வெளியிடப்பட்ட நேரம்: 10:21 (23/05/2017)

கடைசி தொடர்பு:11:23 (23/05/2017)

IPL 2017 விகடன் கனவு அணியில் இடம்பிடித்தவர்கள் இவர்கள் தான்! #IPLXI

பத்தாவது  ஐபிஎல் சீசன் நேற்றுமுன்தினம் நிறைவடைந்தது. மும்பை இந்தியன்ஸ் மூன்றாவது முறையாக கோப்பையை வென்று தொடரை முடித்து வைத்திருக்கிறது. பல்வேறு வீரர்கள் இந்த ஆண்டு ஐபிஎல்லில் கலக்கியிருக்கிறார்கள். பல சீனியர் வீரர்கள் சொதப்பித் தள்ளியிருக்கிறார்கள். திக் திக் த்ரில்லுடன் முடிந்த ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்ட பதினோரு பேரைத் தேர்ந்தெடுத்து ஒரு அணியை உருவாக்கியிருக்கிறோம். விகடன் கனவு  அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களைப் பற்றி விரிவாக பார்ப்போமா?

குறிப்பு : - குறைந்தபட்சம் பத்து போட்டிகளிலாவது ஆடிய வீரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. சீராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்கள், மேட்ச் வின்னராக திகழ்ந்தவர்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் அடிப்படையிலும் முன்னிலையில் இருப்பவர்களை கணக்கில் கொண்டு அணி தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த அணியில் ஐந்து பேட்ஸ்மேன்கள், இரண்டு ஆல்ரவுண்டர்கள், நான்கு பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். 

1.  டேவிட் வார்னர் : -

இந்த மனுஷன் விடாமல் போராடிக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் அணியைக் காப்பாற்ற கடுமையாக போராடும் போர்க்குணம் கொண்டவர் வார்னர். கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் கலக்கினார். கடந்த சீசனில் விராட் கோலியிடம் ஆரஞ்சுத் தொப்பியை இழந்தவர் இந்த முறை கெத்தாக வென்றுள்ளார். டேவிட் வார்னர் 14 போட்டிகளில் 641 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் ஒரு சதமும், நான்கு அரை சதமும் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட்டும் 141.81 வைத்திருக்கிறார். தொடக்க வீரராக களமிறங்கினாலும் மூன்று முறை ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார். இந்த சீசனில் இவரது சராசரி 58.27.  பத்தாவது ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர் (26) , அதிக பவுண்டரி (63) விளாசியவர்கள் பட்டியலிலும் வார்னருக்குத் தான் முதலிடம். இப்போது சொல்லுங்கள் வார்னரை விட சிறந்த தொடக்க வீரர் யார்? 

விகடன் கனவு அணியில் வார்னர்

இடது  கை பேட்ஸ்மேனான வார்னர் அதிரடி ஆட்டம் மட்டுமல்ல பொறுப்பாகவும் விளையாடக் கூடியவர் என்பதை நிரூபித்தார். மந்தமான பிட்ச்களில் நிலைத்து நின்று  விளையாடினார். இரண்டு பேட்ஸ்மேன்கள் செய்ய வேண்டிய வேலையை  தனி ஒருவனாக இவர் சாதிப்பதால் தான்  ஹைதராபாத் அணியில் நடுவரிசை ஆட்டம் கண்டாலும் பிளே ஆஃப் வரை தகுதி பெற்றது. விகடன் - ஐபிஎல் 2017 சிறந்த லெவனில் தொடக்க வீரராக  மிக எளிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் வார்னர். 

2. ஹாஷிம் ஆம்லா : -

நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். இந்த சீசனில் மிக அதிக  சராசரி வைத்திருக்கும் பேட்ஸ்மேன் ஹாஷிம் ஆம்லா தான். ஒரே சீசனில் இரண்டு சதங்கள் விளாசி அமர்க்களப்படுத்தியிருக்கிறார். ஆடியது பத்து போட்டிகள். அதில், இரண்டு சதங்கள் இரண்டு அரை சதங்கள் உட்பட 420 ரன்கள் குவித்திருக்கிறார். 

