வெளியிடப்பட்ட நேரம்: 18:42 (26/05/2017)

கடைசி தொடர்பு:18:41 (26/05/2017)

புரோ கபடியில் பங்கேற்கும் நெல்லை இன்ஜினீயரின் டைம்லைன்!

புரோ கபடி லீக்கில் பங்கேற்கும் குஜராத் அணிக்காக விளையாட நெல்லை வீரர் கலையரசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

குஜராத் கபடி அணியில் நெல்லை வீரர்

கிரிக்கெட் மட்டுமே இளைஞர்களிடம் பரவி வந்த நிலையில், புரோ கபடி போட்டிகள் இளைஞர்கள், மாணவர்களிடம் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு இணையான பரபரப்பும் விறுவிறுப்பும் இந்தப் போட்டியில் இருப்பதால் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதுவரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்ற இந்தத் தொடரில், இந்த ஆண்டு முதல், கூடுதலாக 4 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

தற்போது 5-வது சீசனுக்கான புரோ கபடிப் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளன. இதில், புதிதாகச் சேர்க்கப்பட்ட குஜராத் அணிக்கு விளையாட நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள, பெத்தநாடார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் என்ற மாணவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் பொறியியல் படித்து வருகிறார். குஜராத் அணிக்கு கலையரசன் தேர்வாகி இருப்பதில் சொந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கலையரசனிடம் பேசினோம். ’’எங்க கிராமத்தில் எல்லோருமே கபடி விளையாடுவோம். நானும் சிறு வயதில் இருந்தே கபடி விளையாடி வந்தேன். மேல்நிலை வகுப்பில் படிக்கும்போதுதான் கபடி ஆட்டம் குறித்து முழுமையான புரிதல் கிடைச்சுது. முதலில் பள்ளி அணிக்காக விளையாடினேன். எனது ஆட்டத்தைப் பார்த்துட்டு பலரும் உற்சாகப்படுத்தினாங்க. அந்த உற்சாகமே என்னை அடுத்தக் கட்டத்துக்கு நகர வைத்தது.

பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் பாடத்தைத் தேர்வுசெய்தேன். அங்கே, எனக்கு ராஜதுரை என்பவர் உடற்பயிற்சி ஆசிரியாகக் கிடைத்தார். எனது கபடி வழ்க்கையில் அவரைச் சந்தித்ததுதான் பெரும் பாக்கியம். என்னிடம் இருந்த குறைகளைக் களைந்து, மறைந்து கிடந்த திறமையை வெளியே கொண்டு வந்தவர் அவர்தான். கபடி விளையாட்டில் ஆர்வமிருந்தாலும் சிரத்தை எடுத்து படிக்கவும் செய்தேன். படிப்பு கெட்டுப் போகாமல், விளையாட்டிலும் சாதிப்பது குறித்து, அவர்தான் எனக்கு சொல்லிக் கொடுத்தார். கபடியில் ஜொலிக்க சிறந்த, உடற்பயிற்சி முறைகளும் அவசியம் தேவை. பாடியை ஃபிட்டாக வைத்துக் கொள்ளும் உடற்பயிற்சிகள் குறித்தும் விளக்கமாகச் சொல்லிக் கொடுத்தார். 

குஜராத் கபடி அணியில் நெல்லை வீரர்

கல்லூரி கபடி அணில் சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக அணியிலும் இடம்பிடித்தேன். அண்ணா பல்கலைக்கழக அணியின் கேப்டனாகவும் ஆனேன். புரோ கபடிப் போட்டிக்கானத் தேர்வு கோவையில் நடந்தது. இந்தத் தேர்வுக்குச் செல்லுமாறு, எனது ஆசிரியர்தான் அறிவுறுத்தினார். கோவையில் 6 நாள் நடந்த தகுதிச்சுற்றுப் போட்டிகளில் பங்கேற்றேன். தொடர்ந்து மும்பையில் நடந்த தேர்வுக்குப் போனேன்; வெற்றி கிடைத்தது.

மும்பையில் ஒரு மாத பயிற்சி கொடுத்தார்கள். அப்பா சேர்மக்கனி சாதாரண விவசாயி. ஒரு மாதம் மும்பையில் தங்கி போட்டிகளில் கலந்துகொள்ள செலவு செய்வதற்கு அஞ்சினார். எங்கள் கிராம மக்கள், எனக்கும் தந்தைக்கும் உற்சாகம் அளித்தனர். பயிற்சிகளில் சிறப்பாக செயல்பட்டதால், தேர்வாளர்களுக்கு என் மீது நம்பிக்கை ஏற்பட்டது. பின்னர், என்னை குஜராத் அணியினர் தேர்வு செய்தனர்.

புரோ கபடிப் போட்டிகளில் எனது முழுத்திறமையையும் வெளிப்படுத்துவேன். தமிழக அணிக்காக விளையாட வேண்டும் என்பது என் கனவு. தமிழக அணியில் பங்கேற்பதன் மூலமாக இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற முடியும் என நம்புகிறேன். நிச்சயமாக, ஒருநாள் நீங்கள் என்னை இந்திய அணியில் பார்ப்பீர்கள். அந்த நாளுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்” என்கிறார் உற்சாகமும் நம்பிக்கையும் செறிந்த குரலில்.


டிரெண்டிங் @ விகடன்