வெளியிடப்பட்ட நேரம்: 20:08 (31/05/2017)

கடைசி தொடர்பு:22:44 (31/05/2017)

ஸ்பெயினில் மெஸ்சி... மற்ற நாடுகளில் யார் டாப்? 2016-17 சீஸன் டாப் ஸ்ட்ரைக்கர்கள்!

கால்பந்து உலகின் 2016 - 17 ஆண்டுக்கான சீஸன் முடிந்துவிட்டது. இந்த சீஸனில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. பல இளம் திறமையாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனுபவ வீரர்களும் இளம் வீரர்களும் கலந்துகட்டி கலக்கிய  2016 - 17 சீஸனின் டாப் - 5 கோல் ஸ்கோரர்கள் பற்றிய விவரம் இங்கே...

லியோனல் மெஸ்சி – லா லிகா – ஸ்பெயின்

மெஸ்சி

உலகின் நம்பர் - 1 வீரரான லியோனல் மெஸ்சிதான் ஸ்பெயின் நாட்டின் இந்த வருட லா லிகா தொடரின் டாப் ஸ்கோரர். பார்சிலோனா அணியின் அடையாளமான இவர், அர்ஜென்டினா தேசிய அணியையும் தோள்களில் சுமப்பவர். பந்தை முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்து டிரபிளிங் செய்து எதிரணி வீரர்களை ஏமாற்றி கோல் அடிக்கும் மந்திரக்காரர். எவ்வளவு தூரம் இருப்பினும் துல்லியமாகக் கோல் அடித்து ரசிகர்களை மகிழ்விப்பவர். மெஸ்சியின் கால்பந்து வாழ்க்கை, இந்த சீஸனில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

பார்சிலோனா அணியின் பரம எதிரியான ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில்தான் பார்சிலோனா அணிக்காகத் தன் 500-வது கோலைப் பதிவுசெய்தார் இந்த லிட்டில் மாஸ்டர். நூலிழையில் சாம்பியன் பட்டம் ரியல் மாட்ரிட் அணிக்குச் சென்றாலும்கூட, தங்க ஷூ விருதைத் தட்டிப் பறித்திருக்கிறார் மெஸ்சி. இந்த சீஸனில் ஒட்டுமொத்தமாக 51 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்சி, 53 கோல்கள் அடித்துள்ளார். மேலும் 15 கோல்கள் அடிக்க உதவிசெய்துள்ளார். 176 முறை வெற்றிகரமாக டிரிபிளிங் செய்துள்ள இவர், 100 முறை துல்லியமாக கோல் கம்பத்தை நோக்கி பந்தை அடித்திருக்கிறார். 1,865 வெற்றிகரமான பாஸ்களும் 113 கீ பாஸ்களும் இவரின் பங்களிப்பு. ஸ்டிரைக்கர்களே கோல் அடிக்கத் திணறும் நிலையில் பல போட்டிகளில் மிட்ஃபீல்டர் இடத்தில் களம் கண்ட மெஸ்சி இந்த வருட டாப் ஸ்கோரரானது வியக்கத்தக்க விஷயம். 

  மெஸ்சி

ஹாரி கேன் -பிரீமியர் லீக்- இங்கிலாந்து


Harry kane

இங்கிலாந்தின் இளம்புயல் ஹாரிதான் இந்த வருட பிரீமியர் லீக்கின் டாப் ஸ்கோரர். வளர்ந்து வரும் இளம் திறமைசாலியான இவர் இந்த வருடத்தின் ஆச்சர்ய பெர்ஃபார்மர். ஸ்பர்ஸ் அணியின் ஸ்ட்ரைக்கரான இவரின் பலம் அசாத்திய வேகம். தனது வேகமான ஷாட்டுகளை துல்லியமாக அடித்து கவனத்தை ஈர்ப்பவர். ஸ்பர்ஸ் அணியை இரண்டாமிடம் பெறச்செய்த வீரர்களுள் முக்கியமானவர். சாம்பியன் பட்டத்தை செல்சீ அணி கைப்பற்றினாலும் அனைவரது கவனத்தையும் தன்பால் ஈர்த்தவர். இந்த சீஸனில் ஒட்டுமொத்தமாக 39 போட்டிகளில் விளையாடியுள்ள ஹாரி 36 கோல்கள் அடித்துள்ளார். மேலும் 7 கோல்கள் விழ உதவியுள்ளார். 42 முறை வெற்றிகரமாக டிரிபிளிங் செய்துள்ள இவர் 72 முறை துல்லியமாகப் பந்தை கோல் கம்பத்தை நோக்கி அடித்திருக்கிறார். 561 வெற்றிகரமான பாஸ்களும் 54 கீ பாஸ்களும் இவரின் பங்களிப்பு ஆகும். ஸ்லடான் இப்ராஹிமோவிச் , அலெக்சிஸ் சான்செஸ் , ஹசார்ட் என மூத்த வீரர்களை ஓவர்டேக் செய்து இவர் பிரீமியர் லீக்கின் டாப் ஸ்கோரரானது இந்த சீஸனின் முக்கியமான  நிகழ்வு.