ஹாஷிம் ஆம்லா

 டெஸ்ட் ஆடுவதற்குத் தான் லாயக்கு என பல ஆண்டுகளாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவரின் இந்த சீசன்  ஸ்ட்ரைக் ரேட் 145.83. டி20 போட்டிகளில் ஒரு தொடக்க வீரர் எப்படி பொறுப்பாக ஆட வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இவர். வித்தியாசமான ஸ்ட்ரோக் ஆட முயற்சிப்பது கிடையாது, ஆனால் இவர் ஆடும் ஷாட்களில் அவ்வளவு நேர்த்தி. அர்ஜுனனின் அம்பை போல இவர் பேட்டில் படும் பந்துகள் துல்லியமாக ஃபீல்டர்களுக்கு இடையேயான இடைவெளியில் ஓடி எல்லைக்கோட்டை தொடுகின்றன. ஆம்லா இம்முறை சிக்ஸர்கள் விளாசுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். வார்னருடன் தொடக்க வீரராக களமிறங்க திரிபாதி, லின், மெக்குல்லம், கோலி , சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் பரிசீலிக்கப்பட்டனர். எனினும் வலுவான அணிகளுக்கு எதிராக அபாரமாகவும் சீராகவும் ரன்களை குவித்த காரணத்தால் ஆம்லா கடும் போட்டிகளுக்கு இடையே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

3.  கவுதம் கம்பீர் (கேப்டன்) :-

கவுதம் கம்பீரின் ஆட்டம் 'வாவ்' . வயதானாலும் தன்னுடைய கிளாசிக் பேட்டிங் இன்னமும் சோடை போகவில்லை என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தினார். அணிக்கு தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்றாலும் சரி; மூன்றாவது நான்காவது நிலையில் ஆட வேண்டும் என்றாலும் சரி ; அமைதியாக ஆட வேண்டுமென்றாலும் சரி;  அதிரடியாக ஆட்டம் காண்பிக்க வேண்டும் என்றாலும் சரி, நான் இருக்கிறேன் என பொறுப்புகளை எடுத்துப் போட்டுச் செய்த அபாரமான பேட்ஸ்மேன். வார்னருக்கு அடுத்தபடியாக இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் இவர் தான். இன்னொரு விதமாகவும் இதைச் சொல்லலாம். இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் கம்பீர். 16 போட்டிகளில் 498 ரன்கள் குவித்திருக்கிறார்.

 கவுதம் கம்பீர்

கம்பீர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். ஏனோ, அவர் இன்னமும் இந்திய ரசிகர்களால் பெரியளவில் கொண்டாடப்படவில்லை. பிளே ஆஃப் சுற்றில் எலிமினேட்டர் ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு ஆறு ஓவர்களில் 48 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பெங்களூரு மைதானத்தில் இந்த சீசனில் ஓவருக்கு எட்டு ரன்கள் எடுக்க வேண்டும் என்பது அவ்வளவு ஒன்றும் எளிதான காரியம் இல்லை. வார்னரின் கிடுக்கிப்பிடி பீல்டிங் வியூகங்களில், ஹைதராபாத் பவுலர்கள் அனல் பறந்த பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன. ஆனால் கம்பீர் அதிரடியாக ஆடி மேட்ச்சை ஜெயித்தார். இந்த சீசனில் ஒரு பேட்ஸ்மேனாகவும் சரி, கேப்டனாகவும் சரி அதிகம் கவர்ந்தவர் கம்பீர்.

எதிரணியில் எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேன் இருந்தாலும், அவரது மைனஸ் பக்கங்களை அறிந்து பீல்டிங் வியூகங்கள் வகுப்பதில் வல்லவர். பவுலர்களை அவர் கையாளும் விதமும் நன்றாகவே இருந்தது. ஆகவே விகடன் கனவு அணிக்கு கேப்டன் பொறுப்பையும் கம்பீர் ஏற்கிறார். வார்னருக்கும் - கம்பீருக்கும் இடையே கேப்டன்சியில் பயங்கர போட்டி இருந்தாலும், ஆக்ரோஷமான கேப்டன்சி மற்றும் எதிரணியினர் யூகிக்க முடியாத சில மாற்றங்களை தொடர்ச்சியாக செய்ததால் கம்பீர் டிக் செய்யப்பட்டிருக்கிறார்.

