வெளியிடப்பட்ட நேரம்: 12:06 (30/05/2017)

கடைசி தொடர்பு:12:03 (30/05/2017)

''விராட் கோலியின் பேட், என்னிடம் பணிந்துவிடும்!" - பாகிஸ்தான் ஜூனைத் கானின் சவால்

2013 சாம்பியன்ஸ் டிராபியைத் தொடர்ந்து, 2017 சாம்பியன்ஸ் டிராபியும் இங்கிலாந்தில்தான் நடைபெறுகிறது. வருகின்ற ஜூன் 1, 2017 அன்றே, 8-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் துவங்கி விடுகிறது; என்றாலும், ஜூன் 4-ம் தேதி நடைபெறும் போட்டியைத்தான், கிரிக்கெட் ஆர்வலர்கள் எதிர்நோக்கியுள்ளனர். ஏனெனில், நடப்புச் சாம்பியன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில், சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியை அன்று எதிர்த்து விளையாட உள்ளது. 50 ஓவர் மற்றும் டி20 போன்ற உலகக் கோப்பை தொடர்களில், பாகிஸ்தான் இந்தியாவை ஒருமுறை கூட வீழ்த்தியது இல்லை! உலகக்கோப்பை தொடர்களில் இதுவரை, இந்த இரு அணிகளும் மோதியுள்ள 11 போட்டிகளிலும், இந்திய அணியே தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது! ஆனால் ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மட்டும், இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகளில், பாகிஸ்தான் அணி இரண்டு வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. ஆக பரபரப்புக்குக் குறைவில்லாத இந்தியா - பாகிஸ்தான் போட்டியைப் பற்றி, பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது கூறியதாவது; 

சர்ப்ராஸ் அகமது

''உலகக்கோப்பை தொடர்களுடன் ஒப்பிடும்போது, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு எதிராகச் சிறந்த புள்ளி விபரங்களை நாங்கள் கொண்டிருக்கிறோம்; ஆதலால் அதை அப்படியே, நாங்கள் இந்த முறையும் தொடர்வதற்கு விரும்புகிறோம். ஏனெனில் எங்களிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை; எப்போதும் போலவே, இயல்பான ஆட்டத்தையே தொடர்ந்து விளையாடுவோம். சமீப காலங்களில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக  நாங்கள் அற்புதமாக விளையாடினோம். அந்த தொடரில், அணி வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாகச் செயல்பட்டனர்; அதிலும் குறிப்பாக, பீல்டிங்கில் நல்ல முன்னேற்றம் இருந்தது மகிழ்ச்சி. எனவே சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அசத்தலாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை நிறையவே உள்ளது. கூடவே, எங்கள் அணியின் தேர்வுக்குழு தலைவரான இன்சமாம் உல் ஹக் கூறியபடி, இந்தத் தொடரை நாங்கள் வெல்வோம் என நம்புகிறோம். 

பாகிஸ்தான்

எட்ஜ்பஸ்டனில் நாங்கள் அதிக நேரம் தொடர்ந்து உற்சாகமாகப் பயிற்சியில் ஈடுபட்டோம் என்பதுடன், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முழு அளவில் தயாராகவே உள்ளோம். இத்தொடரில் எப்படிப்பட்ட ஆச்சர்யமான விஷயங்களையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை; எந்த நெருக்கடியும் இல்லாமல். சுதந்திரமாக விளையாடவே இங்கு வந்திருக்கிறோம்; அதனை இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இருந்தே தொடங்க உள்ளோம். இரு பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்பதன் வாயிலாக, அணியின் தன்னம்பிக்கை மேலும் அதிகரிக்கும். தனிப்பட்ட முறையில் பாகிஸ்தானின் கேப்டனாக நான் எதிர்கொள்ளவிருக்கும் மிகப்பெரிய அளவிலான தொடர் இதுதான்; ஆதலால் இதை நம்பிக்கையுடனும், மிகுந்த ஆவலுடனும் இந்த தொடரை எதிர்கொள்கிறேன். எனது நோக்கமே இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுதான்; சொதப்பலாக விளையாடுவது இல்லை. ஆகவே உள்ளூர் போட்டிகளில் எப்படி இயல்பாக விளையாடுவேனோ, அதைப்போன்றே சாம்பியன்ஸ் டிராபியிலும் விளையாட விரும்புகிறேன்'' எனக் கூறியுள்ளார்.