 

பியொ எமெரிக் அபாமெயங் – பண்டெஸ்லிகா- ஜெர்மனி

Pierre Emerick Aubameyang

கபான் நாட்டைச் சேர்ந்த அபாமெயங் ஜெர்மனியின் பெருந்தலையான புருஷியா டோர்ட்மண்ட் அணியின் ஸ்ட்ரைக்கர். இவர்தான் இந்த சீஸனில் பண்டெஸ்லிகா டாப் ஸ்கோரர். கூலான ஸ்டிரைக்கரான இவர் சிப் ஷாட்டுகளுக்கு பெயர்போனவர். தலையால் முட்டி பந்தை வலைக்குள் அனுப்புவது இவருக்கு விருப்பமான ஒன்று. அதையும் தாண்டி இவரது கோல் செலிபிரேசன் பிரசித்தி பெற்றது. ஃப்ரண்ட் ஃப்லிப், ஸ்பைடர்மேன் பேட்மேன் மாஸ்க் என ஜாலி காட்டுவார். இந்த சீஸனில் ஒட்டுமொத்தமாக 45 போட்டிகளில் விளையாடியுள்ள அபாமெயங் 35 கோல்கள் அடித்துள்ளார். 5 கோல்கள் அடிக்க துணைசெய்துள்ளார். 23 முறை வெற்றிகரமாக டிரிபிளிங் செய்துள்ள இவர் 82 முறை துல்லியமாகப் பந்தை கோல் கம்பத்தை நோக்கி அடித்திருக்கிறார். 494 வெற்றிகரமான பாஸ்களும் 37 கீ பாஸ்களும் இவரின் பங்களிப்பு ஆகும். பேயெர்ன் முனிச் அணியின் கோல் மெஷினான ராபர்ட் லெவெண்டோஸ்கியை ஓவர் நைட்டில் ஓவர்டேக் செய்து டாப் ஸ்கோரர் லிஸ்ட்டில் இடம்பெற்றது இவரின் அதிர்ஷ்டம்.

எடின் ஜெக்கோ- சீரி ஏ- இத்தாலி

Edin Dzeko

ரோமா இத்தாலி நாட்டின் முக்கியமான அணிகளுள் ஒன்று. அந்த ரோமாவின் முக்கியமான ஸ்டிரைக்கர்களுள் ஒருவர்தான் இந்த போஸ்னியா அண்ட் ஹெர்ஜிகோவினா நாட்டைச் சேர்ந்த எடின் ஜெக்கோ. 193 செ.மீ உயரமுள்ள இவர் கவுன்ட்டர் அட்டாக் ஸ்பெசலிஸ்ட். சிப் ஷாட்டுகள் இவரின் பலம். பந்தை எளிதாக இவரிடமிருந்து பறிப்பது இயலாத காரியம். சமயங்களில் கோல் கீப்பரைக் கூட ஏமாற்றி கோல் அடித்து அசத்துவார். இந்த சீஸனில் ஒட்டு மொத்தமாக 50 போட்டிகளில் விளையாடியுள்ள ஜெக்கோ 38 கோல்கள் அடித்து, 9 கோல்கள் அடிக்க உதவிசெய்துள்ளார். 60 முறை வெற்றிகரமாக டிரிபிளிங் செய்துள்ள இவர் 103 முறை பந்தை துல்லியமாக கோல் கம்பத்தை நோக்கி  அடித்துள்ளார். 730 வெற்றிகரமான பாஸ்கள் செய்துள்ளார். இதில் 45 கீ பாஸ்களும் அடக்கம். யுவென்டஸ் மற்றும் நேபோலி அணிகளின் திறமையான ஸ்டிரைக்கர்களை முந்தி இவர் டாப் ஸ்கோரரானது இவரின் திறமைக்குச் சான்று.

 

எடின்சன் கவானி – லீக் ஒன் – பிரான்ஸ்

Edinson Cavani
 

உருகுவேயின் ஆக்ரோசமான வீரரான எடின்சன் கவானி தான் பிரான்ஸின் முன்னாள் சாம்பியனான பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியின் பிரதான ஸ்ட்ரைக்கர். இந்த சீஸனில் கோல் மழை பொழிந்து லீக் -1 தொடரின் டாப் ஸ்கோரரானார். ஃபினிஷிங்கில் வெரைட்டியாய் விருந்து படைக்கும் இவர் தூரத்திலிருந்து துல்லியமாக அடிக்கும் லாங் ரேஞ்ச் கோல், பைசைக்கிள் கிக் என அசத்துவார். தலையால் முட்டி கோல் அடிப்பதிலும் கவுண்ட்டர் அட்டாக்கிலும் கில்லி. சிப் ஷாட்டுகள் ராக்கெட்வேக ஷாட்கள் என ரவுண்டு கட்டி அடிப்பவர். இந்த சீஸனில் ஒட்டுமொத்தமாக 49 போட்டிகளில் விளையாடியுள்ள கவானி 49 கோல்கள் அடித்துள்ளார். 6 கோல்கள் விழ துணைபுரிந்துள்ளார். 11 முறை வெற்றிகரமாக டிரிப்பிளிங் செய்துள்ள இவர் 91 முறை பந்தை துல்லியமாக கோல் கம்பத்தை நோக்கி அடித்துள்ளார். சக ஸ்டிரைக்கர் ஸ்லடான் இப்ராஹிமோவிச் இந்த வருடம் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மாறிய பின்பு கிடைத்த அருமையான வாய்ப்பினை பயன்படுத்தி இந்த சீஸனின்  டாப் ஸ்கோரராக உயர்ந்திருக்கிறார்.


 

மு.சசிக்குமார்