4. சுரேஷ் ரெய்னா : -

ஐபிஎல்லுக்கு பிராட்மேன் யார்  எனக் கேட்டால்  சுரேஷ் ரெய்னாவைத் தான் கைகாட்ட முடியும். 'சர்வதேச போட்டிகளை விடுங்கள். இது என் களம் ; இங்கே நான் தான் ராஜா ' என மீண்டும் அறிவித்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா.  கடந்த 10 வருடங்களில் ஐபிஎல் தொடரின் டாப் ஸ்கோரர் இவர் தான். 161 போட்டிகளில் 4540 ரன்களை குவித்து பிரமிக்க வைத்திருக்கிறார். இத்தனைக்கும் இதில் ஒரே ஒரு முறை தான் சதம் எடுத்திருக்கிறார் என்பது கவனிக்கத் தக்க அம்சம். 

சுரேஷ் ரெய்னா

கடந்த இரண்டு  ஆண்டுகளாக ஒரு சீசனில் 400 ரன் என்ற இலக்கை மிஸ் செய்த ரெய்னா, இம்முறை எளிதாக கடந்திருக்கிறார். 14 போட்டிகளில் 442 ரன்கள் அடித்துள்ளார். 2015க்கு பிறகு இந்திய அணியில் ஒருநாள் போட்டிகளில் ஆட வில்லை. டி20 போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். உள்ளூர் போட்டிகளிலும் பெரிதாக ஈர்க்கவில்லை என்பதை காரணமாகச் சொல்லி பிசிசிஐ இவரை சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்ந்தெடுக்க வில்லை. எனினும் அதைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் மேட்சில் அடித்து நொறுக்கினார். மிடில் ஆர்டரில் பலம் சேர்க்க பல வீரர்கள் போட்டியில் இருந்தனர். மனிஷ் பாண்டே, கிளென் மாக்ஸ்வெல், ஸ்டீவன் ஸ்மித், யுவராஜ் சிங், ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் ரேஸில் இருந்தனர். எனினும் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் ரெய்னாவே தேர்வாகிறார். அணிக்குத் தேவையான போது  விக்கெட் வீழ்த்தும் பவுலர் என்பதும் பிளஸ். 

5. ராபின் உத்தப்பா : -

"என்னை எந்த இடத்தில் வேண்டுமானாலும் இறக்கி விடுங்கள். அடித்து நொறுக்கிக் காட்டுகிறேன். இந்த சீசனில் என்னுடைய வித்தியாமான பேட்டிங்கை பார்ப்பீர்கள்"  என ஓபனாக சொல்லி அடித்த கில்லி உத்தப்பா. விகடன் லெவனில் தேர்வு செய்வதற்கு மிகவும் கடினமாக இருந்தது யாரை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுப்பது என்பதே. 

ராபின் உத்தப்பா

ரிஷப் பன்ட், மகேந்திர சிங் தோனி, தினேஷ் கார்த்திக், பார்த்தீவ் படேல் ஆகியோர் உத்தப்பாவுக்கு கடும் சவாலாக விளங்கினார்கள். எனினும் விக்கெட் கீப்பிங்கிலும் சரி, பேட்டிங்கிலும் சரி பிரித்து மேய்ந்த ஆள் உத்தப்பா தான். இம்முறை ஒன்பது கேட்ச் மற்றும் ஆறு ஸ்டம்பிங் செய்து அதிக விக்கெட்டுகள் விழுவதற்கு காரணமாக இருந்தவர்கள் பட்டியலில் உத்தப்பாவுக்கே முதலிடம். இதற்கு அடுத்த இடத்தில் இருந்தவர் தோனி. 

அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் படேல், உத்தப்பாவை விட முன்னிலையில் இருந்தார். எனினும், இந்த சீசனில் ஐந்து அரை சதங்களை விளாசிய ஒரே வீரர் உத்தப்பா மட்டுமே. தொடக்க வீரராக மட்டுமில்லாமல் நடுவரிசையில் களமிறங்கிய போதும் அதிரடித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 165.10. அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையிலும் டாப் 10 இடத்திற்குள் இருக்கிறார். ஆகவே கடும் போட்டிகளுக்கு இடையே உத்தப்பா விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்துக்கு தேர்வாகியுள்ளார். 

