வெளியிடப்பட்ட நேரம்: 12:59 (01/06/2017)

கடைசி தொடர்பு:18:34 (01/06/2017)

அந்த பாக்ஸை டிக் செய்து இங்கிலாந்து சாம்பியன் ஆகுமா? - சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? - மினி தொடர் 8

Champions trophy

இந்தத் தொடரின் முந்தைய பாகங்களைக் காண, இங்கே க்ளிக் செய்யவும். 

1. ஆஸ்திரேலியா   2. வங்கதேசம் 3. பாகிஸ்தான் 4. நியூசிலாந்து  5. இலங்கை  6. தென் ஆப்ரிக்கா  7. இந்தியா 

கிரிக்கெட்டை கண்டுபிடித்ததாக பெருமை கொண்டாடுவது என்னவோ இங்கிலாந்து மக்கள்தான். ஆனால் இன்னமும் ஒருநாள் ஃபார்மெட்டில் ஒரு கோப்பை கூட ஜெயிக்கவில்லை. ஆஷஸ் ஜெயிச்சாச்சு, இந்தியாவில் தொடரை வென்றாயிற்று, தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை ஜெயித்தாயிற்று, டி20  உலகக் கோப்பை ஜெயித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தாகிவிட்டது. இன்னமும் இங்கிலாந்து டிக் அடிக்காத ஒரு பாக்ஸ் ஐசிசி நடத்தும் ஒருநாள் தொடரில் கோப்பையை வெல்வது மட்டும்தான். இங்கிலாந்து அணி அந்த பாக்சிலும் டிக் அடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட ஒரு தலைமுறையே இப்போது சீனியர் சிட்டிசனாகிவிட்டது. இம்முறையாவது  அந்த பாக்ஸை டிக் செய்யுமா இங்கிலாந்து? 

ENGLAND

சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை மூன்றுமுறை அரை  இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கிறது. இரண்டுமுறை இறுதிச் சுற்றுக்கு வந்திருக்கிறது. ஆனால் சாம்பியன் பட்டம் கிடைக்கவில்லை. கடந்தமுறை தொடர் நடந்தது இங்கிலாந்தில்தான், இறுதிப்போட்டி வரை வந்தது. இறுதிப்போட்டியில் இறுதி ஓவர்கள் வரை வந்தது. ஆனால் இறுதிப் பந்தில்கூட வெற்றிபெற வாய்ப்பிருந்தும் கோட்டை விட்டது. கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில்கூட கடைசி நேரத்தில் நம்பவே இயலாத வகையில் வெற்றியைக் கோட்டை விட்டது இங்கிலாந்து அணி. முதலில் சில புள்ளி விவரங்களைத் தெளிவாகப் பார்ப்போம். 

 1. 2015 உலகக் கோப்பைக்குப் பிறகு 12 தொடர்களில் ஆடியுள்ளது. அதில் ஒரு தொடர் மழை காரணமாக நடைபெறவில்லை. விளையாடிய 11 தொடர்களில் எட்டு முறை கோப்பையை வென்றது  

2. கடந்த இரண்டு ஆண்டுகளில் 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறது இங்கிலாந்து. வேறு எந்த அணியும் இந்த அளவுக்கு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவில்லை. 44 போட்டிகளில் மூன்று  போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை. முடிவு கிடைத்த 41ல் 27 போட்டிகளில் வெற்றியும், 14 போட்டிகளில் தோல்வியும் அடைந்திருக்கிறது. வெற்றி சதவிகிதம் - 65.85. கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக வெற்றி சதவிகிதம் வைத்திருக்கும் அணி இங்கிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது.

WIN/LOSE

3. முடிவு கிடைத்த 41 போட்டிகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதில், 22 முறை முதலில் பேட்டிங் செய்திருக்கிறது. இதில் 14 போட்டிகளில் வென்றுள்ளது. தோல்வி சதவிகிதம் - 36.36 

சேஸிங் செய்த 19 போட்டிகளில் 13ல் வெற்றியும், ஆறு போட்டிகளில் தோல்வியையும் தழுவியிருக்கிறது. சேஸிங்கில் வெற்றி சதவிகிதம் - 68.42 . சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் மற்ற ஏழு அணிகளை விடவும் சேஸிங்கில் அதிக வெற்றி குவித்திருப்பது இங்கிலாந்து மட்டுமே.

4. உள்ளூரில் நடந்த ஒருநாள் தொடர்களில் ஆஸ்திரேலியாவிடம் மட்டுமே தோல்வியைத் தழுவியிருக்கிறது. தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் என மற்ற அணிகளை எளிதாக வென்றது. அயல் மண்ணில் தென் ஆப்ரிக்கா மற்றும் இந்திய அணிகளிடம் தோல்வியைத் தழுவியது.

