வெளியிடப்பட்ட நேரம்: 16:21 (31/05/2017)

கடைசி தொடர்பு:13:37 (01/06/2017)

தோனி - யுவராஜ் - கோலி கூட்டணி, இந்தியாவை சாம்பியன் ஆக்குமா? - சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? மினி தொடர் - 7

இந்தத் தொடரின் முந்தைய பாகங்களைக் காண, இங்கே க்ளிக் செய்யவும். 

1. ஆஸ்திரேலியா   2.  வங்கதேசம் 3. பாகிஸ்தான் 4.  நியூசிலாந்து  5. இலங்கை  6. தென் ஆப்ரிக்கா 

தோனிக்கும் யுவராஜுக்கும் அநேகமாக இதுதான் கடைசி சாம்பியன்ஸ் டிராபி தொடர். விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் முதல் ஐசிசி தொடர். கோப்பையை வென்று கரியரை நிறைவு செய்ய வேண்டும் என சிலருக்கு ஆசை, கோப்பையை வென்று சரித்திரத்தில் தனது பெயரை பதியவைக்க வேண்டும் என்று கோலிக்கு ஆசை. ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ், பும்ரா புதிய கனவுகளோடு இங்கிலாந்துக்கு வந்திருக்கிறார்கள். அணியில் இடம்பெற்றிருக்கும் 15 பேருக்கு மட்டுல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இந்த முறை சாம்பியன்ஸ் டிராபியை  தக்கவைக்க வேண்டும் என்பது ஆசை. நிச்சயமாக அது பேராசையல்ல. 

இந்தியா இடம்பெற்றிருக்கும் பிரிவில் இரண்டு ஆசிய அணிகளும், தென் ஆப்ரிக்காவும் இடம்பெற்றுள்ளன. சூப்பர் சீனியர்கள், சீனியர்கள், ஜுனியர்கள் என  செம காம்போவுடன் களமிறங்குகிறது இந்திய அணி. சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்குச் சவால் என்ன? மீண்டும் சாம்பியன் ஆக வாய்ப்பு இருக்கிறதா? பிளஸ் - மைனஸ்,  சாம்பியன்ஸ் டிராபியில் கடந்துவந்த பாதை என பல விஷயங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். 

வரலாறு என்ன சொல்கிறது ?

1998 ஆம் ஆண்டு நடந்த முதல் நாக் அவுட் டிராபியில் நேரடியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது இந்திய அணி. காலிறுதியில் ஆஸியுடன் மோதியது. எட்டு ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தபோது, சச்சினும்  டிராவிட்டும் இணைந்தார்கள். அதன்பின்னர் சோர்ந்தார்கள் ஆஸி பவுலர்கள். சச்சின் மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸ் ஆடினார். ஆஸ்திரேலிய  ஃபீல்டர்களை மைதானம் முழுவதும் ஓடவிட்டார். அவ்வப்போது பந்துகளை பார்வையாளர்களிடமும் நேர்த்தியாக அனுப்பினார். மைதானமே அதிர்ந்தது. டேமியன் பிளமிங், காஸ்பிரோவிச், மார்க் வாஹ், பிராட் யங், டேரன் லீமான் என பந்துவீச வந்தவர்களையெல்லாம் புரட்டி எடுத்தார் சச்சின். அவர் களத்தில் இருந்தபோது ஸ்கோர் 325 ரன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. 46-வது ஓவரில் தேவையே இல்லாமல் நன்றாக ஆடிக் கொண்டிருந்த சச்சினும், ஜடேஜாவும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். டெண்டுல்கர் 128 பந்தில் 141 ரன்கள் எடுத்தார். இந்தியா 307 ரன்கள் குவித்தது. 

சேஸிங்கில் மார்க் வாஹ், கில்கிறிஸ்ட், பாண்டிங் என எல்லோரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 29.2 ஓவரில் 172/4 என இருந்தது ஆஸியின் ஸ்கோர். 'சச்சின் சதம் வீண் தானா' என கன்னத்தில் கை வைத்தனர் ரசிகர்கள். அன்றைய தினம் சச்சின் பந்து வீச்சிலும் கலக்கினார். அவர் மட்டும் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆஸ்திரேலியாவை 263 ரன்களுக்குச் சுருட்டினார். 'ஆஸ்திரேலியா இந்தியாவிடம் தோற்கவில்லை, சச்சினிடம் மீண்டும் ஒருமுறை தோற்றது' என எழுதின ஊடகங்கள். 

