வெளியிடப்பட்ட நேரம்: 16:24 (29/05/2017)

கடைசி தொடர்பு:16:50 (29/05/2017)

தெறிக்க விடுமா அல்லது தெறித்து விழுமா இலங்கை அணி ? சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு - மினி தொடர் 5

CT2017

  இந்தத் தொடரின் முந்தைய பாகங்களைக் காண, இங்கே க்ளிக் செய்யவும். 

1. ஆஸ்திரேலியா  

2.  வங்கதேசம்

3. பாகிஸ்தான்

4.  நியூசிலாந்து 

சாம்பியன்ஸ் டிராபி கனவு இன்னமும் இலங்கைக்குக் கனவாகவே இருக்கிறது. ஒருநாள் உலகக்  கோப்பையிலும் சரி, டி20 உலகக் கோப்பையிலும் சரி இலங்கையின் ஆதிக்கம் அதிகம். 1996முதல் 2015 வரை நடந்த ஆறு  உலகக் கோப்பையில் மூன்று முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அதில் ஒரு முறை சாம்பியனும் கூட. ஆறு டி20 உலகக்கோப்பையில் மூன்று முறை இறுதிப்போட்டியில் ஆடியிருக்கிறது. அதில் ஒரு முறை வின்னர். சாம்பியன்ஸ் டிராபியில் இலங்கை அணி இதுவரை சாதித்தது என்னென்ன.. சறுக்கியது எங்கே... இம்முறை சாம்பியன் வாய்ப்பு எப்படி? 

இலங்கை

1998ல் நடந்த முதல் மினி உலகக்கோப்பையில் நேரடியாகக் காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது இலங்கை அணி. நாக் அவுட் சுற்றில் நியூசிலாந்துடன் மோதியது. முரளிதரன் சுழலில் 188 ரன்களுக்கு சுருண்டது. சேஸிங் ஈஸி என நினைத்தார் கேப்டன் ரணதுங்கா. ஆனால் நியூசிலாந்து சைமன் டவுல் வேறு திட்டங்கள் வைத்திருந்தார். டாப் ஆர்டரை அடக்கினால் பின் வரிசை வீரர்கள் திமிர முடியாது எனத் திட்டம் போட்டார்.  அதைச் சரியாக செயல்படுத்தவும் செய்தார். விளைவு... ஐந்து ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகள் காலி. இலங்கை முடங்கிவிடும் என்றே மேட்ச் பார்த்த எல்லோருக்கும் தோன்றியது. ஆனால் கேப்டன் அர்ஜுனா  ரணதுங்கா பொறுப்புடன் ஆடி  90 ரன்கள் குவித்து அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். 

காலிறுதியில் தென் ஆப்ரிக்காவைச் சந்தித்தது இலங்கை. தென் ஆப்ரிக்கா முக்கியமான போட்டிகளில் ஆடுகிறதென்றால் இயற்கை அன்னை குஷியாகிவிடுவது அப்போதே வாடிக்கை. அன்றும் அப்படி மழை பெய்தது. 50 ஓவர் போட்டி 39 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டது. காலிஸ் எடுத்த சதத்தால் சேஸிங்கில் 241 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கடினமான இலக்கை நோக்கி ஓட ரெடியாக இருந்தது இலங்கை. மீண்டும் மழை குறுக்கிட்டது. டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 34 ஓவர்களில் 224 ரன்கள் எடுக்க வேண்டும் என்றனர் நடுவர்கள். இலங்கை சோர்ந்தது. அது பேட்டிங்கிலும் அப்படியே எதிரொலித்தது. ஹன்ஸ் குரோனியேவுக்குச் சிக்கல் தராமல் சீரான இடைவெளியில் பெவிலியன் நோக்கி  ஓடினார்கள் இலங்கை பேட்ஸ்மேன்கள். 23.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 132 ரன்கள் எடுத்து தொடரிலிருந்து வெளியேறியது ரணதுங்கா அணி. 