5. நியூசிலாந்து , பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இந்தியா  என பெரிய அணிகள் தங்களது ஊருக்கு வந்தபோதெல்லாம் தொடரை வென்று அதிர்ச்சியளித்தது வங்கதேசம் அணி. இங்கிலாந்து அணி அங்கே சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஒரு போட்டியில் வங்கதேசத்திடம் தோற்றது. ஆனால் அதன்பிறகு தொடரை ஜெயித்தது இங்கிலாந்து. தனது நாட்டில் அடக்க முடியாத காளையாக வளைய வந்த வங்கதேசத்தை அங்கே சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து தான் அடக்கியது.

ENGLAND

6.  ஒருநாள் போட்டிகளில் முன்னூறு ரன்கள் என்பதை இடது கையால் டீல் செய்கிறது மோர்கன் அணி. கடைசி இரண்டு ஆண்டுகளில் முதலில் பேட்டிங் பிடித்த 22 போட்டிகளில் 16 முறை முன்னூறு ரன்களுக்கு மேல் குவித்து வியக்க வைத்திருக்கிறது. சராசரி - 306.13. குறைத்த பட்சம் 138 ரன்களையும், அதிகபட்சமாக ஒரே போட்டியில் 444 ரன்களையும் குவித்திருக்கிறது.

இந்தப் புள்ளிவிவரங்களை கவனமாக கவனித்திருந்தால், இங்கிலாந்து கடந்த இரண்டு வருடங்களில் மிகப்பெரிய மாற்றத்தை அடைந்திருப்பதை உணர முடியும். 2015 உலகக் கோப்பையில் கால் இறுதிக்குக்கூட தகுதி பெறாமல் படுதோல்வியடைந்த இங்கிலாந்து, அதன்பின்னர் வேறு லெவல் அணியாக உருவெடுத்திருக்கிறது. அணியில் இளம் வீரர்களை அதிகளவில் சேர்த்திருக்கிறது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பல்வேறு மாறுதல்களைச் செய்திருக்கிறது. ஸ்டூவர்ட் பிராடு, ஆண்டர்சன் போன்ற சீனியர்களை டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் பயன்படுத்த ஆரம்பித்தது. ஒருநாள் போட்டிக்கு விளையாடும் ஃபார்மெட்டை தகர்த்து அதிரடி பாணியை கடைபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இங்கிலாந்து 350 ரன்கள் எடுப்பது ஆச்சர்யமில்லாத விஷயம் என்பதை மனதில் விதைத்திருக்கிறது. இப்போது நாங்கள் பலமிக்க அணி என்பதை உலகுக்கு உணர்த்தியிருக்கிறது. இரண்டே ஆண்டுகளில் இப்படியொரு மாற்றம் ... 'வாவ்' . சந்தேகமில்லை இந்த முறை சாம்பியன் ரேஸில் டாப்-3 இடங்களுக்குள் இங்கிலாந்துக்கும் இடம் உண்டு. 

ஏற்கெனவே இரண்டு முறை சாம்பியன்ஸ் டிராபி நடத்தியுள்ளது இங்கிலாந்து. இரண்டு முறையும் தோற்றது. இப்போது சாம்பியன்ஸ் டிராபி நடப்பதும் இங்கிலாந்தில்தான். 2019 உலகக் கோப்பை நடக்கப்போவதும் இங்கிலாந்து மண்ணில்தான். மோர்கன் அணியின் உச்சப்பட்ட இலக்கு 2019 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டிதான். அந்த கிளைமாக்ஸில் பார்வையாளர்களை பரவசப்படுத்தி தங்களது நாட்டு ரசிகர்களை தலை நிமிரச்செய்ய வேண்டும் என்பது  ஆசை... லட்சியம்... இலக்கு. அதற்கு டிரைலர்தான் இந்த சாம்பியன்ஸ் டிராபி. இந்த கோப்பையை வென்றால் பெரும் தன்னம்பிக்கை கிடைக்கும் என நம்புகிறது இங்கிலாந்து அணி. 

இங்கிலாந்து

அணி எப்படி இருக்கிறது? 

