வெளியிடப்பட்ட நேரம்: 16:28 (26/05/2017)

கடைசி தொடர்பு:16:29 (26/05/2017)

நியூசிலாந்துக்கு கோப்பை வெல்லும் தகுதி இருக்கிறதா? - சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு - மினி தொடர் 4

நியூசிலாந்து

                                                       இந்தத் தொடரின் முந்தைய பாகங்களைக் காண, இங்கே க்ளிக் செய்யவும். 

ஆஸ்திரேலியா   வங்கதேசம்      பாகிஸ்தான் 

உலகக்கோப்பையை இதுவரை சுவைத்தது இல்லை. டி20 கோப்பையும் கைகூட வில்லை. ஆனால் மினி உலகக்கோப்பையை சுவைத்ததுண்டு. அந்த ருசியை மீண்டும் அனுபவிக்க காத்திருக்கிறது நியூசிலாந்து. 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தனது மக்களை ஆர்ப்பரிக்க வைப்பார்களா வில்லியம்சன் படையினர்? 

நியூசிலாந்து

நியூசிலாந்து அணியின் ஸ்பெஷலே அந்த அணி வெற்றி பெறுவதும் கிரிக்கெட் உலகில் பெரிதாக தெரியாது, தோல்வி அடைவதும் கண்டுகொள்ளப்பட மாட்டாது. ஆனால் உலகின் வலுவான அணிகளுள் முக்கியமானது நியூசி. 2015 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸியிடம் தோற்றது. 2016 உலகக்கோப்பையில் லீக் சுற்றில் அத்தனை அணிகளையும் சுளுக்கெடுத்தது. ஆனால் அரை இறுதியில் இங்கிலாந்திடம் பரிதாபமாகத் தோற்றது. உலகில் தொடர்ந்து ஜென்டில்மேன் கிரிக்கெட் ஆடும் அணிகளில் மிக முக்கியமானது நியூசிலாந்து. வெற்றி பெற்றால் கூட  அதி ஆக்ரோஷமான கொண்டாட்டங்கள் இருக்காது. எதிரணி வீரர்களை கோபப்படுத்தி கவனத்தை திசை திருப்புவது போன்ற யுக்திகளை கடைபிடிக்க மாட்டார்கள். 2015 உலகக்கோப்பையில் தனது அணியை இறுதிப்போட்டிக்கு  அழைத்துச் சென்ற எலியட், சோகத்தில் இருந்த ஸ்டெயினை  கரம்தந்து தூக்கிவிட்ட  செய்கையை கிரிக்கெட் உலகமே பாராட்டித் தள்ளியது. விளையாட்டை அதற்குரிய மரியாதையோடு அணுகும் பண்பாளர்கள் நியூசி வீரர்கள். இதனாலேயே இந்த அணிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. 

சரி,  நியூசிலாந்தின் சாம்பியன்ஸ் டிராஃபி வரலாறு என்ன? 

முதல் சாம்பியன்ஸ் டிராபியில் தகுதிச்சுற்றில் விளையாடி தான் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குள்ளேயே வந்தது நியூசி. ஜிம்பாப்வேயை  ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நாக்அவுட் சுற்றுக்குள் நுழைந்தது. வந்த வேகத்தில் அதே ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோற்று வெளியேறியது பிளமிங் அணி. 

இரண்டாவது மினி உலகக்கோப்பை கென்ய மண்ணில்  நடந்தது. இம்முறை தர வரிசைப்பட்டியலில் டாப் -6 அணிகளுள் ஒன்றாக இருந்ததால் நேரடியாக நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது. நாக் அவுட்டில் ஜிம்பாப்வேயை சந்தித்தது. 64 ரன்கள் வித்தியாச வெற்றியுடன் அரை இறுதியில் நுழைந்தது. பாகிஸ்தான் அணி அரையிறுதியில் நியூஸியை அடித்து நொறுக்க காத்திருந்தது. 