யூனிஸ் கான்

பாகிஸ்தானின் சிறந்த கிரிக்கெட் வீரர்களுள் ஒருவராகக் கருதப்படும் யூனிஸ் கான், சர்ஃப்ராஸ் அகமது கூறியதையே பிரதிபலிக்கிறார். ''சாம்பியன்ஸ் டிராபி தொடரில், பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணியை வீழ்த்தும் திறமை இருக்கிறது. உலகக்கோப்பையைத் தவிர்த்து, இதற்கு முன்னர் நடந்திருக்கும் பல தொடர்களில், பாகிஸ்தான் இந்தியாவை பலமுறை எளிதாக வீழ்த்தியிருக்கிறது. போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் நன்றாக இருப்பதால், 400 ரன்களை எடுத்தாலும், சேஸிங்கில் எளிதாகக் கடந்துவிடலாம் போலத் தோன்றுகிறது. பீல்டிங்தான் 50 ஓவர் ஒருநாள் போட்டியிலும், 20 ஓவர் டி20 போட்டியிலும் வெற்றிக்கான முக்கியமான காரணக்கர்த்தாவாக இருந்து வருகிறது. முன்பைவிடப் பாகிஸ்தான் அணி, பீல்டிங்கில் முன்னேறியிருந்தாலும், இன்னும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். கைக்கு வரும் எந்த பந்தையும் கோட்டை விட்டுவிடக்கூடாது. தற்போதைய கேப்டனான சர்ஃப்ராஸ் அகமதுவுக்கு, இது ஒரு நல்ல வாய்ப்பு; அவர் அணிக்குத் தலைமை தாங்கும் விதத்தில்தான், பாகிஸ்தான் அணியின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது" எனத் தன்னம்பிக்கையுடன் பேசியுள்ளார். 

ஜூனைத் கான்

தனது கேப்டனுக்குத் தோள் கொடுக்கும் விதமாக, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியைத் தன்னால் சுலபமாக வீழ்த்த முடியும் எனத் தெரிவித்துள்ளார், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜுனைத் கான்! ஏனென்றால், இவர் இப்படி சொல்வதிலும் நியாயம் இருக்கிறது; கோலி இவரது பந்துவீச்சை இதற்கு முன்பாக 4 முறை எதிர்கொண்டிருக்கிறார். அதில் 3 முறை ஜுனைத் கான் அவரது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் என்பதுடன், கோலிக்கு 22 பந்துகளை வீசி 2 ரன்களையே விட்டுக் கொடுத்துள்ளார் ஜுனைத் கான்! இதைப் பற்றி அவர் கூறியதாவது, '' நான் விராட் கோலிக்கு இதுவரை நான்கு முறை பந்து வீசியுள்ளேன்; அதில் மூன்று முறை அவரை வீழ்த்தியுள்ளேன்; நிச்சயம் அவர் ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன்தான், ஆனால் புள்ளிவிபரங்களைப் பார்க்கும்போது, எனது பந்துவீச்சுக்கு எதிராக அவர் பெரியளவில் சோபிக்காதது தெளிவாகத் தெரிகிறது. எனவே இம்முறை அவருக்குப் பந்துவீசும் போதும், என்னிடம் ஆட்டமிழந்த அதே கோலியாகத்தான் அவரைப் பார்ப்பேன். அவரும் என்னை அதே ஜுனைத் கானாகத் தான் நினைப்பார் என்றே கருதுகிறேன்; இதனால் அவர் முன்னெச்சரிக்கையாகவே எதிர்கொள்ள முனைவார். இதனால் அவர் எளிதாக ஆட்டமிழந்துவிடுவார்.

விராட் கோலி

ஆனால் நான் ஒருவேளை தவறாகக் கூட இருக்கலாம். என்றாலும், இந்திய ரசிகர்களின் முன்னிலையில், இந்திய மைதானங்களில் அவரைச் சுலபமாகவே வீழ்த்தியுள்ளேன். ஆனால் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றாலும், பெரிய பிரச்னை ஒன்றும் இருக்காது என்றே கருதுகிறேன்; அவர் பங்கேற்கும் பெரும்பாலானப் போட்டிகளில், சிக்சர்களையும் பவுண்டரிகளையும் தொடர்ந்து அடித்து வருகிறார். ஆனால் இவை எதுவுமே, எனக்கு எதிராக நடக்கவில்லை என்பதே, எனக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய மரியாதை; இதனைத் தொடர்ந்து தக்கவைக்கவே முயற்சி செய்வேன். இந்திய அணியில் விராட் கோலி மட்டுமே சிறந்த வீரர் இல்லை. 11 விக்கெட்களும்தான் எனது இலக்கு. நான் அவர்கள் விளையாடிய வீடியோக்களைப் பார்த்து, என்னை நான் தயார் செய்து வருகிறேன்'' என விராட் கோலி மட்டுமல்ல, இந்திய அணிக்கே சவால் விட்டிருக்கிறார் ஜூனைத் கான்! ஆனால் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், விராட் கோலி ஆடிய விதத்தை வைத்துப் பார்க்கும்போது, ஜூனைத் கானை விளாசித் தள்ளுவார் என்றே எதிர்பார்க்கலாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க