வெளியிடப்பட்ட நேரம்: 12:43 (23/05/2017)

கடைசி தொடர்பு:13:36 (23/05/2017)

ரியல் மாட்ரிட் ஸ்பானிஷ் லீக் சாம்பியன்... காரணகர்த்தா ரொனால்டோ, ஜிடேன்!

ரியல் மாட்ரிட் அணியின் ஐந்தாண்டு தாகம்… இல்லை இல்லை தவம்... இப்போதுதான் நிறைவேறியுள்ளது. என்னதான் சாம்பியன்ஸ் லீக் தொடரில் மூன்று ஆண்டுகளில் இருமுறை கோப்பை வென்றாலும் லா லிகா தொடரில் 2012-ம் ஆண்டுக்குப் பிறகு ரியல் மாட்ரிட் கோப்பையை வெல்லமுடியவில்லை. பார்சிலோனாவின் ஆதிக்கத்தாலும் அத்லெடிகோ மாட்ரிட் அணியின் எழுச்சியாலும் லா லிகாவில் ரியல் மாட்ரிட் சறுக்கலைச் சந்தித்தது. ஆனால் இம்முறை, புதிய பயிற்சியாளர், ஜாம்பவான் ஜினாடின் ஜிடேனின் முதல் முழு சீசனில் அந்தத் தாகத்தைத் தணித்துள்ளது ரியல் மாட்ரிட். கடைசி வரை பரபரப்பாகவே இருந்த லா லிகா ரேஸில் 93 புள்ளிகள் எடுத்து, 3 புள்ளிகள் வித்தியாசத்தில் பார்சிலோனாவைப் பின்னுக்குத்தள்ளி சாம்பியன் கோப்பையை ஏந்தியுள்ளது ரியல் மாட்ரிட் அணி.

லா லீகா ரியல்மாட்ரிட் சாம்பியன்

கடந்த சீசனின் மத்தியில் ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரர் ஜிடேன் நியமிக்கப்பட்டார். அந்த சமயம் லா லிகா தொடரில் ரியல் மாட்ரிட் தடுமாறிக்கொண்டிருந்தது. ஜிடேனின் நியமனத்துக்குப் பின் ரியல் மாட்ரிட் நல்ல முன்னேற்றம் கண்டது. சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றாலும் லா-லிகாவில் முந்தைய சொதப்பல்கள் காரணமாக இரண்டாம் இடமே பிடிக்கமுடிந்தது. இம்முறை அவரது முதல் முழு சீசன் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாயிருந்தன. அந்த எதிர்பார்ப்புகளை மிகச்சிறப்பாக பூர்த்தி செய்துள்ளார் ஜிடேன். பிற பயிற்சியாளர்கள் நினைக்கக் கூட யோசிக்கும் சில முடிவுகளை அசாதாரணமாக எடுத்தார் ஜிடேன்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஓய்வளித்தது. ஆம், உலகின் தலைசிறந்த வீரருக்கு இந்தத் தொடரில் 9 போட்டிகளில் ரெஸ்ட் கொடுத்தார் ஜிடேன். ரொனால்டோ காயங்களின்றி உடற்தகுதியுடன் இருக்க வேண்டும், சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக ரொனால்டோவுக்கு அவ்வப்போது ஓய்வளிக்கத் தொடங்கினார். பார்சிலோனாவை விட சற்று முன்னிலை பெற்றபிறகு, முன்னணி வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கத் தொடங்கினார். ரியல் மாட்ரிட் ‘பி’ டீம் என்று சொல்லுமளவு பல போட்டிகளில் இளம் வீரர்களைப் பெரிய அளவில் களமிறக்கினார். அவர்களும் சிறப்பாக செயல்படவே, அணிக்கு அது மாபெரும் சாதகமாய் அமைந்தது. ஓய்விலிருந்து திரும்பிய சீனியர் வீரர்கள் சாம்பியன்ஸ் லீக் தொடரில் டாப் அணிகளைப் பந்தாடினர். இதனால் இரண்டு தொடர்களிலும் தடையின்றி முன்னேறியது ரியல் மாட்ரிட்.

ஜிடேனை பாராட்டும் ரியல் வீரர்கள்

அதுமட்டுமின்றி இளம் வீரர்கள் மீது இவர் காட்டிய நம்பிக்கை, அவர்களை மட்டுமல்லாது அணியையும் பெரிதாகப்  பலப்படுத்தியது. அசான்சியோ, இஸ்கோ, காஸ்மிரா, கோவசிச், வாஸ்கியூஸ் போன்ற வீரர்களெல்லாம் ரியலுக்காகக் களம் இறங்கிக் கலக்கிக் கொண்டிருந்தனர். பெரும் தொகை கொடுத்து முன்னணி வீரர்களை வாங்கும் அணி என்ற பிராண்டைக் கொண்டிருந்த மாட்ரிட் அணி, இப்போது தங்கள் இளம் வீரர்களை ஸ்டார்களாக மாற்றும் மிஷனில் இறங்கியுள்ளது. அதற்கு ஆரம்ப விதையிட்டவர் ஜிடேன்!