பந்து நன்றாக ஸ்விங் ஆனதால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். சயீத் அன்வர் மட்டும் பொறுமையாக ஆடி சதமடித்தார். அந்த மனிதனின் பொறுப்பான ஆட்டத்தால் 252 ரன்கள் குவித்தது பாக். நியூசி சேஸிங்கில் தடுமாறியது. ஸ்விங் மன்னன் அக்ரம்  அவுட்ஸ்விங்கில் பயமுறுத்தினார். 15 ரன்னுக்குள் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தன. அதன்  பிறகு நாதன் ஆஸ்லேவும்  ரோஜர் ட்வோஸும் பொறுப்பாக ஆடி ரன்ரேட்டை மெல்ல மெல்ல உயர்த்தினார்கள். மூன்றாவது விக்கெட் 150வது ரன்னில் விழுந்தது. 49 ரன்களில் நடையை கட்டினார் ஆஸ்லே. அதன் பிறகு விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. 149/ 2 என காட்டிய ஸ்கோர் போர்டு 187 / 6 என காட்டும் போது பாகிஸ்தான் ரசிகர்கள் உற்சாகமானார்கள். ஆனால் மேக்மில்லன் - ஸ்டைரிஸ் கூட்டணி மேற்கொண்டு விக்கெட்டுகள் எதுவும் சிதறாமல் பார்த்துக் கொண்டனர். 49வது ஓவரில் இறுதிப்போட்டியில் நுழைந்தது பிளமிங் அணி. 

அக்டோபர் 15, 2000 அன்று இந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிப்போட்டியில் சந்தித்தன. கங்குலி - டெண்டுல்கர் இணை கலக்கியது 27 வது ஓவரில் டெண்டுல்கர் முதல் விக்கெட்டாக விழுந்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 141. அதன் பிறகு தான் வெற்றிக்கான நம்பிக்கை  துளிர்த்தது பிளமிங்கிடம். அந்த மேட்சில் சச்சினியும் டிராவிடையும் ரன் அவுட் ஆக்கிய ஸ்டைரிஸ், டிராவிடையும்  வினோத் காம்ப்ளியையும் தனது அபாரமான பந்துவீச்சில் பெவிலியன் அனுப்பினார். 265 ரன்கள் எடுத்தால் சாம்பியன்ஸ் டிராபியுடன் போஸ் கொடுக்கலாம் என்ற கனவோடு களமிறங்கியது பிளமிங் படை. 

வெங்கடேஷ் பிரசாத் குடைச்சல் தந்தார்; சச்சின் சுழல் ஆயுதம் கொண்டு தாக்கினார்; தடுமாறியது நியூசி. வெற்றி இந்தியாவின் பக்கம் என நினைத்தபோது ஐந்தாவது ஆட்டக்காரராக களமிறங்கினார் கிறிஸ் கெயின்ஸ். அவர் பதட்டப்படவே இல்லை. நேர்மறையான எண்ணங்களுடன் தீர்க்கமாக பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினார். 132 / 5 என தத்தளித்த நியூசியை கடைசி வரை களத்தில் நின்று கரையேற்றினார் கெயின்ஸ். ஐம்பதாவது ஓவரின் நான்காவது பந்தில் சிலிர்த்துக் கொண்டது நியூஸி. கிரிக்கெட் உலக வரலாற்றில் இதுவரை நியூசிலாந்து வென்ற முதலும் கடைசியுமான ஒரே ஐசிசி கோப்பை அதுவே. 

நியூசிலாந்து

2002 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியின் ஆட்டத்தை பற்றி அசைபோட ஒன்றும் இல்லை. லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் மெக்ராத்திடம் தோற்றது. அந்த கோபத்தை வங்கதேசத்தின் மீது பாய்ச்ச, அந்த அணி ஷேன் பாண்டிடம் சிக்கி சின்னாபின்னமானது. ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் தொடரில் இருந்து வெளியேறியது நியூசி. 

முந்தைய மினி உலகக்கோப்பையின் அதே கதை தான் 2004 தொடரிலும் நடந்தது. ஆஸி மற்றும் நியூசியுடன் இடம்பெற்றிருந்த இன்னொரு அணி, கத்துக்குட்டியான அமெரிக்கா. பிளமிங் முதல் போட்டியில் சதமடிக்க, ஓரம் பந்துவீச்சில் சுருண்டு விழுந்தது அமெரிக்கா. 210 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியுடன் ஆஸியை சந்தித்தது. மெக்ராத் மற்றும் காஸ்பிரோவிச் கூட்டணி நியூசியை அடக்கியது. மீண்டும் லீக் சுற்றோடு நடையை கட்டியது பிளமிங் அணி. 