சச்சின் டெண்டுல்கர்

முதல் நாக் அவுட் டிராபியை வெல்ல வேண்டும் என நினைத்த ஆஸியின் கனவுக்கு முடிவுரை எழுதிவிட்டு அரையிறுதியில் நுழைந்தது இந்தியா. வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சந்தித்தது. முதலில் பேட் பிடித்த இந்திய அணி கங்குலி மற்றும் ராபின் சிங்கின் பொறுப்பான அரை சதங்களால் 242 ரன்களைக் குவித்தது. சேஸிங்கில் பட்டையை கிளப்பியது வெஸ்ட் இண்டீஸ். சீனியர் பவுலர்கள் சொதப்ப, சச்சின் டெண்டுல்கர் மீண்டும் கை கொடுத்தார். வாலெஸ் மற்றும் சந்திரபாலின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனினும் சச்சினைத் தவிர வேறு யாரும் ஒழுங்காக பந்து வீசாததால் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது  இந்தியா. 

இரண்டாவது நாக் அவுட் டிராபி கோப்பை கென்யாவில் நடைபெற்றது. அப்போது இந்திய அணிக்கு சோக காலம். தரவரிசையில் மிக மோசமான நிலையில் இருந்ததால் தகுதிச் சுற்றி விளையாடி வென்றால்தான் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறமுடியும் என அறிவித்தது ஐசிசி. தொடரை நடத்திய கென்யாவோடு தகுதிச் சுற்றில் ஆடியது. எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்று நாக்அவுட் சுற்றில் நுழைந்தது இந்திய அணி. 

முதலில் பேட்டிங் பிடித்தது இந்தியா. மெக்ராத் பந்துகளை பவுண்டரிகளுக்கும், சிக்ஸருக்கும்  அனுப்பிக் கொண்டிருந்த சச்சினை வீழ்த்தினார் பிரட் லீ.  சச்சினை வீழ்த்தியாகிற்று இனி மேட்ச் நமக்குத்தான் என நினைத்தது ஆஸி. ஆனால் அப்போது இந்திய அணியில் இடம்பெற்றிருந்த 18 வயது பையன் ஆஸியின் வேகப்பந்துகளை  உரித்தெடுத்தான். ஸ்டீவ் வாகின் எந்த திட்டமும் அந்த இளங்கன்றிடம் எடுபடவில்லை. அந்த பையன்  84 ரன்களை குவித்தான். 266 ரன்களை துரத்திய ஆஸி 245 ரன்களை மட்டுமே எடுத்தது.  அறிமுகமாகி பேட்டிங் பிடித்த முதல் போட்டியிலேயே அசத்திய அந்த இளைஞனுக்கு மேன் ஆப் தி மேட்ச் விருது கிடைத்தது. ஆஸ்திரேலியாவின் அரையிறுதிக் கனவை மீண்டும் கால் இறுதியிலேயே காலி செய்தது இந்தியா. அந்தப் போட்டிக்குப் பின்னர் பதினொன்று வருடங்கள் கடந்து நடந்த உலகக் கோப்பையில்,  மீண்டும் அதே இளைஞன் காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் கனவை குழி தோண்டிப் புதைத்தான். அந்த இளைஞன் இப்போது சூப்பர் சீனியராக இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆடுகிறார். சரியாக யூகித்துவிட்டீர்கள் தானே? ஆம், அது யுவராஜ் சிங். 

அரையிறுதியில் வலிமையான தென் ஆப்ரிக்காவை எதிர்கொண்டது இந்திய அணி. கங்குலி சதம், யுவராஜின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றின் பலனால் 295 ரன்கள் குவித்தது. தென் ஆப்ரிக்கா 200 ரன்களில் சுருண்டது. ஜான்டி ரோட்ஸின் விக்கெட்டை கைப்பற்றினார் யுவராஜ் சிங். இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை சந்தித்தது. கங்குலியும் - டெண்டுல்கரும் கூட்டணி போட்டு அசத்தலாக ஆடினார்கள். 27 வது ஓவரில் முதல் விக்கெட்டாக விழுந்தார் சச்சின். அவர் 69 ரன்கள் எடுத்தார். சச்சின் அவுட் ஆகும்போது ஸ்கோர் 141. இந்தியா 300 ரன்களைத் தாண்டும் என நினைத்தபோது அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். கங்குலி மட்டும் சதம் அடித்தார். நியூஸிக்கு இலக்கு 266 ரன்கள். இந்தியா முதல் நான்கு விக்கெட்டுகளை அடுத்தடுத்து  கைப்பற்றியது. ஆனால் கிறிஸ் கெயின்ஸ்  தனி ஆளாக நின்று சதமடித்து அணிக்கு கோப்பை பெற்றுத் தந்தார். தகுதிச்சுற்று ஆட வேண்டிய நிலைமையில் இருந்து இறுதிப்போட்டி வரை வந்த மகிழ்ச்சியோடு ஊருக்கு புறப்பட்டது இந்தியா.