இரண்டாவது மினி உலகக்கோப்பை கென்யாவில் நடந்தது. இம்முறை தகுதிச் சுற்றி ஆடி வென்றால்தான் நாக் அவுட் சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நிலை இலங்கைக்கு. தகுதிச் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதியது. குணவர்தனே மற்றும் ஜெயவர்த்தனே அதிரடியால் நாக்அவுட் சுற்றில் நுழைந்தது. பாகிஸ்தானுக்கு 195 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சயீத் அன்வர் சதமடிக்க 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது இலங்கை அணி.

2002 ஆம் ஆண்டு மினி உலகக்கோப்பை இலங்கை மண்ணில் நடந்தது. முதல் போட்டியிலேயே இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதின. கடந்த முறை வாங்கிய அடிக்கு இம்முறை பதிலடி தந்தது இலங்கை அணி. சயீத் அன்வரின் அரை சத உதவியோடு 200 ரன்கள் அடித்தது பாக். ஜெயசூர்யாவின் அதிரடி சதத்தில் 37வது ஓவரில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இலங்கை. நெதர்லாந்தை 206 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது. முரளி சுழல், அட்டப்பட்டு மற்றும் சங்கக்காரா இணையின் பொறுப்பான ஆட்டம் காரணமாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. 

2002, செப்டம்பர் 29 அன்று இறுதிப்போட்டியில் இந்தியாவைச் சந்தித்தது இலங்கை. முதலில் பேட் பிடித்தது. ஜெயசூர்யா களத்தில் வாணவேடிக்கை காட்டியபோது 275 நிச்சயம் 350 லட்சியம் என பெவிலியனில் இருந்த அர்னால்டும், ஜெயவர்த்தனேவும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் கங்குலி சுழல் மன்னன் ஹர்பஜனை வைத்து கதையை முடித்தார். இதனால் இந்தியாவுக்கு இலக்கு 245 என்றானது. நிச்சயம் இம்முறை இந்தியா வெற்றி பெறும்  என பலரும் நம்பியிருந்தார்கள். முதல் ஓவரை வாஸ் வீசினார். மெய்டன். மோங்கியாவுக்கு எதிர்முனையில் நின்றுகொண்டிருந்த சேவாக் இப்போது பேட்டிங் பிடிக்க வந்தார். சந்தித்த ஐந்து பந்துகளில் மூன்றை எல்லைக்கோட்டுக்கு விரட்டியடித்தார். இலங்கை ரசிகர்கள் பதறினர். திடுமென மழை வந்தது. விடவேயில்லை கொட்டித் தீர்த்தது. மேட்ச் ஆடமுடியவில்லை. மறுநாள் மீண்டும் போட்டி என அறிவித்தார்கள்  நடுவர்கள். 

செப்டம்பர் 30 அன்று மீண்டும் இந்திய அணியை எதிர்கொண்டது. மீண்டும் முதலில் பேட் பிடித்தது இலங்கை. கும்ப்ளே, ஹர்பஜன், சேவாக், டெண்டுல்கர் என சுழல் வீரர்களை வரிசையாக அனுப்பினார் கங்குலி. தட்டுத்தடுமாறினாலும் ஜெயவர்தனேவின் பொறுப்பான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 222 என்ற எண்ணை அடைந்தது இலங்கை. மெதுவாக இலக்கை நோக்கி நகரலாம் என முடிவு செய்திருந்தார் கங்குலி. விக்கெட்டுகளை இழந்துவிடக் கூடாது என உறுதியாகயிருந்தார். ஆனால் வாஸ் பந்தில் டக் அவுட் ஆனார் மோங்கியா. சேவாக் மெதுவாக ஆட வேண்டும் என நினைத்தாலும் அவரது பேட் பந்துகளை விரட்டியடித்தே பழக்கப்பட்டதால் 22 பந்தில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்ஸர் என கால் சதத்தை எடுத்தார். மறுமுனையில் 22 பந்துகளைச் சந்தித்து ஏழு ரன்கள் எடுத்திருந்தார் சச்சின் டெண்டுல்கர். மீண்டும் மழை. போட்டி கைவிடப்படுவதாக அறிவித்தனர்  நடுவர்கள். கோப்பை இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இப்படித்தான் சாம்பியன்ஸ் டிராபியில் முதல் கோப்பையை வென்றது இலங்கை. 