2006 சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவில் நடந்தது. லீக் சுற்றில் முதல் போட்டியை தென்னாப்பிரிக்காவோடு ஆடியது. முதலில் பேட்டிங் செய்த நியூசி 195 ரன்கள் மட்டுமே  எடுத்தது. அதில் பிளமிங் மட்டுமே 89 ரன்கள் எடுத்திருந்தார். 35 ஓவரில் தென் ஆப்ரிக்கா மேட்சை முடிக்கும் என நினைத்தவர்களுக்கு மில்ஸ், ஓரம் கூட்டணி சம்மட்டி அடி தந்தது. எட்டு வீரர்கள் ஒற்றை இலக்க  ரன்களில் அவுட் ஆக 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தெ.ஆ.  அடுத்த போட்டி இலங்கையுடன் ஆடியது. இந்த முறை ஏழு நியூசிலாந்து வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆக நியூஸியின் ஸ்கோர் 165/10. மீண்டும் மேஜிக் வெற்றி பெறும்  என எல்லோரும் கணித்தார்கள். ஆனால் அந்த சீனுக்கு எல்லாம் இங்கே இடம் கிடையாது என சொன்னது இலங்கையின் பேட்டிங். 36வது ஓவரிலேயே மேட்ச் முடித்து டின்னருக்குச் சென்றது இலங்கை அணி.

மூன்றாவது போட்டி பாகிஸ்தான் அணியுடன். பிளமிங் மற்றும் ஸ்டைரிஸ் இருவரும் அரை சதம் அடிக்கவே 274 ரன்கள் குவித்தது. பிளமிங்குக்கு சிரமம் வைக்காமல் சீரான இடைவெளியில் பெவிலியன் நோக்கி ஓடினார்கள் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள். அனாயசமாக அரையிறுதியில் நுழைந்தது நியூசி. முந்தைய  இரண்டு சாம்பியன்ஸ் டிராபியில்  எந்த அணியிடம் சிக்கி சின்னாபின்னமானதோ அதே அணி  அரையிறுதியில் காத்திருந்தது. 241 ரன்கள் தான் முடிந்தால் வெற்றி பெற்றுப்பார் என சவால் விட்டார் பாண்டிங். கிவிகளை துள்ளவே விட வில்லை கங்காருக்கள். எடுத்த எடுப்பிலேயே மெக்ராத் - லீ கூட்டணி எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிதைத்தது.  35 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து அல்லாடிய அணியை வெட்டோரி கொஞ்சம் பழுதுபார்த்தார். அது எந்த வகையிலும் ஆஸியை பயமுறுத்தவில்லை. 206 ரன்களில் ஆல் அவுட் ஆனது நியூசி. 79 ரன்களுடன் ஆறுதல் அடைந்தார் வெட்டோரி. 

2009 சாம்பியன்ஸ் டிராபி தென் ஆப்ரிக்க மண்ணில் நடந்தது.   வெட்டோரி தலைமையில் தொடரை எதிர்கொண்டது நியூசி.  தென் ஆப்ரிக்கா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய  அணிகள் இடம்பெற்றிருந்த பிரிவில் நியூசிலாந்து இருந்தது.  முதல் போட்டியில் பார்னெல்லின் ஐந்து விக்கெட்டுகள், டிவில்லியர்ஸின் 70 ரன்கள்  நியூசிலாந்து தோல்வி அடைய போதுமான காரணிகளாக இருந்தன. இலங்கையை 38 ரன்கள் வித்தியாசத்திலும், இங்கிலாந்தை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வென்று அரை இறுதியில் அடியெடுத்து வைத்தது வெட்டோரி அணி.  

2000 நாக் அவுட் டிராபியின் அதே சீன் இங்கே. '234 ரன்கள் அடித்துவிட்டு இறுதிக்கு செல்' என்றது யூனிஸ்கான் அணி. 71/3  என நியூசி தடுமாறியது. ஒரு பேட்ஸ்மேன் வந்தார். ஆமீர்  பந்தாவது  அஃப்ரிடி பந்தாவது என அனாயசமாக அடித்து நொறுக்கினார். அவரது 75 ரன்கள் நியூசியை கரம் பிடித்து இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றன. அதே பேட்ஸ்மேன் தான் ஆறு வருடங்கள் கழித்து தான் பிறந்த மண்ணுக்கு எதிராக  அதிரடியாக ஆடி தனது அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார். அந்த மனிதன்  கிரான்ட் எலியட் ! 

நியூசிலாந்துக்கு முந்தைய மூன்று தொடர்களிலும் கசப்பு மருந்து தந்த அதே ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் வந்து சிரித்தது. பிளமிங் அணியால் மட்டுமல்ல வெட்டோரி அணியாலும் ஆஸியை அசைத்துப் பார்க்க முடியவில்லை. 200 ரன்களில் சுருண்டு, 45 வது ஓவரில் மீண்டுமொரு முறை  ஆஸியிடம்  பணிந்தது நியூசி. ரிக்கி பாண்டிங் கெத்தாக மற்றுமொரு முறை சாம்பியன்ஸ் டிராபியை ஏந்தினார். 