2002 - சாம்பியன்

முதல் போட்டியில் ஜிம்பாப்வேயுடன் ஆடியது. முதலில் பேட்டிங் செய்தது இந்தியா. சேவாக் பவுண்டரிகளாக விளாசிக் கொண்டிருக்க மறுமுனையில் கொத்துக் கொத்தாக விக்கெட்டுகளை  அள்ளினார் ஜிம்பாப்வே பவுலர் ஹோண்டோ. ஒரு கட்டத்தில் 87/5 என நிலை குலைந்தது. பின்னர்  டிராவிட்டும் கைஃபும் இணைந்து அணியைக் காப்பாற்றினார்கள். கைஃப் சதத்தால் 288 ரன்கள் குவித்தது இந்திய அணி. ஜாகீர் கான் ஒரு பக்கம் விக்கெட்டுகளை வீழ்த்த, ஆண்டி பிளவர் வெளுத்துக் கட்டினார். அவர் களத்தில் இருக்கும்வரை, இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு குறைந்து கொண்டே போனது. 145 ரன்கள் எடுத்த ஆண்டி பிளவரின் விக்கெட்டை வீழ்த்தினார் சச்சின் டெண்டுல்கர். அந்த விக்கெட் விழுந்ததும்  போட்டியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இந்தியா, 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

இரண்டாவது போட்டியில் 270 ரன்கள் இலக்கு வைத்தது இங்கிலாந்து. சேவாக்கும் கங்குலியும் தொடக்க  வீரர்களாக களமிறங்கினர். இன்றளவும் இந்தியாவின் சிறந்த சேஸிங்கில் இதுவும் முக்கியமான போட்டி. சேவாக்கும், கங்குலியும் நாசர் ஹுசைனுக்கு கண்ணீர் வரவழைக்கும் அளவுக்கு வெளுத்துத் தள்ளினார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து 33 பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள்  அடித்தார்கள். 28.4 ஓவரில் இந்தியாவின் ஸ்கோர் 192. அப்போது முதல் விக்கெட்டாக நடையைக் கட்டினார்  சேவாக். அவர் 104 பந்துகளில் 126 ரன்கள் குவித்தார்.  ஒரு பெரும் மழை ஓய்ந்தது போல இருந்தது கேப்டன் நாசர் ஹுசேனுக்கு. ஆனால் கங்குலி, சேவாக் விட்ட இடத்தில் தொடர்ந்தார். 39.3 ஓவரில் சேஸிங்கை முடித்து அரை இறுதியில் கால் வைத்தது இந்தியா. கங்குலி 117 ரன்கள் எடுத்தார். 

இங்கிலாந்துக்கு எதிராக எப்படி  சேஸிங் செய்ய வேண்டும் என மற்ற அணிகளுக்கு சாம்பிள் காட்டிய இந்தியா,  அரை இறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சேஸிங்கில் எப்படி இலக்கை காப்பாற்ற வேண்டும் என முன்னுதாரணமாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 261 ரன்கள் குவித்தது. ஸ்மித் நான்கு ரன்களில் அவுட் ஆனார். அதன்பின்னர் கிப்ஸும் காலீசும் இணைந்து இந்திய பவுலர்களை புரட்டி எடுத்தார்கள். குறிப்பாக கிப்ஸ் பொளந்து கட்டினார். இந்திய ரசிகர்கள் பொறுமையிழந்து டிவியை ஆஃப் செய்தார்கள். 37-வது ஓவரில் தென் ஆப்ரிக்காவின் ஸ்கோர் 192/1. இன்னும் 13 ஓவர்களில் 70 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை. கிப்ஸ் காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். 39-வது ஓவரை வீச வந்தார் ஹர்பஜன் சிங். ஒரே ஓவரில் ஜாண்டி ரோட்ஸ்,  டிப்பன்னர் இருவரையும் பெவிலியனுக்கு அனுப்பினார். தடாலென மேட்ச் மாறியது. கங்குலி இறுக்கிப்பிடிக்க ஆரம்பித்தார். வேகப்பந்தை நிறுத்திவிட்டு சேவாக்கை அழைத்தார். அதன் பின்னர் கும்ப்ளேவை கூப்பிட்டார். டெண்டுல்கரை வைத்து சுழல் வலை பின்னினார். இதனால், காலிஸ் களத்தில் இருந்தாலும் பெரிய ஷாட் ஆடவில்லை. பவுச்சரும் ஒரு கட்டத்தில் அவுட் ஆக, காலிஸ், குளூஸ்னர் இணைந்தார்கள். கடைசி ஐந்து ஓவர்களில் வெற்றிக்குத் தேவை 39 ரன்கள் தான். கையில் ஆறு விக்கெட்டுகள் இருந்தன. ஆனாலும் நம்பிக்கை இழக்கவில்லை கங்குலி. 

