வெளியிடப்பட்ட நேரம்: 09:38 (24/05/2017)

கடைசி தொடர்பு:11:51 (24/05/2017)

சி.எஸ்.கே - பார்சிலோனா, மும்பை - ரியல் மாட்ரிட் : சில ஆச்சரிய ஒற்றுமைகள்

சி.எஸ்.கே மற்றும் மும்பை இந்தியன்ஸ், க்ளப் கிரிக்கெட் உலகின் இருபெரும் தலைகள். ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை அதிகமுறை மோதிக்கொண்ட அணிகளும் இவைதான். அதில் மூன்று இறுதிப்போட்டிகளும் அடக்கம்..! இதனாலேயே, இந்த இரு அணிகளுக்கும் இடையேயும் `நீயா நானா' எனும் பெரும்போட்டி பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. இதேபோல், க்ளப் கால்பந்து உலகின் இருபெரும் தலைக்கட்டுகள் பார்சிலோனாவும், ரியல் மாட்ரிட்டும். இந்த இரு `லா லிகா' அணிகளுக்கு இடையேயும் பல்லாண்டு கால பகை பல்லை காட்டி சிரித்துக்கொண்டிருக்கிறது. இவற்றை எல்லாம் கொஞ்சம் மல்லாக்க படுத்து சிந்தித்து பார்க்கையில், சி.எஸ்.கேவுக்கும் பார்சிலோனாவுக்கும், மும்பை இந்தியன்ஸுக்கும் ரியல் மாட்ரிட்டுக்கும் இடையே சில ஒற்றுமைகளை காணமுடிந்தது. அவை...

சிஎஸ்கே தோனி மற்றும் மும்பை ரோகித்

தோனியும் இனியஸ்டாவும் :

தோனி எப்படி இந்திய அணிக்கும், சி.எஸ்.கேவுக்கும் ஒரே நேரத்தில் கேப்டனாக பதவி வகித்தாரோ, அதேபோல் தான் இனியஸ்டாவும். அவரும் ஸ்பெயின் அணிக்கும், பார்சிலோனா அணிக்கும் ஒரே நேரத்தில் கேப்டனாக பதவி வகித்தவர். இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகிவிட்டது போல, அங்கே இனியஸ்டாவும் ஸ்பெயின் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிவிட்டார். அணியை வீண் சண்டை, வெட்டி சண்டை போடவிடாமல் கட்டுக்கோப்பாக வழிநடத்துவது, சாதுர்யமான திட்டங்களைத் தீட்டி களத்திலேயே கச்சிதமாக செய்ல்படுத்துவது என இருவருக்கும் இடையே நிறைய ஒற்றுமைகளை காணலாம். மிட் ஃபீல்டரான இனியஸ்டாவுக்கு கோல்களை அடித்துகுவிக்க வாய்ப்புகள் அமைவது கடினம். ஆனாலும், பந்தை தனது இலக்கை நோக்கி கடத்தி கோல் அடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதும், எதிரணி இலக்கை நோக்கி செல்லவிடாமல் தடுப்பதும் என அணிக்கு அஸ்திவாரமாக விளங்குபவர். தோனியும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால் பெரிய ஸ்கோர்கள் அடிக்க வாய்ப்பு கிட்டாது. ஆனாலும், ஃபினிஷிங் எனும் பெரும் சுமையை மகேந்திர பாகுபலி லிங்கத்தை சுமப்பது போல் அசால்டாக தூக்கி சுமப்பவர் மகேந்திர சிங் தோனி.  இவை அனைத்தையும் மிக முக்கியமான ஒரு பாயின்ட்... களத்தில் இருவருமே செம கூல்.

 

ரோகித்தும் ரெமோஸும் :

செர்ஜியோ ரெமோஸ், ரியல் மாட்ரிட் அணியின் நடமாடும் அரண். டாப் க்ளாஸ் சென்ட்ரல் டிஃபென்டரான இவர் செவிலா அணியில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு மாறி, அந்த அணிக்கு கேப்டனாகவும் உயர்ந்து பல கோப்பைகளை பெற்றுக்கொடுத்தவர். `ஹிட்மேன்' ரோகித் சர்மாவும் ஆரம்பத்தில் டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறி, கேப்டனாக பதவியேற்று பல கோப்பைகளை பெற்றுத்தந்தவர். 

மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர்

மெஸ்ஸியும், ரொனால்டோவும் இவங்கதான் :

இந்த தலைமுறையின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்கள் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ. பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையே உள்ள வரலாற்று காலத்து தகராறு இன்றும் உயிர்ப்போடு இருக்க இவர்கள் இருவரும் மிகமுக்கிய காரணம். இந்த இருபெரும் ஜாம்பாவன்களுக்கு நிகராக சென்னை மற்றும் மும்பை அணியில் யாரையும் சுட்டிக்காட்ட முடியாது. ரொம்ப கஷ்டம். ஆனாலும், இவர்களை போல் தங்கள் அணிக்கு தூணாக விளங்கும் வீரர்களை சொல்கிறேன். கோபப்படாமல் கேளுங்க. ஆட்டத்தில் அர்பணிப்பு, அணி வீரர்களுடனான நல்லுறவு, அமைதியான சுபாவம் என மெஸ்ஸிக்கும், ரெய்னாவுக்கும் பல விஷயங்கள் ஒத்துப்போகும். இவர்கள் இருவருமே தான் ஆடும் க்ள்ப் அணிக்கும், தேசிய அணிக்குமே தலைமை தாங்கியிருப்பது கூடுதல் சிறப்பு. இதுதான் திகிலான இடம் மனசை திடப்படுத்திக்கோங்க. ரியல் மாட்ரிட் சறுக்கல்களை சந்தித்து கொண்டிருந்த காலத்தில் என்ட்ரியாகி அணியின் போக்கையே மாற்றியவர் ரொனால்டோ. அதேபோல், மும்பை இந்தியன்ஸ் அணியும் பொல்லார்டின் வருகைப்பிறகே புத்துயிர் பெற்றதென சொல்லலாம். அட்டாக்கிங் மனநிலை, ஷோ-ஆப் செய்வது என ரொனால்டோவுக்கும், பொல்லார்டுக்கும் பல விஷயங்கள் ஒத்துப்போகும். பொல்லார்ட் பழைய ஃபார்முக்கு திரும்பினால் இன்னும் தைரியமாகவே சொல்லலாம் `மும்பை இந்தியன்ஸ் அணியின் ரொனால்டோ'.

அருகிலேயே அட்லெடிகோ மேட்ரிட் :

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களின் பார்வையில் புனே அணி தான் சி.எஸ்.கேவிற்கு அடுத்ததாக உள்ள `ரைவல்ரி'. மும்பை மற்றும் புனே ஆகிய இரு நகரங்களுமே மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவை என்பதுதான் இதற்கு முதற்காரணம். இதேபோல், ரியல் மாட்ரிட் அணிக்கு பார்சிலோனா அணிக்கு பிறகு பெரும் சவால் கொடுப்பது, அவர்களின் அருகிலேயே இருக்கும் அட்லெடிகோ மேட்ரிட் அணிதான்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரியல் மாட்ரிட்

இதுவும் பொருந்தும் :

சி.எஸ்.கேவை விட மும்பை இந்தியன்ஸ் அதிகமுறை ஐ.பி.எல் கோப்பையை வென்றிருக்கிறது. அதேபோல், பார்சிலோனாவை விட ரியல் மாட்ரிட் அணிதான் அதிக முறை லா லிகா கோப்பையை வென்றிருக்கிறது.  மறுபுறம், சாம்பியன்ஸ் லீக் கோப்பையை சென்னை, மும்பை இரு அணிகளும் 2 முறை வென்றிருக்கிறது. ரியல் மாட்ரிட் அணியோ க்ளப் உலககோப்பையை 2 முறை வென்றிருக்கிறது, பார்சிலோனா 3 முறை வென்றிருக்கிறது. 2014 ஆம் ஆண்டு, பார்சிலோ அணி வீரர்களை வாங்குவதற்கு இரண்டு டிரான்ஸ்ஃபர் காலங்கள் தடை விதிக்கபட்டிருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுவதில் ஏற்பட்ட தடை நமக்கு தெரியுமே... எல்லோத்தையும் கூட்டிக்கழிச்சு பாருங்க பாஸ், கணக்கு சரியா வரும்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்