எவர்கிரீன் ரொனால்டோ ரமோஸ் - தி ஃபினிஷர்

உலகின் தலைசிறந்த வீரர் விருதை நான்குமுறை வென்ற ரொனால்டோவுக்கு இந்த சீசன் அவ்வளவு சிறப்பாகத் தொடங்கவில்லை.       லா லிகா போட்டிகளில் முந்தைய வேகம் இல்லை. சாம்பியன்ஸ் லீக்கில் சுத்தமாகவே வேகம் இல்லை. 613 நிமிடங்கள் சாம்பியன்ஸ் லீக்கில் கோல் போட முடியாமல் திணறினார். ஆனால், இது ரொனால்டோவாச்சே…சரியான நேரத்தில் ஃபார்முக்குத் திரும்பினார். சாம்பியன்ஸ் லீக்கில் கோல் மழை, லா லிகாவிலும் அபரிமிதமான எழுச்சி. எவ்விதத் தடையுமின்றி மாட்ரிட்டை முதலிடத்தில் அமர வைத்துவிட்டார் CR7. இந்த லா லிகா சீசனில் அவர் அடித்தது 25 கோல்கள்தான். அவரது லா லிக வரலாற்றில் இதுவே அவர் கோல்கள் குறைவாக அடித்த சீசன். ஆனால், கோல்கள் அனைத்துமே முக்கியத்துவம் வாய்ந்தவை. லாஸ் பல்மாஸ் அணிக்கெதிராக மாட்ரிட் 1-3 என பின்தங்கியிருந்த போது கடைசி 10 நிமிடங்களில் 2 கோல்கள் அடித்து மாட்ரிட்டிற்கு ஒரு புள்ளி பெற்றுத் தந்தார் ரொனால்டோ. இதேபோல் விலாரியலுக்கு எதிரான போட்டியில் 1-2 என இருந்தபோது கோலடித்து போட்டியை டிரா செய்தார். அதன்பின் கடைசி கட்டத்தில் அப்போட்டியில் ரியல் மாட்ரிட் வென்றது. இப்படி இக்கட்டான தருணங்களில், அணி தன்னிடமிருந்து பெரிதும் எதிர்பார்க்கும் தருணங்களிலெல்லாம் அவர் சோபிக்கத் தவறவில்லை. மாட்ரிட் அணிக்குச் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்று தரும் பட்சத்தில் ஐந்தாம் ஆண்டாக ரொனால்டோ, ‛பாலன் டி ஓர்’ (உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது) வெல்லக்கூடும்!

வெற்றியால் திளைக்கும் ரியல் வீரர்கள்

இந்த வருடம் ரொனால்டோவை விட அதிகம் லைம்லைட்டில் இருந்தது ரியல் அணியின் கேப்டன் செர்ஜியோ ரமோஸ். ஒவ்வொரு முறையும், தனது அணி பின்தங்கியிருக்கும் போதெல்லாம் கோல் அடித்து ஆபத்பாந்தவனாய் காட்சியளித்தார். அணியை வழிநடத்தியதாகட்டும், தடுப்பாட்டத்தைச் சிறப்பாக ஒருங்கிணைத்தாகட்டும் ரமோஸ் - டாப் கிளாஸ். ஒருகட்டத்தில் வாரந்தோறும் கடைசி நிமிடங்களில் கோல் அடித்து எதிரணிகளுக்குச் சிம்மசொப்பனமாக இருந்தார். பார்சிலோனாவுக்கு எதிரான ‛எல் கிளாசிகோ’ போட்டியில் கடைசி தருணத்தில் கோல் அடித்து பார்கா ரசிகர்களின் இதயத்தை நொறுக்கினார். இதோபோல் விலேரல், மலாகா அணிகளுக்கெதிராகவும் அணியைக் காப்பாற்றி ஹீரோவானார் கேப்டன். ஆட்டத்தின் 85வது நிமிடத்தைக் கடந்து விட்டால் அது, ‘ரமோஸ் ஜோன்’ (ramos zone) என்றே பெயர் பெற்றுவிட்டது. சாம்பியன்ஸ் லீக் ஃபைனலிலும் தனது மேஜிக்கைக் காட்டக் காத்திருக்கிறார் ரமோஸ்!