46-வது ஓவரை  சேவாக்கிடம் தந்தார். மூன்று ரன்கள் மட்டுமே விட்டுத்தந்தார் அவர். 47-வது ஓவரை டெண்டுல்கரிடம் ஒப்படைத்தார். அவரது ஓவரில் 9 ரன்கள் எடுத்தது தென் ஆப்பிரிக்கா. சேவாக்கிடம் 48-வது ஓவரைத் தந்தார். அவர் ஐந்து ரன்கள் மட்டும் கொடுத்தார். அடுத்த ஓவரை புத்திசாலித்தனமாக ஜாகீர் கானிடம் கொடுத்தார். மிக அருமையாக வீசிய ஜாகீர் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே கொடுத்தார். அந்த ஓவரில் ஐந்து பந்துகளை சந்தித்த குளூஸ்னர் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேட்ச் இப்போது இந்தியாவின் கையில். கடைசி ஓவரில் 21 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது தென் ஆப்பிரிக்கா. 

சேவாக்கிடம் பந்தைத் தந்தார் கங்குலி. முதல் பந்தில் சிக்ஸர் வைத்தார் காலிஸ். பதறினர் இந்திய ரசிகர்கள். அடுத்த பந்திலேயே காலிஸ் அவுட். குளூஸ்னருக்கு சேவாக் பந்தை எப்படி கையாள வேண்டுமென்றே தெரியவில்லை. அடுத்த நான்கு பந்துகளில் நான்கு ரன்கள் எடுத்த கையோடு கடைசிப் பந்தில் அவுட். 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதியில் நுழைந்தது இந்தியா. ஒரு அணி எப்படி மீண்டு வர வேண்டும் என்பதற்கு உதாரணம் இந்த மேட்ச். கங்குலிக்கு சல்யூட்.

இலங்கையுடனான இறுதிப்போட்டி மழை காரணமாக இரண்டு முறை நடந்தது. இரண்டு நாள்களிலும் இந்தியாவின் பேட்டிங்கின்போது மழை பெய்யவே ஆட்டம் கைவிடப்பட்டு கோப்பை இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 

2004 : பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா 

கென்யா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றன. டெண்டுல்கர் ஆடவில்லை. கென்யாவை எளிதில் வீழ்த்தியது இந்தியா. பர்மிங்ஹாமில் நடந்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்தது இந்தியா. 73/5 என தள்ளாட்டம் கண்ட அணியை டிராவிட்டும், அகர்கரும் 200 ரன்கள் வரை அழைத்துச் சென்றார்கள். 2003 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் தோற்றதால் உண்டான காயம் ஆறாமல் இருந்தது. அதற்கு இந்த மினி உலகக் கோப்பையில் மருந்து போட்டது இன்சமாம் அணி. 27/3 என லேசாக ஆட்டங்கண்டாலும் இன்சமாம், யூசுப் யுஹானா  இணை பொறுப்பாக ஆடியது.  ரன் ரேட் எகிறிய சமயத்தில் ஷாஹித் அப்ரிடி 12 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 25 ரன்கள் குவிக்கவே பாகிஸ்தான் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 

2006 : உள்ளூரில் மோசமான ஆட்டம் 

ஐந்தாவது சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவில் நடந்தது. உள்ளூரில் நடக்கும் தொடர் என்பதால் இந்தியா சாம்பியன் ஆகும் என எதிர்பார்ப்பு இருந்தது. வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் ஒரு பிரிவில் இருந்தன. 

இந்திய அணி டிராவிட் தலைமையில் களமிறங்கியது. கங்குலி  அணியில் இல்லை. ஜாகீர்கான், கும்ப்ளேவும் சேர்க்கப்படவில்லை. பேட்டிங்கில் பலமாகவும், பவுலிங்கில் படு சுமாராகவும் இருந்தது அணிச் சேர்க்கை. 

முதல் போட்டியில் இங்கிலாந்தைச் சந்தித்தது. நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. வெஸ்ட் இண்டீசுடனான போட்டியில் இந்தியா 223 ரன்கள் மட்டுமே எடுத்தது.  பொறுமையாக விளையாடி கடைசி ஓவரில் வென்றது வெஸ்ட் இண்டீஸ். ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் இந்தியா 250 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆஸ்திரேலியா நேர்த்தியாக ஆடி 46-வது ஓவரில் வென்றது. மார்ட்டின் 73 ரன்கள் சேர்த்தார். சொந்த மண்ணில் படுதோல்வி அடைய ரசிகர்கள் சோர்ந்தனர். 

2009 : லீக் சுற்று 

ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகள் ஒரு பிரிவில் இடம்பெற்றிருந்தன. யுவராஜ் சிங், ஜாகீர் கான், சேவாக் இல்லாமல் இந்த மினி உலகக்கோப்பையில் ஆடியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் போட்டியில் 303 ரன்களை துரத்தி 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 128 ரன்கள் எடுத்த சோயிப் மாலிக் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

ஆஸ்திரேலியா இந்தியாவை புரட்டி எடுத்தது. அந்த அணி 42.3 ஓவர்களில் 234 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை வந்தது. அதன்பிறகு ஆட்டம் கைவிடப்பட்டது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் பிரவீன் குமார், ஹர்பஜன், நெஹ்ராவின் அபார பந்துவீச்சால் 129 ரன்களுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ். இந்தப் போட்டியில் தோனி இரண்டு ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட்டை எடுத்தார். விராட் கோலியின் பொறுப்பான 79 ரன்களால் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் மூன்று புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா அரை இறுதிக்குத் தகுதி பெற்றது. 

