வெளியிடப்பட்ட நேரம்: 21:22 (30/05/2017)

கடைசி தொடர்பு:07:36 (31/05/2017)

சாம்பியன்ஸ் ட்ராஃபி பயிற்சி ஆட்டம்: பங்களாதேஷை பந்தாடியது இந்தியா!

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்காக, இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது. ஜூன் 1 ஆம் தேதி சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடங்குகிறது. ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள தனது முதல் போட்டியில், இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தானுடன் மல்லுக்கட்டுகிறது.

இதற்கிடையே, தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது. இந்தியா, தனது முதல் பயிற்சி ஆட்டத்தில், நியூஸிலாந்தை வீழ்த்தியது. இந்நிலையில், இன்று நடந்த இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - பங்களாதேஷ் அணிகள் மோதின. இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் இந்தப் போட்டி நடந்தது.

Team India

இந்திய அணி முதலில் பேட் செய்தது. பயிற்சி ஆட்டம் என்பதால், அணியிலிருந்தும் கேப்டன் கோலி மற்றும் தோனி ஆகியோர் பேட் செய்யவில்லை. ரோஹித் ஷர்மா, தவான் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஷர்மா ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். தவான் 60 ரன்கள் எடுத்து வெளியேறினார்.இந்திய அணியில் அதிகபட்சமாக, தினேஷ் கார்த்திக் 97, ஹர்த்திக் பாண்டியா 80 ரன்கள் எடுத்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில், இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்தது. பங்களாதேஷ் தரப்பில் உசைன் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

இதையடுத்து, 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய, பங்காதேஷ் அணி, ஆரம்பம் முதலே சொதப்பியது. இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல், பங்களாதேஷ் பேட்ஸ்மென்கள் தடுமாறினர். இதனால், 23.5 ஓவர்களில் 84 ரன்களில் பங்களாதேஷ் அணி ஆல் அவுட் ஆனது.

குறிப்பாக, அந்த அணியில் நான்கு பேர் டக் அவுட் ஆகினர். இதனால், 240 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.