ரைஸ் ஆஃப் இஸ்கோ, அசேன்சியோ

ரொனால்டோ, கேரத் பேல் போன்ற விலைமதிப்புமிக்க வீரர்களை மட்டுமே நம்பியிருந்த மாட்ரிட் அணிக்குப் புது ரத்தம் பாய்ச்சினர் இந்த இளம் வீரர்கள். தேவையான நேரங்களில் எதிர்பாராத வகையில் பட்டையைக் கிளப்பினர். பேல் காயத்தால் அடிக்கடி அவதிப்பட, அவர் இல்லை என்ற குறை கொஞ்சம் கூட தெரியாத அளவுக்கு அதைப் பூர்த்தி செய்தார் இஸ்கோ. ரொனால்டோவுக்கும் இவருக்குமான கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக வொர்க் அவுட் ஆனது. தான் ஆடிய 30 போட்டிகளில் 18 போட்டிகளில் மட்டுமே தொடக்கத்திலிருந்து ஆடினார். மற்ற போட்டிகளில் கடைசிக் கட்டத்தில் மாற்று வீரராகத்தான் களம் கண்டார். ஆனாலும் 10 கோல்களும் 9 அசிஸ்டுகளும் செய்து அசத்தினார் இஸ்கோ. 21 வயதேயான அசேன்சியோ, மாட்ரிட்டின் எதிர்காலம் என இப்போதே பெயர் பெற்றுவிட்டார். இவர்களைப் போல் ஹோல்டிங் மிட்ஃபீல்டர் காஸ்மீரோவின் பங்கும் ரியலின் வெற்றிக்கு இன்றியமையாதது.

நம்பிக்கை தரும் க்ரூஸ், கூல் மார்செலோ

டோனி க்ரூஸ் - மிட்ஃபீல்டில் மாட்ரிட் அணியின் மாபெரும் ஆயுதம். கார்னர்களை, ஃப்ரீ கிக்குளை, ரியல் வீரர்களுக்கு மிக ஷார்ப்பாக டெலிவர் செய்து எதிரணிக்கு அல்லு கிளப்பி விடுவார். இவரது பாஸிங் ஒவ்வொன்றும் வேற லெவல். சொல்லப்போனால் பார்சிலோனாவுக்கும், மாட்ரிட் அணிக்கும் இந்த சீசனின் பெரிய வித்தியாசமே க்ரூஸ்தான். மற்ற அனைத்து பொசிஷன்களிலும் இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சரிசமமாய் இருந்தாலும், நடுக்களத்தில் க்ரூஸ் ரியலுக்கு மாபெரும் பலம். பார்காவுக்கு அதுதான் மிஸ்ஸிங். அதேபோல் மார்செலோ! ரொனால்டோவுடன் இடது விங்கில் மிகச்சிறப்பாக கம்பைன் ஆகி எதிராளியை டரியலாக்கி விடுவார். டிஃபண்ட் செய்து கொண்டிருக்கும் இவர், சட்டென்று அந்த பாக்ஸ் வரை பாய்ந்து கோல் கம்பத்தைப் பதம் பார்த்து விடுவார். ஐரோப்பாவின் முன்னணி கால்பந்து தொடர்களில் இந்த சீசனில் 10 அசிஸ்டுகள் செய்த ஒரே டிஃபண்டர் மார்செலோதான்.
 
ஆக... சில தனிமனித ராஜாங்கத்தின் மூலமும், சில கூட்டு முயற்சிகளாலும் மாட்ரிட் 6அணி இன்று ஸ்பெயினின் டாப் ஸ்பாட்டில் உட்காந்திருக்கிறது. ரொனால்டோவுக்கு வயசாகிக்கொண்டிருக்கிறது, இனி மாட்ரிட் தடுமாறும் என்று நினைத்தவர்களுக்கெல்லாம் இந்த சீசன் பல வகைகளில் பதில் சொல்லிவிட்டது. ஜிடேன் கொண்டுவந்த ரொட்டேஷன்  பாலிசி, யூத் மீதான நம்பிக்கை பெரியளவில் கைகொடுக்க அடுத்த முறையும் ரியல் மாட்ரிட் லா லிகாவை கைப்பற்றலாம். ஆனால் பார்சிலோனா அடுத்த ஆண்டு புதிய பயிற்சியாளரோடு இன்னும் பலமாய் வரும். எது எப்படியோ இன்னும் இரண்டு மாத காலம், மெஸ்ஸி VS ரொனால்டோ மீம்ஸ்கள் அதிகம் வலம் வராது. கால்பந்து உலகம் சற்றே ஓய்ந்திருக்கும். வரவிருக்கும் புயலுக்குக் கொஞ்சம் காத்திருப்பது தவறில்லையே!