தென் ஆப்ரிக்காவுக்கு அடுத்தபடியாக பக்கா காம்பினேஷனில் அமைத்திருப்பது இங்கிலாந்து அணிதான். ஏகப்பட்ட ஆல்ரவுண்டர்கள், வெளுத்துக்கட்டும் அதிரடி வீரர்கள் என பலமிக்க அணியாக உருவெடுத்திருக்கிறது. இங்கிலாந்து அணியின் தற்போதைய ஒரே கவலை ஓப்பனிங்தான். அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ராய் இருவரும் கடந்த சில ஒருநாள் போட்டிகளில் சொதப்பித் தள்ளியிருக்கிறார்கள். சேவாக்கை போல முதல் பந்தில் இருந்தே விளாசல் ஆட்டத்தை கடைபிடிக்கும் ஜேசன் ராய் சீக்கிரமே ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள் இங்கிலாந்து ரசிகர்கள். முக்கியமான போட்டிகளில் மேட்ச் வின்னராக திகழக்கூடியவர்  ராய். அவர் ஃபார்முக்கு திரும்பினால் நானூறு ரன்கள் இலக்கு என்றாலும் எளிதாக சேஸ் செய்யும் இங்கிலாந்து. 

ஜோ ரூட் அற்புதமான பேட்ஸ்மேன். இங்கிலாந்தின் மொத்த ஸ்கோரில் 70-80 ரன்களை அவர் குத்தகைக்கு எடுத்து விடுகிறார். எவ்வளவு மோசமான பிட்ச்சாக இருந்தாலும் சரி, எதிரே எப்பேர்ப்பட்ட பவுலராக இருந்தாலும் சரி அனாயசமாக அரை சதம் விளாசும் ரூட் அதைச் சதமாக மாற்றுவதிலும், கடைசிவரை களத்தில்  நின்று அணிக்கு வெற்றியைத் தேடி தருவதிலும் கோட்டை விடுகிறார். விராட் கோலி - கேன் வில்லியம்சன் - ஸ்டீவன் ஸ்மித் - ஜோ ரூட் இந்த நான்கு பேர்தான் இனி கிரிக்கெட் உலகை ஆளப் போகும் ஆகச்சிறந்த பேட்ஸ்மேன்கள். டெஸ்டில் அசத்தும் ரூட், ஒருநாள் போட்டிகளிலும் இந்த நால்வரில் நம்பர் ஒன்னாக வரவேண்டும் எனில், அதற்கு அவரது யுக்திகளில் மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை இந்த சாம்பியன்ஸ் டிராபியிலேயே கொண்டு வந்து பல புதிய உயரங்களை தொடுவார் என எதிர்பார்க்கலாம்.

இயான் மோர்கன் 2015- 16 கால கட்டத்தில் திணறினார். அதன்பிறகு பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்தார். குறிப்பாக சுழற்பந்துகளை எதிர்கொள்வதற்கு சிறப்பு பயிற்சிகளை எடுத்துக் கொண்டார். கடந்த ஓராண்டாக அவரும் நல்ல பார்மில் இருக்கிறார். அடித்து நொறுக்க ஆரம்பித்திருக்கிறார். கடைசிவரை நிலைத்து நின்று ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பது மோர்கனுக்கு பிடித்தமான விஷயம். இம்முறை இறுதிவரை அணியை அழைத்துச் சென்று கோப்பையை பெற்றுத்தர ஆர்வமாக இருக்கிறார். 

பென் ஸ்டோக்ஸ் வேற லெவல் ஆல்ரவுண்டராக உருவெடுத்திருக்கிறார். பிளிண்டாப்புக்குப் பிறகு இப்போதுதான் கிரிக்கெட் உலகம் இப்படியொரு சிறந்த  ஆல்ரவுண்டரை கண்டுள்ளது. மெதுவாக பந்துகளை வீசுவதில் வல்லவர் ஸ்டோக்ஸ். கடந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பையில் இவரது இறுதி ஓவரில்தான் நான்கு சிக்ஸர்கள் விளாசினார் பிராத்வெயிட். சிக்ஸர் மழை பொழிந்த பிராத்வெயிட் இன்று தடுமாறிக் கொண்டிருக்கிறார். கோப்பையை தாரை வார்த்தது மட்டுமன்றி, ரசிகர்களின் கனவையும் கடைசி நேரத்தில்  கலைத்த ஸ்டோக்ஸ் பெருத்த சோகம் அடைந்தார். தோல்விகள் அவரைச் செதுக்கின. அதன்பின்பு தேர்ந்த ஆல்ரவுண்டராக மிளிர்கிறார். இப்போது செம ஃபார்மில் இருக்கிறார். ஐபிஎல்லில் அசத்திய கையேடு தென் ஆப்ரிக்காவின் வலுவான பந்துவீச்சை நொறுக்கித்தள்ளி சதமடித்திருக்கிறார். அவர் இன்னமும் பல உயரங்கள் செல்வார். அதற்கு இந்த சாம்பியன்ஸ் டிராபி முதல் படிக்கட்டாக இருக்கட்டும். 