6. க்ரூனால் பாண்டியா : -

இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் க்ரூனால் பாண்டியாவை எப்படி அணியில் சேர்க்காமல் இருக்க முடியும்?  பவுலிங், பேட்டிங் இரண்டிலும் கலக்குகிறார் பாண்டியா. அணி சொதப்பும் போது கடைசி வரை நின்று ஆங்கரிங் இன்னிங்ஸ் ஆடச் சொன்னாலும் ஆடுகிறார். 

க்ரூனால் பாண்டியா

இடது கை பேட்ஸ்மேனான க்ரூனால் இம்முறை இரண்டு போட்டிகளிலும் டிவில்லியர்ஸை பெவிலியனுக்கு அனுப்பினார். 11 இன்னிங்ஸ்களில் 34.71 எனும் சராசரியுடன் 243  ரன்களை குவித்தார். 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். சிக்கனமாக பந்து வீசவும் செய்திருக்கிறார். க்ரூனால் பாண்டியா  மும்பை அணிக்கு எவ்வளவு முக்கியமான வீரர் தெரியுமா? அவர் ஆடாத போட்டிகளில் பெரும்பாலும் மும்பை அணி தோற்றது. ஏனெனில் அவரது பங்களிப்பு அபாரமாக இருந்தது. பிளே ஆஃபில் குவாலிபயர் -2 மற்றும் இறுதிப் போட்டி இரண்டிலும் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடியவர் க்ரூனால். ஆகவே ஆல்ரவுண்டர் பேட்ஸ்மேன் இடத்துக்கு அவரே பொருத்தமானவர்.  மேக்ஸ்வெல், கோரே ஆண்டர்சன் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டாலும் க்ரூனாலே வின்னர். 

7. பென் ஸ்டோக்ஸ் : -

இவர் அட்டகாசமான பவுலர், இவர் அபாரமான பேட்ஸ்மேன், இவர் அசத்தலான பில்டர். இப்படித்தான் ஸ்டோக்ஸுக்கு இன்ட்ரோ கொடுக்கப்பட்டது. ஐபிஎல் ஏலத்தில் இவரை எடுக்க பல அணி உரிமையாளர்கள் மல்லுக்கட்டினர். இறுதியில் ஜெயித்தது புனே உரிமையாளர் கோயங்கா. 

 பென் ஸ்டோக்ஸ்

ஆரம்ப போட்டிகளில் ஸ்டோக்ஸ் ஒன்றும் அப்படியொன்றும் மெச்சத்தக்க ஆட்டத்தை ஆடவில்லை தான். 'சோனமுத்தா போச்சா'என புனே உரிமையாளரை  மீம் போட்டு வறுத்தெடுத்தனர் நெட்டிசன்கள். அதற்குப் பிறகு ஸ்டோக்ஸ் வேற லெவல் ஆட்டத்தை ஆடினார். குஜராத் அணிக்கு எதிராக 61 பந்துகளில் ஸ்டோக்ஸ் அடித்த சதம் அட்டகாசம். பவுலிங்கிலும் முத்திரை பதித்தார். ஃபீல்டிங்கிலும் செமத்தியாக ஸ்கோர் செய்தார்.  ஒரு கட்டத்தில் எட்டாவது இடத்தில் இருந்த புனே அணி பிளே ஆஃப் வரை வந்ததற்கு மிக முக்கிய காரணம் ஸ்டோக்ஸ்.  இறுதிப் போட்டியில் அவரை ரொம்பவே மிஸ் செய்தது அணி. ஆனால் நாங்கள் மிஸ் செய்ய மாட்டோம். விகடன் கனவு அணியில் வேகப்பந்து ஆல்ரவுண்டர் ரோலுக்கு ஸ்டோக்ஸ் தான் பெஸ்ட். 