Virat Kohli dance

2013 : சாம்பியன் 

2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இருந்த சேவாக், கம்பீர், சச்சின், ஜாகீர் கான், யுவராஜ், ஹர்பஜன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இளம் படையுடன் களமிறங்கியது இந்திய அணி. ரோஹித், தவான், கோலி, ஜடேஜா, அஷ்வின், புவனேஷ்வர் குமார் என இளம் படையுடன் இங்கிலாந்து வந்திறங்கிய தோனியை யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இந்த இளம் படை சாதித்தது; சரித்திரம் படைத்தது. சீனியர்கள் வீரர்களை ஒருங்கிணைத்தும் கோப்பையை வெல்ல முடியும், இளம் வீரர்களுக்கு வழிகாட்டியும் கோப்பையை ஜெயிக்க முடியும் என உலகுக்குச் சொன்னார் தோனி. 

தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் ஆகிய அணிகள் இருந்த பிரிவில் இந்தியாவும் இருந்தது. முதல் போட்டி தென் ஆப்ரிக்காவுடன் நடந்தது. ஷிகர் தவான் அபாரமான சதம் எடுத்தார். ஜடேஜாவின் கடைசி நேர அதிரடியால் 331 ரன்கள் குவித்தது இந்தியா. டிவில்லியர்ஸ் - பீட்டர்சன் கூட்டணி அபாரமாக ஆடியது. பீட்டர்சன் ரன் அவுட் ஆகவே இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்தது. அதன் பின்னர் டிவில்லியர்ஸும் 70 ரன்களில் அவுட் ஆனார். அபாயகரமான மில்லரை ரன் எதுவும் எடுக்கும் முன்னரே ரன் அவுட் ஆக்கியது இஷாந்த் சர்மா, ரெய்னா, தோனி கூட்டணி. 154/2 என  இருந்த ஸ்கோர் 188/6  என சரிந்தது. அதன்பின்னர் வந்த மெக்லாரன் இந்திய பவுலர்களுக்கு தண்ணி காட்டினார். 61 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். ஆனால் அவருக்கு ஆதரவாக மறுமுனையில் எந்த பேட்ஸ்மேனும் சிறப்பாக ஆடாததால் 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது தென் ஆப்பிரிக்கா. 

வெஸ்ட் இண்டீஸ் 234 ரன்கள் இலக்கு வைத்தது. தவான் மீண்டும் சதம் அடித்தார். தினேஷ் கார்த்திக் அரை சதம் எடுத்தார். 40 ஓவர்களில் மேட்சை முடித்தது இந்தியா. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அபாரமாக பந்து வீசியது. விளைவு - 165 ரன்களுக்கு ஆல் அவுட். இந்தியா விளையாடும்போது 22 ஓவர்களில் 102 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. காரணம்- மழை மற்றும் டக் வொர்த் லூயிஸ் விதி. தவான் மீண்டும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 48 ரன்கள் குவிக்க, இந்தியா 20 ஓவர்களில் மேட்சை முடித்து  அரை இறுதியில் துண்டைப் போட்டது. 

அரை இறுதியில் எளிதாக இலங்கையை வென்றது இந்தியா. இஷாந்த் மற்றும் அஷ்வின் அபாரமாக பந்து வீசி தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தவே 181  ரன்களில் சுருண்டது. தோனி நான்கு ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். அசத்தல் ஃபார்மில் இருந்த தவான் 68 ரன்கள் குவித்தார். கோலி 58 ரன்கள் எடுத்தார். 35 ஓவர்களில் எளிதாக வென்றது இந்தியா. 

இறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது . மழையால் 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடந்தது. தவான் 31, கோலி 43 ரன்கள் எடுத்தனர். கார்த்திக், ரெய்னா, தோனி மூவரும் சேர்ந்து ஏழு ரன்கள் எடுத்தனர். கடைசி  நேரத்தில் ஜடேஜா அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார். இந்தியா 129 ரன்கள் எடுத்தது. சேஸிங்கில் 46/4 என தடுமாறியது இங்கிலாந்து. அதன் பின்னர் இயான் மோர்கன், பொபாரா இணை பொறுப்போடு ஆடியது. 