2013 சாம்பியன்ஸ் டிராபி  இங்கிலாந்து மண்ணில் நடைபெற்றது. ஆஸி, இலங்கை, நியூசி, இங்கிலாந்து ஒரு பிரிவில் இடம்பெற்றன. இலங்கையை 138 ரன்களில் சுருட்டியது நியூசிலாந்து. மெக்லாகன் நான்கு விக்கெட்டுகள் எடுத்தார். பதிலடியாக மலிங்காவும் நான்கு விக்கெட்டுகள்  கைப்பற்றிச் சிரித்தார். தட்டுத்தடுமாறி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூசி. 

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மீண்டுமொரு ஆஸியுடன் மோதியது நியூசி. பிரண்டன் மெக்குல்லத்தின் அணி இந்த முறை தோல்வியில் இருந்து தப்பித்தது. ஆனால் வெற்றி பெறவில்லை. காரணம் போட்டியின் போது இடையூறாக வந்த மழை. இங்கிலாந்துடனான போட்டி மழையால் 24 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இங்கிலாந்து 170 ரன்களைத் தான் வெற்றி இலக்காக  நிர்ணயித்தது. வில்லியம்சன் 67 ரன்கள் அடித்தார்; கோரே ஆண்டர்சன் 30 ரன்கள் குவித்தார் . ஆனால் அதெல்லாம் வெற்றிக்கு போதவில்லை. 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி தொடரில் இருந்து வெளியேறியது நியூசி. 

இப்போது என்ன நடக்கும் ?

2015 உலகக் கோப்பையில் திடீரென எழுச்சி பெற்றது நியூசி. இறுதிப்போட்டியைத் தவிர வேறு எதிலும் தோற்கவில்லை. அதன் பிறகு இந்த இரண்டு ஆண்டு கால ஒருநாள் கிரிக்கெட் பயணத்தை கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம். 

கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவரை 12 தொடர்களில் ஆடியிருக்கிறது. இதில் ஏழு முறை கோப்பையை வசப்படுத்தியிருக்கிறது. ஆனால் பெரிய அணிகளுடன் தோல்வியைத் தழுவியே வந்திருக்கிறது என்பதை மேற்கண்ட படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

2015 உலகக்கோப்பைக்கு பிறகு 42  ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கிறது நியூசி. இதில் 24 போட்டியில் வெற்றி. 18 போட்டியில் தோல்வி.  வெற்றி சதவீதம் 57.14.  கடந்த இரண்டு ஆண்டுகளில் நியூசிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் குவித்த ரன்கள் பற்றிய சார்ட் இது. 

42 ஒருநாள் போட்டிகளில்  25 முறை முதலில் பேட்டிங் பிடித்திருக்கிறது  நியூசிலாந்து. இதில் 15 முறை வெற்றி பெற்றுள்ளது. வெற்றி சதவீதம் 60%. எப்போதெல்லாம் முதலில் பேட்டிங் செய்கிறதோ அப்போதெல்லாம் அதிக ரன்களை குவிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது நியூசி. கீழ்கண்ட படத்தை நன்றாக கவனித்தால் 280 முதல் 300 ரன்கள் வரையிலான ரன்களை நியூசி பல முறை எடுத்துள்ளதை தெரிந்து கொள்ள முடியும். இந்த 25 போட்டிகளில் நியூசிலாந்து சராசரியாக குவித்த ரன்கள் 278.96 .

குறைந்த பட்சமாக 149  ரன்களை ஒரு முறையும், அதிகபட்சமாக 398 ரன்களை ஒரு முறையும் எடுத்திருக்கிறது. இப்போதைய இங்கிலாந்து பிட்ச்கள் பேட்டிங்குக்கு சாதகமாக இருப்பதாக செய்திகள் வருகின்றன. இது நியூஸிக்கு சற்றே சோகமான விஷயம் தான். ஏன் என்பதற்கான விளக்கம் கீழே . 

இந்த இரண்டு ஆண்டுகளில் 17 போட்டிகளில் சேஸிங்கை தேர்ந்தெடுத்திருக்கிறது. இதில் 9 போட்டிகளில் வெற்றியும், 8 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. வெற்றி சதவீதம் 52.94 %. 

அதிக ரன்களை சேஸிங் செய்யும் போதும் சரி, தொடரின்  முக்கியமான போட்டிகளில்  இலக்கை துரத்தும் போதும் சரி வெற்றியை கோட்டை விடுகிறது வில்லியம்சன் அணி. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக கடந்த ஆண்டு இந்திய மண்ணில் நடந்த தொடரை சொல்லலாம் . வரலாறு படைக்க வேண்டிய தொடரில் ஐந்தாவது  போட்டியில் படுமோசமான தோல்வியைச் சந்தித்தது. சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்க தொடரிலும் இதே கதை தான். 

