42 ஆண்டு கால இங்கிலாந்தின் கனவு... சொந்த மண்ணில் பலிக்குமா? #ChampionsTrophy2017

வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி ஆரம்பிக்கிறது கிரிக்கெட்டின் 'மினி உலகக் கோப்பை' என்று கூறப்படும் சாம்பியன்ஸ் ட்ராஃபி. நடப்பு சாம்பியன் இந்தியா, நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலியா, ஃபார்மில் இருக்கும் தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து என பலரும் 'மினி உலகக் கோப்பையை' வெல்லும் முனைப்பில் களம் இறங்குகிறார்கள். 

ஆனால் சொந்த மண்ணில் நடப்பதாலும், மிகவும் பலமான ஒருநாள் அணி இருப்பதாலும் இங்கிலாந்து இம்முறை கோப்பை வெல்லும் என்று பலர் கருத்து கூறுகின்றனர். 

முதன்முறையாக கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது 1975-ம் ஆண்டு. அப்போது கிரிக்கெட் உலகில் கொடிகட்டிப் பறந்த மேற்கிந்திய தீவுகள் அணி, மிகச் சுலபமாக கோப்பையைக் கைப்பற்றியது. பின்னர் நடந்த உலகக் கோப்பைகளில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா, இலங்கை என்று பலரும் சாம்பியன் பட்டத்தை வென்றனர். ஆனால் கிரிக்கெட்டின் தாய் தேசம் என்று சொல்லப்படும் இங்கிலாந்து 42 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு முறை கூட, சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. 

இதுவரை இங்கிலாந்து அணி வென்ற ஒரே உலகக் கோப்பை, 2010-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை மட்டும்தான். மூன்று முறை ஒரு நாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டம் வரை சென்று தோல்வியடைந்துள்ளது இங்கிலாந்து அணி. கடைசியாக 2013-ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் ட்ராஃபி போட்டியிலும் இங்கிலாந்து அணி, இந்திய அணியிடம் தோல்வியடைந்து கோப்பை வெல்வதற்கான வாய்ப்பை இழந்தது.

ஆனால், இம்முறை எப்பாடு பட்டாவது கோப்பை தன் வசமாக்கும் முனைப்புடன்தான் இருக்கிறது இங்கிலாந்து. 
இது குறித்து அந்த அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான மொயீன் அலியும், 'எங்களிடம் சாம்பியன்ஸ் ட்ராஃபியில் வெற்றி பெறுவதற்கான அணி இருக்கிறது' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும், 'இதுதான் நான் சந்தித்ததிலேயே மிகவும் சிறப்பான இங்கிலாந்து அணி.' என்று புகழாரம் சூட்டியுள்ளார். 

இம்முறையாவது இயன் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, இறுதி ஆட்டம் முடிந்த பின்னர் வெற்றியடைந்த பக்கம் இருக்கமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!