எளிதாக இங்கிலாந்து வென்று விடும் என எதிர்பார்த்தபோது 18-வது ஓவரில் மேஜிக் நிகழ்த்தினார் இஷாந்த் ஷர்மா. அடுத்தடுத்த பந்துகளில் மோர்கனையும், பொபாராவையும் வெளியேற்றினார். தோனி உடனே ஃபீல்டிங்கில் கிடுக்கிப்பிடி போட்டார். 19-வது ஓவரில் பட்லரை வீழ்த்தினார் ஜடேஜா. சமயோசிதமாக செயல்பட்டு ப்ரெஸ்னனை  ரன் அவுட் செய்தனர் ரோஹித் ஷர்மா மற்றும் தோனி. மேட்ச் இந்தியாவின் பிடியில் வந்தது. அந்த ஓவரில் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார் ஜடேஜா. கடைசி ஓவரை அஷ்வினிடம் ஒப்படைத்தார் தோனி. இங்கிலாந்தின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. முதல் ஐந்து பந்துகளில் 9 ரன்கள் கொடுத்தார் அஷ்வின். கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்ற நிலை. டிரெட்வெல் ஒரு ரன் கூட அடிக்கவில்லை. குதூகலித்தது இந்தியா. டி20, ஒருநாள், சாம்பியன்ஸ் டிராபி என மூன்றையும் வென்ற முதல் கேப்டன் என்ற சாதனையை படைத்தார் தோனி.

இப்போது என்ன நிலைமை ?

கடந்த காலங்களை ஒப்பிடும்போது வலுவான அணியாக இம்முறை களமிறங்குகிறது இந்திய அணி. 2002 சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு நிறைய மேட்ச் வின்னர்களைக் கொண்டிருக்கும் அணி இதுதான். அரை இறுதிக்குச் செல்லும் என எதிர்ப்பார்க்கப்படும் அணிகளில் இந்தியாவும் ஒன்று. 2015 அரை இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் மோசமாக தோற்றது இந்திய அணி. அதன்பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏழு தொடர்களில் விளையாடியிருக்கிறது. இதில் நான்கு தொடர்களில் இந்தியாவுக்கு வெற்றி (அதில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக இரண்டு தொடர்களில் வெற்றி). வலிமையான தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக தொடரை இழந்தது இந்திய  அணி. வங்கதேச மண்ணிலும் தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தது. நியூசிலாந்தை 3-2 என வீழ்த்தியதும், இங்கிலாந்தை 2-1 என வீழ்த்தியதும் மட்டுமே இந்த இரண்டு ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் இந்தியா செய்த சாதனை. 

கடந்த இரண்டு ஆண்டுகளில் 27 போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி 15 போட்டிகளில் வென்றுள்ளது, 12 போட்டிகளில் தோற்றுள்ளது.

இந்தியா

27 போட்டிகளில், 12 முறை முதலில் பேட்டிங்கும், 15 முறை சேஸிங்கிலும் விளையாடியிருக்கிறது. முதலில் பேட் பிடித்த 12 போட்டிகளில் 8-ல் இந்தியாவுக்கு வெற்றி. தோல்வி  33.33% . சேஸிங்கில் 15 போட்டிகளில்  ஏழு முறை வெற்றியும் எட்டு முறை தோல்வியையும் சந்தித்திருக்கிறது. சேஸிங்கில் இந்தியாவின் வெற்றி  46.67% . 

முதலில் பேட்டிங் பிடித்த 12 போட்டிகளில் இந்தியாவின் சராசரி ஸ்கோர் - 285.58 . குறைந்த பட்ச ஸ்கோர் - 200, அதிகபட்சம் - 381. நான்கு முறை 300 ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறது. 12 போட்டியில் இந்தியா குவித்த ஸ்கோர் விவரம் கீழே.

 

கடந்த இரண்டு ஆண்டுகளைத் திருப்பிப் பார்த்தால் பெரிய அணிகளுக்கு எதிராக  விளையாடும்போது சேஸிங்கில் கடுமையாக திணறியிருக்கிறது இந்திய அணி. கோலி மட்டுமே நம்பிக்கையளிக்கும் வீரராக இருக்கிறார். 

மிகப்பெரிய இலக்கை துரத்தும்போது இரண்டு மூன்று பேட்ஸ்மேன்கள் பொறுப்போடு ஆட வேண்டியது அவசியம். ஆனால் கோலிக்குத் தான் எப்போதும் வேலைப்பளு அதிகமாக இருந்திருக்கிறது. இப்போது கேப்டன்சி எனும் கூடுதல் வேலைப்பளுவும் அவருக்கு வந்திருக்கிறது.  சமீப இரண்டு ஆண்டுகளில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் இருவருமே பெரிய அளவில் சோபிக்கவில்லை. ரோஹித் மட்டும் பேட்டிங் பிட்ச்களில் அதிரடி காட்டியிருக்கிறார். தொடக்க வீரர்கள்  50 -100 ரன்களைச் சேர்ப்பதற்கே சிரமப்படுவதால் 10 ஓவர்களுக்குள்ளாகவே பெரும்பாலும் களத்துக்குள் வந்துவிடுகிறார் கோலி. 