ஜெயசூரியா - கங்குலி

2004 சாம்பியன்ஸ் டிராபியில் லீக் சுற்றில் ஜிம்பாப்வேயை வென்றது. ஆனால் லீக் சுற்றில் இங்கிலாந்திடம் டக் வொர்த் லூயிஸ் முறையில் தோற்றது. இதனால் அரையிறுதிக்கு முன்னேறவில்லை. 

2006 சாம்பியன்ஸ் டிராபியில் தகுதிச் சுற்று ஆட வேண்டிய நிலைமையில் இருந்தது இலங்கை. வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, வங்கதேசம் ஆகிய  அணிகளைத் தகுதிச் சுற்றில் வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி ஆடுவதற்கு தகுதி பெற்றது. இரண்டு பிரிவாக அணிகள் பிரிக்கப்பட்டிருந்தன. 'பி' பிரிவில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் இலங்கையும் இடம்பிடித்தது. நியூசிலாந்தை மட்டும்தான் லீக் சுற்றில் வெல்ல முடிந்தது. ஆகவே இம்முறையும் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. 

2009 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 'பி' பிரிவில் இலங்கை, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் இடம்பெற்றிருந்தன. இதில் தென் ஆப்பிரிக்காவை மட்டுமே டக் வொர்த் லூயிஸ் விதிப்படி வென்றது இலங்கை. தொடர்ந்து மூன்றாவது முறையாக அரை இறுதியில் நுழைய முடியாத சோகத்துடன் வெளியேறியது இலங்கை. 

2013 சாம்பியன்ஸ் டிராபி இங்கிலாந்தில் நடந்தது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளிருந்த பிரிவில் இலங்கையும் இடம்பெற்றது. கடினமான பிரிவில் இடம்பெற்றாலும் அருமையாக ஆடியது. நியூசிலாந்திடம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. எனினும் இங்கிலாந்தையும், ஆஸியையும் தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்தது. 2011 உலகக்கோப்பை இறுதியில் அடைந்த தோல்விக்கு இலங்கை பதிலடி கொடுக்கும் என்றார் சங்கக்காரா. ஆனால் தோனியின் வியூகங்களை சமாளிக்கமுடியாமல் சொந்த நாட்டுக்கே விமானம் ஏறியது இலங்கை அணி. 

இப்போது ?

2015 உலகக்கோப்பைக்குப் பிறகு ஒன்பது ஒருநாள் தொடர்களில் விளையாடியிருக்கிறது இலங்கை. இதில் ஐந்தில் தோல்வி. ஒரு தொடர் சமனில் முடிந்திருக்கிறது. ஆடிய 37 போட்டிகளில் வெறும் 13ல்  மட்டுமே வென்றிருக்கிறது. வலுவான அணிகளுக்கு எதிராக பெரிய வெற்றிகளைப் பெறவில்லை. குறிப்பாக இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக படுதோல்விகளைச் சந்தித்திருக்கிறது. 

இலங்கை அணியின்  சமீப கால சாதனை எனச் சொல்ல வேண்டுமெனில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரை சமன் செய்ததைத்தான் குறிப்பிட முடியும். சங்கக்காரா, ஜெயவர்த்தனே என இரண்டு சீனியர்கள் வெளியேறியதில் இலங்கை அணி ஆட்டம் கண்டிருக்கிறது. சரியான கேப்டன், நல்ல அனுபவ வீரர்கள் இல்லாமல் தடுமாறி வருகிறது. இலங்கை அணி ஆடும் பல போட்டிகள் கத்துக்குட்டிகளின் ஆட்டத்தைப் போலவே இருக்கின்றன. கிரிக்கெட் என்பது  தனிநபர் விளையாட்டு அல்ல. அது ஒரு குழு விளையாட்டு. தனிநபரைச் சார்ந்திருந்தால் ஒரு அணி எந்த அளவுக்குச் சரிவை சந்திக்கும் என்பதற்கு இலங்கை நல்ல உதாரணம்.

