வெளியிடப்பட்ட நேரம்: 11:01 (31/05/2017)

கடைசி தொடர்பு:11:01 (31/05/2017)

தோனி... பாகிஸ்தான்... சாம்பியன்ஸ் டிராபி..! விராட் கோலி என்ன சொல்கிறார்?

ஐசிசி நடத்தும் 8-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர், வருகின்ற ஜூன் 1 முதல் ஜூன் 18 வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. கடந்த 2013-ல், இதே இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில், தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. இம்முறை நடப்புச் சாம்பியனாகக் களமிறங்கும் இந்தியா உள்பட ஐசிசி ரேங்கிங்கின் அடிப்படையில் முதல் 8 இடங்களைப் பிடித்திருக்கும் அணிகள், இரு பிரிவுகளாகக் கலந்து கொள்கின்றன. ஏ பிரிவில் (ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம்) அணிகளும், பி பிரிவில் (இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை) அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தத் தொடரில் இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்த்து, வருகின்ற ஜூன் 4-ம் தேதி விளையாட உள்ளது. பின்பு 8-ம் தேதியன்று இலங்கை, 11-ம் தேதியில் தென் ஆப்பிரிக்கா அணிகளைச் சந்திக்கிறது. ஜூன் 1, 2017 துவங்க உள்ள இத்தொடருக்கு முன்னதாக, அனைத்து அணிகளும் இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன. தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, நியூஸிலாந்தை வீழ்த்தி இருந்தது; இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில், வங்கதேசத்தை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது. 

சாம்பியன்ஸ் டிராபி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சாம்பியன்ஸ் டிராபி பற்றி மனம்திறந்துள்ளார். ''கடந்த 4 வருடங்களுக்கு முன்பு, இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில், நாங்கள் சாம்பியன்ஷிப்பைப் பெற்றோம். அப்போது நாங்கள் தோனி தலைமையில், பல இளம் வீரர்களைக் கொண்ட அணியாக இருந்தோம்; அதனுடன் ஒப்பிடும்போது, தற்போது சரியான கலவையில் அணி அமைந்திருக்கிறது என்பதுடன், மனதளவில் போதிய முதிர்ச்சியையும் அடைந்துள்ளோம். ஏனெனில் கடந்த 4 ஆண்டுகளில், நாங்கள் அதிக அனுபவங்களைப் பெற்றிருக்கிறோம். இதனால் சிறப்பான முறையில், இந்தத் தொடரை அணுக உள்ளோம்; தனிப்பட்ட முறையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரை நான் மிகவும் நேசிக்கிறேன். ஏனேனில் அதிகப்படியான சவால்களைக் குறிப்பதாகவே இது அமைந்துள்ளது. உலகக் கோப்பை தொடரைப் பொறுத்தமட்டில், அதிகளவில் சுற்றுப் போட்டிகள் இருக்கும். எனவே முதல் பாதியில் நிதானமாகச் செயல்பட்டு,  இரண்டாம் பாதியில் நீங்கள் ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில், அனைத்தும் குறைவான குழுப் போட்டிகளாகவே உள்ளன.  ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் முன்னிலையில் இருக்க வேண்டும். ஆக வெற்றிபெற்றால் அரை இறுதிக்கு முன்னேறலாம்; தோல்வியடைந்தால் தொடரில் இருந்தே வெளியேற நேரிடும்'' என்றார்.

 