புள்ளிவிவரங்களை ஒருபக்கம் வைப்போம். நியூசிலாந்து இம்முறை சாம்பியன் ஆகத் தகுதி வாய்ந்த அணியா? நிச்சயமாக. ஏனெனில் நல்ல வலுவான படை இருக்கிறது. இங்கிலாந்து மைதானங்கள் நியூசிலாந்து வீரர்களுக்கு பரிச்சயமானதே. இம்முறை ஐந்து பேட்ஸ்மேன்கள், ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீரர்கள், இரண்டு நல்ல ஆல்ரவுண்டர்கள், ஒரு விக்கெட் கீப்பர் என்ற கலவையுடன் அணி இருக்கிறது. 

தொடக்க வீரராக களமிறங்கும் கப்டில் அதிரடி பார்முக்குத் திரும்பிவிட்டால் எதிரணி பவுலர்கள் பாடு திண்டாட்டம் தான். இந்த இரட்டை சத நாயகன் பார்முக்கு திரும்பினால் வில்லியம்சனுக்கு யானை பலம் கூடும். டாம் லாதம் நம்பிக்கையளிக்கும் வீரர். கேன் வில்லியம்சன் அட்டகாசமான பேட்ஸ்மேன். தற்போதைய நிலையில் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் இவர். நான்காவது இடத்தில் களமிறங்கும் ராஸ் டெய்லர் தான் உள்ளே வெளியே ஆட்டம்  ஆடுகிறார். இவரது நிலையற்ற பார்ம் நிச்சயம் நடுவரிசைக்கு  கவலை தரும். வில்லியம்சனுக்கு அடுத்தாக ஸ்ட்ரைக் ரொட்டெட் செய்யும் பேட்ஸ்மேன்கள் அணியில் இல்லை. ஒரு வேளை மழை பெய்து பிட்ச் மந்தமானால் நியூசியின் கோப்பை கனவு அவ்வளவு எளிதில் நனவாகாது. 

ஆல்ரவுண்டர் கோரே ஆண்டர்சன், கொலின் டி கிராண்ட்ஹோம் நல்ல தேர்வு. சுழற்பந்துக்கு இஷ் சோதியை நீக்கி  ஜீதன் படேலைச் சேர்ந்திருக்கிறார்கள். மிச்சேல் சான்ட்னரும் நல்ல வீரர்.  வேகப்பந்து துறை செம ஸ்ட்ராங். போல்ட், மெக்லாகன், சவுதி, மில்னே, நீஷம் ஆகியோரில் யாரை தேர்வு செய்வது என்பதில்  வில்லியம்சன் தடுமாறக்கூடும். மில்னேவின் வேகம் பிளஸ் என்றாலும் அவரது ஃபேஸ்  ஆஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல அமைந்துவிடும். விக்கெட் கீப்பர் ராஞ்சி பேட்டிங்கில் பெரிதாக ஈர்க்க வில்லை. அவர் தனது பங்களிப்பை சரியாக செய்ய வேண்டியது அவசியம்.

எதிர்பார்க்கப்படும் லெவன் :-

கப்தில், டாம் லாதம், கேன் வில்லியம்சன் (கேப்டன்) , ராஸ் டெய்லர், லுக் ராஞ்சி, கோரே ஆண்டர்சன், கோலின் டி கிரான்ட்ஹோம், மிச்சேல் சான்ட்னர், (ஜீதன் படேல் / ஜேம்ஸ் நீஷம்), டிரென்ட் போல்ட், டிம் சவுதீ. 

இம்முறை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய அணிகளை எதிர்கொள்ளப் போகிறது நியூசி. இந்த மூன்று அணிகளுமே நியூசிலாந்துக்கு சவாலான அணிகள் தான். குறிப்பாக வங்கதேசம் நிச்சயம் அபாயகரமான அணி. அந்த அணியுடனான போட்டியில் கூடுதல் கவனத்துடன் ஆட வேண்டியது அவசியம். நியூசிலாந்தை பொறுத்தவரையில் பெரிய மைனஸ் என குறிப்பிட்டுச் சொல்லும் படி எதுவும் இல்லை. ஆனால் போட்டி நடக்கும் நாளில் அப்போதைய சூழ்நிலையில் எப்படி ஆடப்போகிறார்கள் என்பதை பொறுத்தே ஆட்டமுடிவுகள் அமையும். கேன் வில்லியம்சன் இன்னொரு பிளமிங் ஆவாரா? விடை சில நாள்களில்...


டிரெண்டிங் @ விகடன்