வெளியிடப்பட்ட நேரம்: 20:27 (22/05/2017)

கடைசி தொடர்பு:20:45 (22/05/2017)

டி20-ல் விராட் கோலியை விட ரோஹித் சர்மா பெஸ்ட் கேப்டன்... ஏன்... எப்படி?

ரோஹித்

இந்தியாவின் டி20 கேப்டன் விராட் கோலியை விடவும் மூன்று முறை ஐ.பி.எல் கோப்பையைப் கைப்பற்றிய ரோஹித் ஷர்மா பெஸ்ட் கேப்டனா என்ற கேள்வி எழுந்துள்ளது. கோலி, ரோஹித் இருவரில் டி20க்கு யார் பெஸ்ட் கேப்டன் என்பதை பார்ப்போம்.

கேப்டனாக யார் பெஸ்ட்:

2013 ஆம் ஆண்டுதான் மும்பை அணியின் அதிகாரபூர்வ கேப்டனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்படுகிறார். அதிலிருந்து ஐந்து ஆண்டுகள் அணியை வழிநடத்துகிறார். கோலி அவருக்கு முன்பாகவே பெங்களூரு அணிக்கு கேப்டனாக்கப்பட்டாலும் ரோஹித் ஷர்மா கேப்டனாக இருந்த இந்த ஐந்து வருடங்களை மட்டும் ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்வோம்.

இந்த ஐந்து ஆண்டுகளில் மும்பை  அணியை ரோஹித் ஷர்மா 4 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வைத்துள்ளார். மேலும் 3 முறை அந்த அணியை சாம்பியனாக்கியுள்ளார். முதல் முறை கேப்டன் பதவி வழங்கப்பட்டபோதே அணிக்கு கோப்பையை வென்று தந்தார். தற்போது ஐ.பி.எல் கோப்பையை அதிக முறை வென்ற கேப்டன் இவர் தான். ஆனால் கோலியோ இந்த ஐந்து ஆண்டுகளில் 2 முறை தான் அணியை ப்ளே ஆஃப் சுற்றுக்கு அழைத்து சென்றுள்ளார். அதிலும் ஒரு முறை தான் ஃபைனல். அதிலும் தோல்வி. 2017ஆம் ஆண்டில் 8-வது இடத்தில் அணியை வைத்துள்ளார்.

அணியின் வெற்றி தோல்விக்கு கேப்டன் முழு  பொறுப்பல்ல என்றாலும், அணியை வழிநடத்துவதிலும், சீனியர் வீரர்களை பயன்படுத்துவதிலும் கோலியை ஓவர் டேக் செய்கிறார் ரோஹித். 

தனிப்பட்ட முறையில் பார்த்தால் இருவரும் 3000க்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளனர். ரோஹித் ஷர்மா சராசரியாக 400 ரன்களை ஆண்டுதோறும் குவித்துள்ளார். கோலியும் இதே சராசரி தான். ஆனால் 2016ஆம் ஆண்டில் கோலியின் விஸ்வரூபம் அவரை பேட்ஸ்மேனாக ரோஹித்தைவிட முன்னிலை பெற வைக்கிறது.

இந்த ஐந்து வருடங்களில் 72 லீக் மேட்ச்களை இரு அணிகளும் ஆடியுள்ளன. அதில் 32ல் கோலி அணியும், 43ல் ரோஹித் அணியும்  வென்றுள்ளன. ரோஹித் தன் தலைமையின் கீழ் 60 சதவிகித வெற்றியையும், கோலி தன் தலைமையின் கீழ் 44 சதவிகித வெற்றியையும் பதிவு செய்துள்ளனர். 

loading..
loading..
 

 

 

 

இதே ப்ளே ஆஃப் சுற்றுகளை எடுத்துக்கொண்டால் ரோஹித் தலைமையேற்று  ஐந்து வருடங்களில் நான்கு ஆண்டுகள் ப்ளே ஆஃப் சுற்றில் ஆடியது மும்பை . அதில் 6 வெற்றி மூன்று தோல்விகள் என 3 முறை சாம்பியன் ஆனது. அதே சமயம் கோலி தலைமையிலான அணி 2 முறை தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது. அதிலும் 2 தோல்வி, இரண்டு வெற்றி பெற்றுள்ளது. அந்த இரண்டு வெற்றியும் க்வாலிஃபயர் சுற்றில் கிடைத்தது. இறுதிப் போட்டியில் வெற்றி அடையவில்லை  

குறிப்பு :- லீக் போட்டிகள் வரையிலான புள்ளவிவரங்கள்

 

ப்ளே ஆஃப்

 

 

 

கோலி vs ரோஹித்

கோலியின் பாசிட்டிவ் என்று பார்த்தால் ஒற்றை ஆளாக அணியை அவரால் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்ல முடியும். 8-வது இடம் பிடித்த இந்த வருடமும்கூட 4 அரைசதங்களுடன் அணியின் டாப் ஸ்கோரராக இருக்கிறார். அதேசமயம் மைனஸ் என்னவென்றால் கோலியால் பெரிய வீரர்களை வைத்துக்கொண்டு அணியை வழிநடத்த முடியவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. 

ரோஹித், அணியில் ஜான்ஸன், மலிங்கா, பொலார்ட், ஹர்பஜன் உள்ளிட்ட அனுபவமிக்க வீரர்களை எளிதாக கையாளுகிறார். பேட்டிங் சுமார்தான் என்றாலும் சரியான நேரத்தில் கைகொடுக்கிறார். ஆனால் மைனஸ், ஒரு கேப்டனாக களத்தில் ஆக்ரோஷமாகத் தெரிவதில்லை. கோலி போல அணி சொதப்பும் நேரங்களில் தனி ஒருவனாக ரோஹித் காப்பாற்றுவதில்லை. 

கோலி  டி20 போட்டிகளில் கேப்டன்சியில் இன்னமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதிருக்கிறது. அதே சமயம் ரோஹித் ஷர்மா பேட்டிங்கில் இன்னமும் அசத்தலாக ஆட வேண்டும். ஐபிஎல்லை வைத்து இந்திய அணியில் கேப்டன் பதவி கொடுக்கப்போவதில்லை. விராட் கோலி தலைமையில் இந்திய அணி, இதுவரை  விரல் விட்டு எண்ணும்  அளவுக்குத்தான் டி20 போட்டிகளில் ஆடியிருக்கிறது. சமீபத்தில்  இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டி20  தொடரை கோலி தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது.  அடுத்த 20 ஓவர் உலகக் கோப்பை வரை கோலியே தொடரலாம் என்பது தான் இந்திய அணியின் தற்போதைய நிலை. ஒருவேளை இந்தியா மூன்று வடிவிலான போட்டிக்கும் மூன்று கேப்டன் என யோசிக்கும் பட்சத்தில் ரோஹித்தை டி20க்கு டிக் அடிக்கலாம்.