இங்கிலாந்து

ஜாஸ் பட்லர் அதிரடி வீரர், நல்ல விக்கெட் கீப்பர், நல்ல ஃபினிஷர். ஜானி பேர்ஸ்டோ  அணியின் சூழ்நிலை உணர்ந்து பொறுப்பாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன். சுழற்பந்தை நன்றாக கையாளக்கூடியவர். பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம்பெறும் பட்சத்தில் இந்த இருவரில் ஒருவரை மட்டுமே தேர்ந்தெடுப்பார் மோர்கன். அது ஜாஸ் பட்லராகத்தான் இருக்கும். மிகச்சிறந்த வீரராக இருந்தாலும் பெஞ்சில் உட்கார வேண்டிய சூழ்நிலை பேர்ஸ்டோவுக்கு!

மொயின் அலி - அடில் ரஷீத் கூட்டணி மினி அஷ்வின் - ஜடேஜா கூட்டணி. மொயின் அலி அட்டகாசமான ஆல்ரவுண்டர். ரஷீத் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் படைத்தவர். இந்த இருவரிடமும் இருக்கும் ஒரு மைனஸ் என்னவெனில்  ரன்களை வாரி வழங்குவதே. இங்கிலாந்தின் தட்பவெட்ப மாறுதல்களைப் புரிந்து அதற்கேற்ற லைனில் பந்துவீசக்கூடியவர்கள் என்பதால் அணிக்கு பலம் பெருவாரியாக கூடுகிறது.

வேகப்பந்து துறையில் கிறிஸ் வோக்ஸ், ஜேக் பால், டேவிட் வில்லி, ஸ்டீவன் ஃபின், மார்க் வுட்  இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே நல்ல வீரர்கள். வோக்ஸ், வில்லி, மார்க் வுட் இப்போதைக்கு அணியில் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐவரும் ரன்களை அதிகம் விட்டுத்தரக் கூடியவர்கள் என்பது பெரிய மைனஸ். இதுவே இங்கிலாந்து அணிக்கு போட்டி முடிவுகளில் பாதகமாகவும் அமைந்து விடக்கூடும். 

எதிர்பார்க்கப்படும் லெவன் :-

ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், இயான் மோர்கன் (கேப்டன்), ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, அடில் ரஷீத், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்

இங்கிலாந்து

அணியின் மைனஸ் : -

தென் ஆப்ரிக்காவைப் போல திடீர் பதற்றத்தில் தவறு செய்பவர்கள் கிடையாது. துரதிர்ஷ்டமாக மழையோ, டக் வொர்த் லூயிசோ கனவுகளை சிதைப்பது கிடையாது. பின்னர் எப்படி இங்கிலாந்து இன்னமும் ஒருநாள் ஃபார்மெட்டில் ஒரு கோப்பையைக்கூட வெல்ல முடியாமல்  தடுமாறுகிறது என இன்னமும் கிரிக்கெட் ஆர்வலர்கள் பி.ஹெச்டி செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு காரணத்தை நாம் குறிப்பிட்டுச் சொல்லலாம். அது அவர்களிடம் தொழில் நேர்த்தி இல்லை என்பதே. இம்முறை சாதகமான அம்சங்கள் அதிக சதவிகிதமும் பாதகமான அம்சங்கள் மிகக்குறைந்த சதவிகிதமும் உள்ளன.  இந்தத் தொடரைவிட கோப்பையை வெல்ல மிகச்சிறந்த வாய்ப்பு தென் ஆப்ரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இனி கிடைக்குமா என்பது கேள்விக்குறி. 

லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசத்தை சந்திக்கிறது இங்கிலாந்து. ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை, ஆஸ்திரேலியாவுடன் வெற்றி சதவிகிதம் வெறும் 39.09 மட்டுமே. நியூஸிலாந்துடனும் வெற்றி சதவிகிதம் 46.83 தான். வங்கதேசத்துக்கு எதிராக மட்டும் 78.94% போட்டிகளில் வென்றுள்ளது. ஆஸ்திரேலியை வீழ்த்துவது எளிதல்ல. அவர்களுக்கு இங்கிலாந்தின் தட்பவெட்ப மாற்றம் பரிச்சயம். நியூசிலாந்தும் இப்போது பலமிக்க அணியாக உருவெடுத்திருக்கிறது. எனினும் சேஸிங்கில் அவர்கள் சற்றே சொதப்புவதால்  இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். வங்கதேசம் அபாயகரமான அணி. தங்களை விட பலம் குறைந்த அணிகளிடம் முக்கியமான தொடரில் தோற்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது இங்கிலாந்து. கடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரைப் போல இன்று நடக்கும் போட்டியிலும் வங்கதேசம் அசத்தல் ஆட்டம் ஆடினால், இங்கிலாந்துக்கு அரை இறுதி கனவே அம்பேல்!