை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை வந்தது.

இறுதிப் போட்டி என்ற அழுத்தத்தின் போதும் எங்கள் ஃபீல்டிங் மிக அசத்தலாக இருந்தது. நான் அடிக்கடி கூறும் கூற்று ஒன்றிருக்கிறது. ஒருமுறை சாம்பியன் என்றால், எப்போதும் சாம்பியன்தான். கடந்த பல ஆண்டுகளாக மும்பை அணிக்காக மலிங்கா மிக நன்றாக ஆடி வருகிறார். அவர் இறுதிப் போட்டியில் மிகவும் சூப்பராக பந்து வீசுவார் என்று நினைத்தோம். அவருக்கு இந்த இந்த சீசன் சிறந்ததாக அமையவில்லை. ஆனால் அவர் அதிலிருந்து மீண்டு வந்து கலக்குவார் என்று தெரியும். ஒரே ஓவரில் ஆட்டத்தின் போக்கை தலைகீழாக மாற்றும் திறன் அவருக்கு இருக்கிறது' என்று மலிங்காவுக்கு புகழாரம் சூட்டினார்.

நேற்றைய ஃபைனலில் மலிங்கா, நான்கு ஓவர் பந்துவீசி ஒரு விக்கெட்டையும் எடுக்கவில்லை என்றாலும் வெறும் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து புனே அணி பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் நெருக்கடியை உருவாக்கினார்.