வெளியிடப்பட்ட நேரம்: 16:59 (30/05/2017)

கடைசி தொடர்பு:17:15 (30/05/2017)

சச்சினுக்காகக் கசிந்துருகிய காம்ப்ளி: #நண்பேன்டா..!

சச்சின்- காம்ப்ளி நட்பு உலகமே அறிந்த காவியம். இடையே பல அதிருப்திகள் உருவான போதிலும், இருவருக்குமிடையேயான நட்பை  அவ்வப்போது வெளிப்படுத்துவதிலிருந்து இருவரும் தவறியதே இல்லை. அந்த வரிசையில், தற்போது சச்சினுடன் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனது நட்பை காதலுடன் வெளிப்படுத்தியிருக்கிறார் வினோத் காம்ப்ளி.

சச்சின்-காம்ப்ளி

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினும் வினோத் காம்ப்ளியும் நெருங்கிய நண்பர்கள். சச்சின், காம்ப்ளி ஜோடி இணைந்து அடித்த 664 ரன்தான் நீண்ட நாள்களாக பள்ளியளவில் உலக சாதனையாக இருந்தது. சமீபத்தில், கிரிக்கெட் ஜாம்பவான் என்றழைக்கப்படும் சச்சினின் வாழ்க்கை வரலாறு, கிரிக்கெட் வரலாறு குறித்தத் திரைப்படம் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகத்தின் உச்சியில் வைத்துள்ளது. இத்திரைப்படம் கிரிக்கெட் வீரர்களுக்குச் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்பட்டது. சேவாக், கோலி உள்ளிட்ட பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களாகி அத்திரைப்படும் குறித்து புகழ்ந்திருந்தனர்.

இந்நிலையில், சச்சினின் பால்ய கால நண்பரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளி, ‘சச்சின்’ திரைப்படம் குறித்து தன் மனநிலையை ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். சச்சின்- காம்ப்ளி நட்புறவில் பல மனக்கசப்புகள் எழுந்தாலும், சில நேரங்களில் பொது மேடைகளில் அதை வெளிப்படுத்தியிருந்தாலும், அவர்களின் நட்பு எந்தவொரு விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பதற்கு காம்ப்ளியின் சமீபத்திய ட்வீட்டே உதாரணம்.

காம்ப்ளி தன் ட்விட்டர் பக்கத்தில், ‘மாஸ்டர் ப்ளாஸ்டர்...ஐ லவ் யூ’ எனச் சச்சினுக்கான தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். ’விவரம் தெரியாத வயதில் தொடங்கிய நட்பு, என்றுமே நீடித்திருக்கும்’ எனவும் ’இந்தப் புகைப்படம் ஒன்று போதும், இவர்களின் நட்பை  எடுத்துக்கூற’ எனச் சமூகவலைதளங்களில் இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.