'சிப்' பேட்... பிட்ச் ரிப்போர்ட் ட்ரோன்... சாம்பியன்ஸ் டிராபி 'எந்திரன்கள்'! | Intel Introduces some Technologies to enhance ICC Champions Trophy 2017

வெளியிடப்பட்ட நேரம்: 16:47 (01/06/2017)

கடைசி தொடர்பு:16:50 (01/06/2017)

'சிப்' பேட்... பிட்ச் ரிப்போர்ட் ட்ரோன்... சாம்பியன்ஸ் டிராபி 'எந்திரன்கள்'!

2003-ம் ஆண்டு நடந்த கிரிக்கெட் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 'இந்த முறை எப்படியும் இந்தியா உலகக்கோப்பையை ஜெயிக்கும்' என்ற இந்திய ரசிகர்களின் ஆசையை, ஆஸ்திரேலிய அணி தவிடு பொடியாக்கியது. ஆனால், மேட்ச் முடிந்த சிறிது நேரத்தில் 'ரிக்கி பாண்டிங் பேட்ல ஸ்ப்ரிங் வச்சிருந்தானாம். அதனாலதான் சதம் அடிச்சு விளாசிட்டான். மேட்ச் முடிஞ்சதும் அம்பயர், பேட்ட வாங்கிப் பார்த்தாரு. ஃபைனல் மறுபடியும் நடக்கப் போகுதாம்' என வதந்தி ஒன்று மின்னல் வேகத்தில் பரவத் தொடங்கியது. ரிக்கி பாண்டிங் பேட்டில் ஸ்பிரிங் இருந்ததாக அப்போது சொல்லப்பட்டது என்னவோ வதந்தி தான். ஆனால், இன்று தொடங்கும் சாம்பியன்ஸ் டிராஃபி  தொடரில், 'சிப்' பொருத்தப்பட்ட பேட் உடன் தான் பல பேட்ஸ்மேன்களும் களமிறங்கப் போகிறார்கள்.

கிரிக்கெட் - ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடர், இன்று இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இன்னும் 18 நாள்களுக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சாம்பியன்ஸ் டிராஃபி ஜுரம் அடிக்கும். எங்கள் நாடுதான் வெற்றி பெறும் என எட்டு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களும் இப்போதே சோஷியல் மீடியாக்களில் ஆர்ப்பரிக்கத் தொடங்கிவிட்டனர். சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின், 'இன்னொவேஷன் பார்ட்னர்' ஆக தொழில்நுட்ப நிறுவனமான இன்டெல், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

புதுப்புது டெக்னாலஜிகளை உடனுக்குடன் அறிமுகப்படுத்தி, கிரிக்கெட் தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. உலகில் நடக்கும் வேறு எந்த விளையாட்டுகளை விடவும், கிரிக்கெட்டில் தான் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அதிக அளவில் அறிமுகமாகியிருக்கின்றன. தேர்ட் அம்பயர் கான்சப்ட்டில் தொடங்கி சமீபத்தில் அறிமுகமான எல்.ஈ.டி ஸ்டம்புகள் வரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அந்த வரிசையில், 'சிப்' வைத்த பேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப விஷயங்களை, இன்டெல் நிறுவனம் இன்று தொடங்கும் சாம்பியன்ஸ் டிராஃபியில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

 

பேட்களில் 'சிப்' :

இன்டெல் - பேட் சென்சார்


சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியில் இருந்தும், 2 முதல் 5 வீரர்கள் வரை தங்களது பேட்களில் இன்டெல் வழங்கும் சிப்களைப் பொருத்தி உள்ளனர். இதற்காக ஒவ்வொரு அணியில் இருந்தும், வீரர்களின் பெயரை பரிந்துரைக்கும்படி ஐ.சி.சி. வலியுறுத்தியிருந்தது. இந்திய அணியின் சார்பாக ரோஹித் சர்மா, ரஹானே மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரது பேட்களில் இந்த சிப் பொருத்தப்பட்டுள்ளது. 'Speculur BatSense' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பமானது பேட்ஸ்மேன்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும். பேட்டை சுழற்றும் வேகம், பேக்-லிஃப்ட் ஆங்கில், ரியாக்சன் டைம், ஒரு வீரரின் அதிகபட்ச பேட் சுழற்றும் வேகம், பேட்டில் பட்டதும் பந்து எவ்வளவு வேகத்தில் சென்றது போன்ற தகவல்களை இந்தத் தொழில்நுட்பம் அக்குவேர் ஆணிவேராகத் தெரிவிக்கும். எதிர்காலத்தில் இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வீரர்களின் பேட்டிங் ஸ்டைலில் பயிற்சியாளர்களால் சின்னச்சின்ன மாற்றங்களைச் செய்யவும் முடியும்.

 

பிட்ச் ரிப்போர்ட் சொல்லும் ட்ரோன் :

Intel Drone

மேட்ச் தொடங்குவதற்கு முன், அந்த மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானதா இல்லை பவுலிங்குக்கு சாதகமானதாக இருக்குமா என்பதைப் பற்றி பிட்ச் ரிப்போர்ட் சொல்வது வழக்கம். பிட்ச் ரிப்போர்ட்டில் புதிதாக ஒரு தொழில்நுட்பம் அறிமுகமாகவிருக்கிறது. பிட்ச் மீது பறக்கும் Intel Falcon 8 ட்ரோனில், ஹெச்.டி மற்றும் இன்ஃப்ராரெட் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். மைதானத்தின் தன்மை, மைதானத்தில் இருக்கும் புற்கள் போன்றவற்றை இன்ஃப்ராரெட் கேமராக்கள் அலசி ஆராயும். சாம்பியன்ஸ் டிராஃபி முழுவதும், வர்ணனையாளர்கள் இதை அடிப்படையாக வைத்து பிட்ச் ரிப்போர்ட் தரவிருக்கிறார்கள்.

 

விர்ச்சுவல் ரியாலிட்டி மையங்கள் :

Intel VR

ஓவல் மற்றும் எட்கபாஸ்டன் மைதானங்களில் விர்ச்சுவல் ரியாலிட்டி மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. ரசிகர்கள் இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடியை அணிந்துகொண்டு, விர்ச்சுவலாக கிரிக்கெட்டில் தங்களது பேட்டிங் திறமையைக் காட்டலாம். ரசிகர்கள் விளையாடப் பயன்படுத்தும் பேட்களிலும், இன்டெல் நிறுவனத்தின் சிப் பொருத்தப்பட்டிருக்கும். இதனால், விர்ச்சுவல் கிரிக்கெட் விளையாடும் ரசிகர்களின் பேட்டை சுழற்றும் வேகம் உள்ளிட்ட அத்தனை விவரங்களும் திரையில் தோன்றும். பவுலிங் மெஷின்கள் பயன்படுத்தப்படுவதைப் போல, எதிர்காலத்தில் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவும் இதே தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இன்டெல் அறிமுகப்படுத்தியிருக்கும் தொழில்நுட்பங்கள் குறித்த வீடியோ :

 

 

இது சும்மா ட்ரெயிலர் தான். மெயின் பிக்சர் இனிமே தான் இருக்கு!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்