இலங்கை

சாம்பியன்ஸ் டிராபியில் இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற மனநிலையில்தான் இலங்கை விளையாடும். தென் ஆப்ரிக்கா, இந்தியா என இரண்டு வலுவான அணிகளைத் தாண்டி அரையிறுதிக்குத் தகுதி பெறுவது என்பது  சாதாரண விஷயமில்லை. இங்கிலாந்தில் தற்போது பேட்டிங்குக்குச் சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. இதில் மலிங்கா, குலசேகரா எந்தளவுக்குச் சாதிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. நீண்ட காலத்துக்குப் பிறகு அணிக்குத் திரும்பியிருக்கும் மாத்யூஸ் எப்படி ஆடப்போகிறார் என்பது முக்கியமான கேள்வி. இலங்கை அணிக்கு மாத்யூஸ் மிகச்சிறந்த கேப்டன் எனச் சொல்ல முடியாது. அவரது முடிவுகள் மெச்சத்தக்கதாக இல்லை. 

இலங்கை அணியில் இம்முறை ஏகப்பட்ட விக்கெட் கீப்பர்கள் இருக்கிறார்கள். சமீப காலங்களில் நிரோஷன் டிக்வெல்லா மற்றும் அசேலா குணரத்னே ஆகியோர்  சிறப்பாக ஆடி வருகின்றனர். குறிப்பாக நிரோஷன் பந்துகளைப் பவுண்டருக்கும் சிக்ஸருக்கும் விளாசி வருகிறார். ஆனால், இவரால் பெரிய ஸ்கோர்களைக் குவிக்க முடியவில்லை என்பது மைனஸ். உபுல் தரங்கா சீனியர் பிளேயர். அவர் மீண்டும் பார்முக்குத் திரும்பினால் இலங்கை கவுரமான ஸ்கோர் குவிக்க முடியும். இவர்களைத் தவிர தினேஷ் சந்திமால் குறிப்பிடத் தக்க பேட்ஸ்மேன். ஆனால், நிலையற்ற ஆட்டம் என்பது இவரது மைனஸ். திசேரா பெரேரா, ஆஞ்சலோ மாத்யூஸ், அசேலா குணரத்னே என மூன்று பேரும் ஆல்ரவுண்டர்களாக ஜொலித்தால் அரையிறுதி வரையாவது இலங்கை வரும் என நம்பலாம். 

எதிர்பார்க்கப்படும் லெவன் :-

உபுல் தரங்கா, நிரோஷன் டிக்வெல்லா, குஷால் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், சமாரா கப்புகெதரா, ஏஞ்சலோ மேத்யூஸ், அசலா குணரத்னே, திசேரா பெரேரா,  செக்கியூகே பிரசன்னா, நுவான் குலசேகரா, லசித் மலிங்கா 

இலங்கை

 

பொதுவாக இலங்கை அணி பெரிய தொடர்களில் நன்றாக ஆடும். அந்த வகையில் பாசிட்டிவ் ஆட்டத்தை வெளிப்படுத்தினால் 2019 உலகக்கோப்பைக்கு இந்த சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து பல நல்ல விஷயங்களை எடுத்துச் செல்ல முடியும். கப்புகெதராவை எந்த அடிப்படையில் அணியில் சேர்த்திருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களில் இப்போதுதான் அணி சற்றே பலம் பெற்றிருக்கிறது. சீனியர்களும் ஜுனியர்களும் சரியான கலவையில் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் இதுவரை ஓர் அணியாக ஆடிய அனுபவமில்லை. இப்படியொரு அணியை மாத்யூஸும் சமீப காலங்களில் தலைமையேற்று நடத்தியதில்லை. "இம்முறை எங்களின்  திட்டங்களில் மாற்றம் இருக்கிறது. அதிர்ச்சியான சில முடிவுகளை நீங்கள் பார்ப்பீர்கள்" எனச் சொல்லியிருக்கிறார் மாத்யூஸ். பயிற்சிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு நல்ல சவால் தந்தது இலங்கை. ஓர் அணியாக இணைந்து ஒற்றுமையோடு ஆடினால் சாம்பியன்ஸ் டிராபியில் நாம் எதிர்பார்க்காத முடிவுகளை மாத்யூஸ் அணி தரக்கூடும். இலங்கையைப் பொறுத்தவரையில் நஷ்டம் எதுவுமில்லை; ஜெயிக்கும் ஒவ்வொரு போட்டியும்  லாபம். எத்தனை கட்டத்தைத் தாண்டுகிறது என்பதையும்தான் பார்க்கத்தானே போகிறோம் !