8. இம்ரான் தாஹீர் : -

அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளராக யாரைத் தேர்வு செய்வது என்பதிலும் கடும் போட்டி இருந்தது. சுனில் நரேன், பவான் நெகி, அக்சர் படேல், ரஷீத் கான் , இம்ரான் தாகீர் ஆகியோர் பரிசீலனையில் இருந்தனர். அணியில் ஏற்கனவே ஏழு பேட்ஸ்மேன்கள் இருப்பதால் தரமான ஸ்பின்னர் தேர்வு செய்ய முடிவுசெய்யப்பட்டது.  அக்சர் படேல், சுனில் நரேன் இருவரும் பிரதான ஸ்பின்னராக ஜொலித்ததை விட ஆல்ரவுண்டராக கலக்கினார்கள்.  குறைத்த ரன்களையே விட்டுக்கொடுத்தது, பவுலிங்கில் அட்டகாசமான ஸ்ட்ரைக் ரேட் என பவான் நெகியும் சிறப்பாகவே செயல்பட்டிருந்தார். ரஷீத் கான் இந்த சீசனில் அதிகம் கவனம் ஈர்த்த பவுலர். ஆனால் இவர்கள் எல்லோரையும் தவிர்த்து இம்ரான் தாஹீரை தேர்ந்தெடுக்க காரணம், அவர் மேட்ச் வின்னிங் பவுலர்.

இம்ரான் தாஹீர்

இந்த சீசனில் புனேவுக்கு ஆரம்ப போட்டிகளில் நம்பிக்கை தந்த ஒரே பவுலர் அவர் தான். இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஸ்பின்னர்களில் முதலிடமும் இம்ரான் தாகீருக்குத் தான். எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேனாக இருந்தாலும் சரி, இவரது கூக்ளியில் தடுமாறாமல் தப்பிக்க முடியாது. கேப்டன் எப்போதெல்லாம் அழைக்கிறாரோ அப்போதெல்லாம் மேட்ச்சில் திருப்புமுனை விக்கெட்டை வீழ்த்துவது இம்ரான் தாகீரின் வழக்கம். விக்கெட்டை வீழ்த்திவிட்டு அவர் மைதானத்தில் ஓடுவது செம ஸ்டைல். அதே ஸ்டைலில் அவரது போட்டியாளர்களை விஞ்சி விகடன் கனவு அணியில் இடம்பிடித்துள்ளார். 

9. ஜெயதேவ் உனத்கட் : -

விகடன் கனவு அணியில் இடம்பெறும் மூன்றாவது புனே வீரர் உனத்கட்.  டிண்டாவை வைத்துக் கொண்டு திண்டாடிய புனே அணிக்கு வெற்றிக்கான வெளிச்சம் பாய்ச்சியது உனத்கட் தான். மிக சிக்கனமாகவே ரன்களை விட்டுத்தந்தார். ஓவருக்கு  சராசரியாக 7.02 ரன்களை மட்டுமே விட்டுத்தந்தார். 

ஜெயதேவ் உனத்கட்

குறைவாக ரன்களை விட்டுத்தருவது மட்டுமல்ல விக்கெட் வேட்டை நடத்துவதும் இவருக்கு பிடித்தமான விஷயம். 12 போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். இந்த சீசனில் ஒரே போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியது சிறப்பம்சம் . டாப் 50 பந்துவீச்சாளர்களில் ஆண்ட்ரூ டைக்கு அடுத்தபடியாக நல்ல பவுலிங் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பது உனத்கட் தான். அவர் வீசிய ஒவ்வொரு 11.45 பந்துகளுக்கும் ஒரு பேட்ஸ்மேனை மைதானத்தை விட்டு வெளியேறச் சொன்னார்கள் களத்தில் இருந்த அம்பயர்கள். 

லீக் போட்டிகள் மட்டுமின்றி பிளே ஆஃப் போட்டிகள், முக்கியமான தருணங்களிலும் விக்கெட்டுகளை அள்ளினார் உனத்கட். இவரது இடத்துக்கு சித்தார்த் கவுல், கிறிஸ் வோக்ஸ், கவுல்டர் நைல், கிறிஸ் மோரிஸ், சந்தீப் ஷர்மா, ஜாகீர் கான் என எக்கச்சக்க போட்டி இருந்தாலும் புள்ளி விவரங்கள் அடிப்படையிலும் பெர்பார்மென்ஸ் அடிப்படையிலும் ஈசியாக முந்துகிறார் உனத்கட்.  இந்த சீசனில் மூன்று மெய்டன் ஓவர்களை வீசிய ஒரே பவுலர் உனத்கட் மட்டும் தான். ஐதராபாத்துக்கு எதிரான ஒரு போட்டியில் கடைசி ஓவரை மெய்டனாக வீசினார். அதில் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். அது ஹாட்ரிக் சாதனையும் கூட. அது தான் கெத்து ! 