தோனி

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனியைப் பற்றிப் பேசும்போது, ''அணியின் நடுவரிசை பேட்டிங் சற்று பலவீனமாக இருந்ததாலேயே, கடந்த இரு வருடங்களில் தோனிக்கு அதிக சுமை ஏற்பட்டிருக்கிறது. டாப் ஆர்டரில் ஒருவர் நிலைத்து நின்று ஆடி, பலமுறை அவருடன் இணைந்து, எப்படிப்பட்ட போட்டியையும் வெற்றிகரமாக முடித்து கொடுத்திருக்கிறார்கள். ஆனால் தோனிக்கு பின்பு, நடுவரிசையில் வலுவான வீரர்கள் இல்லை. எனவே நான் கேப்டனான பின்பு, அதை பலப்படுத்துவதுதான் முதல் குறிக்கோளாக இருந்தது இந்த காரணத்தாலேயே தோனியால், பேட்டிங்கில் சுதந்திரமாக விளையாட முடியவில்லை. அவர் தன்னைக் களத்தில் வெளிப்படுத்திக் கொள்வது அவசியம் என்பதை உணர்ந்தோம். ஆனால் ஹர்திக் பாண்டியா மற்றும் கேதர் ஜாதவின் வருகைக்குப் பிறகு, தற்போது நாங்கள் சமபலம் அடைந்துள்ளோம். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் நாம் வென்றதற்கு இதுதான் காரணம். ஒருவர் உலகின் ஆகச்சிறந்த அணியாக இருக்கலாம்; ஆனால் களத்தில் அவர் சிறப்பாகச் செயல்படாவிட்டால், அத்தகைய திறமைக்கு எவ்வித மதிப்பும் இல்லை. இதுபோன்ற முக்கியமான தொடர்களில், போட்டி நடைபெறும் நாளில் எப்படி செயல்படுகிறோம் என்பதில்தான், அனைத்தும் அடங்கி இருக்கிறது'' எனக் கூறியுள்ளார்.  

கோலி

அணி பற்றியும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிகளைப் பற்றியும், விராட் கோலி கூறியதாவது, ''இந்தியாவைப் பொறுத்தவரை, அணி சமபலத்துடன் உள்ளது; எனவே சாம்பியன்ஸ் டிராபியை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். பேட்டிங்கில் போதுமான ஆழம் உள்ளது; பந்து வீச்சில் நல்ல வேகப்பந்து வீச்சைக் கொண்டுள்ளோம். முதலில் நாங்கள் நடப்பு சாம்பியன் என்று நினைக்காமல் இருப்பதே எங்களுக்கான முதல் சவாலாகப் பார்க்கிறேன். 2013-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன் டிராபி போட்டிக்கு செல்லும்போது ஓர் இளம் அணியாக ஒற்றுமையுடன் ஒவ்வொரு போட்டியையும் நாங்கள் எதிர்கொண்டோம். அத்தொடரின் முடிவில், சிறப்பாக ஆடி வெற்றி பெற்று, ஓர் திறமையான அணியை உருவாக்கினோம்; கிட்டத்தட்ட அதே அணிதான் தற்போதும் உள்ளது. ஆனால் அதில் காலத்துக்கு ஏற்ப சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி, எப்போதுமே ரசிகர்களுக்கு உற்சாகமாக இருக்கும். அவர்களுக்கு இது வேறுபட்டதாக இருக்கும்.எங்களைப் பொறுத்தவரை அது மற்ற அணிகளுடனான போட்டியைப் போன்றதுதான். ரசிகர்கள் தங்களது சொந்த மனநிலையுடன் போட்டிக்கு வருவார்கள். அனைவரையும் மதிப்பது அவசியம்தான். 

கோலி

ஆனால், ஒரு கிரிக்கெட் வீரராக, எதிர்முனையில் இருக்கும் நமது பங்குதாரர் குறித்து அதிகம் நினைக்க முடியாது. இது விளையாட்டில் மட்டுமே! எங்களது தலைகளில், எவ்வித மாற்றமும் ஏற்படாது. அது அப்படியேதான் இருக்கும். ஏனெனில் பாகிஸ்தானுக்கு எதிராக, நாங்கள் முதல்முறையாக ஒன்றும் விளையாடப் போவதில்லை. இதனால் கூடுதல் ஊக்கம் தேவை இருக்காது” எனப் பேசியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை, 3 முறை மோதியிருக்கின்றன. இதில் பாகிஸ்தான் இரு முறையும், இந்தியா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதில் இந்தியாவின் வெற்றியானது, கடந்த 2013-ம் ஆண்டில், தோனி தலைமையில் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வென்ற தொடரில் கிடைத்தது கவனிக்கத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க