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் டாப் ஆர்டர் சொதப்பியபோது கை கொடுத்தது மிடில் ஆர்டர்தான். இப்போதைய இந்திய அணியில் யுவராஜ் - தோனி என இரண்டு  சீனியர் பிளேயர் நான்கு, ஐந்து இடங்களில் களமிறங்கவுள்ளதால் சற்றே நிம்மதி அடைந்திருக்கிறார் கோலி. ஆறாவதாக களமிறங்கும் கேதர் ஜாதவ் அருமையாக ஆடி வருகிறார். அவரது ஷாட் துல்லியம் வியக்க வைக்கிறது. அவர் அழகான ஷாட்கள் ஆடுவதில்லை. கிரிக்கெட் புத்தகத்தில் இருக்கும் முறையான ஷாட்கள் அடிப்பதில்லை. அவரது பல ஷாட்கள் ஆம்லாவை நினைவுப் படுத்துவதாக இருக்கின்றன. இவருக்கு எப்படி ஃபீல்டிங் வியூகம் வகுப்பது என குழம்புகிறார்கள் ஃபீல்டர்கள். மந்தமான பிட்ச்களோ, ஸ்விங்க்குக்கு சாதகமான ஆடுகளங்களோ இல்லாமல் உலர் பிட்ச்சாக இருந்தால் கேதர் இந்தியாவுக்கு மேட்ச் வின்னராகவும், நல்ல பினிஷராகவும் திகழ்வார் என நம்பலாம். 

இந்தியா

பயிற்சி போட்டிகளில் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் இருவரும் சிறப்பாக ஆடியுள்ளார்கள். பவுலிங்கில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ் அருமையாக வீசுகிறார்கள். இதனால் பெரும் குழப்பத்தில் இருக்கிறார் கோலி. அணியில் யாரை சேர்ப்பது யாரை நீக்குவது என முடிவெடுக்க முடியாத அளவுக்கு பலரும் நன்றாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் என முடிவெடுத்தால் ஹர்திக் பாண்டியாவை அணியில் சேர்ப்பதா வேண்டாமா என முடிவெடுக்க வேண்டும். 

மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் போதும் என முடிவெடுத்தால் அதில் யாரை வெளியில் உட்கார வைப்பது என்பதிலும் சிக்கல். பும்ரா மட்டும்தான் பயிற்சிப் போட்டிகளில் சுமாராக பந்து வீசியிருக்கிறார். ஆனால் அவர் இறுதி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். மேட்ச் வின்னர். புவனேஷ்வர் குமார் நிச்சயம் அணியில் இருப்பார். முகமது ஷமி நீண்ட காலம் கழித்து இந்திய அணிக்குள் வந்திருக்கிறார். பயிற்சிப் போட்டிகளில் அசத்தியிருக்கிறார். கடைசி பத்து ஓவர்களில் விக்கெட் வீழ்த்தும் பிரதான பவுலர் ஷமி. அவரை வெளியில் உட்கார வைக்க  வைப்பதா வேண்டாமா  என குழப்பத்தில் இருக்கிறார் கோலி.  உமேஷ் யாதவ் சமீப இரண்டு வருடங்களில் இந்தியாவின் மிக முக்கியமான பவுலராக உருவெடுத்திருக்கிறார். நான்கு பேரில் அதிவேகமாக வீசக் கூடியவர் உமேஷ். நன்றாக பவுன்சரும், ஷாட் பிட்ச் பந்துகளையும் வீசுவார். ஆகவே எந்த மூன்று பேரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் சிக்கல் இருக்கிறது. 

இங்கிலாந்து மண்ணில் சுழற்பந்து சுமாராக எடுக்கும். கடந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு இறுதி ஓவர்களில் பந்து வீசியது அஷ்வினும், ஜடேஜாவும் தான். இந்த இரண்டு பவுலர்களும் ஐசிசி தரவரிசையில்  முதலிரண்டு இடத்தில் இருப்பவர்கள்.  ஒரு ஆஃப் ஸ்பின்னர், ஒரு லெக் ஸ்பின்னர்  என அம்சமாக இருக்கிறது சுழற்பந்து துறை. இவர்களுக்கு கை கொடுக்க யுவராஜ், கேதர் ஜாதவும் இருக்கிறார்கள். இப்போது கோலிக்கு தலைவலி என்னவெனில் அஷ்வின், ஜடேஜா இருவரையும் அணியில் சேர்ப்பதா அல்லது இருவரில் ஒருவரை நீக்குவதா என்பதுதான். இருவரில் யாரை நீக்குவது என்பது அடுத்த தலைவலி. 