10. ஜஸ்பிட் பும்ரா : -

மிச்செல் மெக்லாகன், மிச்செல் ஜான்சன், லசித் மலிங்கா, ட்ரென்ட் போல்ட்,  தைமல் மில்ஸ், பேட் கம்மின்ஸ் என போட்டியாளர்கள் பட்டியல் பெரிது. ஆனால் அத்தனை பேரை விடவும்  ரசிகர்களை ஓ போட வைத்த டெத் பவுலர் ஜஸ்பிட் பும்ரா. காரணம் அவரது பூம் பூம் யார்க்கர்கள். 

ஜஸ்பிட் பும்ரா

பார்வையாளர்களை பிபி எகிறவைக்கும் போட்டிகளிலும் கூட அமைதியாக ஓடி வந்து ஆக்ரோஷமான பந்துகளை வீசுவது பும்ராவின் வாடிக்கை. அவர் நெஞ்சுக்கு குறி வைக்கும் பந்துகளையும் சரி, ஸ்டம்புகளுக்கு குறி வைக்கும் பந்துகளையும் சரி  தடுப்பாட்டம் ஆடுவதற்கே பேட்ஸ்மேன்கள் திக்கித் திணறினர். 

வெறும்  யார்க்கர்கள் மட்டுமே வீசினால் வேலைக்காகாது என்பதை புரிந்து கொண்ட பும்ரா இம்முறை நிறைய லெங்த் பந்துகளையும் வீசினார். கடைசி ஓவர்களில் பும்ரா வருவார். அவரது இரண்டு ஓவர்களை வெளுக்க முடியாது. ஆகவே முன் கூட்டியே அதற்கான ரன்களை அடித்துவிடுங்கள் என்பதே எதிரணி கேப்டன்கள் அவர்களது பேட்ஸ்மேன்களுக்குச் சொல்லும் அறிவுரை. இறுதிப்போட்டியில் தோனியின் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். அந்த பந்தில் மேட்சை  தோற்றது புனே சூப்பர் ஜெயண்ட்.

11. புவனேஷ்வர் குமார் :- 

இவரைத் தவிர வேறு யார் இந்த இடத்தை நிரப்ப முடியும்?  ஐபிஎல் வரலாற்றிலேயே இரண்டு முறை தொடர்ந்து பர்ப்பிள் தொப்பியை ஜெயித்த பெருமை புவனேஷ்வர் குமாருக்கு மட்டும் தான் உண்டு. ஹைதராபாத் அணியின் பவுலிங் சூப்பர் ஸ்டார் புவனேஷ்வர் குமார். விகடன் கனவு அணியிலும் பவுலிங் கேப்டன் இவர் தான். 

 புவனேஷ்வர் குமார்

புவி என்றால் ஸ்விங்  மட்டும்தான் என நினைத்துக் கொண்டு அதற்கு தயாராகி வந்த பேட்ஸ்மேன்களுக்கு லைன் அன்ட் லெங்த்தில் தெறிக்க விட்டார். இவரது பந்துகளை பார்வையாளர்களிடம் அனுப்பிய ஒரே பேட்ஸ்மேன் தோனி மட்டும் தான். அவரைத் தவிர அத்தனை பேட்ஸ்மேன்களையும் திணற வைத்ததில் சிறந்த பவுலராக ஜெயித்திருக்கிறார். இந்த சீசனில் 14 போட்டிகள் ஆடியிருக்கிறார், 52.2 ஓவர்கள் வீசியிருக்கிறார். அதில் 26 பேட்ஸ்மேன்கள் அவுட். தொடர் ஆரம்பிக்கும் போட்டதே விகடன் கனவு அணியில் துண்டைப் போட்டு வைத்துவிட்டார் புவனேஷ்வர் குமார். கடைசி வரை அதை வேறு யாரும் எடுக்கவில்லை.


டிரெண்டிங் @ விகடன்