மிடில் ஆர்டரிலும் போட்டி பலமாக இருக்கிறது. யுவராஜ் கடந்த தொடரில் அசத்தினார். தோனியின் இடத்தை யாரும் அசைக்க முடியாது. கேதர் ஜாதவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்போது போட்டிக்கு வந்திருக்கிறார் தினேஷ் கார்த்திக். யுவராஜ் சிங்கிற்கு காய்ச்சல் குணமாகவில்லையெனில் தினேஷ் கார்த்திக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  நடுத்தவரிசை, கீழ் நடுத்தர வரிசை, ஸ்பின்னர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் என எல்லாத் துறைக்கும் போட்டி கடுமையாக இருக்கிறது. இதில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது கோலிக்கு சவால் என்றாலும் அது ஒரு சுகமான சுமை. 

இந்தியாவுக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள்தான் பலவீனமாக இருக்கிறார்கள். தவான் தனது இடத்தை உறுதி செய்துவிட்டார். ரோஹித் ஷர்மா அல்லது ரஹானேவில் யாரை இறக்குவது என்பதில் குழப்பம் இருக்கிறது. இருவருமே பயிற்சிப் போட்டிகளில் சொதப்பியிருக்கிறார்கள். ஐபிஎல்லில் சுமாராக ஆடியிருக்கிறார்கள். ரோஹித் அதிரடி வீரர் என்பது ஒருபக்கம் இருந்தாலும், இங்கிலாந்து மண்ணில் ரஹானே தான் டாப் பேட்ஸ்மேன். 

தோனிக்கும் கோலிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. தோனி பொதுவாக வெற்றி பெறும் அணியில் மாறுதல்களைச் செய்யமாட்டார். ஓரிருவர் சொதப்பினாலும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பார். ஆனால் கோலியின் பாலிசி வேறு. அவர் முழு உடற்தகுதியுடன் இருப்பவர்களுக்கும், பேட்டிங் பவுலிங்கோடு பீல்டிங்கும் சிறப்பாக செய்யும் வீரர்களுக்கு வாய்ப்புத் தருவார். அணி வென்றாலும், சரியாக ஆடாத வீரர்களை மாற்றுவார். ஆகவே அவரது வியூகம் இந்த சாம்பியன்ஸ் டிராபியில் எப்படியிருக்கும் என்பதை அறிவதற்குள் ரசிகர்கள் மட்டுமல்ல எதிரணி பேட்ஸ்மேன்களும் மண்டையை பிய்த்துக் கொள்வார்கள். 

எதிர்பார்க்கப்படும் லெவன் :- 

ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, கேதர் ஜாதவ், ரவிச்சந்திர அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்பிட் பும்ரா. 

12-வது வீரர் - ஹர்திக் பாண்டியா 

INDIA

லீக் சுற்றில் இந்திய அணியானது பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை ஆகிய அணிகளுடன் விளையாடுகிறது. இதில் பாகிஸ்தான் மிகவும் ஆபத்தான அணி. இந்தியா சமீப காலங்களில் இளம் வீரர்கள் நிறைந்த பாகிஸ்தான் அணியுடன் நிறைய போட்டிகளில் விளையாடாததால் எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியம். யுவராஜ், கோலி, தவான் இந்த மூவரும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடுவார்கள் என நம்பலாம். பும்ராவின் துல்லியமான யார்க்கர்களுக்கு பாக் பேட்ஸ்மேன்கள் விடை சொல்ல வேண்டும்.

இலங்கை சற்றே பலவீனமாக இருக்கிறது. நேர்த்தியாக ஆடினால் நிச்சயம் எளிதாக வெல்ல முடியும். தென் ஆப்ரிக்கா அணி மிகவும் பலமானது. எனினும், சாம்பியன்ஸ் டிராபியில் அந்த அணி இந்தியாவிடம் தோற்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. கடைசி ஓவர் வரை மேட்ச்சை இழுத்துச் சென்றால் தென் ஆப்ரிக்காவை வீழ்த்துவதும் சாத்தியமே.

இந்திய அணிக்கு நிறைய சாதகமான விஷயங்கள் இருந்தாலும்கூட, போட்டி விளையாடும் அன்று எதிரணியில் யாரவது ஒரு மேட்ச் வின்னர் சிறப்பாக ஆடினால்கூட போட்டி முடிவுகள் மாறலாம். லீக் சுற்றோடுகூட வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படலாம். அரையிறுதி வரை பாதுகாப்பாக சென்றுவிட்டால், அதன்பிறகு தோனி - யுவராஜ் இணையின் அனுபவம் கோலிக்கு கைகொடுக்கும். இந்த முறை கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படும் டாப் - 3 அணிகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியா ஒன்றாவது இடத்துக்கு வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். கோலி, யுவராஜ், தோனி என மூன்று பேரின் கரியரை முடிவு செய்யும் தொடராக இது அமையும். அது நல்லபடியாகவே அமைய நம் வாழ்த்துகளை பகிர்வோம்.


டிரெண்டிங் @ விகடன்